ஜின்களை வசப்படுத்த முடியுமா?
ஜின் அத்தியாயத்தை 40 நாட்கள் தொடர்ந்து ஓதினால் ஜின்களை வசப்படுத்தலாம் என்று சில ஆலிம்கள் கூறுகின்றனர்.
ஜின் என்று அத்தியாயம் இருப்பது போல், யானை, எறும்பு, தேனீ, சிலந்தி, மாடு, மனிதன், பெண்கள் என்றெல்லாம் குர்ஆனில் அத்தியாயங்கள் உள்ளன.
அந்த அத்தியாயங்களை ஓதினால் அவற்றை வசப்படுத்த முடியுமா? ஜின் பற்றிக் கூறப்படுவதால் தான் அந்த அத்தியாயத்திற்கு அப்பெயர் வந்தது. ஜின்னை வசப்படுத்தலாம் என்பதால் அல்ல.
ஜின் என்ற படைப்பு மனிதனைப் போல் அறிவு படைத்ததும், மனிதனை விட பலமிக்கதுமாகும். பகுத்தறிவும், பலமும் கொண்ட ஓர் இனத்தை அதை விட பலத்தில் குறைந்தவர்கள் எப்படி வசப்படுத்த முடியும்?
ஜின் என்ற படைப்பை சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தான். இதை ஓர் சிறப்புத் தகுதியாக அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மற்ற எவரும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர் என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 34:12,13
ஷைத்தான்களில் அவருக்காக முத்துக் குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.
திருக்குர்ஆன் : 21:82
சுலைமான் நபிக்குக் கட்டுப்படாவிட்டால் நரகில் தள்ளுவேன் என்று பிரத்தியேகமாக இறைவன் கட்டளையிட்டதால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்குக் வசப்பட்டன. மற்றவர்களுக்குக் கட்டுப்படுமாறு இறைவன் கட்டளை எதுவும் ஜின்களுக்குப் பிறப்பிக்கவில்லை.
எனவே இது சுலைமான் நபிக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதியாகும். பொதுவாக எந்த மனிதனும் ஜின்களை ஒருக்காலும் வசப்படுத்த முடியாது.
ஜின்களை வசப்படுத்தி இருப்பதாக யாராவது உங்கள் காதுகளில் பூச்சுற்றினால் நம்பி ஏமாற வேண்டாம்.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல விமானத்தைப் பயன்படுத்தாமல் ஜின்களைப் பயன்படுத்தி இதை நிரூபித்துக் காட்டச் சொல்லுங்கள். ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஜின்களைப் பயன்படுத்தி மாளிகை ஒன்றை எழுப்பிக் காட்டட்டும். இப்படியெல்லாம் ஜின்கள் செய்தததாக திருக்குர்ஆன் கூறுகிறது.
பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று (ஸுலைமான்) கேட்டார். உங்கள் இடத்திருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.
திருக்குர்ஆன் 27:38,39
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
திருக்குர்ஆன் 72:8,9
எங்கோ இருக்கின்ற சிம்மாசனத்தை சில வினாடிகளில் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு ஜின்களின் ஆற்றல் உள்ளது. எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் வானுலகத்தின் எல்லை வரை சென்று வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் உண்டு. இதை மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களிலிருந்து அறியலாம்.
ஜின்களை வசப்படுத்தியுள்ளதாகக் கூறுவோர் உண்மையாளர்கள் என்றால் இது போன்ற சாகசங்களைச் செய்து காட்ட வேண்டும்.
கோலார் தங்க வயலில் நுழைந்து, பத்து கிலோ தங்கத்தை எடுத்து வா என்று ஜின்களுக்குக் கட்டளையிட்டு, அதைச் செய்து காட்டட்டும்.
மனித குலத்தில் முதலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஜார்ஜ் புஷ்ஷைப் பிடித்துக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிட்டு உலகத்திற்கு நன்மை செய்து காட்டட்டும்.
ஜின்களை வசப்படுத்தியிருந்தால் இவற்றை மிகச் சாதாரணமாகச் செய்து காட்ட இயலும்.
இந்தப் பித்தலாட்டக்காரர்கள் இதில் எந்த ஒன்றையும் செய்ய முடியாது.
இவர்களை இழுத்துப் போட்டு உதைக்கும் போது அதைத் தங்களிடம் உள்ள ஜின்களை விட்டுத் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.
உங்களிடம் ஒரு வேளைச் சோற்றுக்கும், ஒண்ணே கால் ரூபாய்க்கும் கையேந்தி நிற்பவர்களிடம் ஜின்கள் வசப்பட்டிருப்பதாக நம்பி ஈமானையும், அறிவையும் இழந்து விட வேண்டாம்.
ஸுலைமான் நபிக்கு காற்றை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். பறவையை வசப்படுத்திக் கொடுத்தான். எறும்புகள் பேசுவதைப் புரிய வைத்தான். இது போல் தான் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.
ஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.
அல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த ஸுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.
“என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” எனக் கூறினார்.
திருக்குர்ஆன் 38:35
இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இருக்கின்றது.
صحيح البخاري
461 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ عَلَيَّ البَارِحَةَ – أَوْ كَلِمَةً نَحْوَهَا – لِيَقْطَعَ عَلَيَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ: رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي “، قَالَ رَوْحٌ: «فَرَدَّهُ خَاسِئًا»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ 461
ஸுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்குக் கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். ஸுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிய முடியும்.