கடனை இழுத்தடிக்கக் கூடாது
கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் கடன் கொடுத்தவரிடம் அவகாசம் கேட்பது தவறில்லை.

வசதி படைத்தவர்களாக இருந்தால் தம்மிடம் உள்ள சொத்துக்கள் சிலவற்றை விற்று தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்ததாகும். அப்படியே கடன் வாங்கி விட்டால் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திவிட வசதி உள்ளதால் இவர்கள் அவகாசம் கேட்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் அவசியத் தேவைகளுக்காக கடன் வாங்குவதில்லை. இருக்கும் தொழிலைப் பெருக்குவதற்காகவும், ஒரு வீட்டை இரண்டு வீடுகளாக ஆக்குவதற்கும், ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்காகவும்தான் கடன் வாங்குகிறார்கள்.

கடன் வாங்கிய நிலையில் நாம் மரணித்து, நம்முடைய வாரிசுகள் அந்தக் கடனை அடைக்கவில்லையானால் நாம் செய்த நன்மைகள் கடன் கொடுத்தவனுக்குப் போய் விடும் என்று அஞ்சி தவிர்க்க இயன்ற கடன்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2287 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

செல்வந்தன் இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக் கொள்ளட்டும்!

நூல் : புகாரி 2287, 2288, 2400

12.01.2017. 1:19 AM