மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?

ரபிக்

கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும், என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம். மாற்றுக் கருத்துடையவரை விமர்சிக்கக் கூடாது என்றால் அறவே விமர்சிக்கக் கூடாது என்பதுதான் பொருள்.

விமர்சனம் என்பது இரண்டு வகைகளில் உள்ளது.

ஒன்று கொள்கை ரீதியிலான விமர்சனம்.

மற்றொன்று தனி நபர் சம்பந்தப்பட்ட விமர்சனம்.

ஒருவர் கொண்டிருக்கிற கொள்கையை மற்றொருவர் தவறு என்று விமர்சனம் செய்வதைத் தான் கொள்கை ரீதியிலான விமர்சனம் என்கிறோம். அக்கொள்கை தவறு என்பதற்குரிய ஆதாரம் இருந்தால் தாராளமாக விமர்சிக்கலாம். விமர்சிக்க வேண்டும். இதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன.

ஒருவர் தவறான கொள்கையை மக்களுக்கிடையில் சொன்னால் அதைக் காண்பவர்கள் அந்தத் தவறை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح مسلم

186 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம்

நாம் காணும் தவறை நாவால் தடுப்பதென்பது விமர்சனம் செய்வதாகவே ஆகும். அவ்வாறு விமர்சனம் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி ஆர்வமூட்டப்பட்டுள்ளது என்பதையும் இந்த செய்தியிலிருந்து அறியலாம்.

இறைவன் திருக்குா்ஆனில் கொள்கை ரீதியாக பல விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றான்.

அல்லாஹ் அருளியதைப் புறக்கணித்து பின்பற்றாமல் இரு்ப்பவா்களை கால்நடைகள் என்று இறைவன் விமர்சிக்கின்றான்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:170,171

சத்தியக் கருத்துகளைச் சிந்திக்காமல் அலட்சியம் செய்பவா்களை கால்நடைகளை விடவும் மோசமானவர்கள் என விமர்சிக்கின்றான்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் 7:179

வேதம் வழங்கப்பட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பவா்களை, பொதி சுமக்கும் கழுதைகள் என்று இறைவன் விமர்சிக்கின்றான்.

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

திருக்குர்ஆன் 62:5

பிறருக்குக் கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்னும் நாயைப் போன்றவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

صحيح البخاري

2622 – حدثنا عبد الرحمن بن المبارك، حدثنا عبد الوارث، حدثنا أيوب، عن عكرمة، عن ابن عباس رضي الله عنهما، قال: قال النبي صلى الله عليه وسلم: «ليس لنا مثل السوء، الذي يعود في هبته كالكلب يرجع في قيئه»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவா் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 2622

நபிகளாரின் முதல் மார்க்கப் பிரச்சாரம் கூட விமர்சனத்தில் தான் ஆரம்பித்துள்ளது. லா இலாஹ இல்லல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை என்பது தான் நபிகளாரின் முதல் பிரச்சாரம். பல நூறு கடவுள்களை வணங்கிக் கொண்டிருப்பவா்களுக்கு மத்தியில் கடவுள் ஒருவன் தான் என்று சொல்வதும், நீங்கள் வணங்குவது கடவுள்கள் அல்லர் என்று சொல்வதும் விமர்சனம் இல்லையா?

இவ்வாறு கொள்கை ரீதியிலான விமர்சனங்கள் குா்ஆனிலும், ஹதீஸ்களிலும் நிறைய காணப்படுகின்றன.

இந்த அடிப்படையில் மாற்றுக் கருத்துடையவா்களை கொள்கை ரீதியாக தாராளமாக விமர்சிக்கலாம். அவ்வாறு விமர்சிக்கும் போது அவரது கொள்கை தவறு என்பதைத் தகுந்த ஆதாரங்களை முன் வைத்து விமர்சிக்க வேண்டும்.

மற்றொரு வகை தனி நபர் விமர்சனம்.

இதையும் இரண்டாகப் பிரித்து அணுக வேண்டும்.

தனிநபருடைய தனிப்பட்ட விவகாரங்களையும், அவரிடம் உள்ள பிறருக்குப் பாதிப்பில்லாத விவகாரங்களையும் ஒரு போதும் விமர்சிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு மாற்றுக் கருத்துடைய ஒருவா் குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார்; அல்லது அவருக்கும், அவரது மனைவிக்கும் பிரச்சனை என்றால் இது அவருடைய தனிப்பட்ட விவகாரமாகும். அவா் வெளிநாடு சென்றதாலோ, மனைவியுடன் பிரச்சனை இருப்பதாலோ யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது.

இது போன்ற தனிநபருடைய தனிப்பட்ட விவகாரங்களை ஒரு போதும் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.

அந்தத் தனிநபரின் சில செயல்கள் மற்றவரைப் பாதிக்கும் என்றிருந்தால் ஏனைய மக்கள் அவரால் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்காக அவரிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பதற்காக தாராளமாக விமர்சிக்கலாம்.

ஃபாத்திமா என்ற நபித்தோழி தன்னை திருமணம் செய்ய பெண் கேட்பதாக சில நபர்களைச் சொல்லி நபியவர்களிடம் ஆலோசனை கேட்ட போது இப்பெண் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களில் சிலருடைய குறையை நபியவர்கள் வெளிப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். அதாவது விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

صحيح مسلم

3770 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ عَنْ أَبِى سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ أَنَّ أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ طَلَّقَهَا الْبَتَّةَ وَهُوَ غَائِبٌ فَأَرْسَلَ إِلَيْهَا وَكِيلُهُ بِشَعِيرٍ فَسَخِطَتْهُ فَقَالَ وَاللَّهِ مَا لَكِ عَلَيْنَا مِنْ شَىْءٍ. فَجَاءَتْ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ « لَيْسَ لَكِ عَلَيْهِ نَفَقَةٌ ». فَأَمَرَهَا أَنْ تَعْتَدَّ فِى بَيْتِ أُمِّ شَرِيكٍ ثُمَّ قَالَ « تِلْكَ امْرَأَةٌ يَغْشَاهَا أَصْحَابِى اعْتَدِّى عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ فَإِذَا حَلَلْتِ فَآذِنِينِى ». قَالَتْ فَلَمَّا حَلَلْتُ ذَكَرْتُ لَهُ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِى سُفْيَانَ وَأَبَا جَهْمٍ خَطَبَانِى. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَمَّا أَبُو جَهْمٍ فَلاَ يَضَعُ عَصَاهُ عَنْ عَاتَقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ انْكِحِى أُسَامَةَ بْنَ زَيْدٍ ».فَكَرِهْتُهُ ثُمَّ قَالَ « انْكِحِى أُسَامَةَ ». فَنَكَحْتُهُ فَجَعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا وَاغْتَبَطْتُ بِهِ.

2953 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

………..அவ்வாறே நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியாவோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள் என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உசாமாவை மணந்துகொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

நூல் : முஸ்லிம்

ஹதீஸ்களை அறிவிப்பவர்களை எடைபோட்டு பார்த்து விமர்சிக்கிறோம். நபியின் பெயரால் பொய் சொல்லி இருந்தால், அல்லது தவறுதலாகச் சொல்லி இருந்தால் அதை முஸ்லிம்கள் கடைப்பிடிக்காமல் தடுப்பது கடமை என்பதால் விமர்சிக்கிறோம்.