குடும்பக் கட்டுப்பாடு கூடுமா?

உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன.

குடும்பக் கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனைக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை.

அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையைக் கையாண்டு வந்தனர்.

அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இது தான் அன்றைய மக்களிடம் அறிமுகமான முறை. அரபு மொழியில் இந்தச் செயல் அஸ்ல் எனக் கூறப்படுகிறது. இந்த அஸ்ல் என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

صحيح البخاري
5209 – وَعَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: «كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالقُرْآنُ يَنْزِلُ»

குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து வந்தோம்

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5209

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித் தோழர்கள் அஸ்ல் செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தடை செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில்

صحيح مسلم 
138 – (1440) وحَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَلَغَ ذَلِكَ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَنْهَنَا»

நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை. என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 2847

صحيح مسلم 
135 – (1439) حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سَعِيدِ بْنِ حَسَّانَ، عَنْ عُرْوَةَ بْنِ عِيَاضٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ عِنْدِي جَارِيَةً لِي، وَأَنَا أَعْزِلُ عَنْهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكَ لَنْ يَمْنَعَ شَيْئًا أَرَادَهُ اللهُ» قَالَ: فَجَاءَ الرَّجُلُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ الْجَارِيَةَ الَّتِي كُنْتُ ذَكَرْتُهَا لَكَ حَمَلَتْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا عَبْدُ اللهِ وَرَسُولُهُ»،

எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2844

இந்த ஹதீஸில் அந்த மனிதர் அஸ்ல் செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாங்களே முன் வந்து அஸ்ல் செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்ற இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.

விதியை மாற்ற இயலாது என்பதால் அஸ்ல் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் விதியை நம்புவது என்பது அஸ்ல் என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. விதியை நம்புதல் எல்லாப் பிரச்சினைக்கும் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறு விதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றி விடும் என்று நம்பக் கூடாது. விதியை நம்புகிறோம் என்பதால் மருந்து உட்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வருவதில்லை. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.

صحيح مسلم 
141 – (1442) حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ، أُخْتِ عُكَّاشَةَ، قَالَتْ: حَضَرْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ: «لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ، فَنَظَرْتُ فِي الرُّومِ وَفَارِسَ، فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ، فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا»، ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَلِكَ الْوَأْدُ الْخَفِيُّ»

பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் அஸ்ல் பற்றிக் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ல் என்பது குழந்தைகளை மறைமுகமாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2850

இந்த ஒரு ஹதீஸ் மட்டும் அஸ்ல் செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் அஸ்ல் செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன.

முரண்பாடு போல் தோன்றக் கூடிய இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமாக உள்ளதால் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது. இரண்டையும் ஏற்பதற்குத் தக்கவாறு பொதுவான கருத்துக்கு நாம் வர வேண்டும்.

அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அஸ்ல் செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் அஸ்ல் அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அஸ்ல் போன்ற குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்.

இப்போதைய குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல்.

மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது.

இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்பட முடியும். அஸ்ல் என்பது இந்த வகையில் தான் அமைந்துள்ளது தெளிவாகின்றது. மற்றொரு முறை அஸ்ல் என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.

இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை.

صحيح البخاري 
5073 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، سَمِعَ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ: سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ: «رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ، وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا»

ஒரு நபித் தோழர் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர்.

நூல் : புகாரி 5074

ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை.

குடும்பக் கட்டுப்பாடு எனும் பெயரில் கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் கொடுமை நாட்டிலே நிலவுகின்றது இந்தக் கொடுமைக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது

திருக்குர்ஆன் 81:8,9

வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

திருக்குர்ஆன் 6:151

உருவான குழந்தைகளை அழிப்பதற்கு இது போன்ற வசனங்கள் தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.