லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா?

குர்ஆனில் முரண்பாடு எனக் கூறும் கிறித்தவர்கள் நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தின் பதில் இதுவாக இருந்தது என ஓரிடத்திலும் வேறொரு இடத்தில் வேறு ஒரு பதிலைச் சொன்னார்கள் என்றும் உள்ளதாக கூறுகின்றனர். குர்ஆனில் முரண்பாடுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். விளக்கம் தேவை.

செய்யத் ஷம்சுத்தீன்

லூத் நபிக்கு அவர்களின் சமுதாயத்தார் அளித்த பதிலை அல்லாஹ் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். இந்த பதில்கள் வேறுபடுவதால் இதை முரண்பாடாகச் சிலுவை வணங்கிகள் குறிப்பிட்டுள்ளனர்.

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(56)27

லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர் என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

திருக்குர்ஆன் 27:56

أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمْ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنتَ مِنْ الصَّادِقِينَ(29)29

சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா? என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 29:29

27:56வது வசனத்தில் லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! என்று கூறியதாகவும்,

29:29 வது வசனத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைத் தான் முரண்பாடு என்கின்றனர்.

இவர்களுக்கு சிந்திக்கும் திறன் சிறிதளவும் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

லூத் நபி அவர்கள் அந்த மக்களுக்குப் பிரச்சாரம் செய்த போது அவர்கள் லூத் நபிக்கு சொன்ன பதில் நீர் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டுவா என்பதாகும்.

அதே சமயம் தங்கள் இனத்தவர்களிடம் அவர்கள் சொன்ன பதில் இவர்களை வெளியேற்றுங்கள் என்பதாகும்.

இவர்களை வெளியேற்றுங்கள் என்பது லூத் நபியை நோக்கிச் சொன்னதல்ல.

இரண்டு வகையான மக்களிடம் அவர்கள் இரண்டு விதமான பதில்களைச் சொல்லியுள்ளனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதுதான் போப் ஆண்டவரின் பதிலாக இருந்தது.

பாதிரிமார்கள் திருமணம் செய்து கொள்வது தான் இதைத் தடுக்கும் என்பது தான் போப் ஆண்டவரின் பதிலாக இருந்தது.

இப்படி போப் சொன்னதை நாம் எடுத்துக்காட்டினால் இதை முரண் என்று சொல்ல முடியுமா? ஒன்று மக்களுக்கு சொன்னது. மற்றொன்று பாதிரிமார்களுக்குச் சொன்னது.

இதைப் புரிந்து கொள்வது போல் மேற்கண்ட வசனங்களையும் புரிந்து கொண்டால் இதில் முரண்பாடு உள்ளதாகக் கருத மாட்டார்கள்.

இதில் எந்த முரண்பாடும் இல்லை.

வேதனையைக் கொண்டு வா ஆனால் கொண்டு வராதே எனக் கூறினால் அதாவது வரும் ஆனால் வராது என்று பைபிள் கூறுவது போல் கூறினால் தான் அது முரண்பாடு.