குழந்தையின் சிறுநீர் பட்டால்?
குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா?
பதில்:
குழந்தையின் சிறுநீர் விஷயத்தில் ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் சட்டத்தில் வேறுபாடு உள்ளது.
இதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ وَالرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ قَابُوسَ عَنْ لُبَابَةَ بِنْتِ الْحَارِثِ قَالَتْ كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَالَ عَلَيْهِ فَقُلْتُ الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ قَالَ إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ
அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுஸைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மடியில் இருக்கும் போது, அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். ‘வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையைக் கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். ‘பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும்’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: லுபாபா பின்த் அல்ஹர்ஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 320