ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா?

ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு பாங்குகள் சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.

மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் மிம்பர் மீது ஏறும்போது சொல்லப்படும் ஒரு பாங்கு தான் நடைமுறையில் இருந்தது.

صحيح البخاري

912 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: «كَانَ النِّدَاءُ يَوْمَ الجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى المِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” الزَّوْرَاءُ: مَوْضِعٌ بِالسُّوقِ بِالْمَدِينَةِ “

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் மக்கள் தொகை அதிகரித்தபோது “ஸவ்ரா’ எனும் கடைவீதியில் மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.

நூல்: புகாரி 912

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஜும்ஆவில் ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டு வந்தது என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணில்லாத வகையில் உஸ்மான் (ரலி) அவர்களின் செயலைப் பின்வருமாறு விளங்க முடியும்.

உஸ்மான் (ரலி) அவர்கள் அதிகப்படுத்திய தொழுகை அறிவிப்பு என்பது பாங்கு அல்ல. பாங்கின் வாசகங்களைக் கூறுமாறு அவர் உத்தரவிட்டதாக இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மாறாக மக்களுக்கு சாதாரண அறிவிப்பை மட்டுமே அதிகப்படுத்தினார்கள் என்று விளங்கிக் கொண்டால் முரண்பாடு வராது.

ஒரு பேச்சுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் பாங்கைத் தான் அதிகப்படுத்தினார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் இதனால் இரண்டு பாங்குகள் கூறுவது மார்க்க வழிமுறையாகாது. ஏனென்றால் வஹீயால் வழி நடத்தப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மட்டுமே மார்க்க ஆதாரமாகும். நபித்தோழர்கள் உள்ளிட்ட மற்ற எவருடைய கருத்தும் மார்க்க ஆதாரமாக ஆகாது. குறிப்பாக நபிமொழிக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

எனவே  இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் ஒரு பாங்கு கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.

இவ்விஷயத்தில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருக்கவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் இரண்டாவது அறிவிப்பை அதிகப்படுத்தியதாகவே மேற்கண்ட ஹதீஸில் உள்ளது. இதை இவர்கள் பின்பற்றுவதாக இருந்தால் உஸ்மான் (ரலி) செய்தது போல் கடைத்தெருவில் தான் இரண்டாவது பாங்கு சொல்ல வேண்டும். ஆனால் இரண்டாவது பாங்கு சொல்பவர்கள் யாரும் கடைத் தெருவில் சொல்வதில்லை. மாறாக பள்ளிவாசலுக்குள்ளே சொல்லி வருகிறார்கள என்பது கவனிக்கத் தக்கது.