மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா?
முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளின் போது ஆர்டிஓ மூலம் தீர்வு காண்பது சரியா? உதாரணமாக முக்கியமான பிரச்சினைகளான பள்ளிவாசல், மையவாடி போன்ற பிரச்சினையில் கூட மார்க்கச் சட்டத்தை விட்டு விட்டு இந்த நாட்டின் சட்டத்தை ஏற்றுக் கொள்வது எப்படி நியாயமாகும்?
எஸ்.ஆர். அகமது, துபாய்
இஸ்லாம் அல்லாத சட்டங்களைப் பின்பற்றக் கூடாது என்று கருதிக் கொண்டு இப்படி கேள்வி கேட்கும் நீங்கள் இக்கருத்தில் உண்மையாளராக இருக்க வேண்டும். நீங்களும் எதைச் செய்கிறீர்களோ அல்லது செய்வீர்களோ அது போன்றதை மற்றவர்கள் செய்யும் போது கேள்வி கேட்க முடியாது.
இது குறித்து நாம் முன்னரே பல தடவை விரிவாக தெளிவுபடுத்தியுள்ளோம். அதன் சுருக்கத்தை மீண்டும் இங்கே இடம் பெறச் செய்கிறோம்.
கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொண்டு தான் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.
திருக்குர்ஆன் 12:40
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
திருக்குர்ஆன் 5:49, 50
அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.
ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. எனவே மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படுவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானது என்பது இவர்களின் வாதம்.
இந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. மாறாக காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே அவர்களும் வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.
‘அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை’ என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை. எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.
மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். இந்தக் கேள்வியை எழுப்பக் கூடியவர்கள் கூட பல்வேறு பிரச்சினைகளில் மனிதத் தீர்ப்புக்கு வலியப் போய் கட்டுப்படவே செய்கின்றனர்.
இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:35
தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சினை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:58
அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 5:42
மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 5:95
உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.
வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்!’ நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!’ என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 38:21, 22
ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.
திருக்குர்ஆன் 21:78
தாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 49:9
மனிதர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது. இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.
ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர்.
உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான். அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் பிரித்து அறிய முடியும்.
மேலும் சிந்திக்குமாறு பல வசனங்களில் அல்லாஹ் நமக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.
மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.
மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்டித் தர அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.
صحيح مسلم
4713 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، كِلَاهُمَا عَنِ الْأَسْوَدِ بْنِ عَامِرٍ، قَالَ: أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، وَعَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ، فَقَالَ: «لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ» قَالَ: فَخَرَجَ شِيصًا، فَمَرَّ بِهِمْ فَقَالَ: «مَا لِنَخْلِكُمْ؟» قَالُوا: قُلْتَ كَذَا وَكَذَا، قَالَ: «أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இதைச் செய்யாதிருக்கலாமே’ எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?’ எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.
நூல் முஸ்லிம் 4713
மற்றொரு அறிவிப்பில் ‘நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான்’ எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் முஸ்லிம் 4712
மற்றொரு அறிவிப்பில் ‘நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்’ எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல்: முஸ்லிம் 4711
எது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம்? எது மனிதனுக்கு உள்ள அதிகாரம்? என்பது இந்த நபி மொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
உலகின் ஜனநாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு யாரும் முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.
சில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.
இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
மறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்பதை இவர்கள் வசதியாக மறப்பார்கள். உதாரணமாக இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன? வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே?
இவர்கள் மத்ஹப் கூறும் முறையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள். உலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா?
மீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது?
இதிலிருந்து தெரிய வருவது என்ன? எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள். எந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.
இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.
இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித்தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.
ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன்னால் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும். இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வாதத்தைச் செய்யும் ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று கூறினார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.
இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.
கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.
இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன்’ என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை இவர்கள் அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.
இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.
மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம்’ என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை இப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின்படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின் படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வேண்டியது தானே?
இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். ஆனால் இந்தியாவில் இயற்றப்பட்ட மனிதச் சட்டத்தின்படி சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.
அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்த வாதம் இப்போது என்னவானது?
ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.
மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா? அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா?
இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.
தங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருள்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.
அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.
ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000 ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000 ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10 ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு!
மனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000 ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம்’ என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.
ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது’ என்று வாக்குமூலம் தருகிறார்.
குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
யாரும் சொல்லாத தத்துவத்தை (?) சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.
தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.
மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.
அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.
ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதாக இருக்கலாம். அதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.
முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!
வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி?
தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வரவேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.
அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.
யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, ‘கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.
‘இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்’ என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:55
அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், குர்ஆனை உரிய முறைப்படி ஆராயாமல் அரைவேக்காட்டுத் தனமாக இவர்கள் அணுகியதால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே பள்ளிவாசல், அடக்கத்தலம் போன்ற பிரச்சினைகளில் ஆர்டிஓ விசாரணை மூலம் தீர்வு காண்பதும் இந்த அடிப்படையில் தான். லஞ்சம், ஒரு பக்கச் சார்பு காரணமாக சில தீர்ப்புகள் அநியாயமாக அளிக்கப்படலாம். அதைக் கண்டித்து போராட முடியுமே தவிர அந்த தீர்ப்புக்கு எதிராக அந்தச் சொத்தை நாம் கைவசப்படுத்த இயலாது.
சரி இப்படி கேட்பவர்களுக்கு ஆர்டிஓ விசாரணைக்கு சம்மன் வந்தால் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதிலில் இதற்கான விடையும் கிடைத்து விடும்.
உணர்வு 16:03
24.10.2011. 3:23 AM