முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா?

தீபாவளியன்று தமிழகத்தில் முஸ்லிம்கள் பலர் பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வாங்கி வெடித்ததைப் பரவலாக்க் காண முடிந்தது. இது இணை வைத்தலுக்குச் சமமாகுமா? இதற்கு விளக்கம் தர வேண்டும்.

– யூசுப் ஃபஹத், கம்பம்

பட்டாசு வெடிக்கும் எந்த முஸ்லிமும் பிற மத தெய்வங்களைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதில்லை. அதை வழிபாட்டில் ஒரு அம்சமாகவும் அவர்கள் கருதுவதில்லை. எனவே இணை வைப்பில் இது சேராது. ஆனால் ஏராளமான ஹராம்களைச் செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள்.

பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில் ஹராமாகும்.

காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும் ஹராமாகும்.

நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது.

இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இஸ்லாத்தில் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இதை முஸ்லிம்கள் உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.