முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா?

கேள்வி

பூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும், வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா?

செய்யத் சம்சுத்தீன்.

கிறித்தவர்களின் பைபிளில் ஏராளமான பொய்களையும், ஆபாசங்களையும், முரண்பாடுகளையும் பட்டியல் போட்டு நாம் கேள்வி கேட்டு வருகிறோம். ஆண்டுகள் பல ஓடிய பிறகும் அவற்றுக்கு எந்த பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

குர்ஆனிலும் முரண்பாடு என்று கூறி பேலன்ஸ் செய்யும் தந்திரத்தைத் தான் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இல்லை. இல்லாத முரண்பாட்டை இவர்களாகச் சித்தரிக்கின்றனர். அதில் ஒன்று தான் நீங்கள் சுட்டிக்காட்டுவது.

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் இருபத்தி ஒன்பதாவது வசனத்தில்

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

என்று கூறப்பட்டுள்ளது. பூமியைப் படைத்த பின்னர் வானத்தைப் படைத்ததாக இவ்வசனம் கூறுகிறது.

قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ (9) وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ (10) ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ (11) 41

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடி விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41:9

இவ்விரு வசனங்கள் கூறுவதற்கு எதிராகப் பின்வரும் வசனம் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறுகிறது என கிறித்தவ குழுக்கள் கூறுகின்றனர்.

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான். அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான். மலைகளை முளைகளாக நாட்டினான்.

திருக்குர்ஆன் 79:27-30

இந்த வசனத்தில் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக பின்னர் பூமியை விரித்ததாகத் தான் கூறப்பட்டுள்ளது. ஒன்றைப் படைப்பதும் அதை விரிவுபடுத்துவதும் வேறுவேறாகும்.

பூமியை அல்லாஹ் முதலில் படைத்து விட்டு, பின்னர் வானத்தைப் படைத்தான். அதன் பின்னர் ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த் பூமியை விரிவுபடுத்தினான் என்பது தான் இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் கருத்தாகும்.

பிரபஞ்சத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான ஏராளமான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. பூமியைப் படைத்த பின்னர் அந்த ஏற்பாடுகளைச் செய்ய நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டதாக பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்” என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான்.179 கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

திருக்குர்ஆன் 41:9,10

பூமியை முதலில் படைத்து விட்டு பிறகு வானத்தை அல்லாஹ் படைத்தான். அதன் பின்னர் பூமியில் பல ஏற்பாடுகளைச் செய்து அதை விரிவாக்கம் செய்தான். அதைத் தான் குர்ஆன் கூறுகிறது. வானத்தைப் படைத்த பின் பூமியைப் படைத்ததாக திருக்குர்ஆன் கூறவில்லை.

எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை.