காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா?

தொழுகையில் வரிசையில் நிற்கும் போது ஒருவருடைய பாதமும், அருகில் நிற்பவரின் பாதமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் நிற்க வேண்டுமா?

கே.எஸ்.சுக்ருல்லாஹ்

பதில்

இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு சிலர் செய்து வருகின்றனர்.

صحيح البخاري

725 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي، وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ، وَقَدَمَهُ بِقَدَمِهِ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்கலானார்கள்.

நூல் : புகாரி 725

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்துத் தான் ஒருவரது பாதங்களுடன் மற்றவரின் பாதங்களைச் சேர்த்துக் கொண்டு நிற்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இது குறித்து அபூதாவூதிலும் இன்னும் சில நூல்களிலும் இடம் பெற்ற ஹதீஸில் பின்வருமாறு கூடுதல் விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

سنن أبي داود

662 – حدثنا عثمان بن أبي شَيبةَ، حدَّثنا وكيع، عن زكريا بن أبي زائدةَ، عن أبي القاسم الجَدَلي، قال: سمعت النعمان بن بشير يقول: أقبَلَ رسول الله – صلى الله عليه وسلم- على النَّاسِ بوجهِه فقال: “أقيموا صُفوفَكم- ثلاثاً- واللهِ لتُقيمُن صُفوفَكم أو ليُخالِفَن اللهُ بين قُلوبكم”. قال: فرأيتُ الرجلَ يُلزِقُ مَنكِبَه بمَنكِبِ صاحِبِه، ورُكبَتَه برُكبةِ صاحِبِه، وكَعبَه بكعبِه

எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது முட்டுக்காலை தம் அருகிலிருப்பவரின் முட்டுக்கால்களுடனும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்கலானார்கள்

நூல் : அபூதாவூத்

அதாவது இந்த ஹதீஸ்களில் மூன்று விஷயங்கள் கூறப்படுகின்றன.

1-அருகில் இருப்பவரின் பாதத்துடன் தனது பாதத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பது

2-அருகில் இருப்பவரின் முட்டுக்காலுடன் தனது முட்டுக்காலைச் சேர்த்துக் கொண்டு நிற்பது

3-அருகில் இருப்பவரின் தோள்புஜத்துடன் தனது தோள்புஜத்தைச் சேர்த்துக் கொண்டு நிற்பது

இவர்கள் முதல் ஹதீஸைப் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டு இந்த ஹதீஸைச் செயல்படுத்துவதாக இருந்தால் இதில் கூறப்படும் மூன்றையும் செயல்படுத்த வேண்டும்.

அருகில் இருப்பவரின் முட்டுக்காலுடன் தனது முட்டுக்காலைச் சேர்த்துக் கொண்டு யாராலும் நிற்க முடியாது.

அது போல் தோள் புஜத்துடன் தோள்புஜத்தைச் சேர்த்துக் கொண்டு நிறபதும் சாத்தியாமாகாது. அனைத்து மனிதர்களும் சமமான உயரம் உடையவர்களாக இருந்தால் தான் ஒருவரது தோள் புஜத்துடன் மற்றவரின் தோள்புஜம் சேரும் வகையில் நிற்க முடியும். இல்லாவிட்டால் ஏற்ற இறக்கமாகத் தான் நிற்க முடியும்.

ஆனால் ஒருவரது தோள், முட்டுக்கால், பாதம் ஆகிய மூன்றும் மற்றவரின் தோள், முட்டுக்கால், பாதம் ஆகியவற்றுடன் சேர்ந்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

எது சேரவே முடியாதோ அது சேர்ந்ததாகக் கூறப்பட்டால் இது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது. இதற்கு வேறு அர்த்தம் தான் கொடுக்க வேண்டும்.

வரிசையில் நிற்கும் போது ஒருவர் முன்னால் தள்ளிக் கொண்டும், இன்னொருவர் பின்னால் தள்ளிக் கொண்டும் நின்றால் வரிசை நேராக அமையாது. ஒரே நேர்கோட்டில் நின்றால் தான் வரிசை சீராக அமையும். அவ்வாறு நேர்கோட்டில் நிற்கும் போது இருவரது தோள் புஜங்களும், இருவரது முட்டுக்கால்களும், இருவரது பாதங்களும் ஒரு நேர்கோட்டில் அமையும். ஒரு நேர்கோட்டில் அமைந்ததைத் தான் அறிவிப்பாள்ர் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டால் இது நடைமுறைப்படுத்த சாத்தியமானது.

ஒன்றுடன் ஒன்று ஒட்ட வேண்டும் என்று பொருள் கொண்டால் இந்த ஹதீஸ் நடக்க முடியாததைக் கூறுவதாக அமைந்து விடும்.

மேலும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிசையைச் சீராக்குங்கள் என்று கூறியவுடன் நபித்தோழர்கள் அதற்குச் செயல் வடிவம் கொடுத்தது பற்றித் தான் இது குறிப்பிடுகிறது.

வரிசையை நேராக்குங்கள் என்ற கட்டளையை நேர்கோட்டில் நிற்க வேண்டும் என்று தான் யாரும் புரிந்து கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு என்ன அர்த்தமோ அதைத் தான் நபிதோழர்கள் செயல்படுத்தி இருக்க முடியும். இதன் படி பார்த்தாலும் நேர்கோட்டில் நின்றதைத் தான் இப்படி நபித்தோழர் குறிப்பிட்டுள்ளார் என்பது உறுதியாகிறது.

صحيح مسلم

1007 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُسَوِّى صُفُوفَنَا حَتَّى كَأَنَّمَا يُسَوِّى بِهَا الْقِدَاحَ حَتَّى رَأَى أَنَّا قَدْ عَقَلْنَا عَنْهُ ثُمَّ خَرَجَ يَوْمًا فَقَامَ حَتَّى كَادَ يُكَبِّرُ فَرَأَى رَجُلاً بَادِيًا صَدْرُهُ مِنَ الصَّفِّ فَقَالَ « عِبَادَ اللَّهِ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈட்டியை நேராக்குவது போல் வரிசையை நேராக்குவார்கள். நாங்கள் இதைப் புரிந்து கொள்ளும் வரை வரிசையைச் சரியாக்குவார்கள். பின்னர் ஒரு நாள் வந்து தக்பீர் சொல்லத் தயாரான போது ஒரு மனிதர் நெஞ்சைத் தள்ளிக் கொண்டு நின்றதைப் பார்த்தார்கள். அப்போது வரிசையைச் சீராக்குங்கள் என்று குறிப்பிட்டார்கள்.

நூல் :முஸ்லிம்

நெஞ்சைத் தள்ளிக் கொண்டு நிற்கும் போது அவர்கள் வரிசையை நேராக்குங்கள் என்று கூறியதில் இருந்தும் நேராக்குதல் என்பதன் பொருளை அறியலாம்.

இதை ஏற்காமல் ஒன்றுடன் ஒன்றைச் சேர்ப்பது என்று பொருள் கொள்வார்களானால் அவர்கள் பாதங்களோடு பாதங்களைச் சேர்ப்பதால் மட்டும் இந்த ஹதீஸைச் செயல்படுத்தியவர்களாக மாட்டார்கள். பாதம், முட்டுக்கால். புஜம் ஆகிய மூன்றையும் அருகில் உள்ளவருடன் இணைத்துக் காட்டி செயல் வடிவம் கொடுத்துக் காட்ட வேண்டும். ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுக்கும் போது அதில் ஒன்றை ஏற்று இரண்டை விட்டு விடுவது ஹதீஸ்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதாக ஆகாது.