மனிதர்களின் பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டதா?

ஆதமின் மக்களின் பாவத்தினால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது என்று கூறுகின்றார்களே இது சரியா?

803حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنْ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنْ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியது. (அப்போது) அது பாலை விட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதீ

இதே கருத்து அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது..

இச்செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர்  இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளை குழம்பியவர். இவர் மூளை குழம்பிய பின்னர் அவரிடம் கேட்டவர்களில் ஒருவர்  ஜரீர்  ஆவார். (பத்ஹுல் பாரீ)

இந்தச் செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவரிடம் ஜரீரே கேட்டுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

மேலும் ஹஜருல் அஸ்வத் என்பதன் பொருள் கறுப்புக்கல் ஆகும். அது ஆரம்பத்தில் வெள்ளையாக இருந்திருந்தால் ஹஜருல் அப்யள் – வெள்ளைக் கல் என்று தான் குறிப்பிட்டு இருப்பார்கள். அந்தப் பெயரால் தான் அது தொடர்ந்து அழைக்கப்பட்டு இருக்கும். அதன் பெயரே கறுப்புக்கல் என்று உள்ளதால் ஆரம்பம் முதல் அது கருப்பாகவே இருந்துள்ளது என்று அறியலாம்.

என்றாலும் ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

2886أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنْ الْجَنَّةِ رواه النسائي

ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : நஸாயீ (2886)

இச்செய்தியில் இடம்பெறும் ஹம்மாத் பின் ஸலமா என்பவர்  அதா பின் அஸ்ஸாயிப் என்பவர்  மூளை குழம்புவதற்கு முன்னர் கேட்டவராவார்.  எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

03.04.2014. 8:04 AM