இஸ்திகாரா தொழுகை
நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள துஆவை ஓத வேண்டும்.
صحيح البخاري 6382 – حَدَّثَنَا مُطَرِّفُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي المَوَالِ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَالسُّورَةِ مِنَ القُرْآنِ: ” إِذَا هَمَّ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ، وَيُسَمِّي حَاجَتَهُ “
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.
உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர்,
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பிஇல்மி(க்)க லஅஸ்தக்திரு(க்)க பிகுத்ரதி(க்)க வஅஸ்அலு(க்)க மின் ஃபழ்லி(க்)கல் அளீம். ஃப இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வதஃலமு வலா அஃலமு வஅன்(த்)த அல்லாமுல் குயூப். அல்லாஹும்ம இன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைரு(ன்)ல் லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபக்துர்ஹுலீ வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ரு(ன்)ல்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி
என்று கூறட்டும். தனது தேவையையும் குறிப்பிடட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரீ 6382
(பொருள்: இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன். நான் ஆற்றலுள்ளவன் அல்லன். நீஅனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவானவற்றையும் நீ அறிபவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் விருத்தி செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா! பின்னர் அதில் எனக்கு திருப்தியைத் தா!)
இப்படி அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்த பின் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது எது சரி என நமக்குப் படுகிற்தோ அதைச் செய்யலாம். இஸ்திகாராவுக்குப் பின் அந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது என்று தோன்றினால் அதை விட்டு விட வேண்டும்.
நமக்கு எது நல்லதோ அதன் பக்கம் அலலாஹ் நம்மைக் க்கொண்டு செல்வான் என்பது தான் இஸ்திகாராவின் பயனாகும்.