மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:10 இதழில் எழுதப்பட்ட தலையங்கம் இங்கே மீண்டும் பதியப்படுகிறது.

தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் போராடி வரும் வேளையில், தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்று தற்போது ஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.

தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமா? கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.

ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும் நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டார்.

அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காக படுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.

பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன், அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.

தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால், இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.

கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்று சொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் – பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீராக!

அல்குர்ஆன் 2:179

28.02.2012. 12:01 PM