முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.

விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லாவிட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.

இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.

விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர்.

இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப்படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.

வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் செய்கின்றனர். இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்காதபோது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.

அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறுவாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.

அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري

5273 – حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுத்து விடு என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5273, 5275, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாக ரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார்.

அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.

இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன் 2:228

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாகின்றன.

விவாகரத்து என்பதை முஸ்லிம்களின் பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாச் சமுதாயங்களிலும் விவாகரத்து உள்ளது. எல்லா நாடுகளிலும் சட்டப்படி விவாக ரத்து வழங்கப்படுகிறது. அப்படியானால் அந்தச் சட்டங்களின் படி விவாரத்து செய்யப்பட்ட பெண்கள் பதிக்கப்பட மாட்டார்களா? இனிமேல் இந்தியாவில் விவாகரத்து கிடையாது என்று சட்டம் இயற்றிவிட்டு முஸ்லிம்கள் விவாகரத்துச் செய்யலாமா என்று கேட்க வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் இயற்ற முடியாது.

மற்ற சமுதாயத்தினர் நீதிமன்றத்தில் முறையிட்டு விவாகரத்து பெறுகின்றனர். முஸ்லிம்கள் தம்பதிகள் நலனில் அக்கரை உள்ள ஜமாஅத்தில் முறையிட்டு தலாக் கொடுக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

நீதிமன்றப் படியேறி பல ஆண்டுகள் அலைந்து வழக்கறிஞருக்காக பணத்தைக் கொட்டிக் கொடுத்து அல்லல் படுவதை விட அந்த ஆணையும் பெண்ணையும் நன்றாக அறிந்து வைத்துள்ள, அவர்களுடன் எந்த வகையிலாவது உறவினராக உள்ள ஜமாஅத்தார்களை நாடுவதே மேலானது என்பதை உணர வேண்டும்.

இனி முத்தலாக் விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம். பின்னர் மீண்டும் விவாகரத்துச் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம். மூன்றாம் முறை விவாகரத்து செய்தால் தான் மீண்டும் சேர முடியாது.

மூன்றாம் முறை விவாகரத்து செய்த பின் இன்னொருவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும் விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்.

அவசரப்பட்டு விவாகரத்து செய்தவர்கள் பின்னர் திருந்தி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரே சமயத்தில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தலாக் ஆகவே அது கருதப்படும் என்பது தான் சரியான கருத்தாகும்.

1472 ( 16 ) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ح، وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَ لِابْنِ عَبَّاسٍ : أَتَعْلَمُ أَنَّمَا كَانَتِ الثَّلَاثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ ، وَثَلَاثًا مِنْ إِمَارَةِ عُمَرَ ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ : نَعَمْ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) ஆட்சிக் காலத்திலும், உமர் (ரல்) ஆட்சியின் மூன்று ஆண்டுகளிலும் முன்று தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்.

இதை அபுஸ்ஸஹ்பா அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம்

1472 ( 17 ) وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ ، عَنْ طَاوُسٍ ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَلِابْنِ عَبَّاسٍ : هَاتِ مِنْ هَنَاتِكَ ، أَلَمْ يَكُنِ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَاحِدَةً ؟ فَقَالَ : قَدْ كَانَ ذَلِكَ، فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ، تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ، فَأَجَازَهُ عَلَيْهِمْ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) காலத்திலும் மூன்று தலாக் என்பது ஒரு தலாக்காகத் தான் கருதப்பட்டதா என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் அப்படித்தான் இருந்தது. உமர் (ரலி) ஆட்சியில் மக்கள் தொடர்ந்து தலாக் விட ஆரம்பித்ததால் அதை சட்டமாக்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.

இதை அபுஸ்ஸஹ்பா அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம்

மனைவிக்கு மூன்று தலாக் கொடுப்பது பிறகு மீட்டிக் கொண்டு மீண்டும் தலாக் கொடுப்பது, பிறகு மீட்டிக் கொண்டு மீண்டும் தலாக் கொடுப்பது என்று மக்கள் நடக்க ஆரம்பித்ததால் அதாவது மீண்டும் தலாக் கொடுப்பதற்காகவே மீண்டும் மீட்டிக் கொண்டு இருப்பதால் இப்படிச் சட்டமாக்கினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை. உமர் (ரலி) அவர்களின் சொல்லை விட அல்லாஹ்வின் தூதருடைய சொல்லே பின்பற்றத் தக்கதாகும். அதுதான் இஸ்லாத்தின் சட்டமாகும்.

எனவே, ஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவது என்பது இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம்களில் சிலரது அறியாமை காரணமாக இது போன்ற கேள்விகளை நாம் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.

ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியரை அந்த நிறுவனத்திண் உரிமையாளர் பணி நீக்கம் செய்யும் போது

உன்னை நீக்கி விட்டேன்

உன்னை நீக்கி விட்டேன்

உன்னை நீக்கி விட்டேன்

என்று சொன்னால் மூன்று முறை நீக்கினார் என்று நாம் சொல்வோமா?

மீண்டும் அந்த ஊழியரைப் பணியில் அமர்த்திய பிறகு நீக்கினேன் என்று சொன்னால் இரண்டாம் முறை நீக்கியதாகச் சொல்வோம்.

மீண்டும் அவரைப் பணியில் அமர்த்தி விட்டு மீண்டும் நீக்கியதாகக் கூறினால் அப்போது தான் மூன்றாம் முறை நீக்கியதாகச் சொல்வோம்.

விவாகரத்தும் இது போல் நீக்குதல் தான்.

மூன்று தடவை தலாக் என்று சொன்னாலும் அவளை மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் இரண்டாவது, மூன்றாவது தலாக் கூற முடியாது.