5. மனித ஷைத்தான்கள்

இவ்வசனங்களில் (2:14, 2:102, 6:112) குறிப்பிடப்படும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதர்களைக் குறித்து சொல்லப்பட்டதாகும். இவை தவிர மற்ற அனைத்து வசனங்களிலும் ஷைத்தான் என்பது அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரடிப் பொருள் கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது மட்டும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அதுபோல் முன்பின் வாசக அமைப்பு நேரடிப் பொருள் கொள்ள இடம் தராவிட்டால் அப்போதும் கெட்ட மனிதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்கள் ஷைத்தான் என்பதற்கு நேரடிப் பொருள் கொள்ள முடியாத வசனங்களாகும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் மீண்டும் மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவர் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 3275

தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது போல் கெட்ட மனிதர்களே இவ்வசனங்களில் ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.