ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?
ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா?
ஜஹுபர் கான்.
பதில்:
சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்:
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:9,10
பாங்கு சொல்லப்பட்ட உடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு.
ஆனால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.
மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.
ஜும்ஆவுக்குப் பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.
நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும், உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.
நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் வியாபாரம் செய்து அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும், வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இதுபோல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா?
நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ, ,மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?
நாமே செய்வதும், நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்த்தாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.
எனவே ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை முற்றிலுமாக வியாபாரத்தை மூடியாக வேண்டும்.