கொரோனாவுக்கு அஞ்சி பள்ளிவாசலுக்கு விடுமுறை சரியா?

குவைத் நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐங்காலத் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. பாங்கு மட்டும் சொல்லப்படும்; ஜமாஅத் தொழுகை நடக்காது; எல்லோரும் வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்துள்ளது. குவைத் அரசு.

இந்தத் தடை மார்க்க அடிப்படையில் சரியானது தான் என்று சில மவ்லவிமார்கள் தமிழ் கூறும் மவ்லவிமார்கள் நியாயப்படுத்தி பதிவுகள் போட்டு வருகின்றனர்.

«901» حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ابْنُ عَمِّ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ. قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ. فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ.

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்:

‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்)  உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 901

மழைக் காலங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த இச்சலுகை வேறு காரணங்களுக்கும் பொருந்தும் என்று வாதிடுவோர் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்ட முடியாது.

ஒவ்வொருவரையும் பாதிக்கின்ற பாதிப்பு திட்டவட்டமாகத் தெரிகின்ற காரியங்களுக்குத் தான் இதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

அதாவது வெளியே வருவதால் ஏற்படும் பாதிப்பு உறுதியானதாக இருக்க வேண்டும்.

மேலும் அனைவரையும் பாதிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த இரு தன்மைகளும் இருந்தால் தான் மழைக்கான சலுகை பற்றிய ஹதீஸை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.

மழைக் காலத்தில் வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு வரும் ஒவ்வொருவரும் நனைவார்கள்.

ஒவ்வொருவரும் ஈரத்தில் சேற்றில் சகதியில் நடந்து வருவார்கள்.

மழையினால் ஏற்படும் கடுங்குளிர் ஒவ்வொருவரையும் பாதிக்கும்.

மேலும் இது ஏற்படுமா ஏற்படாதா என்று சந்தேகத்துக்கு உரியதல்ல. நிச்சயம் இந்த சிரமம் ஏற்பட்டே தீரும்.

இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்.

ஆனால் கொரோனா என்பது பள்ளிக்கு வரும் ஒவ்வொருவரையும் பாதிக்காது. ஓரிருவரைப் பாதிக்கலாம்; அது கூட உறுதியானதல்ல.

யாருக்கும் பாதிப்பு இல்லாமலும் இருக்கலாம்.

இலட்சத்தில் ஒன்று அளவில் கூட வாய்ப்பு இல்லாத கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிவாசலை மூடுவது அறிவீனமாகும்.

இவர்களின் இந்த வாதம் சரி என்றால் 365 நாட்களிலும் பள்ளிவாசலைப் பூட்டி வைக்க வேண்டும். சாதாரண நாட்களில் வெளியே வரும் இலட்சத்தில் ஒருவருக்கு ஜலதோசம் பிடிக்கலாம், ஏதாவது தொற்று ஏற்படலாம் என்று ஃபத்வா கொடுத்து விட்டு மழைக்காக சொன்ன ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவார்களா?.

பள்ளிவாசலைப் பூட்டுவதற்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படும் என்று இம்முடிவை எடுக்கும் குவைத் அரசாங்கம் எந்தக் காரணத்துக்காகவும் யாரும் வெளியே வரக் கூடாது என்று சட்டம் போட வேண்டும்.

எல்லா நிறுவனங்களையும் முற்றிலுமாக இழுத்து மூட வேண்டும்.

ஒருவரை ஒருவர் சந்தித்தாலே கொரோனா பிடித்து விடும் என்ற காரணத்துக்காக பள்ளிவாசலைப் பூட்டினால் மேற்கண்ட அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வீட்டில் கூட ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் பூட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதீர்கள்! குழந்தைகளைக் கொஞ்சாதீர்கள் என்று சட்டம் போட வேண்டும்,

இவற்றாலும் கொரோனா தொற்ற வாய்ப்புகள் உண்டு.

அப்படி சட்டம் போடவில்லை. போடவும் மாட்டார்கள்.

கொரோனாவுக்கு எந்த அளவுக்கு அஞ்ச வேண்டும் என்பதை தொழுகை அல்லாத மற்ற விஷயங்களில் தெளிவாக அறிந்து உள்ளார்கள்.

பள்ளிவாசல் தொழுகை விஷயத்தில் மட்டும் இலட்சத்தில் ஒன்று என்ற அளவில் சாத்தியமுள்ள உறுதி செய்யப்படாத ஊகத்துக்காக பள்ளியைப் பூட்டுவது மார்க்கத்தை வளைப்பதில் தான் சேரும்.

இதன் முழுக்குற்றமும் இந்த முடிவை எடுத்த மூடர்களைத் தான் சேரும்.

பூட்டப்பட்ட காரணத்தினால் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாத மக்களைச் சேராது.

இது தவறான முடிவு எங்களால் எதிர்த்து நிற்க முடியாது என்ற எண்ணத்துடன் வீட்டில் தொழுதால் அவர்களின் கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.

இது மார்க்கத்தில் உள்ளது தான் என்று நம்பி வீட்டில் தொழுபவர்கள் குற்றவாளிகளாவார்கள்.