கடன்

கடன் விஷயத்தில் கண்டிப்பு

கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.

صحيح البخاري

2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ: أَبُو قَتَادَةَ عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ

ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

நூல் : புகாரி 2295

صحيح البخاري

2298 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ [ص:98] المُتَوَفَّى، عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: «هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا؟»، فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى، وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الفُتُوحَ، قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ المُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا، فَعَلَيَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ»

கடன்பட்டு இறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார். அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்” என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2298

கடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்தோழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.

நபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.

எனவே இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கடனை இழுத்தடிக்கக் கூடாது.

கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் கடன் கொடுத்தவரிடம் அவகாசம் கேட்பது தவறில்லை.

வசதிகளும் சொத்துக்களும் இருந்தும் பெருக்கிக் கொள்வதற்காக வாங்கும் கடன் இன்னொரு வகை.

வசதி படைத்தவர்களாக இருந்தால் தன்னிடம் உள்ள சொத்துக்கள் சிலவற்றை விற்று தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்ததாகும். அப்படியே கடன் வாங்கி விட்டால் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திவிட முடியும் என்பதால் இவர்கள் அவகாசம் கேட்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் அவசியத் தேவைகளுக்காக கடன் வாங்குவதில்லை. இருக்கும் தொழிலைப் பெருக்குவதற்காகவும், ஒரு வீட்டை இரண்டு வீடுகளாக ஆக்குவதற்கும், ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்காகவும்தான் கடன் வாங்குகிறார்கள்.

கடன் வாங்குவதால் ஏற்படும் விளைவுகளை இவர்கள் அறியாமல் உள்ளனர்.

கடன் வாங்கிய நிலையில் நாம் மரணித்து நம்முடைய வாரிசுகள் அந்தக் கடனை அடைக்கவில்லையானால் நாம் செய்த நன்மைகள் கடன் கொடுத்தவனுக்குப் போய் விடும் என்று அஞ்சி தவிர்க்க இயன்ற கடன்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

2287 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

செல்வந்தன் இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக் கொள்ளட்டும்!

நூல் : புகாரி 2287, 2288, 2400

நல்ல முறையில் திருப்பிக் கொடுத்தல்

கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது.

கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதன் பின்னர் கடன் கொடுத்தவன் கெஞ்சிக்கூத்தாடி வசூல் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். ஒரு முஸ்லிம் இவ்வாறு நடந்து கொள்ள அனுமதி இல்லை.

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بِمِنًى يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا تَقَاضَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ فَقَالَ دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالًا وَاشْتَرُوا لَهُ بَعِيرًا فَأَعْطُوهُ إِيَّاهُ وَقَالُوا لَا نَجِدُ إِلَّا أَفْضَلَ مِنْ سِنِّهِ قَالَ اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கின்றது” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2305, 2306, 2390, 2392, 2393, 2606, 2609

صحيح البخاري

2097 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «جَابِرٌ»: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا شَأْنُكَ؟» قُلْتُ: أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ، فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ: «ارْكَبْ»، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَزَوَّجْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا» قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ» قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ، فَالكَيْسَ الكَيْسَ»، ثُمَّ قَالَ: «أَتَبِيعُ جَمَلَكَ» قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ: «آلْآنَ قَدِمْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ»، فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلًا أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً، فَوَزَنَ لِي بِلاَلٌ، فَأَرْجَحَ لِي فِي المِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ، فَقَالَ: «ادْعُ لِي جَابِرًا» قُلْتُ: الآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ: «خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ»

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன். அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்” என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள். நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப்போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போதுதான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதை விட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை” என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 2097, 2309

صحيح البخاري

2603 – حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، فَقَضَانِي وَزَادَنِي»

பள்ளிவாசலில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.

நூல் : புகாரி 2603

கடன் வாங்கியவர் அதைத் திருப்பிச் செலுத்தும்போது சிறந்ததாகவும் அதிகமாகவும் செலுத்துவது விரும்பத்தக்கது என்பதை இதில் இருந்து அறிகிறோம்.

நம்முடைய பணம் ஒருவரிடம் இருக்கும் காலத்துக்கு ஏற்ப நிர்ணயித்த தொகையை வாங்குவதுதான் வட்டியாகும். நாம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கும்போது நாமாக விரும்பி பதினோராயிரமோ பதினைந்தாயிரமோ கொடுத்தால் அது வட்டியாகாது என்பதையும் இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

திருப்பித் தரும்போது கொஞ்சம் கூடுதலாகத் தரவேண்டும் என்று என்று கடன் கொடுத்தவர் நிபந்தனை போட்டால் அது வட்டியில் சேரும்.

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை

கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே கொடுத்து விட்டேன் என்றும் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது மனிதனின் மனநிலை இப்படியெல்லாம் மாறிவிடுகிறது. ஆனால் ஒருவன் நல்ல முஸ்லிமாக இருந்தால் இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

ஆம் அல்லாஹ்வின் அருளால் கடனைத் திருப்பிக் கொடுக்கும் நிலையை நாம் அடைவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளனர்.

صحيح البخاري

2387 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ [ص:116] الأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவர் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அல்லாஹ்வும் அவரை அழித்து விடுவான்.

நூல் : புகாரி 2387

سنن النسائي

4687 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ الْأَعْمَشِ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ مَيْمُونَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَدَانَتْ فَقِيلَ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، تَسْتَدِينِينَ وَلَيْسَ عِنْدَكِ وَفَاءٌ، قَالَتْ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَخَذَ دَيْنًا وَهُوَ يُرِيدُ أَنْ يُؤَدِّيَهُ، أَعَانَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஒருவரிடம் கடன் கேட்டனர். மூமின்களின் அன்னையே கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லாத நீங்கள் கடன் கேட்கிறீர்களே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு மைமூனா (ரலி) திருப்பிச் செலுத்தும் எண்ணத்தில் யார் கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

நூல் : நஸாயீ

கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டும்

ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வசிய்யத்தையும் கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.

…..(இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

திருக்குர்ஆன் 4:11

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதைவிட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 4.11.1

ஒருவர் மரணித்தால் அவரது கடனை அடைத்த பின்னர்தான் வாரிசுகள் சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

ஆனால் நம்மில் அதிகமானவர்கள் இப்படி நடப்பதில்லை. பெற்றோரின் கடனைத் தீர்க்காவிட்டால் நம்முடைய பெற்றோரின் மறுமை வாழ்க்கை பாழாகிப் போய்விடும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை.

பெற்றோர்கள் சொத்துக்கள் எதையும் விட்டு வைக்காமல் கடனை மட்டும் வைத்து விட்டு மரணித்து விட்டால் அப்போது அவரது பிள்ளைகள் அந்தக் கடனைச் சுமக்க வேண்டும்; அந்தக் கடனை அடைப்பது அவர்களின் கடமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

صحيح البخاري

1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள். கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்

நூல் : புகாரி 1852, 6697, 7315

பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

கடனைத் தள்ளுபடி செய்தல்

ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அதை விட அதிக நன்மையை அல்லாஹ் நமக்கு வழங்குகிறான்.

صحيح البخاري

3480 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، قَالَ: فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ “

(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்லும்) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லி வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.

நூல் : புகாரி 3480

صحيح البخاري

2077 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، أَنَّ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ [ص:58] رَضِيَ اللَّهُ عَنْهُ، حَدَّثَهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” تَلَقَّتِ المَلاَئِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، قَالُوا: أَعَمِلْتَ مِنَ الخَيْرِ شَيْئًا؟ قَالَ: كُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا وَيَتَجَاوَزُوا عَنِ المُوسِرِ، قَالَ: قَالَ: فَتَجَاوَزُوا عَنْهُ “، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ أَبُو مَالِكٍ، عَنْ رِبْعِيٍّ: «كُنْتُ أُيَسِّرُ عَلَى المُوسِرِ، وَأُنْظِرُ المُعْسِرَ»، وَتَابَعَهُ شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيٍّ، وَقَالَ أَبُو عَوَانَةَ: عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيٍّ: «أُنْظِرُ المُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ»، وَقَالَ نُعَيْمُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ رِبْعِيٍّ: «فَأَقْبَلُ مِنَ المُوسِرِ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் வசதியற்றவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்! என்று கூறினார். உடனே, அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்! என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!

நூல் : புகாரி 2077

صحيح البخاري

2078 – حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ: تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.

நூல் : புகாரி 2078

صحيح مسلم

4083 – حَدَّثَنَا أَبُو الْهَيْثَمِ خَالِدُ بْنُ خِدَاشِ بْنِ عَجْلاَنَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ طَلَبَ غَرِيمًا لَهُ فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ فَقَالَ إِنِّى مُعْسِرٌ. فَقَالَ آللَّهِ قَالَ آللَّهِ. قَالَ فَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ

அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 4083

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வைத்தால் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.

صحيح البخاري

457 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي المَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى: «يَا كَعْبُ» قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا» وَأَوْمَأَ إِلَيْهِ: أَيِ الشَّطْرَ، قَالَ: لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُمْ فَاقْضِهِ»

கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது :

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கி வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, “கஅப்! என்றழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்துவிடு!” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 457, 471, 2418, 2424, 2706, 2710

صحيح البخاري

2127 – حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ وَعَلَيْهِ دَيْنٌ، فَاسْتَعَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ، فَطَلَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَلَمْ يَفْعَلُوا، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، العَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعَذْقَ زَيْدٍ عَلَى حِدَةٍ، ثُمَّ أَرْسِلْ إِلَيَّ»، فَفَعَلْتُ، ثُمَّ أَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ فَجَلَسَ عَلَى أَعْلاَهُ، أَوْ فِي وَسَطِهِ، ثُمَّ قَالَ: «كِلْ لِلْقَوْمِ»، فَكِلْتُهُمْ حَتَّى أَوْفَيْتُهُمُ الَّذِي لَهُمْ وَبَقِيَ تَمْرِي كَأَنَّهُ لَمْ يَنْقُصْ مِنْهُ شَيْءٌ وَقَالَ فِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي جَابِرٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّاهُ»، وَقَالَ هِشَامٌ: عَنْ وَهْبٍ، عَنْ جَابِرٍ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جُذَّ لَهُ فَأَوْفِ لَهُ»

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

என் தந்தையார் உஹதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டு கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, “நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்சை மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக துஆச் செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன.

நூல் : புகாரி 2127, 2395, 2396, 2406, 2601, 2709

கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்

வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் சிறிதளவுதான் கடன்பட்டவரிடம் வசதி இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

صحيح مسلم

4064 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ بُكَيْرٍ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ أُصِيبَ رَجُلٌ فِى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى ثِمَارٍ ابْتَاعَهَا فَكَثُرَ دَيْنُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَصَدَّقُوا عَلَيْهِ ». فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ فَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِغُرَمَائِهِ « خُذُوا مَا وَجَدْتُمْ وَلَيْسَ لَكُمْ إِلاَّ ذَلِكَ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகி விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருக்குத் தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(அவரிடம்) இருப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை” என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 4064

கடன் வாங்கியவரிடம் ஒரு லட்சம் ரூபாய்தான் உள்ளது. ஆனால் கடன் இரண்டு லட்சம் இருக்கிறது. இரண்டு லட்சம் தேறும் வரை அவகாசம் அளிக்க கடன் கொடுத்தவர் உடன்படவில்லை. இப்போதே முடிக்க வேண்டும் என்று வழக்கு கொண்டு வந்தால் இரண்டு லட்சம் கடன் கொடுத்தவர் ஒரு லட்சத்தை மட்டும் பெற்றுக் கொண்டு அதோடு விட்டுவிட வேண்டும்.

அல்லது அவகாசம் அளித்து வசதி வரும் போது வாங்கிக் கொள்ளலாம்.

கடனை எழுதிக் கொள்ளுதல்

கொடுக்கும் கடன்களை எழுதிக் கொள்ள வேண்டும்; இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. வெளித்தோற்றத்தை நம்பி கடன் கொடுத்து பலர் ஏமாந்து போகின்றனர்.

கொடுக்கும் கடன் வந்தால் வரட்டும்; இல்லாவிட்டால் போகட்டும் என்று நினைத்து ஒருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாமல் கடனை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும் என்று கருதி கடன் கொடுத்தால் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதை இன்னொரு மனிதனால் அறிய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மிடம் நல்லவர் போல் ஒருவர் பழகி விட்டால் அதனால் அவரை நம்பி எந்தப் பிடிமானமும் இல்லாமல் கடன் கொடுக்கக் கூடாது. அவர் உடன் பிறந்த சகோதரர் ஆனாலும் உற்ற நண்பரே ஆனாலும் எழுத்துப்பூர்வமான ஆதாரம் அல்லது அடைமானம் இல்லாமல் கடன் கொடுக்குமாறு இஸ்லாம் நமக்கு வழிகாட்டவில்லை.

ஒருவர் எவ்வளவுதான் நல்லவர் என்று நமக்குத் தோற்றமளித்தாலும் அவர் நல்லவராக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது போல் அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்

திருக்குர்ஆன் 2:282

வாங்கிய கடனை எழுதி வாங்கும்போது “என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? நமக்குள் எழுத்துமானம் எதற்கு என்றெல்லாம் சொல்ல இஸ்லாத்தில் இடமில்லை. இத்தகைய சமாதானங்களை நம்மிடம் ஒருவர் சொன்னால் அதை நாம் ஏற்க வேண்டியதில்லை. எழுதிக் கேட்டால் அவர் புண்படுவார் என்று நாம் கருத வேண்டியதில்லை. அவர் புண்படாத வகையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தாலும் அல்லாஹ் எழுதிக் கொள்ளும்படி கட்டளை இடுவதால் நாம் எழுதிக் கொள்வது அவசியம் என்று நாம் கூறி விட்டால் அவர் புண்படும் நிலை ஏற்படாது.

ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு எழுதிக் கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறதோ அவ்வாறு எழுதிக் கொள்ள வேண்டும்.

சாதாரண காகிதத்தில் எழுதிக் கொள்வது ஒரு காலத்தில் போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று கடன் தொகைக்கு ஏற்ப ஸ்டாம்ப் பேப்பரில் அல்லது ஸ்டாம்ப் ஒட்டி எழுதிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தக் கடனைச் சட்டப்படி திரும்பப்பெற இயலும். கடன் வாங்கியவர் அடைமானமாக பொருளைக் கொடுத்து நம்மிடம் கடன் கேட்டால் எழுதி வாங்குவதுதான் நல்லது என்று நமக்குத் தோன்றினால் எழுதிக் கொள்ளலாம். தேவை இல்லை என்று கருதினால் எழுதாமலும் இருக்கலாம்.

நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:283

மேற்கண்ட வசனங்களில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

அற்பமான பொருள்கள், அற்பமான தொகைகள் என்றால் அதை எழுதிக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு பத்து ரூபாய் ஒருவர் கடன் கேட்டால் அதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பத்து ரூபாயை அவர் தராவிட்டால் அதற்காக நாம் பஞ்சாயத்து வைக்க மாட்டோம். நீதிமன்றத்தை அணுக மாட்டோம்.

கடன் கொடுத்த பின் பணமதிப்பு குறைந்துவிட்டால்

கரன்ஸி நோட்டுகள் நடைமுறைக்கு வந்த பின் பணமதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இன்று ஒரு லட்சம் ரூபாய் நாம் கடனாகக் கொடுக்கிறோம். இந்தக் கடன் நமக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பக் கிடைத்தால் எண்ணிக்கையில்தான் அது ஒரு லட்சமாக இருக்கும். அதன் மதிப்பு நாம் கொடுத்த ரூபாயின் மதிப்பைவிட குறைவாகத்தான் இருக்கும். இதனால் கடன் கொடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஆனாலும் கடன் கொடுக்கும் போது நாம் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் என்ற எண்ணிக்கையைத் தான் கருத்தில் கொண்டு கடன் கொடுத்தோம். அதன் மதிப்பு இறங்குவது பற்றி நாம் சிந்திக்கவில்லை. எனவே பணத்தின் மதிப்பு ஏறினாலும் இறங்கினாலும் கடனாகக் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயைத்தான் நாம் வாங்கிக் கொள்ள முடியும்.

கடன் கொடுக்கும் போது எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் அதன் மதிப்பைக் கருத்தில் கொண்டு கொடுத்தால் கடன் கொடுக்கும் போதே அதைத் தெளிவுபடுத்தி இருந்தால் அப்போது மதிப்பின் அடிப்படையில் நாம் கடனை வசூலிக்கலாம்.

ஒரு பவுன் நகை 24 ஆயிரமாக இருக்கும்போது நாம் ஐந்து பவுன் நகை வாங்குவதற்காக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறோம். அவசரத்துக்காக ஒருவர் கடன் கேட்கும்போது ஒரு லட்சத்து இருபதாயிரத்தைக் கொடுக்கிறோம். அவர் ஆறு மாதம் கழித்து திருப்பித் தரும்போது ஒரு பவுன் விலை 30 ஆயிரமாகி விடுகிறது. இப்போது ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயில் ஐந்து பவுன் வாங்க முடியாது. நான்கு பவுன்தான் வாங்க முடியும். கடன் கொடுக்காமல் அப்போதே நகையாக வாங்கி இருந்தால் நாம் ஐந்து பவுன் வாங்கி இருக்க முடியும். கடன் கொடுத்ததால் நமக்கு ஏற்பட்ட நட்டம் ஒரு பவுன் அதாவது 15 ஆயிரம் ரூபாய்.

நாம் கடன் கொடுக்கும்போது நமக்கு நட்டம் வராத வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐந்து பவுன் தங்கத்தின் மதிப்புக்கு உரிய தொகையை உனக்குக் கடனாகத் தருகிறேன். நீ திருப்பித் தரும்போது ஐந்து பவுன் தங்கத்துக்கு உரிய தொகை என்னவோ அதைத்தான் தர வேண்டும் என்று பேசி கடன் கொடுத்தால் அதில் தவறு இல்லை.

சவூதி ரியாலாகக் கடன் கொடுத்து விட்டு இந்திய ரூபாயில் திருப்பித்தருமாறு பேசிக் கொண்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் சவூதி ரியாலாகக் கடன் கொடுக்கும் போது நான் இந்திய ரூபாய் மதிப்பில் தான் கடன் தருகிறேன். எனவே திருப்பித் தரும் போது இந்திய ரூபாய் மதிப்பில் தான் திருப்பித் தர வேண்டும் என்று பேசிக் கொண்டால் அதன்படி திரும்பப்பெறுவது குற்றமில்லை.

உதாரணமாக ஒரு சவூதி ரியால் பதினைந்து ரூபாய் என்று இருக்கும் போது நாம் 4000 ரியால்கள் ஒருவருக்குக் கடன் கொடுக்கிறோம். இந்திய ரூபாய் மதிப்பில் நாம் அறுபதாயிரம் ரூபாய்க்குச் சமமான தொகையைக் கொடுக்கிறோம். திருப்பித் தரும்போது அறுபதாயிரம் இந்திய ரூபாய்களுக்குச் சமமான மதிப்பில் சவூதி ரியால்களைத் தர வேண்டும் என்று நாம் கருதினால் அப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இப்படி ஒப்பந்தம் செய்தபின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாகலாம். அல்லது குறையலாம்.

ஒரு சவூதி ரியால் இருபது ரூபாய் என்ற அளவுக்கு ஏறி விட்டால் நாலாயிரம் ரியாலுக்கு பதிலாக மூவாயிரம் ரூபாய்களைத்தான் நாம் வாங்கிக் கொள்ள வேண்டும். மூவாயிரம் சவூதி ரியால் கொடுத்தாலே அறுபதாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்து விடும்.

ஒரு சவூதி ரியால் பத்து ரூபாய் என்ற அளவுக்கு இறங்கி விட்டால் நாலாயிரம் ரியாலுக்கு பதிலாக ஆறாயிரம் ரூபாய்களை நாம் வாங்கிக் கொள்ளலாம். ஆறாயிரம் சவூதி ரியால் கொடுத்தால் தான் அறுபதாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைக்கும்.

இப்படி தெளிவுபடுத்தாமல் கடன் கொடுத்தால் கொடுத்த இந்திய ரூபாயைத் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் இந்திய ரூபாயின் மதிப்பில் தான் கடன் கொடுத்தோம்.

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

திருக்குர்ஆன் 5:1

ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான வசனங்கள், ஹதீஸ்கள் உள்ளன.

எனவே கடன் கொடுக்கும்போது எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோமோ அதே கரன்ஸியின் மதிப்பின் அடிப்படையில் வாங்க வேண்டும்.

அடைமானம் வைத்தல்

நாம் ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது அந்தக் கடன் திரும்பக் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காக அடைமானம் பெற்றுக் கொள்ளலாம். அடைமானம் பெற்றுக் கொண்டு கடன் கொடுக்கும் போது அடைமானமாகப் பெற்ற பொருளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கொடுத்த கடனுக்கு வட்டியாகவே அது கருதப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அடைமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர்.

صحيح البخاري

2068 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ»

போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.

நூல் : புகாரி : 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

அதிகமான முஸ்லிம் பெண்கள் அடைமானமாக நகைகளையும், பாத்திரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள். அதன் பின்னர் கடன் திரும்ப வரும் வரை அந்த நகையை அணிந்து கொள்கிறார்கள். பாத்திரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவை பழைய பொருளாகி விடும். தேய்மானம் ஏற்படும்.

நாம் கொடுத்த கடன் எப்படி நமக்கு முழுமையாகக் கிடைக்கிறதோ அப்படி அடைமானத்தையும் முழுமையாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

கொடுத்த கடனுக்காக எந்த விதமான ஆதாயத்தை எதிர்பார்த்தாலும் அது வட்டியாக ஆகிவிடும்.

ஆனால் கால்நடைகளை அடைமானமாகப் பெற்றால் அதற்குத் தீனி போட வேண்டும். போடாவிட்டால் செத்து விடும். அடைமானம் பெற்றவர் தலையில் இதைச் சுமத்தவும் முடியாது. எனவே கால்நடைகளை அடைமானமாக பெற்றால் அதற்குத் தீனி போடுவதால் அதன் பாலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். வண்டி இழுப்பதற்கும், பாரம் சுமப்பதற்கும் உழவு செய்வதற்கும் கால் நடைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

صحيح البخاري

2511 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ: «الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ، وَيُشْرَبُ لَبَنُ الدَّرِّ إِذَا كَانَ مَرْهُونًا»

அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2511, 2512

நாணயம் பேணல்

நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர்.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4.58

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 8:27

.صحيح البخاري

33 – حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

நூல் : புகாரி 33, 34, 2682, 2749, 6095

தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

திருக்குர்ஆன் 23:8

அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.

திருக்குர்ஆன் 70:32

நம்பி அமானிதமாக ஒப்படைத்தவருக்கும் நமக்கும் ஏதாவது சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் அப்போது அமானிதத்துக்கு மோசடி செய்யுமாறு ஷைத்தான் நம்மைத் துண்டுவான்; அதை அழகாக்கிக் காட்டுவான். சாதாரண நேரத்தில் அமானிதத்தைப் பேணி நடப்பவர்கள் சண்டை ஏற்படும்போது எவ்வித உறுத்தலும் இல்லாமல் அமானித மோசடி செய்வதை நாம் பரவலாகக் காண்கிறோம். இது யூதர்களின் வழக்கம் என்று அல்லாஹ் இடித்துரைக்கிறான்.

ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது” என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 3:75