மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே!

பி. ஜைனுல் ஆபிதீன்

كل بني آدم خطاء . وخير الخطائين التوابون

குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது.

இறைவன் மட்டுமே தவறுக்கு அப்பாற்பட்டவன்; இறைவனைத் தவிர எவராக இருந்தாலும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்ற இந்தக் கருத்து இஸ்லாத்தின் பல அடிப்படைகளை நிறுவுவதற்குப் பெரிதும் துணை நிற்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கலாகாது என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் பிரகடனம் செய்கின்றன. அதற்கு மேற்கண்ட நபிமொழி வலுவூட்டுகின்றது.

தவறுக்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை எனும் போது, தவறு செய்யும் ஒருவரை எப்படி வணங்க முடியும்? என்ற சிந்தனையை இந்த நபிமொழி ஏற்படுத்துகிறது.

அது போல் குர்ஆனையும், நபிவழியையும் மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற வசனங்களும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

இந்தக் கொள்கைக்கும் மேற்கண்ட நபிமொழி வலு சேர்க்கிறது. மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களாக இருப்பதால் எந்த மனிதனின் கூற்றையும் யாரும் பின்பற்றி நடக்கக் கூடாது; தவறு நேராத இறைவனின் செய்திகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தெளிவை மேற்கண்ட நபிமொழி ஏற்படுத்துகிறது.

தரீக்காக்கள், பித்அத்கள் போன்ற தீமைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களின் ஆயுதங்களில் ஒன்றாக மேற்கண்ட நபிமொழி அமைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சார மேடைகளில் அதிகமதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட ஹதீஸைச் சில அறிஞர்கள் உறுதியானது என்று கூறினாலும் வேறு சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் வரிசையில் காணப்படும் குறையைச் சுட்டிக் காட்டி, பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த விமர்சனம் சரியானது தானா? என்பதை நாம் ஆய்வு செய்வோம்.

மேற்கண்ட ஹதீஸ் ஹாகிம், தாரமீ, முஸ்னத் அபீயஃலா, இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத் உள்ளிட்ட பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

سنن الترمذي

2499 – حدثنا أحمد بن منيع حدثنا زيد بن حباب حدثنا علي بن مسعدة الباهلي حدثنا قتادة عن أنس : أن النبي صلى الله عليه و سلم قال كل ابن آدم خطاء وخير الخطائين التوابون

அனைத்து நூற்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அனஸ் (ரலி) நபித்தோழர் என்பதால் அவர்களை எடை போடக் கூடாது.

அனஸ் (ரலி) கூறியதாக கதாதா என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட அனைத்து நூற்களிலும் பதிவாகி உள்ளது. கதாதா நம்பகமானவர் என்பதால் இவரைக் காரணம் காட்டி இந்த ஹதீஸைக் குறை கூற முடியாது.

கதாதா கூறியதாக அறிவிப்பவர் அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவராவார். மேற்கண்ட அனைத்து நூற்களிலும் இவரே அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இவரைப் பற்றி அறிஞர்கள் முரண்பட்ட முடிவுகளைக் கூறுகின்றனர்.

تهذيب التهذيب – ابن حجر

;622 – بخ ت ق البخاري في الأدب المفرد والترمذي وابن ماجة علي بن مسعدة الباهلي أبو حبيب البصري روى عن قتادة وعبد الله الرومي وعاصم الجحدري ورياح بن عبيد الباهلي روى عنه بن المبارك والقطان وابن مهدي وأبو داود الطيالسي وخلف بن تميم وزيد بن الحباب وبهز بن أسد وسليم بن أخضر ومحمد بن سنان العوفي ومسلم بن إبراهيم وغيرهم قال أبو داود الطيالسي ثنا علي بن موسى وكان ثقة وقال إسحاق بن منصور عن بن معين صالح وقال أبو حاتم لا بأس به وقال البخاري فيه نظر وقال الآجري عن أبي داود سمعت يقول هو ضعيف وقال النسائي ليس بالقوي وقال بن عدي أحاديثه غير محفوظة وقال بن حبان لا يحتج بما لا يوافق فيه الثقات له عند ت ق حديث كل بني آدم خطاء قلت وقال الدوري عن بن معين ليس به بأس في البصريين وذكره العقيلي في الضعفاء تبعا للبخاري وأورد له عن قتادة عن أنس رفعه الإسلام علانية والإيمان في القلب

இவர் நம்பகமானவர் என்று அபூதாவூத் தயாலிஸீ அவர்களும், இவர் தகுதியானவர் என்று இப்னு மயீன் அவர்களும், இவரிடம் தவறேதும் இல்லை என்று அபூஹாதம் அவர்களும் இவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.

இவரிடம் ஆட்சேபணை உண்டு என்று புகாரி அவர்களும், இவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ அவர்களும் இவரது ஹதீஸ்கள் ஏற்புடையவை அல்ல என்று இப்னு அதீ அவர்களும் கூறியுள்ளனர். பலவீனமானவர்கள் பட்டியலில் உகைலீ அவர்கள் இவரையும் சேர்த்துள்ளார்கள். நம்பகமானவர்களுக்கு ஒப்ப இவர் அறிவிப்பவை தவிர மற்ற ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

இவரைப் பற்றி முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. முந்தைய அறிஞர்களின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்களும் இவரைப் பற்றி முரண்பட்ட தீர்ப்பையே அளிக்கின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ் வலுவான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸ் என்று ஹாகிம், இப்னுல் கத்தான் உள்ளிட்ட பல அறிஞர்கள் அடித்துக் கூறுகின்றனர். மற்றும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறும் விமர்சனங்களைக் காரணமாகக் கொண்டு இவரையும் மேற்கண்ட ஹதீஸையும் பலவீனமாக்கியுள்ளனர்.

இவரைக் குறை கூறுபவர்கள் எந்தக் குறையின் காரணமாகக் குறை கூறியுள்ளனர் என்பதை இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவாக விளக்குகின்றார்கள். இவர் குறைவாக ஹதீஸ்களை அறிவித்திருந்தும் அதில் தவறு செய்பவராக இருந்தார். மேலும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை வேறு யாரும் அறிவிப்பதில்லை என்ற அளவுக்கு தனித்து அறிவிப்பவராக இருந்தார் என்பதே இப்னு ஹிப்பான் அவர்கள் அளிக்கும் விளக்கம்.

அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவரிடம் சில தவறுகள் நேரலாம். இவ்வாறு நேராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களை அறிவிப்பவர், அதில் கூட அடிக்கடி தவறு செய்தார் என்றால் அவரது நினைவாற்றல் சராசரியை விடக் குறைவானது என்று பொருள்.

மேலும் இவர் அறிவிக்கும் எந்தச் செய்தியானாலும் அதை இவர் மட்டுமே அறிவிப்பார். வேறு யாரும் அறிவிப்பதில்லை என்பது இவரது பலவீனத்தை அதிகப்படுத்துகின்றது என்பது இப்னு ஹிப்பான் அவர்களின் மேற்கண்ட கூற்றுக்கு விளக்கமாகும்.

ஒருவரைப் பற்றிய நிறையை விட, குறையைப் பேசும் விமர்சனமே ஏற்கப்படும் என்ற விதிப்படியும், இப்னு ஹிப்பான் அவர்கள் தக்க காரணத்துடன் குறை கூறி இருப்பதாலும் இதன் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும். இந்த அறிப்பாளர் பலவீனமானவர் என்று முடிவு செய்வதும், அதன் காரணமாக இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று முடிவு செய்வதும் தான் சரியானது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை மறுக்க முடியாது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் இதே வாசகத்துடன் வேறு யார் மூலமும் அறிவிக்கப்படாவிட்டாலும் மேற்கண்ட கருத்து வேறு வாசகத்தைக் கொண்டு நம்பகமான அறிவிப்பாளர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

مسند أحمد بن حنبل

21458 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرحمن وعبد الصمد المعنى قالا ثنا همام عن قتادة قال عبد الصمد ثنا قتادة عن أبي قلابة عن أبي أسماء وقال عبد الصمد الرحبي عن أبي ذر عن النبي صلى الله عليه و سلم فيما يروى عن ربه عز و جل : إني حرمت على نفسي الظلم وعلى عبادي ألا فلا تظالموا كل بني آدم يخطئ بالليل والنهار ثم يستغفرنى فأغفر له ولا أبالي وقال يا بنى آدم كلكم كان ضالا إلا من هديت وكلكم كان عاريا إلا من كسوت وكلكم كان جائعا إلا من أطعمت وكلكم كان ظمآنا إلا من سقيت فاستهدونى أهدكم واستكسوني أكسكم واستطعموني أطعمكم واستسقوني أسقكم يا عبادي لو أن أولكم وآخركم وجنكم وإنسكم وصغيركم وكبيركم وذكركم وأنثاكم قال عبد الصمد وعسيكم وبينكم على قلب أتقاكم رجلا واحدا لم تزيدوا في ملكي شيئا ولو أن أولكم وآخركم وجنكم وإنسكم وصغيركم وكبيركم وذكركم وأنثاكم على قلب أكفركم رجلا لم تنقصوا من ملكي شيئا إلا كما ينقص رأس المخيط من البحر

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم رجاله ثقات رجال الشيخين غير أبي أسماء الرحبي – وهو عمرو بن مرثد – فمن رجال مسلم

…எனவே ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள். ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர். பின்னர் என்னிடம் மன்னிப்புக் கேட்கின்றனர். எனவே அவர்களை நான் மன்னிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்னத் அஹ்மத் நூலில் இடம் பெற்றுள்ள நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாக மேற்கண்ட வாசகம் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதாக இதை அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் என்பதால் இவரைப் பற்றிப் பரிசீலனை செய்யத் தேவையில்லை.

அபூதர் கூறியதாக அபூ அஸ்மா என்பார் அறிவிக்கிறார். அம்ர் பின் மிர்ஸத் என்பது இவரது பெயர். இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ அஸ்மா அறிவிப்பதாக அபூ கிலாபா அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். அபூ கிலாபா அறிவிப்பதாக கதாதா அறிவிக்கிறார். இவரும் நம்பகமானவர். கதாதா கூறியதாக ஹம்மாம் அறிவிக்கிறார். இவரும் நம்பகமானவர்.

ஹம்மாம் கூறியதாக அப்துர்ரஹ்மான், அப்துஸ்ஸமத் ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இவ்விருவரும் நம்பகமானவர்கள்.

இவ்விருவர் வழியாக நூலாசிரியர் அறிவிக்கிறார். மொத்தத்தில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அனைவரும் நம்பகமானவர்களாக உள்ளனர்.

ஆதமுடைய மக்கள் அனைவரும் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர் என்பதும், ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதும் ஒரே கருத்தைத் தரும் வாக்கியங்களாகும்.

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதில் இரவிலும் பகலிலும் என்று கூறப்படாவிட்டாலும் இதில் இரவிலும் பகலிலும் தவறு செய்பவர்கள் என்ற கருத்து; அடங்கியுள்ளது.

எனவே வார்த்தைகளில் தான் வேறுபாடு உள்ளதே தவிர இரண்டு ஹதீஸ்களுக்கும் கருத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

எனவே,

كل ابن آدم خطاء وخير الخطائين التوابون

குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்

(ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். அவர்களில் மன்னிப்புக் கேட்டுத் திருந்துபவரே சிறந்தவர்)

என்பது பலவீனமானது என்பதால் அதைத் தவிர்த்து விட்டு,

كل بني آدم يخطئ بالليل والنهار

குல்லு பனீ ஆதம யுக்திவு பில்லைலி வன்னஹாரி (ஆதமுடைய மக்கள் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்)

என்பதைக் கூறுவதே சிறந்ததாகும்.

விமர்சனத்துக்கு உள்ளான ஹதீஸைத் தவிர்த்து விட்டு அதை விட வலுவானதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முந்தைய ஹதீஸ் எவ்வாறு பல்வேறு அடிப்படைக் கொள்கைகளை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்ததோ அது போலவே இந்த ஹதீஸும் அமைந்துள்ளது.