கமலஹாசனின் குடும்பத்தை விமர்சிக்கலாமா?
கமலஹாசனின் மகளுடன் இணைத்து நீங்கள் பேசியது சரியல்ல என்ற விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்
கமலஹாசனுக்கும், நமக்கும் எந்த உறவும், பகையும் இல்லை. கமலஹாசனுடன் நமக்கு எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அவரைப் பற்றி பேசவேண்டிய எந்த உள் நோக்கமும் இல்லை.
பிரச்சனை கமலஹாசன் என்ற நடிகர் ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து வரலாற்றுக்கு முரணாக படங்களை எடுத்து வந்தார்.
இதனால் சமுதாயத்தில் சிறிது சிறிதாக அவர் மீது கோபம் அதிகரித்து வந்தது. விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் குர்ஆன் வசனங்கள் தான் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்றும், முஸ்லிம்கள் எதற்கெடுத்தாலும் தலாக் சொல்லி பெண்ணை அந்தரத்தில் விட்டு விடுகின்றனர் என்றும், அப்பனால் கைவிடப்பட்டதால் தான் முரடர்களாக உள்ளனர் என்ற கருத்தையும் அப்படத்தில் சொல்லி இருக்கிறார்.
இந்தக் கதையில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசனின் அப்பாவும் கமலஹாசனின் அம்மாவை தலாக் சொல்லி விட்டார் எனக் கூறி முஸ்லிம்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அப்பனால் கைவிடப்பட்டவர்கள் என இப்படத்தில் காட்டியுள்ளார்.
உண்மையில் முஸ்லிம் சமுதாயத்தில் தான் மற்ற சமுதாயங்களை விட விவாகரத்து குறைவாக உள்ளது என்பது தனி விஷயம்.
காவல் துறை கொடுத்த நேரம் முடிந்து விட்டதால் அதை விளக்க இயலாமல் போய்விட்டது.
பெண்களை அனுபவித்து விட்டு கழற்றி விடுவார்கள் என்று சொல்கிறாயே அந்த விமர்சனம் உனக்குத் தான் பொருந்தும். சரிகாவை அனுபவித்து கழற்றி விட்டாய். வானியை அனுபவித்து கழற்றி விட்டாய். இப்போது கவுதமியை கல்யாணம் செய்யாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்றெல்லாம் நேரம் இருந்து நான் விளக்கி இருந்தால் இதன் நியாயம் புரிந்திருக்கும்.
இதைத் தெளிவாக பின்னர் விளக்க வேண்டும்; படத்தில் உள்ளதை விமர்சிக்கும் போது அதை விளக்க நேரம் தடையாகி விட்டது.
திருட்டு விசிடி மூலம் இந்தியாவில் இருந்து தீவிரவாதச் செயல்களுக்கு பணம் போகிறது என்று கமல் பேசியதை நான் குறிப்பிட்டேன். படத்திலும் இதைச் சொல்லி இருக்கிறார். அதைப் பின்னர் விளக்குவேன் என்று கூறினேன். ஆனால் அதை நான் கூறுவதற்கு முன் நேரம் போய்விட்டது.
இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் நைஜீரியாவுக்கு பொருளை ஏற்றுமதி செய்வதாகவும், அது பணமாக அல்காயிதாவுக்குப் போவதாகவும் படத்தில் சொல்கிறார். இந்த முக்கியமான விஷயத்தைக் கூட நான் சொல்ல முடியாமல் போய் விட்டது. அது போல் தான் தலாக் மேட்டரும் விடுபட்டு விட்டது.
(இதெல்லாம் படத்தைப் பார்க்காமல் கேள்விப்பட்டதை வைத்து சொல்லவில்லை. கமல ஹாசன் வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்து அறிந்து கொண்ட விஷயமாகும்.)
குடும்ப அமைப்பைப் பேணுவதில் முதலிடத்தில் முஸ்லிம் சமுதாயமும் இரண்டாம் இடத்தில் இந்து சமுதாயமும் கடைசி இடத்தில் கிறித்துவ சமுதாயமும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உணர்வில் இந்த ஆய்வு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சமுதாயத்தில் அப்பனால் கைவிடப்பட்டு தீவிரவாதிகளாக ஆகிறார்கள் என்று கமலஹாசன் காட்சி வைப்பது கதைக்குத் தேவை இல்லாமல் இருந்தும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவதற்காகவே இதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
அப்பனால் கைவிடப்பட்டு வளர்ந்தவர்கள் எல்லாம் சிறந்த ஜிஹாதிகளாக (தீவிரவாதிகளாக) வருகின்றார்கள் என்று கமலஹாசனைப் பார்த்து தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமர் சொல்கின்றார். அப்பன் பேரே தெரியாதவர்கள் இதை விட இன்னும் பெரிய (ஜிஹாதிகளாக) தீவிரவாதிகளாக உள்ளார்கள் என்று முல்லா முஹம்மது உமரைப் பார்த்து கமலஹாசன் சொல்வதாக காட்சி அமைப்பு வருகின்றது.
அப்படியானால் இஸ்லாமியர்கள் பலர் தங்களது மனைவிமார்களைக் கழற்றி விட்டுவிடுவதால் சிறிய தீவிரவாதிகளாக ஆக்கப்படுகின்றார்கள். பலர் அப்பன் யாரென்றே தெரியாமல் பெரிய தீவிரவாதிகளாக மாறுகின்றார்கள் என்று இதன் மூலம் சொல்ல வருகின்றார்.
இதற்குக் கூட எனக்கு கோபம் வரக் கூடாது என்றால் நான் மனிதனாக இருப்பதற்கே தகுதி அற்றவனாகி விடுவேன்.
கமலஹாசனின் குடும்பம் பற்றி நான் பேச அவர் தான் காரணம்.
மேலும் கமலஹாசனின் படத்தை நியாயப்படுத்தும் போது அவரது படத்தைப் பற்றித் தான் பேச வேண்டும். ஆனால் காம்ரேடுகள் அவர் முற்போக்காளர் என்பதால் அவரது படத்தைத் தடுக்கக் கூடாது என்று வாதம் வைக்கின்றனர்.
ஒருவர் முற்போக்கானவர் என்பதால் அவர் செய்யும் பிற்போக்கையும் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுடையோர் சொல்ல மாட்டார்கள். ஆனால் காம்ரேடுகள் அறிவு மட்டும் இதை ஒரு வாதமாக வைக்கலாம் என்கிறது.
அப்பனும், மகளும் காதல் டூயட் பாடுவோம் என்று சொல்வது தான் முற்போக்கா? என்று கேட்பதற்காக அவரது மகள் சொன்னதை நான் குறிப்பிட்டேன். மகளை விடுங்கள் கமல ஹாசனே என்ன சொன்னார்.
இதோ படியுங்கள்
கமலும், அவரது மகள் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே ஸ்ருதி 7ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக படத்தில் நடித்தார். தற்போது பலுடி ஏவடு என்ற இரு தெலுங்குப் படங்களிலும், இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த்த் தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:-
எனது மகள் ஸ்ருதியும், நானும் புதுப் படமொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகி விட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்கவில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் இந்தப் படத்தை எடுப்போம்.
கமலஹாசன் பெண்களுடன் எப்படி நடிப்பார் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். கட்டிப்பிடிப்பதும், உதட்டில் முத்தம் கொடுப்பதும் ஆபாசமாக அங்க அசைவுகள் செய்வதும் உலகறிந்த ஒன்று.
இப்படி மகளுடன் நடிப்பேன் என்று கூறுவது தான் முற்போக்கா? என்று நான் கேட்பது தவறு அல்ல.
மானமுள்ள தந்தை இப்படிக் கூற முடியுமா? என்று நான் கேட்டது சரியானது தான்.
சினிமாக்காரர்கள் 25 ஆண்டுகளாக என் சமுதாயத்தைக் கேவலப்படுத்தும் போது அதற்கு எதிராக திருமாவளவன் போன்ற ஒரு சிலர் தவிர அத்தனை பேரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுக்காக நாங்கள் பேசினால் தான் உண்டு என்று தள்ளப்பட்ட நிலையில் கமலின் அநாகரிகத்தை அவர் எங்களைத் தொடர்ந்து வம்புக்கு இழுத்ததால் இதை எடுத்துக் காட்டுகிறோம். அவர்களே வெட்கம் கெட்டுப் போய் சொன்னதைத் தான் எடுத்துக் காட்டினேன். அவதூறாக எதையும் சொல்லவில்லை.
இப்போது கூட கமலஹாசனின் முப்பது கோடி ரூபாய் இழப்பைத் தான் பேசுகிறார்கள். சிறுபான்மை சமுதாயம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே? எந்த விஷயத்திலும் ஒன்றுபடாத முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபடுகிறார்களே அதில் நியாயம் இல்லாமல் இருக்காது என்று அறிவு ஜீவிகளுக்கு தோன்றாதது ஏன்?
28.01.2013. 23:20 PM