ஜனாஸா தொழுகை
நூலின் பெயர் : ஜனாஸா தொழுகை
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:180
ஜனாஸா தொழுகை
முன்னுரை
மரணித்தவரின் மறுமை நன்மைக்காக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஜனாஸாத் தொழுகை முக்கியமானதாகும்.
இறந்தவரின் பாவங்களை மன்னிக்குமாறும் மறுமையில் அவருக்கு சொர்க்கத்தை அளிக்குமாறும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையைக் கற்றுத் தந்துள்ளனர்.
ஆனாலும் இறந்தவரை தூக்கிச் செல்வதிலும், அடக்கம் செய்வதிலும் ஈடுபடும் முஸ்லிம்களில் பலர் ஜனாஸாத் தொழுகையின் போது ஒதுங்கி விடுகின்றனர்.
நெருக்கமான உறவினர்கள் கூட ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்காத நிலை உள்ளது. தந்தைக்காகவும், தாய்க்காகவும் நடத்தப்படும் ஜனாஸா தொழுகையில் பெற்ற மகன் கூட பங்கேற்காத அவல நிலையைக் காண்கிறோம்.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஜனாஸா தொழுகை நடத்துவது நபிவழியாக இருந்தும் எந்தப் பெண்களும் ஜனாஸாத் தொழுகை நடத்துவதில்லை.
ஜனாஸாத் தொழுகை யார் நடத்த வேண்டும்? எப்படி நடத்த வேண்டும்?
யாருக்கு நடத்தக் கூடாது?
எந்த இடத்தில் வைத்து நடத்த வேண்டும்?
அதில் என்ன ஓத வேண்டும்?
என்பன போன்ற ஜனாஸாத் தொழுகையின் சட்டங்கள் தெரியாததே இதற்குக் காரணம்.
இத்தகையவர்களுக்காக தக்க சான்றுகளின் அடிப்படையில் கையடக்கமான இந்த நூலை வெளியிடுகிறோம். ஜனாஸா தொழுகை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்நூல் போதுமானதாகும் என்று நம்புகிறோம்.
நபிலா பதிப்பகம்
ஜனாஸா தொழுகை
கட்டாயக் கடமை
ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும்.
ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும்.
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கேற்கவில்லை.
(புகாரி 2297, 5371)
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர். ஒட்டு மொத்த சமுதாயமும் தொழவில்லை. (ஹாகிம் 1/519)
இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.
தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது.
எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக – தலைவனாக ஆகாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் 1079, 1078
நபிகள் நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம்.
ஜனாஸாவை முன்னால் வைத்தல்
ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 383
இமாம் நிற்க வேண்டிய இடம்
இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல்: புகாரி 332, 1331, 1332
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா? என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640
இமாம் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை வைத்து இறந்தவர் ஆணா பெண்ணா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப துஆச் செய்யும் வாய்ப்பு இதனால் மக்களுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
உளூ அவசியம்
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை.
தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019
ஜனாஸா தொழுகையை தக்பீரில் துவக்கி ஸலாமில் முடிக்கிறோம். எனவே இதுவும் தொழுகை தான். இதற்கும் உளுச் செய்வது அவசியமாகும்.
கிப்லாவை முன்னோக்குதல்
மற்ற தொழுகைகளை எவ்வாறு கிப்லாவை நோக்கித் தொழ வேண்டுமோ அது போல் ஜனாஸாத் தொழுகையையும் கிப்லாவை நோக்கித் தான் தொழ வேண்டும்.
நீ தொழுகைக்கு நின்றால் முழுமையாக உளூச் செய்து விட்டு கிப்லாவை நோக்கு! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6251, 6667
தக்பீர் கூறுதல்
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்.
அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர் என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர் எனக் கூறி துவக்க வேண்டும்.
தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019
நான்கு தடவை தக்பீர் கூறுதல்
நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879
ஐந்து தடவை தக்பீர் கூறுதல்
ஐந்து தடவை தக்பீர்கள் கூறுவதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.
ஸைத் (ரலி) அவர்கள் எங்கள் ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறி தொழுவிப்பார். ஒரு தடவை ஐந்து தடவை தக்பீர் கூறினார். இது பற்றி அவரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து தடவையும் தக்பீர் கூறியிருக்கிறார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா
நூல்: முஸ்லிம் 1589
நான்கு தக்பீர் கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்பதையும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?
ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அனைவரையும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி அபூ வாயில் அறிவிப்பதாக பைஹகியில் (4/37) பதிவாகியுள்ளது.
அபூ வாயில் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி இருந்தது என்று இவர் அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா என்றால் ஏழு முறை தக்பீர் கூறுவார்கள். ஹாஷிம் குலத்தவர் என்றால் ஐந்து தடவை தக்பீர் கூறுவார்கள். பின்னர் கடைசிக் காலம் வரை நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என்று ஒரு ஹதீஸ் தப்ரானியில் (11/160) உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் நாஃபிவு அபூ குர்முஸ் என்பார் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறியுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர் என்ற ஹதீஸ் தப்ரானியில் (11/174) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஷ்ர் பின் அல்வலீத் அல்கின்தீ என்பவர் வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டதும் அவரது உடல் வைக்கப்பட்டது. அவருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்ற செய்தி தப்ரானியில் (11/62) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் அஹ்மத் பின் அய்யூப் பின் ராஷித் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமான அறிவிப்பாளர். மேலும் உஹதுப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று புகாரியில் பதிவான ஆதாரப்பூர்வமான செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளது.
எனவே நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறுவதே நபிவழியாகும்.
தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை
நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
மாறாக ஒரு தக்பீருக்கும், இன்னொரு தக்பீருக்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன. அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்.
முதல் தக்பீருக்குப் பின்…
முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். இதை நபிவழி என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1335
இத்துடன் நமக்குத் தெரிந்த ஏதேனும் அத்தியாயத்தை ஓத வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் இது நபிவழியும், உண்மையும் ஆகும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ்
நூல்: நஸயீ 1961
முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: நஸயீ 1963
இரண்டாவது தக்பீருக்குப் பின்…
இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா அறிவிக்கிறார்.
நூல்: பைஹகி (4/39)
மேற்கூறிய ஹதீஸில் ஸலவாத், துஆ என்ற வரிசையில் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் ஸலவாத் ஓத வேண்டும்.
ஒவ்வொரு தக்பீருக்குப் பின் இதை ஓத வேண்டும் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவது தான் நல்லது.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
மூன்றாவது, நான்காவது தக்பீருக்குப் பின்
மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்குப் பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.
ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை ஓதியுள்ளனர். அவை அனைத்தையுமோ, அவற்றில் இயன்றதையோ நாம் ஓதிக் கொள்ளலாம்.
அத்துடன் நாம் விரும்பும் வகையில் நமது தாய் மொழியில் இறந்தவருக்காக துஆச் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர்.
அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)
பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி உனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறிக் கொண்டு இருந்தார். அவரைப் பற்றி நீயே நன்கு அறிந்தவன். இவர் நல்லவராக இருந்தால் இவரது நற்கூலியை அதிகரிப்பாயாக! இவர் தீயவராக இருந்தால் இவரை மன்னித்து விடுவாயாக! இவரது நற்செயலுக்கான கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! இவருக்குப் பின் எங்களைச் சோதனையில் ஆழ்த்தி விடாதே!
ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) பின்வருமாறு துஆச் செய்தனர்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஃபு அன்ஹு வஆஃபிஹி வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பிமாயின் வஸல்ஜின் வபரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி வஅதாபன்னார்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1601
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்.
இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1600
பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வரும் துஆவை ஓதுவார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாஜா 1487
பொருள்: இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்துள்ளனர்.
அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு மாஜா 1488, அஹ்மது 15443
பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.
இன்னாரின் மகன் இன்னார் என்ற இடத்தில், அதாவது ஃபுலானப்ன ஃபுலான் என்ற இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின் மேற்கண்ட துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.
இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346
உள்ளத் தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும் போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்தவருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய் மொழியில் துஆச் செய்யலாம்.
ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்த வேண்டுமா?
ஜனாஸாத் தொழுகையில் ஒவ்வொரு தடவை தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்தி மீண்டும் கைகளைக் கட்டிக் கொள்ளும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது.
இதற்கு ஆதாரம் இல்லை. தக்பீர் என்ற சொல்லுக்கு அல்லாஹு அக்பர் எனக் கூறுதல் என்பதே பொருள். எனவே நான்கு தடவை அல்லாஹு அக்பர் எனக் கூறுவது தான் நபிவழியாகும். கைகளை அவிழ்த்துக் கட்டுவதோ, அல்லது உயர்த்திக் கட்டுவதோ நபிவழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும் கைகளை உயர்த்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 693, 694, 696, 697
ஜனாஸா தொழுகையில் ருகூவு, சுஜுது இல்லாததால் தொழுகையின் முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்த வேண்டும். அதன் பின்னர் கைகளைக் கட்டிய நிலையிலேயே மற்ற தக்பீர்களைக் கூற வேண்டும்.
ஸலாம் கூறுதல்
கடைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: பைஹகீ 4/43, தப்ரானி 10/82
மற்ற தொழுகைகளில் ஸலாம் கொடுப்பது போன்றே ஜனாஸாத் தொழுகையிலும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற தொழுகைகளில் வலது புறமும், இடது புறமும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1130, 1302, 1303, 1305, 1307, 1308
வலது புறம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் இடது புறம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று மட்டும் ஸலாம் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 1304
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.
கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்து:ல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள்.
எனவே ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல.
15.07.2009. 2:49 AM