எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.
அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:134
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.
திருக்குர்ஆன் 2:286
(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 6.164
நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிதவறுபவர் தனக்கெதிராகவே வழிதவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:15
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.
திருக்குர்ஆன் 35:18
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 39:7
மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
திருக்குர்ஆன் 53:36-39
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்ற பொதுவான இந்த விதியிலிருந்து சில காரியங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்காகக் காட்டித் தந்த அந்தக் காரியங்களை மட்டும் இறந்தவர் சார்பில் உயிருடன் உள்ள அவரது வாரிசுகள் செய்யலாம். அவ்வாறு செய்தால் அதன் நன்மை இறந்தவருக்குப் போய்ச் சேரும்.
கடன்களை அடைத்தல்
ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவர் செய்த நல்லறங்கள் மரணித்தவருக்குச் சேர வேண்டுமென்று அவரது வாரிசுகள் விரும்பினால் அவர் பட்ட கடன்களை அடைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
صحيح البخاري 2295
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ: أَبُو قَتَادَةَ عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? எனக் கேட்டார்கள். மக்கள் இல்லை எனக் கூறினார்கள். ஏதாவது சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் இல்லை எனக் கூறினார்கள். உடனே தொழுகை நடத்தினார்கள். பின்னர் மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அல்லாஹ்வின் தூதரே! தொழுகை நடத்துங்கள் என்று மக்கள் கூறினார்கள். இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொல்லப்பட்டது. ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட்டார்கள். மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மூன்றாவதாக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று மக்கள் கூறினார்கள். இவர் ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் இல்லை என்றனர். இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். மூன்று தங்கக் காசுகள் கடன் உள்ளது என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். அப்போது அபூ கதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா பின் அல்அக்வஃ (ரலி)
நூல்: புகாரி 2291, 2295
صحيح البخاري 2298
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ المُتَوَفَّى، عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: «هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا؟»، فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى، وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الفُتُوحَ، قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ المُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا، فَعَلَيَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ»
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்டால் கடனை அடைப்பதற்கு எதையேனும் இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். கடனை அடைக்க எதையேனும் அவர் விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லாவிட்டால் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களிடம் கூறி விடுவார்கள். ஏராளமான வெற்றிகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய போது மூமின்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிக உரிமை படைத்தவன். எனவே கடன்பட்டு மூமின்கள் யாரேனும் மரணித்து விட்டால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பு. அவர் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேர்ந்தது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2295, 5371
கடன்பட்டவர் சொத்து எதையும் விட்டுச் சென்றால் வாரிசுகள் அதைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு முன்னால் அவரது சொத்திலிருந்து அவரது கடனை அடைப்பது அவசியம். கடன் போக மிஞ்சியது தான் உண்மையில் அவர் விட்டுச் சென்றதாகும். இதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:11
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 4:12
ஒருவர் கடனை அடைக்கும் அளவுக்கு சொத்து எதையும் விட்டுச் செல்லாவிட்டால் அவரது வாரிசுகள் தமது சொந்தப் பொறுப்பில் அதை நிறைவேற்ற வேண்டும். அல்லது கடன் கொடுத்தவரைச் சந்தித்து தள்ளுபடி செய்யுமாறு கேட்க வேண்டும்.
அவ்வாறு கடனை நிறைவேற்றாவிட்டாலோ, கடன் கொடுத்தவர் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டாலோ இறந்தவர் மறுமையில் பெரிய அளவில் நட்டம் அடைவார். கடன் கொடுத்தவர் மறுமையில் இறைவனிடம் முறையிடும் போது இவருடைய நன்மைகளை எடுத்துக் கடன் கொடுத்தவர் கணக்கில் அல்லாஹ் சேர்த்து விடுவான். செய்த நல்லறங்கள் யாவும் மற்றவருக்குப் போய்ச் சேர்ந்து விடும்.
இறந்தவருக்காக ஆடம்பர விழாவும், விருந்துகளும் வைப்பவர்கள் இறந்தவர் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால் அவரது கடன்களை அடைப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.
இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்
இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நல்லறம் அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.
அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 59:10
குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.
صحيح مسلم 4310
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ – يَعْنِى ابْنَ سَعِيدٍ – وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – هُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ».
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3084
மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.
இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல்
இறந்தவரின் நன்மைக்காக அவரது வாரிசுகள் சாதாரண அல்லது நிலையான தர்மத்தைச் செய்தால் அதன் நன்மை இறந்தவரைச் சேரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
صحيح البخاري 1388
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1388, 2760
صحيح البخاري 2756
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என அவர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2756, 2762, 2770
صحيح مسلم 4306
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- إِنَّ أَبِى مَاتَ وَتَرَكَ مَالاً وَلَمْ يُوصِ فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ قَالَ « نَعَمْ ».
என் தந்தை வஸிய்யத் ஏதும் செய்யாமல் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அது வஸிய்யத்துக்குப் பகரமாக அமையுமா? என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3081
سنن النسائي 3664
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»
அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். எது சிறந்த தர்மம்? என்று கேட்டேன். தண்ணீர் வழங்குதல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)
நூல்: நஸாயீ 3604, 3606
பள்ளிவாசல் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல், கிணறு குளம் வெட்டுதல் போன்ற நிலையான தர்மங்களை இறந்தவர்களின் நன்மைக்காகச் செய்தால் அந்த நன்மை அவர்களைச் சேரும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்
இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்திருந்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.
அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்திருந்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீது இருந்த ஹஜ் கடமை நீங்கி விடும்.
صحيح البخاري 1852
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»
ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதைச் செய்யாமலே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் அவர் சார்பில் நீ ஹஜ் செய். உன் தாய் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றப்படுவதற்கு அது தான் அதிகத் தகுதி படைத்தது எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1852, 7315
صحيح البخاري 6699
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் இறந்து விட்டார் எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6699
இறந்தவருக்காக மற்றவர்கள் ஹஜ் செய்வதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இறந்தவரின் கடன்களை அடைப்பது யார் மீது கடமையோ அவர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும். அவர் கடன்பட்டால் நீ தானே அதை அடைப்பாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.
இறந்தவரின் தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவினர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும்
இறந்தவருடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பிடித்து ஹஜ் செய்ய வைக்கின்றனர். அதற்குக் கூலியும் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இறந்தவருக்காக ஹஜ் செய்யலாம் என்றால் அவர் இறக்கும் போது அவர் மீது ஹஜ் கடமையாகி இருக்க வேண்டும்.
ஒருவர் மரணிக்கும் போது ஏழையாக இருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகவில்லை. அவர் மரணித்த பின் அவரது பிள்ளைகள் வசதி படைத்தவர்களாகி ஹஜ் செய்யும் வசதி இருந்தாலும் இவர்களின் தந்தை ஏழையாக மரணித்து விட்டதால் அவருக்காக ஹஜ் செய்யக் கூடாது. ஏனெனில் அவர் மீது ஹஜ் கடமையாக இருக்கவில்லை.
அல்லாஹ்வின் கடன் என்பது கட்டாயக் கடமையைத் தான் குறிக்கும். நாமாக விரும்பிச் செய்வது கடனாக ஆகாது.
இறந்தவருக்காக நோன்பு நோற்றல்
இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.
صحيح البخاري 1952
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»،
தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பில் அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1952
صحيح البخاري 1953
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى “،
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றட்டுமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்ததாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953
இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது
ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.
நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு நாளில் நோற்க அனுமதி உள்ளதால் நோன்பை ஒருவர் விடுவதற்கும், வேறு நாட்களில் நோற்பதற்கும் நியாயம் உள்ளது. இத்தனை நாட்களுக்குள் நோற்று விட வேண்டும் என்று கால நிர்ணயம் ஏதும் இல்லை.
ஹஜ்ஜைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மரணிப்பதற்குள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பதால் கடமையான பின்பும் அதைத் தள்ளி வைக்க முகாந்திரம் உள்ளது.
ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.
நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் தொழும் முறையில் சில சலுகைகள் உள்ளன. அதிகபட்சம் இரண்டு தொழுகைகளை ஒரு நேரத்தில் ஜம்வு செய்து தொழ சலுகை உண்டு. அதற்கு மேல் தாமதப்படுத்திட எந்த அனுமதியும், ஆதாரமும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும் எனக் கூறும் இஸ்லாம், மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளைப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.
தொழுகையைத் தவறவிட்டால் தவற விட்டது தான். அதற்காக பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி இனி மேல் உரிய நேரத்தில் தொழுவது தான் அவசியம்.
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:59,60
தொழுகையைத் தவற விட்டவர்கள் அதற்காகப் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்துவதைத் தான் திருக்குர்ஆன் பரிகாரமாகக் கூறுகிறது. விட்ட தொழுகைகளைத் திரும்பத் தொழுமாறு கூறவில்லை.
தான் விட்ட தொழுகைகளையே மறு நாள் நிறைவேற்ற முடியாது எனும் போது மற்றவர்கள் நிறைவேற்றலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்
திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர்.
இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
سنن أبي داود
حدَّثنا محمدُ بن العلاءِ ومحمد بن مكيٍّ المروزيُّ -المعنى- قالا: حدَّثنا ابنُ المبارَك، عن سليمانَ التيمىِّ، عن أبي عثمانَ -وليس بالنَّهْديِّ- عن أبيهِ عن مَعْقِلِ بن يَسارٍ، قال: قال رسول -صلَّى الله عليه وسلم-: “اقرؤوا {يس} على موتاكُم”
உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2714, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19416, 19427 ஹாகிம் 1/753
மேற்கண்ட ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யார் என்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அபூ உஸ்மான் என்பவர் தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன.
صحيح بن حبان
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ يس».
இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.
பா(த்)திஹா, பகரா அத்தியாயம் ஓதுதல்
المعجم الكبير للطبراني
حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ , حَدَّثَنَا يَحْيَى بن عَبْدِ اللَّهِ الْبَابْلُتِّيُّ , حَدَّثَنَا أَيُّوبُ بن نَهِيكٍ , قَالَ: سَمِعْتُ عَطَاءَ بن أَبِي رَبَاحٍ , يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُمَرَ , يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ:إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلا تَحْبِسُوهُ , وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ , وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ , وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ.
இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
நூல் : தப்ரானியின் அல்கபீர்
இதை அறிவிக்கும் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாகச் சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.
இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள், இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர்.
இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
மார்க்கம் என்ற பெயரில் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின் சுயநலனுக்காகவோ, அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.
صحيح مسلم
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
صحيح البخاري 2697
حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242
سنن النسائي
أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»،
(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ 1560
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
இரண்டு ரக்அத் தொழுகையில் மற்றொரு ரக்அத்தை அதிகமாக்குவது நன்மையின் தோற்றத்தில் இருந்தாலும் அதை நாம் சரி காண மாட்டோம்.
இச்சடங்குகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவற்றை முதலில் செய்பவர்களாக இருந்திருப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மூன்று மகள்களையும், ஒரு மகனையும் இழந்தார்கள். மனைவி கதீஜாவையும் இழந்தார்கள்.
இறந்தவர்களுக்காக மேற்கண்ட காரியங்களைச் செய்வது நன்மை என்றிருந்தால் தமது குடும்பத்தினருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பார்கள். ஆனால் இது போன்ற ஃபாத்திஹாக்களை அவர்கள் செய்ததில்லை. அவர்களுக்குப் பின் பலநூறு ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் இவற்றைச் செய்ததில்லை.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து இறந்தவர்களுக்கு உதவுவோம்.
இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும், கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ, மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.
سنن أبي داود
حدَّثنا مُسدَّدٌ، حدَّثنا سفيانُ، حدَّثنا جعفرُ بن خالد، عن أبيه عن عبد الله بن جعفر، قال: قال رسولُ الله -صلَّى الله عليه وسلم-: “اصنعوا لألِ جَعْفَرٍ طعاماً، فإنه قد أتاهم أمرٌ يَشغَلُهم”
ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள், அவர்களைப் பாதிக்கும் செய்தி வந்துள்ளது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா 1599
இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று அறியலாம்.
இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை