மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?
ஹதீஸ் கலையில் சில அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று காரணம் கூறி அவர் அறிவிக்கும் ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதை நாம் அறிந்துள்ளோம்.
இந்த விதியை அதிகமான மக்கள் மேலோட்டமாகவே அறிந்துள்ளனர்.
எனவே இந்த விதியை முழுமையாக விளக்கவே இந்தப் பதிவு.
அறியப்படுதல் என்றால் என்ன?
ஒரு நபர் அல்லது ஒரு செய்தி அறியப்படுதல் என்றால் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது பொருளல்ல. அனைவரைப் பற்றியும், அனைத்தைப் பற்றியும் அனைவரும் அறிந்திருக்க முடியாது.
அறியப்படுதல் என்றால் நம்பகமான யாராவது அறிந்திருப்பதாகக் கூறினால் அவர் அறியப்பட்டவர் ஆவார். பலருக்கு அவரைப் பற்றி தெரியாத காரணத்தால் அறியப்படாதவர் எனக் கூற முடியாது.
உதாரணமாக சாலிம் மகன் இஸ்மாயீல் என்று ஒருவர் ஒரு ஹதீஸில் இடம் பெறுகிறார். இவரைப் பலரும் அறியப்படாதவர் என்கிறார்கள். அல்லது அவரைப் பற்றி எந்த ஹதீஸ் கலை அறிஞரும் எதுவும் கூறாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் மட்டும் அவரைத் தெரியும் என்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அவர் அறியப்பட்டவர் ஆகிவிடுவார்.
பலருக்கு ஒருவரைப் பற்றி தெரியாததால் யாருக்குமே தெரியாது என்று கூறமுடியாது.
அதே நேரத்தில் தனக்கு ஒரு அறிவிப்பாளரைத் தெரியும் என்று சொல்பவர் எந்த அளவுக்கு அறிந்துள்ளதாகக் கூறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் அறியப்பட்டவராக ஆவார்.
இஸ்மாயீல் என்று ஒருவர் இருந்தார். அவர் இந்த ஊர்க்காரர்; இந்தக் காலத்தவர் என்பன போன்ற விஷயங்களை மட்டுமே ஒருவர் குறிப்பிட்டால் அப்படி ஒருவர் இருந்தார் என்பதற்கு இது ஆதாரமாகும். அவர் நல்லவரா? நம்பகமானவரா என்பதை முடிவு செய்ய இது போதுமாகாது.
அவர் நம்பகமானவர்; உண்மையாளர்; மனன சக்தி உள்ளவர் என்பது போன்ற விபரங்களையும் சொன்னால் தான் அந்த அறிவிப்பாளர் ஏற்கப்பட்டவர் ஆவார்.
இதற்குப் பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததே இல்லை என்று ஆயிஷா (அலி) கூறும் செய்தியை எடுத்துக் கொள்வோம்.
مسند أحمد
25787 – حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: ” مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا بَعْدَمَا أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ فَلَا تُصَدِّقْهُ “، ” مَا بَالَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! திருக்குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்கள் இப்படி கூறியதற்கு எதிராக வேறு எவரும் அறிவிக்காமல் இருந்தால் இதை அப்படியே நாம் எடுத்துக் கொள்வோம்.
ஆனால் இதற்கு மாற்றமாகவும் ஹதீஸ் உள்ளது.
صحيح البخاري
224 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ «أَتَى النَّبِيُّ صلّى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 224
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிந்த அளவுக்கு இதைக் கூறியுள்ளார்கள்; ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரியும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததைப் பார்த்து ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். இதை மறுத்தால் அந்த நபித்தோழர் பொய் சொன்னதாக ஆகும்.
இவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் ஆயிஷா (ரலி) பொய் சொன்னார்கள் என்ற கருத்து வராது. அவர் அறிந்த செய்தியை அவர் கூறியுள்ளார் என்ற கருத்து வரும்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரியாததால் யாருக்கும் தெரியவில்லை என்று ஆகாது.
அறிவிப்பாளர்கள் குறித்தும் இதே நிலைதான்.
எத்தனை பேர் நற்சான்று கூற வேண்டும்?
ஒரு அறிவிப்பாளர் அறியப்படாதவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அல்லது யாருமே அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி அவரது நம்பகத் தன்மை குறித்து சிலர் மட்டும் சான்றளித்துள்ளார்கள் என்றால் அந்தச் சிலர் என்பதற்கு எண்ணிக்கை வரம்பு உண்டா? என்பதையும் அறிந்து கொள்வோம்.
இதற்கு எண்ணிக்கை வரம்பு எதுவும் இல்லை. ஒரே ஒரு நல்லறிஞர் சான்றளித்தால் போதும்.
ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று ஒருவர் சொல்கிறார். அவரைப் பற்றி மற்ற யாரும் குறை சொல்லவில்லை என்பதைக் காரணம் காட்டி அந்த ஒரு அறிஞரின் நற்சான்றை மறுத்தால் அவரைப் பொய்யராக நாம் ஆக்கியவர்களாவோம். இதனால் அந்த நல்லறிஞரே பலவீனமானவர் என்று ஆகிவிடுவார்.
எனவே ஒரே ஒருவர் நற்சான்று அளித்தால் அறியப்படாதவர் என்ற விமர்சனம் விழுந்து விடும்.
இது நேரடியாக வழங்கும் நற்சான்றுக்குரிய நிலை. இது தவிர மறைமுகமான நற்சான்றும் உள்ளது.
மறைமுக நற்சான்று
ஒரு அறிவிப்பாளர் குறித்து இவர் நல்லவர் என்பது போல் விமர்சனம் செய்வது நேரடியான நற்சான்று ஆகும்.
இஸ்மாயீல் என்ற அறிவிப்பாளர் குறித்து ஒருவர் கூட எந்த நற்சான்றும் அளிக்கவில்லை. ஆனால் அந்த அறிவிப்பாளர் வழியாக நம்பகமான சிலர் ஹதீஸ்களை அறிவிக்கிறார்கள் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது?
அறியப்படாதவர் என்று மற்ற அறிஞர்களால் கருதப்பட்ட ஒரு அறிவிப்பாளர் வழியாக நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பதே நற்சான்றாக ஆகுமா?
பொதுவாக அப்படிக் கூற முடியாது.
மறைமுகமாக நற்சான்று அளிப்பவர்கள் இரு வகையினராக உள்ளனர்.
தன்னளவில் நம்பகமானவராக இருக்கும் அறிவிப்பாளர் தனக்கு ஹதீஸை அறிவித்தவரை எடை போட மாட்டார். நம்பகமானவர் அறிவித்தாலும், நம்பகமில்லாதவர் அறிவித்தாலும் அவர் வழியாக ஹதீஸை அறிவிப்பார். இவர்கள் ஒரு வகையினராவர்.
அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர் வழியாக இந்த வகையான நம்பகமானவர்கள் அறிவித்தால் அது நற்சான்றாக ஆகாது. ஏனெனில் தனக்கு அறிவித்தவர் நம்பகமானவரா என்பதை உறுதி செய்து அறிவிப்பது இவர்களின் வழக்கம் அல்ல என்பதால் இது நற்சான்றாக ஆகாது.
இன்னும் சில நம்பகமான அறிவிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் அறிவிக்க மாட்டார்கள். மாறாக அவர் நம்பகமானவரா என்று உறுதி செய்து தான் அறிவிப்பார்கள். தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை உறுதியாக இல்லாவிட்டால் அவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார்கள். இத்தகையவர்கள், அறியப்படாதவர்கள் எனக் கருதப்படும் அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அது அவருக்கான நற்சான்றாக ஆகும். அறியப்படாதவர் என்ற குறைபாடு நீங்கி விடும்.
நேரடியாக நற்சான்று அளிப்பது ஒரே ஒரு அறிஞராக இருந்தால் போதும் என்று முன்னர் அறிந்தோம். மறைமுக நற்சான்றுக்கும் ஒருவரே போதும் என்பதே சரியான கருத்தாகும்.
மறைமுக நற்சான்று அளிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் இருவர் அப்படி அறிவிக்க வேண்டும் என்று சிலரும் மூவர் அறிவிக்க வேண்டும் சிலரும் கூறியுள்ளனர். இது சரியான நிலைபாடு இல்லை.
நம்பகமானவர் என்று இவர்களும் ஏற்றுக் கொண்ட ஒருவர், நம்பகமானவர் என்று தன்னளவில் உறுதியானால் மட்டுமே அறிவுக்கும் அறிஞராக ஒருவர் இருக்கிறார். இவர் அறியப்படாதவர் என்று கருதப்படும் நபரிடமிருந்து அறிவிக்கும் போது அதை நாம் மறுத்தால் அவர் பொய் சொல்லி விட்டார் என்றும் சரியாக ஆய்வு செய்ய மாட்டார் என்றும் குற்றம் சுமத்தியதாக ஆகும். எனவே ஒருவர் அறிவித்தாலும் அது நற்சான்றாக ஆகும் என்பதே சரியாகும்.
علل الترمذي
والمنصوص عن أحمد يدل على أنه من عرف منه أنه لا يروي إلا عن ثقة، فروايته عن إنسان تعديل له. ومن لم يعرف منه ذلك فليس بتعديل، وصرح بذلك طائفة من المحققين من أصحاب الشافعي.
நம்பகமான அறிவிப்பாளர் மூலம் மட்டுமே அறிவிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர் என்று அறியப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அதுவே அவர் நம்பகமானவர் என்பதற்கான சான்றாகும். யார் வழியாகவும் அறிவிக்கும் வழக்கமுடையவர் – அவர் தன்னளவில் நம்பகமானவராக இருந்தாலும் – ஒருவரிடமிருந்து அறிவித்தால் அது அவருக்கான நற்சான்றாக ஆகாது. இதை ஷாஃபி இமாம், மற்றும் அவர்களின் மாணவர்களில் தீர்க்கமான அறிவுடையவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : இலல் அத்திர்மிதி
ஒருவர் நம்பகமானவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளார். அவர் நம்பகமானவர் வழியாக மட்டுமே அறிவிப்பார். யாரென அறியப்படாதவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார் என்று நாம் ஒப்புக் கொண்டு விட்டு அவர் நற்சான்று அளித்தவரை ஏற்கமாட்டேன் என்று கூறுவது அவரைப் பொய்யராக்குவதாகும். அவரது நம்பகத் தன்மையை சந்தேகிப்பதாகும்.
இக்கருத்தை இன்னும் பல அறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
قال أحمد – في رواية الأثرم – إذا روى الحديث (عبد الرحمن) بن مهدي (عن) رجل، فهو حجة، ثم قال: كان عبد الرحمن أولا يتساهل في الرواية عن غير واحد، ثم تشدد بعد، وكان يروى عن جابر، ثم تركه.
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ ஒருவர் வழியாக அறிவித்தால் அந்த ஒருவர் ஆதாரமாகக் கொள்ளத் தக்கவராவார். ஆரம்ப காலத்தில் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் நம்பகமானவர் என்று உறுதி செய்யாத பலர் வழியாக அறிவித்து வந்தார். பின்னர் இதில் கடுமையான நிலைபாட்டை எடுத்து விட்டார் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்கள்.
شرح علل الترمذي
وقال) في رواية أبي زرعة: مالك بن أنس إذا روى عن رجل لا يعرف فهو حجة.
இமாம் மாலிக் அவர்கள் அறியப்படாத ஒருவர் வழியாக அறிவித்தால் அவர் அறியப்படாதவர் அல்ல. ஆதாரமாகக் கொள்ளத்தக்கவர் ஆவார் என்று அபூ ஸுர்ஆ கூறுகிறார்.
شرح علل الترمذي
وقال (في) رواية ابن هانئ: ما روى مالك عن أحد إلا وهو ثقة. كل من روى عنه مالك فهو ثقة
நம்பகமானவர் வழியாக தவிர யார் வழியாகவும் மாலிக் இமாம் அறிவிக்க மாட்டார். எனவே யார் வழியாக மாலிக் இமாம் அறிவிக்கிறாரோ அவர்கள் நம்பகமானவர்கள் ஆவர்.
شرح علل الترمذي
وقال الميموني: سمعت أحمد – غير مرة – يقول: كان مالك من أثبت الناس. ولا تبال أن لا تسأل عن رجل روى عنه مالك، ولا سيما مدني.
மாலிக் இமாம் மக்களில் அதிக உறுதியானவராவார். ஒருவர் வழியாக மாலிக் இமாம் அறிவித்து விட்டால் மற்றவர்களிடம் அவரைப் பற்றிக் கேட்காதே என்றும் இமாம் அஹ்மத் கூறுகிறார்கள்.
قال الميموني: وقال لي يحيى بن معين: لا تريد أن تسأل عن رجال مالك كل من حدث عنه ثقة إلا رجلا أو رجلين.
மாலிக் இமாம் யார் வழியாக அறிவித்துள்ளாரோ அவர்கள் நம்கமானவர்கள் ஆவார்கள். ஓரிருவரைத் தவிர. எனவே மாலிக் இமாம் யார் வழியாக அறிவித்தாரோ அவரைப் பற்றிக் கேட்காதே என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார்.
شرح علل الترمذي
وقال يعقوب بن شيبة: قلت ليحيى بن معين: متى يكون الرجل معروفا؟ إذا روى عنه كم؟ قال: إذا روى عن الرجل مثل ابن سيرين والشعبي، وهؤلاء أهل العلم، فهو غير مجهول. قلت: فإذا روى عن الرجل (مثل سماك) بن حرب، وأبي إسحاق؟ قال: هؤلاء يروون عن مجهولين، انتهى. وهذا تفصيل حسن.
யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர் அறியப்பட்டவராக ஆக எத்தனை நபர்கள் அவர் வழியாக அறிவிக்க வேண்டும் என்று யஹ்யா பின் மயீன் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு ஸீரீன், ஷுஅபி ஆகிய அறிஞர்கள் அவர் வழியாக அறிவித்தால் அவர் அறியப்படாதவர் ஆக மாட்டார். ஸிமாக் பின் ஹர்ப், அபூ இஸ்ஹாக் ஆகியோர் ஒருவரிடமிருந்து அறிவித்தால் அதனால் அறியப்பட்டவர் ஆக மட்டார். ஏனெனில் இவர்கள் அறியப்படாதவர்கள் வழியாகவும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்று இப்னு மயீன் பதிலளித்ததாக யஃகூப் பின் ஷைபா கூறுகிறார்.
. وابن المديني يشترط أكثر من ذلك: فإنه يقول فيمن يروي عنه يحيى بن أبي كثير وزيد بن أسلم معا، إنه مجهول.
யாரென அறியப்படாதவர் வழியாக யஹ்யா பின் அபீ கஸீர், ஸைத் பின் அஸ்லம் ஆகிய இருவர் அறிவித்தாலும் அவர் அறியப்படாதவர் தான் என்று இப்னுல் மதீனீ கூறுகிறார்.
ويقول فيمن يروي عنه شعبة وحده، إنه مجهول .
அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக ஷுஃபா மட்டும் அறிவித்தால் அவர் அறியப்படாதவர் தான் என்றும் இப்னுல் மதீனி கூறுகிறார்.
(இவர்கள் யாரென அறியப்படாதவர்கள் வழியாகவும் அறிவிப்பவர்கள் என்பதே இதற்குக் காரணம்.)
وقال فيمن يروي عنه ابن المبارك ووكيع وعاصم، هو معروف.
யரென அறியப்படாதவர் வழியாக ஆஸிம், வகீவு, இப்னுல் முபாரக் ஆகியோரில் ஒருவர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் ஆவார்.
وقال فيمن يروي عنه عبد الحميد بن جعفر وابن لهيعة، ليس بالمشهور.
அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக இப்னு லஹ்யஆ, அப்துல் ஹமீத் பின் ஜாஃபர் ஆகியோர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவராக மாட்டார்.
وقال فيمن عنه ابن وهب وابن المبارك، معروف.
அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக இப்னு வஹப், இப்னுல் முபாரக் அறிவித்தால் அவர் அறியப்பட்டவராவார்.
وظاهر هذا أنه لا عبرة بتعدد الرواة، وإنما العبرة بالشهرة ورواية الحفاظ الثقات. قال: هؤلاء يروون عن مجهولين، انتهى. وهذا تفصيل حسن.
இதிலிருந்து தெரிய வருவது என்ன? அறியப்படாதவர் வழியாக எத்தனை பேர் அறிவிக்கிறார்கள் என்பதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில் அவர்கள் அறியப்படாதவர்கள் வழியாகவும் அறிவிப்பவர்கள். மாறாக எத்தகையவர்கள் அவர் வழியாக அறிவித்துள்ளார்கள் என்பதற்கே முக்கியத்துவம் உள்ளது என்பது இதிலிருந்து தெரிகின்றது.
இதுதான் அறிவார்ந்த நிலைபாடாகும்.
அறியப்படாதவர் வழியாக மூன்று நம்பகமானவர்கள் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தம்மளவில் நம்பகமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள் என்றால் அவர்கள் அறிவிப்பதால் அறியப்படாதவர், அறியப்பட்டவராக மாட்டார். இது நற்சான்றாக ஆகாது.
அறியப்படாதவர் வழியாக ஒருவர் தான் அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிவிப்பாளரை எடை போட்டு நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் தான் அறிவிப்பார் என்றும் வைத்துக் கொள்வோம்.
இத்தகைய தகுதி படைத்தவர் அறியப்படாதவர் வழியாக அறிவித்தால் அறியப்படாதவர் என்ற குறை நீங்கி விடும்.
வழக்கு கொடுக்கல் வாங்கல் போன்றவைகளுக்கு இருவர் சாட்சி கூற வேண்டும்; நால்வர் சாட்சி கூற வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
மார்க்க விஷயத்தில் ஒருவர் சான்றளித்தாலே போதுமாகும்.
ஆதாரப்பூவமான ஹதீஸ்கள் என்று கூறும் ஹதீஸ்களில் பாதிக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை ஒருவரிடமிருந்து ஒருவர் என்று தான் அறிவித்துள்ளனர். ஆனாலும் ஒருவர் அறிவிப்பதால் அந்த ஹதீஸ்களை யாரும் மறுத்ததில்லை.
صحيح البخاري
88 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ
88 உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:
நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்’ (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்ட போது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.
நூல் : புகாரி 88
பால் ஊட்டியதாக ஒரு பெண் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியே ஏற்றுள்ளனர். இதற்கு வேறு சாட்சியைக் கொண்டு வருமாறு கூறவில்லை.
سنن الدارمي
1733 – حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ»
[تعليق المحقق] إسناده صحيح*
மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : தாரிமி
ஒரே ஒருவர் சாட்சியத்தை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை முடிவு செய்தார்கள். இன்னொரு சாட்சி வரட்டும் என்று காத்திருக்கவில்லை.
ஒரு நம்பகமானவர் நற்சான்று அளித்தால் போதும் என்ற நிலைபாடு ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது.
இருவர் அல்லது மூவர் அறிவிக்க வேண்டும் என்பது ஆதாரங்களின்படி அமையவில்லை.
மஜ்ஹூல் குறித்து மேலதிகமாக அறிய கீழ்க்காணும் ஆக்கத்தைப் பார்க்கவும்