கந்தூரி விழாக்கள்

தமிழக முஸ்லிம்கள் எதையுமே விழாவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டால் நபியைப் பின்பற்றுவதன் அவசியத்தை அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக்குவது என்பதிலேயே அவர்களின் கவனம் செல்கின்றது.

இறை நேசர்களில் சிலர் இந்த மார்க்கத்துக்காக ஆற்றிய சேவைகளைக் கூறினால் நாமும் அப்படிச் சேவை செய்ய வேண்டும்  என்று அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக ஆக்கலாம் என்பதில் தான் அவர்களுக்குக் கவனம்.

புகாரி இமாம் அவர்கள் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக செய்த தியாகத்தைக் கூறினால் அதிலிருந்து ஹதீஸ்களின் முக்கியத்துவத்தை உணர மாட்டார்கள். மாறாக அதையும் விழாவாக்குவது அவர்களின் நோக்கம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் எத்தனையோ நபிமார்கள் சென்று விட்டனர். அவர்களுக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கந்தூரி நடத்திக் கொண்டிருக்கவில்லை. உணவுகள் வழங்கிக் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை மறக்கச் செய்வதற்காக ஷைத்தான் விரிக்கும் மாய வலைகள் இவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் மவ்லூது ஓதினால் போதும்; எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்தது இந்த விழாக்கள் தான்.

புகாரி கந்தூரி நடத்துவது தான் ஹதீஸுக்குச் செய்யும் மரியாதை. ஹதீஸைப் பின்பற்ற வேண்டியதில்லை  என்ற எண்ணம் வளரவும் இந்த விழாக்கள் தான் காரணம்.

உண்மையான முஸ்லிம்கள் இது போன்ற விழாக்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.