இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

முஹம்மத் ஹஸ்ஸான்

பதில்

இமாம் மிம்பரில் ஓதும் துஆவுக்கு ஆமீன் கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் மத்ஹ்பு நூல்களிலும் மத்ஹபைப் பின்பற்றாத சில அறிஞ்ரகளின் ஃபத்வாக்களிலும் ஆமீன் கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கு தக்க ஆதாரம் எதையும் அவர்கள் காட்டவில்லை

ஷாபி. மாலிகி மத்ஹப் நூல்களில் இது சுன்னத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

فتح المعين بشرح قرة العين بمهمات الدين

قال شيخنا: ولا يبعد ندب الترضي عن الصحابة بلا رفع صوت وكذا التأمين لدعاء الخطيب انتهى

கதீப் உரை நிகழ்த்தும் போது ஆமீன் கூறுவது சுன்னத் ஆகும்.

ஷாபி மத்ஹபின் ஃபத்ஹுல் முயீன்.

மத்ஹபுகள் மட்டுமின்றி சவூதி அறிஞர் உஸைமீன் அவர்களும் இது பித்அத் அல்ல என்று பத்வா கொடுத்துள்ளார்.

كتب و رسائل للعثيمين

3421 وسئل فضيلته ـ رحمه الله تعالى ـ: هل التأمين عند دعاء الإمام في آخر خطبة صلاة الجمعة من البدع؟ أفتونا جزاكم الله عن الإسلام والمسلمين خير الجزاء. فأجاب فضيلته بقوله: ليس هذا من البدع، التأمين على دعاء الخطيب في الخطبة إذا أخذ يدعو للمسلمين فإنه يستحب التأمين على دعائه، لكن لا يكون بصوت جماعي وصوت مرتفع، وإنما كل واحد يؤمِّن بمفرده، وبصوت منخفض، حيث لا يكون هناك تشويش، أو أصوات مرتفعة، وإنما كل يؤمِّن على دعاء الخطيب سرّاً ومنفرداً عن الآخرين.

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறுவது பித்அத் அல்ல. அதற்கு ஆமீன் கூறுவது விரும்பத்தக்கதாகும்.

என்று அவர் ஃபத்வா கொடுத்துள்ளார்.

பித்அத் அல்ல என்றால் இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் ஆமீன் கூறிய ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிந்து கொண்டே சவூதியில் வழக்கத்தில் உள்ளதை மார்க்கமாக ஆக்கும் சலபி கொள்கைப்படி உஸைமீன் இப்படி பத்வா கொடுத்துள்ளார்.

ஆதாரமில்லாததையும் விரும்பத்தக்கது என்று கூறும் இவர்களின் கொள்கை தான் என்ன என்று நமக்குத் தெரியவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும் அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லை.

எனவே இது பித்அத் ஆகும். இது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள இதைக் கற்றுத் தராமல் இருந்திருக்க மாட்டார்கள். இமாம் மிம்பரில் ஏறிய பின் அவர் கூறுவதை செவிதாழ்த்திக் கேட்பது தான் மக்களின் கடமையாகும்.

09.04.2012. 11:29 AM