நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்து இருக்குமா?

இன்னொரு ஹதீஸைப் பாருங்கள்.

ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளி வாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், இவர்களில் அவர் யார்? என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், இவர்களில் சிறந்தவர் என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள் என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

நூல் : புகாரி 3570

புகாரியில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ வருவதற்கு முன்னர் அதாவது நபியாக ஆவதற்கு முன்னர் மிஃராஜ் பயணம் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆக்கப்பட்ட பின்னர் தான் அவர்கள் மிஃராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. மேலும் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலில் இறைச் செய்தியைக் கொண்டு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயந்தார்கள். நடுங்கினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறி நபிகள் நாயகத்தின் அச்சத்தைப் போக்கினார்கள் என்ற விபரங்கள் ஆதாரப்பூர்வமான செய்திகள்.

நபியாக ஆவதற்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று இருந்தால் ஜிப்ரீல் அவர்களின் முதல் வருகையின் போது தமக்கு என்னவோ நேர்ந்து விட்டதாகக் கருதி அவர்கள் அஞ்சி இருக்க மாட்டார்கள். இது போல் ஏராளமான ஆதாரங்களுக்கு மாற்றமாக இது அமைந்துள்ளது.

இதை நாம் நம்பினால் மிஃராஜ் குறித்த எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் வஹீ வந்தது குறித்து பேசும் எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே இந்தச் செய்தி புகாரியில் பதிவாகி இருந்தாலும் இது தவறான செய்தி தான் என்று முடிவு செய்வது தான் ஹதீஸைப் புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.