கொலை செய்த மூஸா நபி தண்டிக்கப்படாதது ஏன்?
கொலைக் குற்றத்துக்கு இவ்வுலகில் கிடைக்கும் தண்டனை வேறு; மறுமை தண்டனை வேறு. இவ்வுலகில் இஸ்லாம் கூறும் தண்டனையை அளிப்பதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய ஆட்சி இருந்தாக வேண்டும். மூஸா நபி அவர்களால் ஒருவர் கொல்லப்பட்ட போது மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கவில்லை. இறைவனின் சட்டத்தின் படி தண்டிக்கும் எந்த அரசாங்கமும் அப்போது இருக்கவில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மூஸா நபி செய்தது கொலைக் குற்றத்தில் சேராது. ஏனெனில் கோபத்தில் ஒருவரைத் தாக்குவது தான் அவர்களின் நோக்கம். கொலை செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் அடித்த அடி படாத இடத்தில் பட்டதால் தாக்கப்பட்டவர் இறந்தது எதிர்பாராதது.
இஸ்லாமிய அரசு இருந்தால் இதற்காக நட்ட ஈடு தான் கொடுக்க வேண்டும். மரண தண்டனை கொடுக்க முடியாது. நட்ட ஈடு பெற்றுத் தருவதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்த ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் தான் சாத்தியமாகும். அப்படி ஒரு அரசு இல்லாவிட்டால் இந்தத் தண்டனையும் கொடுக்க முடியாது.
தவறுதலாகக் கொலை செய்து அதற்காக மன்னிப்புக் கேட்டால் இறைவன் விரும்பினால் அதை மன்னிப்பான். மூஸா நபியை அல்லாஹ் மன்னித்து விட்டதாகக் குர்ஆன் கூறுகிறது.
அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். . என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்.
திருக்குர்ஆன் 28:15-17
தவறுதலாகவே கொல்லப்பட்டிருந்தாலும் கொல்லப்பட்டவர் மறுமை நாளில் முறையிட்டால் அவருக்கு உரிய நியாயத்தை அல்லாஹ் அவருக்கு வழங்காமல் இருக்க மாட்டான். மூஸா நபியின் சில நன்மைகளை எடுத்து கொல்லப்பட்டவருக்கு இறைவன் கொடுக்கலாம். இதனால் மூஸா நபி போன்றவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் போகலாம். இறைத் தூதர்கள் பார்டரில் பாஸாக மாட்டார்கள். அதிகமான நன்மைகளைச் செய்திருப்பார்கள் என்பதால் அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் போகலாம்.
18.04.2011. 8:37 AM