ஜம்ஜம் தண்ணீர்

ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா?

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம் தண்ணீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்.

நூல்: திர்மிதீ 886

ஜம்ஜம் தண்ணீரின் வரலாற்றிலிருந்தே அந்தத் தண்ணீரின் புனிதத்தை நாம் அறியலாம்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் சிறு குழந்தையாக இருந்த போது தாகத்தால் துடித்தனர். அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஒரு வானவரை இறைவன் அனுப்பி, இப்போதுள்ள ஜம்ஜம் தண்ணீரை உற்பத்தி செய்தான்.

நூல்: புகாரி 3364

வானவர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஊற்று என்ற வகையில் அது புனிதம் பெறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர்களின் இதயம் ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டதாக ஹதீஸ்கள் உள்ளன.

நூல்: புகாரி 349, 3207, 3342, 7517

ஆனால் இறந்த பின் ஹாஜிகளை அந்தத் தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

தலையைத் திறந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதை அருந்த வேண்டும் என்பதற்கும் எந்தக் கட்டளையும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தியுள்ளதால் அவ்வாறு அருந்த அனுமதி உண்டு என்று மட்டுமே கூற முடியும்.