மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை

இவ்வசனங்கள் (2:21, 3:59, 4:1, 5:18, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 16:4, 18:37, 18:51, 19:67, 21:37, 22:5, 23:12, 25:54, 30:20, 32:7, 35:11, 36:77, 37:11, 38:71, 39:6, 40:57, 40:67, 49:13, 50:16, 51:56, 53:45, 55:3, 55:14, 70:19, 76:2, 86:5, 87:2, 90:4, 92:3, 95:4, 96:1) மனிதன் பரிணாம வளர்ச்சி மூலம் மாற்றம் அடைந்தவனல்ல. அவன் நேரடியாகவே இறைவனால் படைக்கப்பட்டவன் என்று கூறுகின்றன.

முதல் மனிதர் நேரடியாகக் களிமண்ணால் படைக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் விந்துத்துளி மூலம் படைக்கப்பட்டதாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

விந்துத்துளி மூலம் மனித குலம் பல்கிப் பெருகுவதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் மனிதர்களின் ஆரம்பத் தோற்றம் பரிணாம வளர்ச்சி மூலம் உருவானதாகக் கடவுள் மறுப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

ஒரு செல் உயிரினம் பல பரிணாமங்களை அடைந்து குரங்காக ஆனது. அதன் அடுத்த கட்டமாக மனிதனாகப் பரிணாமம் நடந்தது என்பது இவர்களின் வாதம். மனிதன் படைக்கப்பட்டான் என்று ஒப்புக் கொண்டால் கடவுள் மறுப்புக் கொள்கை செத்து விடும் என்பதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஆனால் அந்த ஒரு செல் உயிரினம் எப்படி உருவானது என்பதற்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற தத்துவம் கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமே யாகும்.

“சில உயிரினங்கள் காலப்போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது” என்பது தான் டார்வினிஸ்டுகளின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வினிஸ்டுகள் இப்படி முடிவு செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினிஸ்டுகளின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

இந்தக் கற்பனையை உண்மை போல் காட்டுவதற்காக மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் படங்களையும் வெளியிட்டு அதையே பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இவை கற்பனையான வரைபடங்கள் ஆகும். இவை பரிணாமக் கோட்பாட்டுக்கு ஆதாரமாக ஆகாது.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சரியம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் இதை நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது.

உருவ அமைப்பில் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். உள் அமைப்புகளில் மனிதன் குரங்குக்கு நெருக்கமானவனாக இல்லை.

ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போனது.

அனேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும், அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து மனிதன் தோன்றினான் என்று முடிவு செய்வதை விட இது மேலானது. ஏனெனில் இது அறிவியல் பூர்வமானது.

இன்றைக்கும் கூட தந்தையின் தோற்றத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை என்று முடிவு செய்கிறோம். தோற்றத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரிதானா?

இதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்துமளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாக, பன்றியின் இதயம் தான் மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என அறிவிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியில் இருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும். டார்வின் கூறும் உடலமைப்பை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கம் உடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தால், அல்லது வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தால் டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாய், தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

ஒரே ஒரு ஜோடி குரங்கு மட்டும் மனிதனாக பரிணாமம் அடைந்து அதில் இருந்து மனித இனம் பல்கிப் பெருகியதாக டார்வின் சொல்லவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக பரிணாமம் அடைந்தன என்பது டார்வினின் தத்துவம். அனைத்து மனிதர்களும் ஒரே ஒரு ஆப்ரிக்கத் தாயின் சந்ததிகள் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் இக்கொள்கையைத் தரைமட்டமாக்குகிறது.

மனிதன் ஒரு தாய், தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.

டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

என்னுடைய முதல் தந்தையும், உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு எனக்கூறி இன்று நிலவும் சாதி, குல, இன வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

இதை விட முக்கியமான இன்னொரு விஷயமும் உள்ளது. மனிதன் உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால் தான் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பின் மாறுதலுக்கும் தான் டார்வின் காரணங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல், நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஒட்டகச்சிவிங்கி சிறிய கழுத்தைப் பெற்றிருந்ததாம். அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது என்று டார்வினிஸ்டுகள் கூறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். ஆனால், உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் ஏதும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.

பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலகட்டத்திலும் இருந்ததில்லை.

உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் உடல் மாறலாமே தவிர பகுத்தறிவு என்பது வரவே முடியாது.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது. யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது? கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது? யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்.

ஏன் அது தொடரவில்லை? இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் என்றால் குரங்காக மாறுவதற்கு முந்தைய நிலையில் ஒரு இனம் இருக்க வேண்டும். அதற்கும் மனிதனுக்கும் ஓரிரு வேறுபாடுகள் மட்டும் இருக்க வேண்டும். இப்போதைய குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே ஆயிரக்கணக்கான இடைநிலை உயிரினங்கள் இருக்க வேண்டும். அப்போது தான் பரிணாமம் என்று வாதிட முடியும்.

இப்போதைய குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் இருப்பதே பரிணாம வளர்ச்சியால் மனிதன் உருவாகவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் பதில் இல்லை.

மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் “மனிதன் தனி இனம்; எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது” என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பிறப்பால் அனைவரும் சமமே! நடத்தையால் மட்டுமே ஒருவனை விட மற்றவன் உயர முடியும் என்பதையும், இஸ்லாம் கூறும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் அறிய 11, 32, 4959141168182227290508 ஆகிய குறிப்புகளைக் காண்க!