நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான்.

3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் مَا وَجَعُ الرَّجُلِ இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

புகாரி 3268

5763 – حدثنا إبراهيم بن موسى، أخبرنا عيسى بن يونس، عن هشام، عن أبيه، عن عائشة، رضي الله عنها قالت: سحر رسول الله صلى الله عليه وسلم رجل من بني زريق، يقال له لبيد بن الأعصم، حتى كان رسول الله صلى الله عليه وسلم يخيل إليه أنه كان يفعل الشيء وما فعله، حتى إذا كان ذات يوم أو ذات ليلة وهو عندي، لكنه دعا ودعا، ثم قال: يا عائشة، أشعرت أن الله أفتاني فيما استفتيته فيه، أتاني رجلان، فقعد أحدهما عند رأسي، والآخر عند رجلي، فقال أحدهما لصاحبه: ما وجع الرجل؟ فقال: مطبوب، قال: من طبه؟ قال: لبيد بن الأعصم، قال: في أي شيء؟ قال: في مشط ومشاطة، وجف طلع نخلة ذكر. قال: وأين هو؟ قال: في بئر ذروان فأتاها رسول الله صلى الله عليه وسلم [ص:137] في ناس من أصحابه، فجاء فقال: يا عائشة، كأن ماءها نقاعة الحناء، أو كأن رءوس نخلها رءوس الشياطين قلت: يا رسول الله: أفلا استخرجته؟ قال: قد عافاني الله، فكرهت أن أثور على الناس فيه شرا فأمر بها فدفنت تابعه أبو أسامة، وأبو ضمرة، وابن أبي الزناد، عن هشام، وقال: الليث، وابن عيينة، عن هشام: في مشط ومشاقة يقال: المشاطة: ما يخرج من الشعر إذا مشط، والمشاقة: من مشاقة الكتان

5763 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது.

புகாரி -5763

5765 – حدثني عبد الله بن محمد، قال: سمعت ابن عيينة، يقول: أول من حدثنا به ابن جريج، يقول: حدثني آل عروة، عن عروة، فسألت هشاما، عنه، فحدثنا عن أبيه، عن عائشة، رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم سحر، حتى كان يرى أنه يأتي النساء ولا يأتيهن، قال سفيان: وهذا أشد ما يكون من السحر، إذا كان كذا، فقال: يا عائشة، أعلمت أن الله قد أفتاني فيما استفتيته فيه، أتاني رجلان، فقعد أحدهما عند رأسي، والآخر عند رجلي، فقال الذي عند رأسي للآخر: ما بال الرجل؟ قال: مطبوب، قال: ومن طبه؟ قال: لبيد بن أعصم – رجل من بني زريق حليف ليهود كان منافقا – قال: وفيم؟ قال: في مشط ومشاقة، قال: وأين؟ قال: في جف طلعة ذكر، تحت راعوفة في بئر ذروان قالت: فأتى النبي صلى الله عليه وسلم البئر حتى استخرجه، فقال: هذه البئر التي أريتها، وكأن ماءها نقاعة الحناء، وكأن نخلها رءوس الشياطين قال: فاستخرج، قالت: فقلت: أفلا؟ – أي تنشرت – فقال: أما الله فقد شفاني، وأكره أن أثير على أحد من الناس شرا

5765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-

(ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும், சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான் குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லிவிட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள்.

நான், தாங்கள் ஏன் உடைத்துக் காட்டக் கூடாது? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

புகாரி 5765

5766 – حدثنا عبيد بن إسماعيل، حدثنا أبو أسامة، عن هشام، عن أبيه، عن عائشة، قالت: سحر النبي صلى الله عليه وسلم حتى إنه ليخيل إليه أنه يفعل الشيء وما فعله، حتى إذا كان ذات يوم وهو عندي، دعا الله ودعاه، ثم قال: أشعرت يا عائشة أن الله قد أفتاني فيما [ص:138] استفتيته فيه قلت: وما ذاك يا رسول الله؟ قال: جاءني رجلان، فجلس أحدهما عند رأسي، والآخر عند رجلي، ثم قال أحدهما لصاحبه: ما وجع الرجل؟ قال: مطبوب، قال: ومن طبه؟ قال: لبيد بن الأعصم اليهودي من بني زريق، قال: فيما ذا؟ قال: في مشط ومشاطة وجف طلعة ذكر، قال: فأين هو؟ قال: في بئر ذي أروان قال: فذهب النبي صلى الله عليه وسلم في أناس من أصحابه إلى البئر، فنظر إليها وعليها نخل، ثم رجع إلى عائشة فقال: والله لكأن ماءها نقاعة الحناء، ولكأن نخلها رءوس الشياطين قلت: يا رسول الله أفأخرجته؟ قال: لا، أما أنا فقد عافاني الله وشفاني، وخشيت أن أثور على الناس منه شرا وأمر بها فدفنت

5766 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்து விட்டான் என்று கூறினார்கள். நான், என்ன அது, அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்கு யார் சூனியம் வைத்தார்? என்று கேட்க, மற்றவர், பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், சீப்பிலும், சிக்குமுடியிலும், ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று சொன்னார். முதலாமவர், அது எங்கே வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில் என்று பதிலளித்தார்.

ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. பிறகு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்தி விட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ என அஞ்சினேன் என்று சொன்னார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.

புகாரி 5766

6063 – حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا هشام بن عروة، عن أبيه، عن عائشة، رضي الله عنها قالت: مكث النبي صلى الله عليه وسلم كذا وكذا، يخيل [ص:19] إليه أنه يأتي أهله ولا يأتي، قالت عائشة: فقال لي ذات يوم: يا عائشة، إن الله أفتاني في أمر استفتيته فيه: أتاني رجلان، فجلس أحدهما عند رجلي والآخر عند رأسي، فقال الذي عند رجلي للذي عند رأسي: ما بال الرجل؟ قال: مطبوب، يعني مسحورا، قال: ومن طبه؟ قال: لبيد بن أعصم، قال: وفيم؟ قال: في جف طلعة ذكر في مشط ومشاقة، تحت رعوفة في بئر ذروان فجاء النبي صلى الله عليه وسلم فقال: هذه البئر التي أريتها، كأن رءوس نخلها رءوس الشياطين، وكأن ماءها نقاعة الحناء فأمر به النبي صلى الله عليه وسلم فأخرج، قالت عائشة: فقلت: يا رسول الله فهلا، تعني تنشرت؟ فقال النبي صلى الله عليه وسلم: أما الله فقد شفاني، وأما أنا فأكره أن أثير على الناس شرا قالت: ولبيد بن أعصم، رجل من بني زريق، حليف ليهود

6063 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்று வந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்ட நிலையில் நீடித்தார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), இந்த மனிதரின் நிலை என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்க, மற்றவர், லபீத் பின் அஃஸம் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு தர்வான் (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது என்று சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளைதனைப் பிரித்துப் பார்க்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னைக் குணப்படுத்தி விட்டான். நானோ மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்தன லபீத் பின் அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.

புகாரி 6063

6391 – حدثنا إبراهيم بن منذر، حدثنا أنس بن عياض، عن هشام، عن أبيه، عن عائشة رضي الله عنها: أن رسول الله صلى الله عليه وسلم طب، حتى إنه ليخيل إليه أنه قد صنع الشيء وما صنعه، وإنه دعا ربه، ثم قال: أشعرت أن الله قد أفتاني فيما استفتيته فيه فقالت عائشة: فما ذاك يا رسول الله؟ قال: جاءني رجلان، فجلس أحدهما عند رأسي، والآخر عند رجلي، فقال أحدهما لصاحبه: ما وجع الرجل؟ قال: مطبوب، قال: من طبه؟ قال: لبيد بن الأعصم، قال: في ماذا؟ قال: في مشط ومشاطة وجف طلعة، قال: فأين هو؟ قال: في ذروان – وذروان بئر في بني زريق – قالت: فأتاها رسول الله صلى الله عليه وسلم ثم رجع إلى عائشة، فقال: والله لكأن ماءها نقاعة الحناء، ولكأن نخلها رءوس الشياطين قالت: فأتى رسول الله صلى الله عليه وسلم فأخبرها عن البئر، فقلت: يا رسول الله فهلا أخرجته؟ قال: أما أنا فقد شفاني الله، وكرهت أن أثير على الناس شرا زاد عيسى بن يونس، والليث بن سعد، عن هشام، عن أبيه، عن عائشة، قالت: سحر النبي صلى الله عليه وسلم، فدعا ودعا وساق الحديث

6391 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார்.

-தர்வான் என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.-

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள்.

புகாரி – 6391

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையவர்கள் இதைத் தங்களின் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம்.

யூதன் ஒருவன் செய்த சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. மேற்கண்ட ஹதீஸ்களில் பாதிப்பைக் கூறும் வாக்கியங்களைக் கவனமாகப் பாருங்கள்.

முதல் ஹதீஸில்

எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டு இருந்தது

என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது ஹதீஸில்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டவர்களாக ஆனார்கள்

என்று சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில்

தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்

என்று சொல்லப்பட்டுள்ளது.

நான்காவது ஹதீஸில்

இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது

என்று சொல்லப்பட்டுள்ளது.

ஐந்தாவது ஹதீஸில்

அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.

என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆறாவது ஹதீஸில்

இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது

என்று சொல்லப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்கு பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்றும்

தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமல் இருந்தும் உடலுறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு முற்றிப் போய் இருந்தது என்றும்

இதில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தான் செய்யாததை செய்ததாகச் சொல்லிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல் சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

மன நோய் மட்டுமின்றி உடல் உபாதையும் ஏற்பட்டதாக முதலாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. مَا وَجَعُ الرَّجُلِ இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன என்று வானவர்கள் பேசிக் கொண்டதாக இந்த அறிவிப்பில் உள்ளது. (வேதனை என்று மூலத்தில் இருக்க நோய் என்று சிலர் செய்த தமிழாக்கம் தவறானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இது ஏதோ ஒருநாள் நடந்ததாகச் சொன்னால் அது மனநோய் என்று சொல்ல முடியாது. ஆனால் இது அதிக காலம் நீடித்தது என்று இந்த அறிவிப்புகள் சொல்கின்றன. சில மொழிபயர்ப்பாளர்கள் இந்தக் கருத்துப்படி தமிழாக்கம் செய்யாவிட்டாலும் மூலத்தில் கான என்ற சொல் உள்ளது. இந்த நிலையில் நீடித்தார்கள் என்பது இதன் கருத்தாகும்.

இது எவ்வளவு காலம் என்று அஹ்மதில் உள்ள பின்வரும் ஹதீஸ் தெளிவாகவும் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்தது

நூல் : அஹ்மத் (23211)

செய்யாததைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்துக்கு ஆறு மாதகாலமாக கடும் பாதிப்பு ஏற்பட்டதாக இந்த ஹதீஸ்கள் சொல்வதால் சூனியத்தினால் எதுவும் செய்ய முடியும் என்று சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்ற கருத்துடையோர் வாதிடுகின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படைகளைப் புறக்கணித்து விட்டு இவர்கள் இந்த ஹதீஸ்களை அணுகியுள்ளதால் தான் இவர்களால் இப்படி வாதிட முடிகின்றது. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை மீறாமல் சிந்தித்தால் இந்த ஹதீஸ்கள் கட்டுக்கதைகள் என்ற முடிவுக்குத் தான் அவர்களும் வருவார்கள்.

ஏனெனில் இதை நம்பும் போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றத்தைச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இதை நம்பினால் திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களை நாம் மறுக்கும் நிலை ஏற்படுகிறது.

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்பினால் குர்ஆனின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் தூதுத்துவம் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது

திருக்குர்ஆனுடன் முரண்படும் சில ஹதீஸ்களை நாம் துவக்கத்தில் சுட்டிக் காட்டினோம். அந்த ஹதீஸ்களை விட அதிக ஆட்சேபனைக்குரியதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சூனிய நம்பிக்கை.

இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன். ஒவ்வொரு நபிமார்களும் சில அற்புதங்களைச் செய்வார்கள். அந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவர் இறைத்தூதர் என மக்கள் நம்புவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதால் அவர்களுக்குப் பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள். இந்த வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவர்களின் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் எவ்வாறு நம்புவது? அவர்களுக்கும் ஒரு அற்புதம் வேண்டுமே என்ற கேள்விக்கு அந்த அற்புதம் திருக்குர்ஆன் தான் என்று இஸ்லாம் விடையளிக்கிறது.

ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 4981, 7274

இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் வந்தது என்பதை திருக்குர்ஆனே நிரூபிக்கின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது நிரூபணமானால் அதனைக் கொண்டு வந்தவர் அல்லாஹ்வின் தூதர் என்பதும் நிரூபணமாகிவிடும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதன் சொல்ல முடியாத செய்திகளையெல்லாம் திருக்குர்ஆன் சொல்லி அது நிரூபணமாகிக் கொண்டு இருக்கின்றது.

திருக்குர்ஆன் ஒரு அற்புதம் தான் என்பதை ஏற்கனவே ஒரு ரமலானில் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் முழுமையாக நாம் விளக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட அற்புதம் என்று நாம் மெய்யாக நம்பினால் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாம் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

எனெனில் சந்தேகம் இல்லை என்பதுதான் திருக்குர்ஆனின் தனித்தன்மை என்று அல்லாஹ் அடையாளப்படுத்துகிர்றான்.

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

திருக்குர்ஆன் 2:2

இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.

திருக்குர்ஆன் 10:37

(இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

திருக்குர்ஆன் 32:2

இந்தக் கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன.

திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாத பலருக்குச் சந்தேகம் உள்ளதை நாம் அறிகிறோம். எனவே இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை. இதில் சந்தேகம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சந்தேகத்துக்கும் இஸ்லாத்தில் விடை உண்டு என்பதுதான் இதன் பொருள்.

மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ் இதை அருளியுள்ளதால் மனிதர்கள் நம்பும் வகையில் இது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர்கள் வேதம் என்று ஏற்று நேர்வழிக்கு வருவார்கள். எனவே தான் இதில் சந்தேகம் இல்லை என்பதை முக்கியமான வாதமாக அல்லாஹ் வைக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறுமாத காலம் மனநோயாளியாக ஆக்கப்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு பாதிப்பு அடைந்திருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களில் சந்தேகத்தைக் கிளப்ப முடியும்.

அந்த ஆறுமாத காலம் எது என்பது குறித்து சூனியக் கட்சியிடம் ஆதாரம் இல்லாததால் மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் அனைத்தும் அந்த ஆறு மாதங்களில் அருளப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும்.

திருக்குர்ஆனுக்கு எதிராக எழுப்பப்படும் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் உண்டு என்று அல்லாஹ் அறிவித்திருக்க இதற்குப் பதில் சொல்ல முடியாமல் சூனியக் கட்சியினர் விழிபிதுங்கி நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம்.

திருக்குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று சந்தேகம் ஏற்படுவதை அல்லாஹ் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்பதால் தான் இந்தக் குர்ஆனைப் போல் கொண்டு வா என்று அறைகூவல் விடுகிறான்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:23

இதனை இவர் இட்டுக்கட்டி விட்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்! என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:38

இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்! என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 11:13

இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:88

இவர் இதனை இட்டுக்கட்டி விட்டார் எனக் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

திருக்குர்ஆன் 52:33, 34

முஹம்மது சுயமாக இட்டுக்கட்டி விட்டு அல்லாஹ்வின் வேதம் எனக் கூறுகிறார் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது நீ என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்து கொள்! முஸ்லிம்கள் நம்பினால் போதும் என்று அல்லாஹ் நினைக்கவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கத் தக்க அறைகூவலை விட்டு இது இறைவேதமே என நிரூபிக்கிறான்.

அது போல் திருக்குர்ஆனுக்கு எதிராக மற்றொரு சந்தேகத்தையும் அன்றைய எதிரிகள் எழுப்பினார்கள். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மதுக்கு இந்த விஷயங்கள் தெரிய வாய்ப்பு இல்லை; எனவே வெளியூரில் இருந்து ஒருவர் வந்து இவருக்குக் கற்றுக் கொடுத்துச் செல்கிறார். அதைத்தான் முஹம்மது வேதம் எனச் சொல்கிறார் என்று விமர்சனம் செய்து திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தினார்கள்.

காஃபிர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் எனக்கு என்ன என்று அல்லாஹ எடுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கும் வகையில் தக்க பதில் கூறுகிறான்.

இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 25:4,5

நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் (ஜிப்ரீல்) உண்மையுடன் இறக்கினார் என்பதை (முஹம்மதே!) கூறுவீராக! ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்.

திருக்குர்ஆன் 16:102, 103

திருக்குர்ஆனின் உயர்ந்த அரபுமொழி நடையை எடுத்துக் காட்டி, வேறு மொழி பேசுபவன் எப்படி இதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டு அவர்களை அல்லாஹ் வாயடைக்கச் செய்தான்.

திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் விஷயங்களுக்கெல்லாம் ஏற்கத்தக்க மறுப்பை அளித்த இறைவன் தனது தூதரை மனநோயாளியாக்கி சொல்லாததைச் சொல்ல வைத்து அவனே திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்துவானா?

இதைச் சிந்தித்தால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக்க் கூறப்படுவது கட்டுக்கதை என்று தெரிந்துவிடும்.

திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் அருளப்பட்டது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படக் கூடாது என்பதற்கு அல்லாஹ் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவராக ஆக்கி இருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

எழுதுதலும், படித்தலும் மனிதனுக்கு அவசியம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

அல்லாஹ்விடமிருந்து முதன்முதலில் வந்த வசனங்களே இது பற்றித்தான் பேசுகின்றன.

அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

திருக்குர்ஆன் 96:4,5

எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக

திருக்குர்ஆன் 68:1

எழுத்தின் மூலம் தான் அறிவைப் பெருக்கவும், கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் இயலும் என்று சொல்லும் அல்லாஹ் நபியவர்களுக்கு மட்டும் அந்தப் பாக்கியத்தைக் கொடுக்கவில்லை.

திருக்குர்ஆன் 7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உம்மீ என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர். ஹுதைபியா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்துக்கும் மக்காவின் குரைஷி குலத்தவருக்கும் ஏற்பட்ட ஒப்ப்ந்தம் என்று எழுதிய போது எதிரிகள் அதை மறுத்தனர். அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஏற்காத போது அல்லாஹ்வின் தூதர் என்று எப்படி குறிப்பிடலாம் என்று மறுப்புத் தெரிவித்தனர். அந்தச் சம்பவத்தில் நபிகள் நாயகத்துக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லப்படுகிறது.

صحيح البخاري
وَلكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ» قَالَ: وَكَانَ لاَ يَكْتُبُ، قَالَ: فَقَالَ لِعَلِيٍّ: «امْحَ رَسُولَ اللَّهِ» فَقَالَ عَلِيٌّ: وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا، قَالَ: «فَأَرِنِيهِ»، قَالَ: فَأَرَاهُ إِيَّاهُ فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் என்பதை அழித்து விட்டு அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் என்று எழுதுமாறு அலீ (ரலீ) அவர்களுக்குக் கட்டளையிட்டனர்; அலீ (ரலீ) அவர்கள் அழிக்க மறுத்து விட்டார்; அப்படியானால் அந்தச் சொல் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள் என்று அலீ (ரலீ) அவர்களிடம் கேட்டனர். அலீ (ரலீ) அவர்கள் அந்த இடத்தைக் காட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அழித்தனர்

நூல் : புகாரி 3184

நபிகள் நாயகத்துக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை இதிலிந்து அறிந்து கொள்ளலாம்.

6:112, 7:157, 7:158, 25:5, 29:48 ஆகிய வசனங்களும் நபிகள் நாயகத்துக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது எனக் கூறுகின்றன.

நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியும் என்பதை விட இந்தக் குர்ஆனை அவர் தன் மொழியறிவால் இட்டுக்கட்டி விட்டார் என்ற விமர்சனம் வந்து, அதனால் திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்கு அல்லாஹ் முக்கியத்துவம் தருகிறான்.

இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வே தெளிவாகச் சொல்வதைக் காணுங்கள்!

இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 29:47,48,49

படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பதுதான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.

அவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.

எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத்தான் இருக்க முடியும் என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.

எழுத்தறிவு முஹம்மது நபிக்கு இருந்தால் குர்ஆன் இறைவேதம் என்ற நம்பிக்கையை அது பாதிக்கும் என்பதற்காகவே அல்லாஹ் இந்தப் பாக்கியத்தை அவர்களுக்குத் தரவில்லை.

அவர்களுக்கு ஆறுமாதம் மனநோய் ஏற்பட்ட்தாக நாம் நம்பினால் அதைவிட அதிக சந்தேகத்தை குர்ஆனில் ஏற்படுத்தும். எனவே நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யானது; கட்டுக்கதை என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

அதே போன்று திருக்குர்ஆன் பல இடங்களில்

குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை (4:82) என்றும்

சிந்திக்க மாட்டீர்களா? (4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24) என்றும்

தவறுகள் வராது (41:42)

இது பாதுகாக்கப்பட்ட வேதம் (15:9, 18:1, 39:28, 41:42, 75:17) என்றும்

சொல்லப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதை அடித்துச் சொல்லும் வசனங்களாகும்.

நபிகள் நாயகத்துக்கு ஆறுமாத காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், வீனர்கள் சந்தேகப்படுவார்கள் என்பதற்கு ஏற்ப அந்த வீனர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அருளப்பட்ட வசனங்களைச் சந்தேகித்திருப்பார்கள்.

மனநோய் பாதிப்பினால் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக ஏன் முஹம்மது சொல்லி இருக்க மாட்டார் என்று கேட்க மாட்டார்களா?

மற்றவர்களின் உள்ளங்களில் மனனம் ஆவதை விட அதிகமாக மனதில் பதியவைத்துக் கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருந்தான்.

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

திருக்குர் ஆன் 75:16-19

குர்ஆனைப் பாதுகாப்பதற்காக எந்த மனிதருக்கும் வழங்காத கூடுதல் ஆற்றலை நபியவர்களுக்கு வழங்கி பலப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் செய்தி அவர்களின் உள்ளத்தை பலவீனத்திலும் பலவீனமாக ஆக்கிக் காட்டுகிறது.

பலமான உள்ளத்தை அல்லாஹ் கொடுத்திருக்க, சூனியத்தை நம்பும் கூட்டம் நபிகள் நாயகம் அவர்களுக்குப் பலவீனமான உள்ளம் இருப்பதாகச் சித்தரிக்கின்றது.

நபிகள் நாயகத்தை இறைத்தூதராக ஏற்க மறுத்தவர்கள் பைத்தியம் என்று சொன்னார்கள். அதைத் தான் இவர்கள் வேறு வார்த்தையில் சொகிறார்கள்.

யூதர்கள் எப்படியாவது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மனநோயாளியாக இருந்தார்கள் என்றால் அந்த மனநோய் யூதர்களின் மந்திர சக்தியால் ஏற்பட்டது என்றால் இந்த வாய்ப்பை அவர்கள் ஒருக்காலும் நழுவ விட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் உங்களது இறைத்தூதரை எப்படி ஆக்கிவிட்டோம் பார்த்தீர்களா? இன்னுமா அவரை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்? என விமர்சித்திருப்பார்கள்.

இப்படி ஒருவர் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிக்கவில்லை.

இப்படி நாம் கேள்வியெழுப்பினால் சூனியக் கட்சியினர் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லி நபியவர்களை மனநோயாளியாகக் காட்டியே தீர்வது என்பதில் குறியாக உள்ளனர்.

நபியவர்களுக்கு ஏற்பட்ட மனநோய் மனைவிமார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. மக்களில் யாருக்கும் தெரியாததால் இது போன்ற விமர்சனம் வரவில்லை என்கிறார்கள்.

சூனியம் வைத்து மனநோயாளியாக ஆக்கினானே அவனுக்குக் கூடவா தெரியாமல் போய் விட்டது?

அவன் தனது கூட்டத்தாரிடம் சொல்லி பெருமையடித்து இருக்க மாட்டானா?

என்பதைக் கூட அறியாத ஞான சூன்யங்களாக மாறி இக்கேள்வியைக் கேட்கிறார்கள்.

பொதுவாக தலைவர்களுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்படுவது தான் உலகத்தில் வழக்கம். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாது. இந்த நிலையில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்தால் அதை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும்.

ஆனால் நபியவர்கள் இது போல் மக்களால் அணுக முடியாத நிலையில் இருந்தார்களா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுகைக்கும் வருவார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்திக்கலாம். முனாபிக்குகள் கூட பள்ளிவாசலுக்கு வந்து தொழக் கூடியவர்களாக இருந்தனர்.

இப்படியிருக்கும் போது இந்த ஆறுமாத பாதிப்பு மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்திருக்கும். இதனால் மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதற்கு முன்பு ஆதாரமில்லாமல் தான் முஹம்மது நபி பைத்தியம் என்று சொன்னோம். இப்போது அவர்களின் மனைவியே சொல்லி விட்டார்கள் என்று ஆட்டம் போட்டிருக்க மாட்டார்களா? மக்களை இஸ்லாத்திற்கு வராமல் தடுக்க முயற்சிக்காமல் இருப்பார்களா? இஸ்லாத்தில் உள்ள மக்களும் மீண்டும் பழைய நிலைக்கே சென்றிருப்பார்களே?

இது போன்று எந்தச் செய்தியும் எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை.

குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

(பார்க்க 15:9)

குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் உள்ளம் சிதைந்து விட்டது என்று சொன்னால் செய்திகளும் சிதைந்து விடும். அப்போது குர்ஆனைப் பாதுகாப்பதாக இறைவன் சொன்னதில் இது சந்தேகத்தை ஏற்படுத்தும்.

மாபெரும் அற்புதமாகத் திகழும் திருக்குர்ஆன் மீது எத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் எனக்குக் கவலை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மன நோயாளியாக ஆனதாகவும் ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா?

முஹம்மது நபிக்கு யூதர்கள் சூனியம் செய்து மனநோயாளியாக ஆக்கி விட்டார்கள் என்று அறியும் முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்பார்களா? நபிகள் நாயகத்தை விட அற்புத சக்தி பெற்ற யூதர்களிடம் செல்வார்களா?

முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பவேண்டும். சூனியக் கதை அதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வேதத்தை நம்ப வேண்டும். அதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்ப வேண்டும். அதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்பும் போது இஸ்லாத்தின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது.

அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வரக்கூடாது. இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாங்கள் நம்ப மாட்டோம். அவற்றை நாங்கள் முழுவதுமாக நிராகரிப்போம் என்ற அளவில் இருந்தால் தான் அது ஈமான்.

ஒரு தந்தை தனது சொத்தை ஒரு மகனுக்கு எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மற்ற மகன்கள் தனது தந்தைக்குப் பைத்தியம் பிடித்து இருந்த போது தான் எழுதிக் கொடுத்தார் என்று ஒரு ஆதாரத்தை உருவாக்கி நீதிமன்றம் நம்பும் வகையில் எடுத்து வைத்தால் அந்த மகனுக்கு சொத்தை எழுதி வைத்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்படும்.

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இது தான் சட்டம். முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் சட்டம்.

பைத்தியம் என்ற நிலையை ஒருவர் அடைந்தால் அவரது எல்லா கொடுக்கல் வாங்கலும் செல்லத் தகாததாக ஆகிவிடுகிறது.

சொத்து விஷயங்களில் சரியாக இதைப் புரிந்து வைத்திருக்கும் நாம் மார்க்க விஷயத்தில் மட்டும் மூளையை அடகு வைத்து விட்டு ஏறுக்கு மாறாகச் சிந்திப்பது சரிதானா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நான் நம்புவேன். பாதுகாக்கப்படவில்லை என்பதையும் நம்புவேன் என்று ஒருவன் கூறமுடியுமா?

அல்லாஹ்வைப் போல் எவனும் எந்த விஷயத்திலும் செயல் பட முடியாது என்றும் நம்புவேன். அவ்வாறு சூனியக்காரன் மட்டும் செயல்படுவான் என்றும் நம்புவேன் என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?

திருக்குர்ஆன் மீது அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பவனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக அளவு மரியாதை வைத்திருப்பவனும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று எப்படி நம்புவான்?

இப்படி நாம் கேட்கும் போது சூனியக்கட்சியினர் எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்புவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி இருந்திருக்கிறது. மறதியின் காரணமாக குர்ஆன் வசனங்களை மறந்திருக்க மாட்டார்களா என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? இதன் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படவில்லை என்று சொல்வீர்களா? என்பது தான் அந்த எதிர்க்கேள்வி.

ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதும், சில விஷயங்களை ஒருவர் மறந்து விடுவதும் இவர்களுக்குச் சமமாகத் தெரிகின்றது.

இதற்கு அல்லாஹ் தெளிவான விடையை அளித்து விட்டான்.

2:106 வசனத்தில்

எந்த வசனத்தையாவது நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததை அருளுவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபியவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி சிலதை மறந்து விட்டால் அவர்கள் மறக்காமல் எதை மக்கள் மத்தியில் வைத்தார்களோ அது தான் குர்ஆன் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது.

அவர்கள் மக்களிடம் சொல்லாதது குர்ஆன் அல்ல என்று கூறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை.

மேலும் குர்ஆனைப் பொருத்தவரை வஹி எப்போது வருகின்றதோ அப்போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதி வைத்து விடுவார்கள். உடனுக்குடன் எழுதி வைக்கப்பட்டதால் இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

மறதி என்பது உள்ளதில் குறைவு ஏற்படுத்துவது. மனநோய் என்பது இல்லாததை இருப்பதாகக் கூறுவது.

இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு ஏற்பட்டது என்று சூனியக் கட்சியினர் கூறுகிறார்கள். வஹீ வராமல் இருந்து வஹீ என்று சொல்லி இருப்பார்கள் என்பது மறதியைப் போன்றதா?

மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் வசனங்களில் எது நமக்கு சேர வேண்டும் என அல்லாஹ் நாடினானோ அது வந்து சேர்ந்து விட்டது என்பதைப் பாதிக்காது.

மனநோய் என்பது அல்லாஹ் சொல்லாமல் இருந்தும் அல்லாஹ் சொன்னதாக நபியவர்களுக்குத் தோன்றி ஒவ்வொரு வசனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.

மறதியினால் இப்போது குர்ஆனில் உள்ள எந்த வசனத்திலும் சந்தேகம் வராது.

இந்த வித்தியாசத்தை இவர்கள் உணர வேண்டும்.

அற்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை

இன்னொரு காரணத்தினாலும் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு இருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.

ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருந்தான்?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தூதராக மனிதரையா அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவதுதான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

திருக்குர்ஆன் 17:94

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று கூறினர்.

திருக்குர்ஆன் 36:15

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

திருக்குர்ஆன் 26:186

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!

திருக்குர்ஆன் 26:154

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார் என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 23:33

இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா? என்றனர்.

திருக்குர்ஆன் 23:47

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

திருக்குர்ஆன் 21:3

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாகத் திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது.

தம்மை இறைத்தூதர்கள் என்று நிரூபிப்பதற்காக எல்லாதூதர்களுக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அந்த அற்புதங்களை வைத்துத் தான் அவர்கள் தூதர்கள் என்று நம்பப்பட்டனர்.

(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 3:184,

(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

திருக்குர்ஆன் 7:101

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 35:25

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம்.

திருக்குர்ஆன் 10:74

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

திருக்குர்ஆன் 10:13

அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோதுமறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 40:22

அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன்வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

திருக்குர்ஆன் 9:70

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

திருக்குர்ஆன் 40:50

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம்.

திருக்குர்ஆன் 57:25

இறைத்தூதர்கள் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும் அற்புதம் வழங்கப்படாமல் எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் இவ்வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம்தான் ஒரு இறைத்தூதர் தன்னை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் அனுப்பப்படுகிறார்..

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத்தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.

இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத்தூதர் என்று நம்பினோம்; இன்று இவரது எதிரிகள் இவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

இவர் செய்தது சூனியக்காரன் செய்ததை விட சாதாரணமானதாக உள்ளதால் இவர் இறைத்தூதராக இருக்க முடியாது என்று அன்றைய மக்கள் சொல்லி இருப்பார்கள்.

இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத்தூதரை வீழ்த்தியதாகக் கூறூவது கட்டுக்கதை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இறைத்தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு மேலும் ஆதாரங்கள் உள்ளன.

மறைவான விஷயங்களை அல்லாஹ் சொல்லிவிட்டால் அதனை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மலக்குகள், வனவர்கள், ஜின்கள், ஷைத்தான்கள், சொர்க்கம், நரகம் மீண்டும் உயிர்ப்பித்தல் என அல்லாஹ் பல விஷயங்களைக் கூறுகின்றான்.

இதனை சோதனைக்கு உட்படுத்தாமல் அனைத்து முஸ்லிம்களும் நம்புகின்றோம். ஏனென்றால் இது சோதித்து அறியும் விஷயம் அல்ல. அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக நம்புகின்றோம்.

ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படும் சில விஷயங்களும் உள்ளன. அவற்றை சோதித்துப் பார்த்து அது உண்மையா? பொய்யா என்று நம்ப வேண்டும். குருட்டுத்தனமாக நம்பக் கூடாது.

உதாரணமாக வழுக்கையான ஒருவனுக்கு இந்த எண்ணையைத் தேய்த்தால் முடி வளர்ந்துவிடும் என்று சொன்னால் இதனை சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நாம் நம்ப வேண்டும்.

இணை கற்பித்தல் என்ற பிரச்சனை வரும்போது அதைச் சோதித்துப் பார்த்துத் தான் அறிய வேண்டும்.

சூனியக்காரனுக்கு சக்தி இருப்பதாகச் சொன்னால் இப்போதே இதனை சோதனைக்கு உட்படுத்தி பார்க்க முடியும். ஏனெனில் இணைவைத்தலுக்கு எதிராக அல்லாஹ் இந்த வழிமுறையைத் தான் நமக்குக் கற்றுத் தருகிறான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்! என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

அல்லாஹ்வைப் போல் ஒருவனுக்கு சக்தி உண்டா என்ற பிரச்சனை வந்தால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது தான் அல்லாஹ் கற்றுத் தரும் வழிமுறையாகும்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு என்று கேட்பதும் அவ்வாறு நிரூபிக்க இயலவில்லை என்று தெரியும்போது அது பொய் என்று அறிந்து கொள்வதும் இஸ்லாம் காட்டும் வழிமுறையாகும்.

சூனியம் வைக்கும் ஒருவனைக் காட்டுங்கள். நாங்கள் சொல்வதை அவன் செய்யட்டும் அல்லது அவன் தனக்கு என்ன சக்தி இருப்பதாகச் சொல்கின்றானோ அதனைச் செய்து காட்டட்டும் என்று கேட்டால் எவனும் முன்வருவதில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:191- 195

சிலைகளுக்கு கைகால்களை அமைத்து அந்தக் கைகளால் அவை மனிதனின் தேவைகளை நிறைவேற்றும் என்று சொல்கிறார்கள். இது எங்கள் நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள்.

இதை அல்லாஹ் ஏற்கவில்லை. அந்தக் கைகளால் எதையாவது பிடித்துக் காட்டட்டும். அந்தக் கால்களால் நடந்து காட்டட்டும் என்று கூறி இணைவைப்புக்கு எதிராக நாம் எடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்

இப்படியாக நாம் வாதம் வைத்தால் இவர்கள் எல்லாவற்றிலும் தர்க்கம் செய்து அறிவுப்பூர்வமாக பேசுகின்றார்கள் என்று வெட்கமில்லாமல் கூறுவார்கள்.

சூனியத்தை நம்புபவர்கள் அறிவு கெட்டவர்களாக இருந்து கொண்டு அறிவுப்பூர்வமாக பேசுகின்றவர்களை கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

இஸ்லாத்தில் தர்க்கம் செய்து அறிவார்ந்த் முறையில் தான் பேச வேண்டும்.

இதோ ஹூது நபி விட்ட அறைகூவலைப் பாருங்கள்.

எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள் என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்! என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:54, 55

ஹூது நபி சொன்னது போல் நாங்கள் சொல்கிறோம். சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை. அப்படி இருந்தால் எனக்குச் செய்து காட்டு என்று அறைகூவல் விடுக்கிறோம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

சிலைகளுக்கு ஆற்றல் உண்டு என்று சொன்னால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்க வேண்டும் அல்லாஹ் எவ்வளவு அழகாக மேற்கண்ட வசனங்களில் கற்றுத்தருகிறான் என்று சிந்தியுங்கள்.

இணைகற்பித்தல் என்ற பிரச்சனை வந்தால் அதற்கான தீர்வு அதை நிரூபித்துக் காட்டச் சொல்வது தான். சூனியமும் இணை கற்பித்தல் என்ற என்ற நிலையில் இருப்பதால் அதையும் சோதனைக்கு உட்படுத்துவது தான் சரியான வழிமுறை.

முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?

முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.

சூனியத்தின் மூலம் நாங்கள் எதையும் செய்வோம் எனக் கூறும் அனைவருக்கும் அனைத்து மதத்தவர்களுக்கும் நான் ஒரு அறைகூவல் விடுகிறேன்.

ஜைனுல் ஆபிதீனாகிய எனக்கு அவர்கள் சூனியம் செய்து காட்டட்டும். அவர்கள் கேட்கும் காலடி மண், போட்டு இருக்கும் சட்டை, தலைமுடி இன்னும் அவர்கள் எதை எல்லாம் கேட்கிறார்களோ அவை அனைத்தையும் தருகிறேன். எனக்கு அவர்கள் சூனியம் செய்து காட்டட்டும்.

என்னுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த நாளில் எந்த நேரத்தில் எனக்கு சூனியம் செய்யப் போகிறார்கள் என்பதை விளம்பரப்படுத்தட்டும். நாமும் அதை விளம்பரப்படுத்துகிறோம்.

சூனியத்தின் மூலம் என்னை சாகடிக்கப் போகிறார்களா?

அல்லது என்னை மனநோயாளியாக ஆக்கப் போகிறார்களா?

அல்லது எனது கைகால்களை முடக்கப் போகிறார்களா?

என்பதையும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடட்டும். அதையும் மக்களிடம் நாம் விளம்பரம் செய்வோம்.

அவர்கள் குறிப்பிடும் நாளில் குறிப்பிடும் நேரத்தில் குறிப்பிடும் இடத்தில் மேடை போட்டு நான் அமர்ந்து கொள்கிறேன். மக்களில் ஒரு பெருங்கூட்டம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கட்டும். அவர்கள் எனக்குச் செய்வதாக சொன்ன சூனியத்தைச் செய்து எனக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் நான் ஐம்பது லட்சம் ரூபாய் சன்மானம் தரத் தயார்.

எந்த மதத்தைச் சேர்ந்த சூனியக்காரர்களும் எனக்குச் செய்து இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். தொகை போதாது என்றால் இதைவிடவும் அதிகமாகக் கொடுக்க நான் தயார் என்பதை பகிரங்க அறைகூவலாக விடுக்கிறேன். இதுவே சூனியம் பொய் என்பதை நிரூபித்துக்காட்டும். இன்ஷா அல்லாஹ்

சூனியக்காரனின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போடுவதால் தங்கள் பிழைப்பைத் தொடர்வதற்கு இடையூறாக இருக்கும் எனக்கு சூனியம் செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

அப்படி சூனியம் செய்ய முன்வருபவனுக்கு தவ்ஹீத் ஜமாஅத்காரர்களால் எந்த அச்சுறுத்தலும் வராது என்பதற்கு நான் உத்தரவாதமும் தருகிறேன்.

சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னபோது, அதை ஏற்க மறுத்த காஃபிர்கள் சொன்ன காரணங்கள் என்ன?

சாப்பிடுகிறீர்கள்,

பருகுகிறீர்கள்,

எங்களைப் போல் மனிதர்களாக இருக்கிறீர்கள்,

நீங்கள் சோதிடக்காரர்கள்

திறமை வாய்ந்த புலவர்கள்

உங்களுக்கு யாரோ சூனியம் வைத்ததால் இப்படி புத்தி பேதலித்து உளறுகிறீர்கள்

என்று சொன்னார்கள்.

இவர்களின் மற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபிமார்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதையும், சோதிடக்காரர், புலவர் என்று கூறுவதையும் கடுமையான சொற்களால் மறுக்கிறான்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடமாடுகிறார்;இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா? என்று கேட்கின்றனர்.

இப்படியெல்லாம் நபிமார்கள் விமர்சிக்கப்பட்ட போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. மாறாக இறைத்தூதர்கள் மனிதர்கள் தான் என்றே பதிலளித்தான்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:93

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 21:7,8

சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர்களாக மக்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கம், நரகம் போன்றவற்றை மக்களுக்குச் சொன்னபோது அது அவர்களின் அறிவுக்கு எட்டாமல் இருந்ததால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினார்கள்.

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட போதும், நபிமார்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்று சொல்லப்பட்ட போதும் அல்லாஹ் அதைக் கடுமையாக மறுக்கிறான்.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

இறைத்தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம்; அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத்தூதர் சாப்பிடுகிறார்; குடிக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்ட போது, சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது, அநியாயக்காரர்கள் இப்படிக் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப்பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்குச் சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.

திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது.

திருக்குர்ஆன் 17:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது என்றும் கூறுகிறான்.

சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது உறுதியாகிறது.

சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறிய காஃபிர்கள் நபிகள் நாயகத்துக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றும் சொன்னார்கள். இதையே தான் இந்த சூனியத்தை நம்புபவர்களும் கூறுகின்றார்கள்.

அப்படிக் கூறி விட்டு நபிகள் நாயகத்துக்குச் சூனியத்தால் பைத்தியம் ஏற்பட்டது என்று நாங்கள் சொன்னோமா என்று கேட்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது?

ஒருவர் பணத்தை இன்னொருவர் தெரியாமல் எடுத்துப் பதுக்கிக் கொண்டார் என்று நமக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. இதைப் பற்றி நாம் கூறும் போது அந்த நபர் பணத்தைத் திருடி விட்டார் என்று சொல்வோம்.

அதுபோல் மறை கழன்று விட்டது என்ற செய்தியைக் கூறும் போது பைத்தியம் பிடித்து விட்ட்து என்று கூறுவோம்.

ஒரு செய்தி பல சொல்லமைப்புகள் மூலம் சொல்லப்படுவது வழக்கத்தில் உள்ளது தான். நபிகள் நாயகத்துக்கு மனநோய் ஏற்பட்டது என்ற சொல் அந்தச் செய்தியில் இல்லாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தவிர வேறு கருத்து அதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததை செய்ததாக ஆறுமாத காலம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஆறுமாதம் மனநோயாளியாக இருந்தார்கள் என்று சொல்வதும் ஒரே கருத்தைச் சொல்லும் இருவேறு சொல் வடிவங்கள் தான்.

நபிகள் நாயகம் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று மக்கள் சொன்னவுடன் அல்லாஹ் கோபப்படுகின்றான்.

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

திருக்குர்ஆன் 52:29

நபி அவர்களை அல்லாஹ் பைத்தியமாக ஆக்க மாட்டான் என்று இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லியுள்ளான்.

நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:1-6

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

திருக்குர்ஆன் 7:184

இவ்வசனங்களை ஊன்றிக் கவனியுங்கள். நபிகள் நாயகத்துக்கு பைத்தியம் பிடிக்காது என்றும் இது அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்றும் இவ்வசன்ங்கள் கூறுகின்றன. யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவரைக் கவனித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிந்தித்துப் பார்க்கட்டும். அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வார்கள் என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

சூனியக் கட்சியினருக்கு மரண அடியாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:46

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்கள் மன நோயாளியாக ஆனார்கள் என்று சொல்பவர்களே! ஒவ்வொருவராக வந்து அல்லது இருவர் இருவராக வந்து முஹம்மது நபியைச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் அவரிடம் எந்த வகையான கேள்வியையும் கேட்டுப் பாருங்கள். அவர் மனநோயாளி போல் பதில் சொல்கிறாரா? மாமேதை போல் பதில் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்த்தால் அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதால் அவர்கள் மன நோயாளியானார்கள் என்ற செய்தி கட்டுக்கதை என்பதற்கு இந்த ஒருவசனமே போதிய ஆதாரமாக உள்ளது.

இதுவரை நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட்தாக சில ஹதீஸ்களில் சொல்லப்பட்டாலும் அது இஸ்லாத்தின் அடிப்படைக்கும் திருக்குர் ஆனுக்கும் எதிராக இருப்பதால் அது கட்டுக்கதை தான் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அல்லாத மற்றவர்களுக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்பதை இப்போது பார்ப்போம்.

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சூனியத்தை நம்பக்கூடாது தெளிவாகக் கூறியுள்ளனர்.

مسند أحمد

26212 حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ، عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பெற்றோருக்கு) மாறு செய்பவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், நிரந்தரமாக மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : அஹ்மது 26212

சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

இந்த ஹதீஸ் வேறு சில வழிகளில் வருகின்றது. அந்தச் செய்திகளெல்லாம் பலவீனமானவை. ஆனால் முஸ்னத் அஹ்மதில் (26212) பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.

முஸ்னத் அஹ்மதில் இந்த இல்லை என்ற வாதம்

முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் இருந்தும் சிலர் முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் மூலப்பிரதியில் இருக்கவில்லை. பிற்காலத்தில் சாஃப்ட்வேர் காப்பியில் இது இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டது என்று கூறி இதை மறுக்கப் பார்க்கின்றனர். முஸ்னத் அஹ்மதின் எந்த அச்சுப் பிரதியிலும் இந்த ஹதீஸ் இல்லை என்றும் கூறுகின்றனர்.

கீழே நாம் எடுத்துக்காட்டி இருப்பது முஸ்னத் அஹ்மத் நூலின் அச்சுப்பிரதியாகும். இந்த அச்சுப்பிரதியில் நாம் மேலே எடுத்துக்காட்டிய ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.

ஒரு நூலில் ஏதாவது விடுபட்டுள்ளதா? அல்லது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பல வழிகளில் நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.

ஹதீஸ் நூல்கள் இரு வகைகளில் உள்ளன. ஒரு நூலாசிரியர் தான் திரட்டிய ஹதீஸ்களைப் பதிவு செய்வது ஒரு வகை.

இவ்வாறு திரட்டப்பட்ட பல நூல்களில் உள்ள ஹதீஸ்களை எடுத்து தலைப்பு வாரியாக தொகுப்பது மற்றொரு வகை.

ஒரு தனி நூலின் பிரதிகளில் முரண்பாடு வந்தால் தொகுத்து எழுதியவர்கள் அதை எவ்வாறு எழுதி உள்ளார்கள் என்று பார்த்து அதனடிப்படையில் எது சரியானது என்று கண்டுபிடிப்பார்கள். தொகுத்து எழுதியவர் தன்னிடம் உள்ள பழங்காலப் பிரதியில் இருந்து எடுத்து எழுதியே தொகுத்திருப்பார்.

அல் முஸ்னதுல் ஜாமிவு என்பது இது போன்ற நூலாகும். 630 மரணித்த பத்ருத்தீன் ராஸீ அவர்கள் தொகுத்த இந்த நூலில் அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் உள்ள ஹதீஸ்கள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. நாம் சுட்டிக்காட்டிய அஹ்மத் நூலில் இடம் பெற்ற ஹதீஸை இந்த நூலில் பதிவு செய்து இது அஹ்மதில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

المسند الجامع

6- عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: لاَيَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ ، وَلاَمُؤْمِنٌ بِسِحْرٍ، وِلاَ مُدْمِنُ خَمْرٍ، وَلاَ مُكَذِّبٌ بِقَدَرٍ. – لفظ هشام بن عمار : لاَ يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ. أخرجه أحمد 6/441(28032)

அஹ்மத் நூலில் இந்த ஹதீஸ் இடம் பெற்றதைப் பார்த்துத் தான் பத்ருத்தீன் ராஸீ தொகுத்துள்ளார் என்பதாலும், இவர் தொகுக்கும் காலத்தில் சாஃப்ட்வேர் காப்பி இருக்கவில்லை என்பதாலும் மேற்கண்ட செய்தி அஹ்மதில் உள்ளது தான் என்பது உறுதியாகிறது.

அது போல் ஹிஜ்ரி 733ல் பிறந்த ஷிஹாபுத்தீன் ரம்லீ அவர்கள் தொகுத்த அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் நூலிலும் இந்த ஹதீஸ் அஹ்மதில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

الجامع الصحيح للسنن والمسانيد

(حم) , وَعَنْ أَبِي الدَّرْدَاءِ – رضي الله عنه – قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم -: لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ (1)

மேற்கண்ட நூலைத் தொகுத்தவர் தன் காலத்தில் இருந்த முஸ்னத் அஹ்மதின் எழுத்துப் பிரதியைப் பார்த்துத் தான் தொகுத்து இருக்க முடியும்.

இப்னு கஸீா் அவா்களுக்குரிய ஜாமிஉல் மஸானீத் என்ற நுாலிலும் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது

جامع المسانيد والسنن

حدثنا أبو جعفر السويدى، ثنا أبو الربيع سليمان بن عبيد الدمشقى، سمعت يونس بن ميسرة، عن أبى إدريس عائذ الله،عن أبى الدرداء، عن النبى – صلى الله عليه وسلم – قال: لا يدخل الجنة عاق، ولا مؤمن بسحر، ولا مدمن خمر ولامكذب بقدر

ஹாபிள் இப்னு ஹஜா் அவா்களின் அத்ராபுல் முஸ்னத் நூலிலும் இந்த வார்த்தை தெளிவாக இடம்பெற்றுள்ளது.

إطراف المسند المعتلي بأطراف المسند الحنبلي

7977 -[ق] حديث: لا يدخل الجَنَّةَ عاقٌّ، ولا مؤمنٌ بسِحْرٍ، ولا مُدْمِنُ خَمْرٍ، ولا مُكَذِّبٌ بقَدَر. (6:441) حَدَّثَنا أبو جعفر السويدي، ثنا أبو الربيع سليمان بن عُتْبَة الدمشقي، سمعتُ يونس بن مَيْسَرة، عنه بهذا.

ஹாபிள் இப்னு ஹஜா் தமது காலத்தில் கிடைத்த எழுத்துப் பிரதியை வைத்துத் தான் தொகுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு அச்சுப்பிரதியில் இந்த ஹதீஸ் இல்லாமல் இருந்தால் அதில் விடுபட்டுள்ளது என்று தான் அறிவுடையோர் முடிவு செய்வார்கள்.

எடுத்து எழுதுவோர் ஒரு செய்தியை விட்டு விட வாய்ப்பு உள்ளது. இல்லாத ஒன்றைச் சேர்த்து விட்டார் என்றால் அவர் பொய்யராகி விடுவார்.

பழங்கால எழுத்துப் பிரதிகளைப் பார்த்து ஹதீஸ்களைத் தொகுத்த அறிஞர்கள் முஸ்னத் அஹ்மதைத் தொகுத்த போது மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸும் முஸ்னத் அஹ்மதில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதே அறிவிப்பாளர் தொடரின் வழியாக இதே செய்தி இப்னு அசாகிர் அவர்களின் தாரீகு திமஷ்கு நூலில் பதிவாகியுள்ளது. அங்கும் முஃமினும் பிஸிஹ்ர் (சூனியத்தை நம்புபவன் சுவனம் செல்ல மாட்டான்) என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

தாரீகு திமஷ்க் அறிவிப்பைப் பாருங்கள்.

تاريخ دمشق

قال وحدثني ابي نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي ( صلى الله عليه وسلم ) قال لا يدخلن الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولامكذب بقدر

இப்னு அஸாகிர் அவர்கள் முஸ்னத் அஹ்மதில் உள்ள ஹதீஸ் இமாம் அஹ்மது வழியாக எப்படிக் கிடைத்தது என்ற அறிவிப்பாளர் வரிசையையும் சொல்லிக் காட்டுகிறார்.

அந்த பெயர் பட்டியலைப் பாருங்கள்.

تاريخ دمشق لابن عساكر

أخبرنا أبو القاسم بن الحصين أنا أبو علي بن المذهب أنا أبو بكر بن مالك أنا عبد الله حدثني أبي نا محمد بن النوجشان وهو أبو جعفر السويدي نا الدراوردي حدثني زيد بن أسلم عن أبي واقد الليثي عن أبيه أن النبي (صلى الله عليه وسلم) قال لأزواجه في حجة الوداع هذه ثم ظهور الحصر قال وحدثني ابي نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي (صلى الله عليه وسلم) قال لا يدخلن الجنةعاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر أخبرنا أبو القاسم النسيب وابو الحسن المالكي قالا نا وابو منصور بنزريق

ஒரு அச்சுப் பிரதியில் மேற்கண்ட ஹதீஸ் இல்லாமல் இருந்து மற்றொரு பிரதியில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் மேலே நாம் எடுத்துக் காட்டியது போன்ற பிற நூல்களின் துணை கொண்டு தான் சரியானதைக் கண்டறிய இயலும்.

அந்த வகையில் முஸ்னத் அஹ்மதின் ஒரு அச்சுப் பிரதியில் இந்த ஹதீஸ் காணப்படாவிட்டால் அதைப் பிரதி எடுத்தவர் விட்டு விட்டார் என்ற முடிவுக்கு வர மேற்கண்ட ஆதாரங்கள் பொதுமாகும்.

மேலும் சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் அபூ யஃலாவிலும் இப்னு ஹிப்பானிலும் வேறு அறிவிப்பாளர் தொடரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

مسند أبي يعلى الموصلي

7248 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي سَمِينَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: قَرَأْتُ عَلَى فُضَيْلٍ، عَنْ أَبِي حَرِيزٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ: عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا قَاطِعٌ، وَمَنْ مَاتَ وَهُوَ يَشْرَبُ الْخَمْرَ سَقَاهُ اللَّهُ مِنَ الْغُوطَةِ، وَهُوَ مَاءٌ يَسِيلُ مِنْ فَرُوجِ الْمُومِسَاتِ يُؤْذِي رِيحُهُ مَنْ فِي النَّارِ»

[حكم حسين سليم أسد] : إسناده حسن

صحيح ابن حبان

6137 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي سَمِينَةَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ، عَنْ أَبِي حَرِيزٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  «لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا قَاطِعٌ»

அஹ்மதில் உள்ள ஹதீஸ் பலவீனமானது என்ற வாதம் சரியா?

அடுத்து மேற்கண்ட ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான ஹதீஸ் என்று அடுத்த வாதத்தை வைக்கின்றனர்.

இந்த ஹதீஸில் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ் விஷயத்தில் சந்தேகப்படக் கூடியவராக இருந்தார் என்று இவரைப் பற்றி இமாம் அபூ தாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த விமர்சனத்தை எடுத்துக் காட்டி இது பலவீனமான ஹதீஸ் என்று கூறுகிறார்கள்.

இவர் சந்தேகப்படக் கூடியவராக இருந்தார் என்பதை ஏறுக்கு மாறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு விமர்சிக்கின்றனர்..

இவரது ஹதீஸ்கள் சந்தேகத்துக்கு உரியது என்பது இதன் கருத்து அல்ல. இவர் கேள்விப்படும் ஹதீஸ்களில் சந்தேகம் எழுப்புவார் என்பது தான் இதன் கருத்து. நூறு ஹதீஸ்களைக் கேட்டால் அந்த நூறையும் அறிவித்து விடாமல் அதில் பல சந்தேகங்களை எழுப்பி எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு இருக்கும் பத்து ஹதீஸ்களைத் தான் அறிவிப்பார் என்பது தான் இதன் கருத்து.

சிறிதளவு சந்தேகம் வந்தால் கூட இவர் எந்த ஹதீஸையும் அறிவிக்க மாட்டார். தனக்குச் சந்தேகம் இல்லாததைத் தான் அறிவிப்பார் என்ற புகழ்மாலையை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டார்கள்.

இவர் குறித்து அஹ்மத் பின் ஹம்பல் கூறுவதைப் பாருங்கள்

حدثنا عَنْهُ أحمد بْن حنبل، وكان صاحب شكوك. رجع النّاس من عند عبد الرّزّاق بثلاثين ألف حديث، ورجع بأربعة آلاف.

இவர் ஹதீஸில் சந்தேகம் கொள்பவராக இருந்தார்; அப்துர் ??%B0??்ஸாக்கிடமிருந்து மற்றவர்கள் முப்பதாயிரம் ஹதீஸ்களைப் பெற்றார்கள். ஆனால் இவர் நான்காயிரம் ஹதீஸ்களைத் தான் பெற்றார்.

முப்பதாயிரம் ஹதீஸ்களில் இருபத்து ஆறாயிரம் ஹதீஸ்களை ஒதுக்கி விட்டு நான்காயிரம் ஹதீஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டது அவரது அளவற்ற பேணுதலைக் குறிக்கிறது. மேலும் தஹபி, அபூதாவூத் சன்ஆனி ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

அடுத்து சுலைமான் பின் உத்பா என்ற அறிவிப்பாளரும் பலவீனமானவர் என்று இந்த ஹதீஸை மறுப்பவர்கள் கூறித் திரிகிறார்கள். ஆனால் இவர் பலவீனமானவர் அல்ல என்பதே உண்மை.

இவர் நம்பகமானவர் என்று பலா் நற்சான்று அறிவித்துள்ளனா். துஹைம், அபூ ஹாதிம், அபூசுா்ஆ, ஹைஸம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான், இப்னுஹஜா், தஹபீ ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனா்.

இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவரைக் குறை கூறியுள்ளார். அந்தக் குறை காரணம் இல்லாமல் உள்ளது. பலருக்கு மாற்றமாக இவர் ஒருவர் மட்டும் காரணம் கூறாமல் பொத்தாம் பொதுவாகக் குறை சொன்னால் அந்தக் குறை ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டு விடும்.

எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் அபூ யஃலாவிலும் இப்னு ஹிப்பானிலும் உள்ள ஹதீஸ்களை எடுத்துக் காட்டி உள்ளோம். அவை நம்பகமான ஹதீஸ்களாகும்.

சூனியத்தை நம்புதல் என்பதன் பொருள்

சூனியத்தை நம்புபவன் என்றால் அதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூனியம் என்ற ஒரு பித்தலாட்டம் இருக்கிறது என்பதை நாமும் நம்புகிறோம். இந்த ஹதீஸ் அதைக் கூறவில்லை. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவதையே இது குறிக்கிறது.

இதே அமைப்பில் கூறப்பட்ட பின்வரும் நபிமொழியில் இருந்து இதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِيوَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர். அப்போது என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும் தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால் தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் என இறைவன் கூறினான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1038

இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும் எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும் என்றும் அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே ஈமான் கொண்டுள்ளார்.

இது போல் சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாது.

சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக இந்த ஹதீஸ் உள்ளது.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்று இந்த வாசகம் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு ஏற்ப மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்

சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது; அது தந்திரமாக ஏமாற்றுவது தான் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் வசன்ங்களை எடுத்துக் காட்டி சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சாதிக்கின்றனர்.

முரண்பட்ட வகையில் அல்லாஹ் பேச மாட்டான் என்று கவனமாக ஆய்வு செய்யும் போது சூனியக் கட்சியினர் குர்ஆனை தவறாகப் புரிந்து கொண்டு வாதிட்டுள்ளனர் என்பதை அறியலாம்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

நபிமார்கள் மறுமை உள்ளிட்ட பல போதனைகளைச் செய்த போது அதை நம்ப மறுத்தவர்கள் மனநோயே இவ்வாறு உளறுவதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தனர். மனநோய்க்குக் காரணம் சூனியம் வைக்கப்ப்பட்டது தான் என்றும் கருதினார்கள். எனவே நபிமார்களின் போதனையை நம்பாத போது நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள் என்று சொன்னார்கள்.

இதை திருக்குர்ஆன் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறது.

உதாரணமாக சாலிஹ் நபியின் சமுதாயத்தினர் சாலிஹ் நபியைப் பார்த்து சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னதாக கீழ்க்காணும் வசனம் கூறுகிறது.

 நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:153

ஷுஐப் நபியையும் இவ்வாறே குறிப்பிட்டனர்.

நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:185

நூஹ் நபிக்கும் இதே பட்டத்தைக் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.

திருக்குர்ஆன் 54:9

மூஸா நபியையும் சூனியம் வைக்கப்பட்டவர் என்று கூறினார்கள்.

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். இவர் சூனியக்காரரோ, பைத்தியக்காரரோ எனக் கூறினான்.

திருக்குர்ஆன் 51:38,39

நபிமார்கள் இஸ்லாத்தை மக்களுக்குச் சொல்லும் போது இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்றே சொன்னார்கள்.

சூனியக் கட்சியினர் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதத்தை முதலில் அறிந்து கொள்வோம்.

மனநோயால் பாதிக்கப்பட்டு உளறுகிறார்கள் என்ற கருத்தைச் சொல்லும் போது அதை சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். சூனியம் என்ற வார்த்தைக்கு மனநோய் என்று மக்கள் நம்பியிருந்ததால் தானே இப்படி கூறினார்கள்?

சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதே போதுமான ஆதாரமாகும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இது அறிவுடையோர் வைக்கக் கூடிய வாதமாக இல்லை.

சூனியத்திற்கு இந்த அர்த்தத்தை அல்லாஹ் சொல்லவில்லை. அறியாத மக்கள் சூனியத்திற்கு இவ்வாறு அர்த்தம் வைத்திருந்தனர் என்பதற்குத் தான் இது ஆதாரமாகுமே தவிர அல்லாஹ்விடம் இது தான் சூனியத்தின் அர்த்தம் என்பதற்கு ஆதாரமாக ஆகாது என்பதை இவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை.

இறைவனை மறுக்கக் கூடியவர்கள் சூனியத்திற்குச் சக்தியிருப்பதாக நம்பினார்கள். அவர்களின் நினைப்பிற்குத் தகுந்தவாறு அவர்கள் பேசினார்கள் என்றுதான் இது போன்ற எல்லா வசனங்களிலும், அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறியது அல்லாஹ் அல்ல. எதிரிகள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

காஃபிர்கள் சூனியத்தைப் பற்றி தமக்கு இருந்த நம்பிக்கைப் பிரகாரம் பேசினார்கள். அவர்கள் பேசியது அல்லாஹ்வின் கருத்தல்ல.

காஃபிர்கள் தமது நம்பிக்கைப் பிரகாரம் பேசியதை அல்லாஹ் எடுத்துக் காட்டினால், இது காஃபிர்களின் நம்பிக்கை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

கல்லுக்குச் சக்தியிருப்பதாக காஃபிர்கள் சொன்னதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

திருக்குர்ஆன் 11:54

கல்லுக்குச் சக்தி இருக்கின்றது என்று இதற்கு அர்த்தமாகுமா? காஃபிர்கள் கல்லுக்குச் சக்தி இருக்கிறதென்று சொன்னார்கள் என்று தான் அர்த்தமாகும்.

நான் தான் உங்களுக்குப் பெரிய கடவுள் என்று ஃபிர்அவ்ன் சொன்னான். இதனை அல்லாஹ் குர்ஆனில் எடுத்துச் சொல்வதால் ஃபிர்அவ்னை அல்லாஹ்வே கடவுள் என்று சொல்லி விட்டான் என்று கூறுவது போல் இவர்களின் வாதம் அமைந்துள்ளது.

நபிமார்கள் சூனியம் செய்யப்பட்டார்கள் என்று காஃபிர்கள் சொன்னது மன நோயாளி என்ற பொருளில் தான். ஆனால் சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தும் இடங்களில் அந்த பொருளில் பயன்படுத்தவில்லை. அதைப் பின்னர் நாம் விளக்குவோம்.

நபிமார்களின் போதனைகளைக் கேட்ட போது அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொன்னது போல் நபிமார்களை சூனியம் வைப்பவர்கள் என்றும் சொன்னார்கள். நபிமார்கள் கொண்டு வந்த அற்புதத்தை சூனியம் என்றும் சொன்னார்கள்.

வித்தை என்று சொல்ல முடியாத அளவில் அற்புதத்தைச் செய்து காட்டினாலும் அதனை மறுப்பதற்காக இது சூனியம் என்று சொன்னார்கள்.

இதனை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன் என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது தெளிவான சூனியம் எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 61:6

உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 10:77

மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா? என்று அவன் கேட்டான்.

திருக்குர்ஆன் 20:57

தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்).

திருக்குர்ஆன் 26:35

உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்று இறைவன் கூறினான்). நமது சான்றுகள் பார்க்கும் வகையில் அவர்களிடம் வந்த போது இது தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 27:13

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

திருக்குர்ஆன் 28:36

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

திருக்குர்ஆன் 21:3

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே என்று கூறுகின்றனர். அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம் எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 28:48

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள் என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 20:71

மக்களை எச்சரிப்பீராக என்றும், தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? இவர் தேர்ந்த சூனியக்காரர் என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 10:2

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 51:52

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் வசனங்களை ஆதாரமாகக் காட்டியது போல் நபிமார்களை சூனியக்காரர்கள் எனக் காஃபிர்கள் கூறியதையும் சூனியக் கட்சியினர் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்தவுடன் அதை சூனியம் என்று சொன்னார்கள் என்றால் அதிலிருந்து தெரிவது என்ன? நபிமார்கள் செய்தது போன்ற காரியங்களை சூனியத்தாலும் செய்ய முடியும் என்பதால் தான் இவ்வாறு கூறினார்கள்.

கைத்தடியைப் போட்டு மூஸா நபி பாம்பாக மாற்றினால் அது போல் சூனியக்காரனுக்கும் செய்ய முடியுமே என்று அவர்கள் பதில் சொன்னதில் இருந்து சூனியத்தின் மூலம் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பது தெளிவாகிறது. சூனியத்தின் பொருளை மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.

இதுவும் முதலில் சொன்ன வாதம் போல் தான் உள்ளது. சூனியத்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற கருத்தில் தான் காஃபிர்கள் சொன்னார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் காஃபிர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப ஒரு வாசகத்தைப் பயன்படுத்தி இருந்தால் அது எப்படி மார்க்க ஆதாரமாகும் என்ற அடிப்படை விஷயத்தை சூனியக்கட்சியினர் அறியவில்லை.

இன்றைக்கு சூனியத்தை நம்புகின்றவர்கள் சூனியத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கின்றார்களே அது போல அன்றைக்கு சூனியத்தை நம்புகின்றவர்களும் நினைத்தார்கள்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதற்கு இவை ஒருபோதும் ஆதாரமாக ஆக முடியாது. காஃபிர்கள் அப்படி நம்பி இருந்தார்கள் என்பதற்குத்தான் இது ஆதாரமாக அமையும்.

சூனியத்தைப் பற்றி காஃபிர்களின் நம்பிக்கை இது என்றால் அல்லாஹ்வின் பார்வையில் சூனியம் என்பது என்ன? அதை இப்போது பார்ப்போம்.

108, அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.

109, 110. இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

111, 112. இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள் என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

113, சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா? என்று அவர்கள் கேட்டனர். 114, ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள் என (அவன்) கூறினான். 115, மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று அவர்கள் கேட்டனர். 116, நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். 117, உமது கைத்தடியைப் போடுவீராக! என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அதுஅவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. 118, உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. 119, அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர். 120, சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.

திருக்குர்ஆன் 7:108 – 120

65, மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா? என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

66, இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. 67, மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். 68, அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர் என்று கூறினோம். 69, உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும்.அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.) 70, உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றனர்.

திருக்குர்ஆன் 20:65-70

இவ்வசனங்கள் கூறுவதைக் கவனியுங்கள். சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்தனர் என்று 7:116 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபிக்கு எதிராகக் களம் இறங்கிய சூனியக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். மிகவும் திறமை வாய்ந்த சூனியக்காரர்கள். அவர்கள் செய்து காட்டியது சிறிய சூனியம் அல்ல. மகத்தான சூனியத்தைச் செய்தனர். அந்த மகத்தான சூனியத்தால் அவர்கள் செய்து காட்டியது என்ன?

அவர்கள் செய்த சூனியத்தின் மூலம் கயிறுகளும், கைத்தடிகளும் பாம்புகளாக மாறவில்லை. மாறாக பாம்பு போல் பொய்த்தோற்றம் ஏற்படுத்தியது என்று 20:66 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

மகத்தான சூனியத்தின் மூலம் பொய்த்தோற்றம் தான் ஏற்படுத்த முடிந்தது. மெய்யாக எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. மகத்தான சூனியத்தின் சக்தியே இதுதான் என்றால் சாதாரண சூனியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

20:69 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்தது தில்லுமுல்லு (சூழ்ச்சி) என்றும் அல்லாஹ் கூறுகிறான். சில தில்லுமுல்லுகளைச் செய்து சூனியத்தால் ஏதோ செய்துவிட்டதாக கண்களுக்குக் காட்ட முடிந்தது.

மேஜிக் எனும் தந்திரக் கலையைத் தொழிலாகச் செய்யும் மேஜிக் நிபுனர்கள் ஒரு மனிதனைப் படுக்க வைத்து அல்லது நிற்க வைத்து அவனை இரண்டு துண்டுகளாக வெட்டுவது போல் காட்டுவார்கள். சிறிது நேரத்தில் இரு துண்டுகளாக அறுக்கப்பட்டவர்களை இணைத்து பழைய நிலைக்கு கொண்டு வருவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அந்த மனிதனை இரண்டாக வெட்டவில்லை. வெட்டாமலே வெட்டியது போல் வண்ண விலக்குகளால் ஜாலம் செய்து நம் கண்களை ஏமாற்றுவார்கள். அது போல் தான் சூனியக்காரர்களும் ஏமாற்றுவார்கள். உண்மையில் அவர்கள் ஏதும் செய்வதில்லை.

இவை கண்கட்டி வித்தைதான் என்று மேஜிக் செய்பவர்கள் சொல்லி விடுவார்கள்.

ஆனால் சூனியக்காரர்கள் தாம் செய்வதைப் பற்றி இப்படி சொல்ல மாட்டார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

ஒருவரைக் கட்டிலில் படுக்க வைத்து, கட்டிலின் நான்கு கால்களையும் உருவி விடுவார்கள். கட்டிலின் நான்கு கால்களும் உருவப்பட்ட பின்னர் பார்த்தால் அந்த மனிதர் அந்தரத்தில் தொங்குவது போல் தெரியும்.

ஆனால் உண்மையில் இப்படிச் செய்ய முடியாது. மெல்லிய கம்பியால் அந்தக் கட்டில் தூக்கிக் கட்டப்பட்டு இருக்கும். அது நம் கண்களுக்கு தெரியாததால் அந்த மனிதன் அந்தரத்தில் மிதப்பதாகத் தெரியும்.

யானையை மறைய வைப்பார்கள். மக்கள் கூடி இருக்கும் போது யானையை மேடையில் ஏற்றி லைட் ஆஃப் செய்து ஆன் செய்தால் யானை இருக்காது. இதே போன்று அடுத்து செய்தவுடன் மீண்டும் யானை வந்துவிடும். இதை ஒன்றிரண்டு விநாடிகளில் செய்வார்கள்.

நிஜமாகவே யானையை இப்படி காணாமல் போகச் செய்ய முடியுமா? முடியவே முடியாது.

இது வண்ண விளக்குகளால் நம் கண்ணை ஏமாற்றும் வித்தையாகும். ஒரு சில வண்ண விளக்குகளைப் போட்டால் சில வண்ணங்கள் மறைந்துவிடும். அதே போன்று யானையின் கருப்பு வண்ணத்தை மறைக்க அதற்கான விளக்கைப் போட்டால் யானை அதே இடத்தில் இருந்தாலும் அது நம் கண்களுக்குத் தெரியாது. அங்கு சென்று தொட்டுப் பார்த்தால் யானை அதே இடத்தில் தான் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கண்களுக்கு யானை இல்லாத தோற்றத்தை நமக்கு நம் கண் ஏற்படுத்தும். இதுதான் கண்ணை மயக்குவது ஆகும்.

மேலே உள்ள வசனங்களில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசகங்களைக் கவனமாகப் பாருங்கள்!

அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்

அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.

மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.

அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.

சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்

மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கண்ட வாசகங்கள் சொல்வது என்ன?

சூனியம் கற்பனை தான். பொய்த் தோற்றம் தான். கண்கட்டு வித்தைதான். நிஜத்தில் ஒன்றும் நடக்கவில்லை என்பதைக் காட்டுகிறதா இல்லையா?

அல்லாஹ்வும், மூஸா நபியும் கூறியதில் இருந்து சூனியம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வதா? காஃபிர்கள் விளங்காமல் சூனியம் பற்றி சொன்னதை ஆதாரமாக எடுத்துக் கொள்வதா?

மூஸா நபியின் பார்வையிலும், அல்லாஹ்வின் பார்வையிலும் சூனியம் என்பது ஏமாற்றுதல் என்று இருக்கும் போது, இவற்றையெல்லாம் விட்டு விட்டு சூனியக் கூட்டத்தை ஆதரிப்பவர்கள் காஃபிர் சொன்னவற்றை எடுத்துக் கொண்டு ஆதாரமாக வாதிடுகின்றனர்.

சூனியம் என்ற வார்த்தை குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இச்சொல்லை காஃபிர்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.

இச்சொல்லை நபிமார்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.

அல்லாஹ் தன்னுடைய வார்த்தையாகப் பயன்படுத்தியிருப்பான்.

அல்லாஹ் தன்னுடைய வார்த்தையாகப் பயன்படுத்திய எந்த வசனத்திலாவது சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டுள்ளதா என்றால் இல்லவே இல்லை.

5146 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாகப் பேச்சில் சூனியம் உள்ளது என்று சொன்னார்கள்.

புகாரி 5146

சிஹ்ர் – சூனியம் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் நமக்கு அர்த்தம் சொல்லித் தருகிறார்கள்.

நடைபாதையில் லேகியம் விற்பவன் பொய்யை மெய்யெனச் சித்தரிக்கும் வகையில் மக்களை ஈர்ப்பதைப் பார்க்கிறோம். கவர்ச்சியான பேச்சால் பொய்யை மெய்யைப் போல் காட்டுவதை சிஹ்ர் சூனியம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

சூனியம் என்றால் பொய்யான ஏமாற்றும் தந்திரம் தான் என்பதற்கு பின்வரும் ஒரு வசனமே போதிய ஆதாரமாகும்.

13, அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள். 14, நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. 15, இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?

திருக்குர் ஆன் 52:13,14,15

மறுமை விசாரணை முடிந்தவுடன் சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்றவுடன் அல்லாஹ் நரகவாசிகளைப் பார்த்து, எதைப் பொய் என்று சொல்கின்றீர்களோ அந்த நரகம் இதுதான். இது என்ன சிஹ்ரா என்று சொல்லுங்கள் என்று கேட்பான்.

அல்லாஹ் கேட்கும் இந்தக் கேள்வியில் இருந்து சிஹ்ர் என்ற சொல்லுக்கு அல்லாஹ்விடம் என்ன பொருள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நரகம் என்பது பொய் என்று காஃபிர்கள் உலகில் சொல்லிக்கொண்டு இருந்தனர். அவர்கள் நரகில் தள்ளப்படும் போது இது பொய்யா என்று கேட்பதற்குப் பதிலாக இது சிஹ்ரா என்று அல்லாஹ் கேட்கிறான்.

சிஹ்ர் என்றால் பொய் என்று அல்லாஹ் பொருள் சொல்லித் தருகிறான்.

காஃபிர்கள் சூனியம் என்ற சொல்லுக்கு செய்த அர்த்தத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் வித்தை தான் சிஹ்ர் என்பது தான் அல்லாஹ் சொல்லித்தரும் அர்த்தமாகும்.

சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தலே

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணை கற்பித்தல் தான் என்றாலும் இணை கற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.

திருக்குர்ஆன் 36:78

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.

உதாரணமாக நமக்கு கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.

அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும்.

ஒரு நேரத்தில் ஒருவன் பேசுவதைத் தான் நாம் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். ஆனால் உலகில் உள்ள எழுநூறு கோடி மக்களும் ஒரு நேரத்தில் அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கை வைத்தால் அவை அனைத்தையும் அதே நேரத்தில் அல்லாஹ் கேட்பான்.

சமாதிகளை வழிபடக் கூடியவர்கள் மகான்கள் என்று தாங்கள் கருதியவர்களை அழைக்கிறார்கள். அவ்லியாவே எங்களுக்கு இதைத் தாரும் என்று பல ஊர்களில் இருந்து ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள். அவரால் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும். அனைவரது கோரிக்கையையும் அவர் அதே நேரத்தில் செவிமடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அவரை அழைக்கிறார்கள். அப்படியானால் அந்த மகான் ஒரு நேரத்தில் எத்தனை பேருடைய அழைப்பையும் கேட்க வல்லவர் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது. இது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒருவரது அழைப்பை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அவருக்கும், நமக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருந்தால் தான் கேட்க முடியும். அதிக தூரத்தில் இருந்து கொண்டு ஒருவர் பேசுவதை நாம் கேட்க முடியாது.

ஒருவர் பேசுவதை நாம் செவிமடுக்க வேண்டுமானால் அந்தப் பேச்சைக் கடத்தக் கூடிய காற்று இருக்க வேண்டும். அல்லது ஏதாவது மின் அலைகள் இருக்க வேண்டும். அவர் ஒலி குறிப்பிட்ட டெசிபலில் இருக்க வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் நாம் கேட்க முடியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு இது போன்ற பலவீனங்கள் இல்லை.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எவ்வளவு குறைந்த சப்தத்தில் அழைத்தாலும் அனைத்தையும் ஒருவர் கேட்பார் என்று நாம் நம்பும் போது, அவருடைய கேட்கும் திறன் அல்லாஹ்வின் கேட்கும் திறனுக்குச் சமமாக ஆக்கப்படுவதால் இதை இணைகற்பித்தல் என்று சொல்கிறோம்.

பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கு பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுக்கு பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அது இணை கற்பித்தலாகும்.

குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வுக்கு இவற்றில் எதுவும் தேவை இல்லை.

இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார். எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்று நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக நாம் கருதியவர்களாக ஆவோம்.

மக்கா காஃபிர்கள் அல்லாஹ் அல்லாத பல குட்டித் தெய்வங்களை வணங்கி வந்தனர். அதே நேரத்தில் எல்லா ஆற்றலும், அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உள்ளது என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனாலும் அவர்களை இணை வைத்தவர்கள் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

திருக்குர்ஆன் 29:61

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்கத்துக் காஃபிர்கள் தமது குட்டித் தெய்வங்கள் குறித்து எவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

இறைவனின் ஆற்றல் தங்களின் குட்டித் தெய்வங்களுக்கு இல்லை என்று ஒரு புறம் நம்பிக்கொண்டு மற்றொரு புறம் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தக் குட்டித் தெய்வங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதன் காரணமாகவே பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தக் குட்டித் தெய்வங்களை ஒரே நேரத்தில் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே குட்டித் தெய்வங்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பியதால் இந்த விசயத்தில் குட்டித் தெய்வங்களை இறைவனுக்குச் சமமாகக் கருதினார்கள்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். எந்த ஒரு பண்பாவது அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவருக்கும் உள்ளது என்று நம்பினால் அதுவும் இணை கற்பித்தல் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு சூனியத்தை ஆராய்வோம்.

பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதர்களுக்கும் உண்டு.

அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.

ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.

இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?

சூனியக்காரன் உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.

இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்பவனிடம் போய் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்..

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.

கணவன் மனைவியைப் பிரிக்க பணம் கொடுத்தால் சூனியக்காரன் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டே கணவன் மனைவியைப் பிரித்து விடுவான் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் இந்த நம்பிக்கை இருந்தாலும் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்த சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். சில எதிர்வாதங்களையும் வைக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்யப்படுகிறதா

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் முதல் ஆதாரம்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.

நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

ஆனால் அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்கு சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள் என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

இவ்வசனங்கள் மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் இது போல் தான் நம்பினார்கள் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் கூறவேயில்லை. கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள்.

சூனியக்காரன் அல்லாஹ் வழங்கிய ஆற்றலால் சூனியம் செய்கிறான் என்ற இந்த வாதமும் மக்கத்துக் காஃபிர்களின் வாதமும் ஒரே மதிரியாகவே உள்ளன.

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டு அது இணைகற்பித்தலில் சேராது என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள இதுபோல் உளறுகிறார்கள்.

சமாதி வழிபாடு நடத்துபவர்களும் இது போல் தான் இறந்தவர்களை வணங்குகிறார்கள். நாங்கள் மகான்களை அல்லாஹ் என்றா நம்பினோம்? அவர்களுக்குச் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருக்கிறது என்றா சொன்னோம்? இல்லவே இல்லை. அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தான் அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்துகிறார்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம். இது எப்படி அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் ஆகும்? அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள் தானே தவிர அல்லாஹ் அல்ல என்று கூறி தங்களின் இணைவைப்புக் கொள்கையை நியாயப்படுத்துவார்கள்.

சமாதி வழிபாடு செய்வோரின் அதே வாதங்களை சூனியக்காரன் விஷயத்தில் இவர்கள் எடுத்து வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.

இது அப்பட்டமான இணைவைப்பு என்று சூனியக் கட்சியினரிடம் நாம் கூறும் போது எங்கள் நம்பிக்கைக்கும், மக்கா காஃபிர்களின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார்கள்.

எங்களின் நம்பிக்கைக்கும் தர்கா வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதால் நாங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களாக மாட்டோம் என்று மறுமொழி கூறுகிறார்கள்.

அது என்ன வித்தியாசம் என்று அவர்களிடம் கேட்டால் அவ்லியாக்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருப்பதாக அல்லாஹ் சொல்லவில்லை. ஆனால் சூனியக்காரனுக்கு அதிசய ஆற்றல் உள்ளதாக அல்லாஹ்வே 2:102 வசனத்தில் சொல்லி விட்டான் என்பது தான் அந்த வித்தியாசம்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதை நாங்கள் நம்புகிறோம். அவ்லியாக்களுக்கு அப்படி அற்புத சக்தி வழங்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அற்புத சக்தி உள்ளதாக நம்புகிறார்கள். இரண்டையும் எப்படி ஒப்பிடலாம் என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் வித்தியாசம்.

தன்னைப் போல் செயல்படும் ஆற்றலை அல்லாஹ் அவ்லியாக்களுக்கும் கொடுக்க மாட்டான். நபிமார்களுக்கும் கொடுக்க மாட்டான். சூனியக்காரனுக்கும் கொடுக்க மாட்டான் என்ற பொதுவான அடிப்படைக்கு முரணாக இந்த வாதத்தை வைக்கிறார்கள்.

சூனியக்காரர்களுக்கு சக்தி உள்ளது போல் மேலோட்டமாக தோன்றக் கூடிய வசனம் இருப்பது போல் அவ்லியாக்களுக்கு அற்புத சக்தி உள்ளது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றக் கூடிய பல ஆதாரங்கள் தர்கா வழிபாட்டுக்காரர்களிடமும் உள்ளது.

அதை அடிப்படையாகக் கொண்டு அவ்லியாக்களுக்கு அல்லாஹ் அற்புத சக்தியை வழங்கியுள்ளதற்கு ஆதாரம் இருப்பதால் தான் நாங்கள் நம்புகிறோம் என்று தர்கா வழிபாட்டுக்காரர்களும் கூறுகிறார்கள்.

அந்த ஆதாரங்கள் சூனியக்காரனுக்கு முட்டுக் கொடுக்க இவர்கள் காட்டும் ஆதாரத்தைவிட வலுவாகவும் உள்ளன.

உதாரணமாக,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 6502

அவ்லியாக்களுக்கு அதிகாரமும், அற்புத சக்தியும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள்.

அவ்லியாக்களின் கைகள் அல்லாஹ்வின் கைகள் என்றும் அவ்லியாக்களின் கால்கள் அல்லாஹ்வின் கால்கள் என்றும் இதில் சொல்லப்பட்டுள்ளதால் அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று தர்கா வழிபாட்டுக் கூட்டம் வாதிடுகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டும் ஆதாரத்தை விட இது வலிமையாக இருக்கிறது.

அவ்லியாக்களுக்கு அளப்பரிய ஆற்றலை அல்லாஹ் தந்துள்ளான் என்று அல்லாஹ்வே கூறியதால் தான் நாங்கள் இவ்வாறு நம்புகிறோம் என்று கூறுகிறார்களே இதை சூனியக் கட்சியினர் ஏற்றுக் கொள்கிறார்களா?

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.

சூனியக்காரன் விஷயத்தில் மட்டும் ஒட்டு மொத்த குர்ஆனுக்கு மாற்றமாக கருத்து கொள்வது ஏன்?

ஆதமுக்கு சஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் பெரியார்கள் காலில் விழலாம் என்று தர்காவாதிகள் வாதிடுகின்றனர். தங்களின் இந்த வாதத்தை நியாயப்படுத்த 2:34, 17:61, 7:11, 18:50, 20:116 ஆகிய வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

மேலோட்டமாக இதை மட்டும் பார்க்கும் போது இது சரியாகத் தோன்றினாலும் இது ஒட்டு மொத்த குர்ஆன் போதனைக்கு மாற்றமாக உள்ளது என்பதால் அதற்கு முரணில்லாத வேறு விளக்கம் கொடுத்தோம். அது போல் தவ்ஹீத் வேடம் போட்டு சூனியத்தை ஆதரிக்கும் கூட்ட்த்தினரும் விளக்கம் கொடுத்தனர்.

சூனியக்காரன் விஷயத்தில் மட்டும் ஒட்டு மொத்த குர்ஆனின் கருத்தைக் கவனிக்காமல் ஒரு வசனத்துக்குப் பொருள் கொடுப்பது என்ன நியாயம்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறி பின்வரும் வசனங்களை சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுவார்கள்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்டதூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 72:26,27

அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.

திருக்குர்ஆன் 81:24

மேலோட்டமாகப் பார்க்கும் போது அந்த அர்த்தத்துக்கு இடம் உள்ளது என்று இவர்கள் ஒப்புக் கொண்டார்களா? மறைவான ஞானம் யாருக்கும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களைக் கவனத்தில் கொண்டு இதற்கு மறு விளக்கம் கொடுத்தார்களா?

சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களை மறந்து விட்டு அதற்கும் முரணாக 2:102 வசனத்துக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதத்துக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.

(2:102 வசனத்தைப் பின்னர் நாம் விளக்கும் போது இதற்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.)

தர்காவிற்கு செல்பவர்கள் கூட இறந்தவரை நல்ல மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ் இவருக்கு அற்புத ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான் என்று சொல்கின்றனர். ஆனால் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்புபவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பவனுக்கு அல்லாஹ் இந்த ஆற்றலைக் கொடுத்துள்ளான் என்று சொல்கின்றனர். இது தர்காவாதிகளின் நம்பிக்கையை விட கேடுகெட்ட நம்பிக்கையாகும்.

எனவே இவர்கள் செய்யும் இந்த அர்த்தமற்ற வாதங்கள் சூனியத்தை நம்புதல் இணை வைத்தல் அல்ல என்று நிறுவுவதற்கு சிறிதும் உதவாது.

ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகிறதா?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணை வைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும் போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள்.

சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்த சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்.

இவர்கள் மனமறிந்து பொய் சொல்கிறார்கள் என்பது இந்த வாதத்தின் மூலம் தெரிகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது என்பதற்கு இவர்கள் எதை ஆதாரமாகக் காட்டினார்கள்?

யூதன் ஒருவன் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்து அவர்களை முடக்கிப் போட்டான் என்ற செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டினார்கள்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

சீப்பு, உதிர்ந்த முடி, பேரீச்சம்பாளை ஆகிய பொருட்களில் லபீத் எனும் யூதன் சூனியம் வைத்து தர்வான் எனும் கிணற்றில் புதைத்து வைத்ததாகவும், அந்தக் கிணற்று நீரை இறைத்து அப்பொருட்களை அப்புறப்படுத்திய பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

யூதன் ஜின்களை ஏவிவிட்டு அந்த ஜின்கள் நபிகள் நாயகத்தைத் தாக்கியதால் தான் அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று அந்த ஹதீஸில் இருந்தால் தான் இவர்கள் இவ்வாறு வாதிட முடியும்.

இவர்களே நம்பாத ஒரு காரணத்தைப் புதிதாக கற்பனை செய்து சொல்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவன் சூனியம் வைத்தால் அவன் ஜின்களைப் பற்றி அறிந்துள்ளதால் ஜின்களை வசப்படுத்தி சூனியம் செய்தான் என்று சொல்ல முடியும்.

ஆனால் இந்துக்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள் இன்னும் பல மதத்தினரும் சூனியம் செய்வதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் இருந்து கொண்டே சூனியத்தை ஆதரிப்பவர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். இவர்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பு உள்ளதாக நம்ப மாட்டார்கள். ஜின்களையே அறியாத இவர்கள் எப்படி ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்வார்கள்? இவர்களுக்கு இந்த வாதம் பொருந்தாதே?

முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஒருவன் சூனியம் செய்வதைத் தான் நாங்கள் நம்புகிறோம். ஜின்களை நம்பாத பிற மதத்தவர்களுக்கு ஜின்களைப் பற்றி நம்பிக்கை இல்லாததால் அவர்களால் சூனியம் செய்ய முடியாது என்பது தான் எங்கள் நம்பிக்கை என்று சொல்லப் போகிறார்களா?

அப்படிச் சொல்வார்களானால் யூதன் சூனியம் வைத்தான் என்ற ஹதீஸை இவர்களே மறுத்தவர்களாகி விடுவார்கள்.

இவர்கள் தமது வாதத்தில் பொய்யர்கள் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அடுத்து மனிதன் ஜின்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வசப்படுத்த முடியுமா? இதற்கு ஆதாரம் உண்டா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு இல்லாத ஜீவன்களை மனிதனுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

45:12, 45:13, 14:32, 16:14, 22:36, 22:37, 22:65, 31:20, 43:13 ஆகிய வசனங்களில் அல்லாஹ் இதைத் தெளிவாக கூறுகிறான்.

ஆனால் மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும் கொண்ட ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா? ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா? இதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி விட்டுத் தான் ஜின்களை வசப்படுத்தி சூனியம் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். ஒரு ஆதாரமும் இல்லாமல் தப்பித்துக் கொள்வதற்காக உளறக் கூடாது.

நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்களுக்குத் தென்படாது. ஆனாலும் மனிதனைப் போல் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட படைப்பு என்பதற்கு ஆதாரம் உண்டு.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

திருக்குர் ஆன் 51:56

ஜின், மனித சமுதாயமே! உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா? (என்று இறைவன் கேட்பான்). எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

திருக்குர்ஆன் : 6:130

இதிலிருந்து ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு; ஜின்களுக்கும் வேதங்கள் உண்டு; ஜின்களும் பிரச்சாரம் செய்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.

திருக்குர்ஆன் 55:31

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான்.

திருக்குர்ஆன் 7:38

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் : 7:179

மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.

திருக்குர்ஆன் 11:119

நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன் என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.

திருக்குர்ஆன் 32:13

மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப எப்படி சொர்க்கம் நரகம் வழங்கப்படுகிறதோ அது போல் ஜின்களுக்கும் வழங்கப்படும் என்பதையும், ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் கடமை உண்டு என்பதையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

7:179 வசனம் ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளது என்று தெளிவாகச் சொல்கிறது.

பகுத்தறிவு இல்லாத மிருகங்களை மனிதன் வசப்படுத்தலாம். பகுத்தறிவுள்ள ஜின்னை எப்படி மனிதனால் வசப்படுத்த முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவுள்ள இன்னொரு மனிதனை வசப்படுத்த முடியாது எனும் போது பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்.

இது மட்டுமில்லாமல் ஆற்றலில் மனிதர்களை மிஞ்சியது ஜின் இனம்.

பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று (ஸுலைமான்) கேட்டார். உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன்.

திருக்குர் ஆன் 27:38,39,40

சுலைமான் நபி உட்கார்ந்த இடத்தில் எழுவதற்குள் அந்த சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என்று இஃப்ரீத் எனும் ஜின் சொன்னது. அதைவிட வலிமை மிக்க மற்றொரு ஜின் கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வருகிறேன் என்று சொன்னது. அவ்வாறே அதைக் கொண்டும் வந்தது.

இதில் இருந்து ஜின்கள் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு ஆற்றல் பெற்றவை என்று அறிந்து கொள்ளலாம்.

ஜின்கள் பேசிக் கொண்டதை அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த அல்ஜின் அத்தியாயத்தில் 8,9 வசனங்களைப் பாருங்கள்

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

இந்த நவீன உகத்திலும் மனிதனால் சென்றடைய முடியாத வானுலகுக்கு ஜின்கள் சாதாரணமாகப் போக முடியும் என்றால் ஜின்களின் ஆற்றல் எத்தகையது என்று அறிந்து கொள்ளலாம்.

ஜின்களுக்கு மனிதர்களைப் போல் பகுத்தறிவு இருக்கிறது. ஆற்றலில் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் போது மனிதனை வேண்டுமானால் ஜின்களால் வசப்படுத்த முடியுமே தவிர ஜின்களை மனிதனால் வசப்படுத்தவே முடியாது என்பது உறுதியாகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மனிதனால் ஜின்களை வசப்படுத்தவே முடியாது என்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன.

சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது பற்றி கூறும் வசனங்களைக் கவனியுங்கள்!

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

திருக்குர்ஆன் : 21:82

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர் (என்று கூறினோம்.)

திருக்குர்ஆன் : 34:12

ஒவ்வொரு விநாடியும் ஜின்கள் சுலைமான் நபிக்குக் கட்டுப்படுகிறதா என்று அல்லாஹ் கண்காணித்த காரணத்தால் தான் அவரால் ஜின்களை வசப்படுத்த முடிந்தது.

சுலைமான் நபிக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தான். பறவைகளை வசப்படுத்திக் கொடுத்தான். எறும்புகள் பேசுவதைப் புரிய வைத்தான். இதுபோல் தான் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் சுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.

சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.

அல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த சுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.

என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 38:35

இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 461

சுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்கு கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். சுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிய முடியும்.

மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று திருக்குர்ஆனில் தெளிவாகச் சொல்லப்பட்ட பின் அதற்கு மாற்றமாக சூனியக்கரனால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்று வாதிடுவதை எப்படி ஏற்க முடியும்?

ஜின்களை வைத்து சூனியம் செய்தால் அதற்கு ஏன் முடி, காலடி மண் தேவைப்படுகின்றது. ஒரு கட்டளை பிறப்பித்தால் ஜின்களே செய்து விடும்.

நாங்கள் தான் ஜின்களை வைத்து சூனியம் செய்கின்றோம் என்று சூனியக்காரர்களே சொல்லாமல் இருக்கும் போது சூனியத்திற்கு முட்டுக் கொடுக்கும் உலமாக்கள் இப்படிச் சொல்வது தான் வேதனை.

சூனியக்காரன் ஜின்களை வசப்படுத்தி வைத்து இருந்தால் தனது தேவைகளுக்கு மக்களிடம் கையேந்திக் கொண்டு இருப்பானா?

ஜின்னை வசப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் நான் உன்னை அடிக்கின்றேன். நீ எதுவும் செய்யக்கூடாது. நீ வசப்படுத்தி வைத்துள்ள ஜின்தான் என்னைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே?

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே? ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே?

எங்கோ இருந்த சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களுக்கு இவர்கள் கட்டளையிட்டால் பெண்டகனில் உள்ள எல்லா ஆயுதங்களயும் அழித்து விட முடியுமே?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாக புளுகும் இவர்கள் சில்லரை வேலைகளைத்தான் பார்க்கிறார்கள். ஜின்கள் பார்க்கும் எந்த வேலையையும் அவர்கள் பார்ப்பதில்லை.

அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் கண்களுக்குத் தெரியாத பகுத்தறிவுள்ள படைப்புக்குத் தான் வசப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஜின்கள் நம்மைப் பார்க்கும். நாம் ஜின்களைப் பார்க்க முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

திருக்குர் ஆன் 7:27

ஜின்கள் நம் தலையில் தட்டி நான் சொல்வதைக் கேள் என்று சொன்னால் அதை மனிதன் மீறமாட்டான். ஏனெனில் கண்களுக்குத் தெரியாததால் எந்தப் பக்கம் இருந்து அடுத்த அடி விழும் என்று தெரியாது. எனவே ஜின்களை எதிர்க்க இயலாமல் மனிதன் ஜின்களுக்குக் கட்டுப்படும் என்றால் அதை நம்பலாம்.

மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதன் மூலம் கூடுதல் ஆற்றலையும் பெற்றுள்ள ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியாது.

ஜின்களைக் கொண்டு ஜின்கள் செய்யத் தக்க எந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மாறாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்குத் தான் சூனியம் என்று பயம் காட்டுகின்றனர்.

அற்புதங்களை நம்புதல் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகுமா

சூனியக்காரன் மனிதனைப் போல் செயல்படாமல் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்ற கருத்தைத் தருவதால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணை கற்பித்தல் என்று நாம் சொல்கிறோம். இதை மறுப்பதற்குச் சில எதிர்வாதங்களையும் சூனியக் கட்சியினர் எடுத்து வைக்கிறார்கள்.

நபிமார்கள் அற்புதங்கள் செய்ததாக நீங்களும் நம்புகிறீர்கள். நாங்களும் நம்புகிறோம். நபிமார்கள் செய்த எந்த அற்புதமும் மனிதனின் செயலைப் போல் இருக்கவில்லை. அல்லாஹ்வின் செயலைப் போல் தான் உள்ளது. அற்புதங்களை நம்பும் போது நபிமார்கள் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் என்ற கருத்து வருவதால் அற்புதங்களை நம்புவதும் இணை கற்பித்தல் என்று சொல்வீர்களா? என்பதுதான் அந்த வாதம்.

இது அறிவீனமான வாதமாகும்.

நபிமார்கள் செய்த அற்புதங்கள் மனிதனின் செயலைப் போன்றவை அல்ல என்பது உண்மை. எந்த மனிதனாலும் அதுபோல் செய்ய முடியாது என்பதும் உண்மை. ஆனால் நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையில் அவர்கள் செய்தவை அல்ல.

மனிதர்களாக இருந்த நபிமார்களை இறைவனே தனது தூதர்களாக அனுப்பினான் என்று மக்கள் நம்புவதற்கான சான்றுகளாகச் சில அற்புதங்களை அவர்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்தினான். அதற்கும் நபிமார்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே எந்த அற்புதத்தையும் நாங்கள் செய்ய முடியும் என்று நபிமார்கள் வாயாலேயே அல்லாஹ் மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான். இதைப் பல வசனங்களில் தெளிவுபட அல்லாஹ் கூறி இருக்கிறான்.

அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்று அல்லாஹ்வின் அனுமதியோடுதான் சூனியக்கார்ர்கள் சூனியம் செய்கிறார்களா? இது தான் சூனியக் கட்சியினரின் கொள்கையா?

எனவே நபிமார்களின் அற்புதங்களுடன் சூனியத்தையும் ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

மனிதன் என்றும் இறைவனின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் இறைவனிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்துப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக அல்லாஹ் இதற்குப் பதிலளிக்கிறான்.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது மனிதர்கள் மூலம் அதை வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

எல்லா நபிமார்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்? நாங்கள் மனிதர்கள் தான். அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் மட்டும் அல்லாஹ் எங்கள் மூலம் அவன் விரும்புகின்ற அற்புத்தை நிகழ்த்துவான். இதில் எங்களின் பங்கு எதுவும் இல்லை என்றே நபிமார்கள் சொன்னார்கள்.

ஆனால் சூனியக்காரர்கள் காசு கொடுத்தால் எந்த நேரம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சூனியம் செய்வார்கள் என்று தான் சூனியக் கட்சியினர் நம்புகின்றனர்.

அற்புதங்களை நபிமார்கள் செய்யவில்லை. நபிமார்கள் மூலமாக அல்லாஹ் செய்தான் என்பதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள மூஸா மூலம் வெளிப்பட்ட சில அற்புதங்களை கவனிக்கலாம்.

தூர்சினா மலைக்கு அல்லாஹ்விடம் பேச மூஸா நபி அவர்கள் செல்கின்றார்கள்.

மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன? என்று இறைவன் கேட்டான். இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன என்று அவர் கூறினார். மூஸாவே! அதைப் போடுவீராக! என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம் என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 20:17-21

தன்னிடம் இருந்தது வெறும் கைத்தடிதான் என்று மூஸா நபியிடம் அல்லாஹ் வாக்குமூலம் வாங்கி விட்டு அதனைக் கீழே போடு என்று அல்லாஹ் சொன்னான். உடன் அது பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான். அது பாம்பாக மாறும் என்பது மூஸா நபிக்கு தெரியாது.

பின்னர் பிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அதே அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட பிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்கள் தமது சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று அவர்கள் கேட்டனர். நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். உமது கைத்தடியைப் போடுவீராக! என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

திருக்குர்ஆன் 27:115, 116, 117

கைத்தடி கையில் இருந்தும், போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாகக் கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள்.

அதுபோல் மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

திருக்குர்ஆன் 26:61,62,63

மூஸா நபியை எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும் போது தமது கைத்தடியால் அடித்து கடலைப் பிளக்கவில்லை. அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது.

இதைப் பின் வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான் என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

திருக்குர் ஆன் 26:60-63

இது போல் மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக! என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்! (என்று கூறினோம்)

திருக்குர்ஆன் 2:60

கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம் முறையிட்டு அல்லாஹ்விடம் தண்ணீரைக் கேட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின்னர் தான் அதைப் பாறையில் அடித்தார்கள். அதில் இருந்து நீரூற்றுக்கள் உருவாயின என்று இவ்வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

சூனியக்காரன் சூனியம் செய்யும் போது அது பலிப்பதற்கு அல்லாஹ்விடம் இருந்து அவனுக்கு வஹீ வரும் என்று இவர்கள் சொல்கிறார்களா? அப்படிச் சொன்னால் தான் நபிமார்களின் அற்புதங்களுடன் சூனியத்தை ஒப்பிட்டு கேள்வி கேட்க முடியும்.

தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ் காட்டிய அற்புதங்களை ஷிர்க்கை நியாயப்படுத்துவதற்கு ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு இவர்களின் ஈமான் பலவீனமாக உள்ளது.

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும் போது எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான்

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்கசான்று உள்ளது (என்றார்)

திருக்குர்ஆன் 3:49

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

மக்கள் கேட்கும் போதெல்லாம் அற்புதங்களை நபிமார்கள் செய்ததும் இல்லை. அல்லது அவர்கள் ஆசைப்படும் போதெல்லாம் அற்புதங்களைச் செய்ததும் இல்லை.

நபிமார்கள் மூலம் அல்லாஹ் செய்து காட்டிய அற்புதங்களை நம்புவதால் அது இணைகற்பித்தலில் சேரவே சேராது. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இவ்வாறு இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

சாமிரி செய்த அற்புத்தை நம்புவது இணைகற்பித்தலாகுமா?

இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக தூர் மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைச் சிற்பத்தை உருவாக்கினான்.

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. இதுதான் கடவுள்; மூஸா வழிமாறிச் சென்று விட்டார் எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான்.

(பார்க்க திருக்குர்ஆன் 20:96)

இதை நம்பினால் சாமிரி அல்லாஹ்வைப் போல் செயல்பட்டுள்ளான் என்று ஆகாதா? இது இணைகற்பித்தலில் சேராதா? சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைகற்பித்தல் என்றால் சாமிரி செய்த்தாக கூறப்படுவதை நம்புவதும் இணைகற்பித்தல் தானே என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.

ஸாமிரி என்பவன் இதுபோல் செய்ய ஆற்றல் பெற்று இருந்தான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர் என்று எப்போது நாம் கூறுவோம்?

அவர் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதைச் செய்து காட்ட வேண்டும். ஒரு தீக்குச்சியை இரண்டாக உடைக்கும் சக்தி எல்லா மனிதர்களுக்கும் உள்ளது என்று நாம் நம்புகிறோம். நாம் எப்போது நினைக்கிறோமோ அப்போதெல்லாம் தீக்குச்சியை இரண்டாக உடைத்துக் காட்ட முடியும். இலட்சத்தில் ஒன்று அல்லாஹ்வின் நாட்டப்படி தவறிடலாம்.

ஒருவன் பெரிய கடப்பாரையை வளைக்கிறான். அது இரண்டாக உடைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இவன் பெரிய கடப்பாரையை உடைக்கும் அளவுக்கு வலிமை பெற்றவன் என்று எப்போது கூறுவோம்? மேலும் சில கடப்பாரைகளைக் கொடுத்து உடைத்துக் காட்டு என்று சொல்வோம். கொடுக்கும் கடப்பாரைகளை எல்லாம் அவன் உடைத்துக் காட்டினால் அப்போது அவனுக்கு அந்தச் சக்தி உள்ளதாக நாம் கருதுவோம்.

வேறு கடப்பாரைகளை அவ்வாறு உடைத்துக் காட்ட அவனுக்கு இயலாவிட்டால், அல்லது அதைச் செய்ய அவன் மறுத்தால் அவன் ஒருமுறை கடப்பாரையை உடைத்தது அவனது சக்தியால் அல்ல. அந்தக் கடப்பாரை உள்ளுக்குள் முறிந்து உடையும் நிலையில் இருந்திருக்கும். அல்லது அல்லாஹ் அந்தக் கடப்பாரை உடையவேண்டும் எனக் கட்டளை போட்டதால் உடைந்து இருக்கும். இப்படித் தான் புரிந்து கொள்வோம். இவனுக்கு கடப்பாரையை உடைக்கும் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

ஸாமிரி தானே திட்டமிட்டு இதைச் செய்தானா? தான் நினைத்த போதெல்லாம் காளைச் சிற்பத்தைச் செய்து அதைச் சப்தமிடச் செய்யும் ஆற்றல் பெற்று இருந்தானா? அல்லது தற்செயலாக ஒரு தடவை நடந்ததோடு சரியா?

இது பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

ஸாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதே என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம் என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 20:95, 96, 97

என்ன நடந்தது என்று மூஸா நபி விசாரித்த போது இது போன்ற ஆற்றல் எனக்கு உள்ளது என்று அவன் கூறவில்லை. மாறாக சிற்பத்தைச் செய்து தூதரின் காலடி மண்ணை அதில் போட வேண்டும் என என் மனதுக்குத் தோன்றியது. அவ்வளவு தான் என்று அவன் விடையளித்தான். இதுபோல் செய்யும் ஆற்றல் இவனுக்கு இருக்கவில்லை. இப்படிச் செய் என்று இவன் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு எண்ணத்தைப் போட்டுள்ளான். அதை அவன் செய்துள்ளான் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஸாமிரிக்கு மந்திர சக்தி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மூஸா நபியவர்கள் அவன் செய்த காளைச் சிற்பத்தைத் தீயிலிட்டு பொசுக்கி கடலில் வீசிக் காட்டினார்கள். ஸாமிரி வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

உறுதியான நம்பிக்கை உடைய மூஸா நபியை ஸாமிரியால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தான் உண்டாக்கிய சிற்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிற்பமும் அவனைக் காப்பாற்றவில்லை.

இது போல் தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுவார்கள். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து, தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்தால் எப்படி அதைப் புரிந்து கொள்வோம்? அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

இதைப் புரிந்து கொண்டால் ஸாமிரி எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. அவனுக்கு அந்த ஆற்றல் சிறிதும் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

சூனியக்காரர்கள் நினைத்த நேரத்தில் யாருக்கு எதிராகவும் சூனியம் செய்து அல்லாஹ்வைப் போல் செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளார்கள் என்று நம்புவதும் இதுவும் எப்படிச் சமமாகும்?

ஸாமிரி செய்தான் என்பதற்கும் ஸாமிரியிடம் நிகழ்ந்திருக்கின்றது என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

சூனியக்காரனுக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்களே அது இப்படிப்பட்டதல்ல.

சூனியக்காரன் அவனே திட்டமிடுகிறான்.

அவன் திட்டமிடும் நேரங்களில் எல்லாம் மந்திரம் செய்கிறான்.

எத்தனை தடவை வேண்டுமானாலும் இவ்வாறு செய்கிறான்.

இது அப்பட்டமான இணைவைத்தல் அல்லாமல் வேறு என்ன?

தஜ்ஜால் செய்யும் அற்புதத்தை நம்புவது இணைவைத்தலாகாதா?

தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களை தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான்.

அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.

இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தான் தெரியும். இதனைச் சிந்தித்துப் பார்த்தால் இது தவறான கேள்வி என்பது விளங்கும்.

ஏனென்றால் தஜ்ஜால் என்ற ஒருவன் இறுதிக் காலத்தில் வரவிருப்பதாக நூஹ் நபி அவர்களின் காலத்திலிருந்து அனைத்து நபிமார்களும் தமது சமுதாயத்துக்கு எச்சரித்துள்ளார்கள்.

3057 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

…..பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்: நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

நூல் : புகாரி 3057

தஜ்ஜால் என்று ஒருவன் வருவான். இவன் சில காரியங்களைச் செய்து காட்டுவான். அவன் தன்னைக் கடவுள் என்று சொல்வான். அவனை நம்பிவிடாதீர்கள். இவன் ஒன்றரைக் கண்ணுள்ளவனாக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள்.

3338 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான் அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.

நூல் : புகாரி 3338

3439 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 3439

அம்ர் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள், நபித்தோழர்களில் சிலர் தம்மிடம் கூறியதாகப் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் காஃபிர் (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடிவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் வாசிப்பார்கள் என்றும், அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்குமுன் தம் இறைவனைப் பார்க்க முடியாது என்றும் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5615

5620 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எல்லா இறைத்தூதர்களும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ரா (இறைமறுப்பாளன் – காஃபிர்) என்று (தனித் தனி எழுத்துகளில்) எழுதப்பட்டிருக்கும்.

நூல் : முஸ்லிம் 5620

எந்த இறை மறுப்பாளர்களாக இருந்தாலும் அவர்களின் செயல் மூலமாக காஃபிர்கள் என்று மக்கள் அறிந்தார்களே தவிர, நெற்றியில் எழுதி வைத்து இவன் போன்று அடையாளப்படுத்தப்படவில்லை. இது இவனது முக்கிய பலவீனம்.

தஜ்ஜால் என்பவன் சில அதிசயங்களைச் செய்துகாட்டி தன்னை இறைவன் என்பான் என்றாலும் இது சூரியக்காரனுக்குச் சக்தி உள்ளதாக நம்புவது போன்றதல்ல.

தஜ்ஜால் என்பவன் இப்படிச் செய்வான் என்று முன்னரே நமக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாலும், அவனது நெற்றியில் காஃபிர் என்று பதிக்கப்பட்டு இருக்கும் என்று அவனை இனம் காட்டி இருப்பதாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்று நபியவர்கள் நமக்கு முன்னறிவிப்பு செய்துள்ளதாலும் இது சூனியக்காரனின் ஆற்றலில் இருந்து இந்த வகையில் வேறுபடுகிறது.

மேலும் தஜ்ஜால் எந்த அற்புதத்தைச் செய்துகாட்டி தன்னை இறைவன் என்று வாதிடுவானோ அதே அற்புதத்தில் அல்லாஹ் அவனைப் பொய்யாக்கிக் காட்டுவான் என்றும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

1882 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒரு போதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும் போது இதைக் கூறியதாகவும் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1882

ஒரு நல்ல மனிதரைக் கொன்று விட்டு அவரை உயிர்ப்பித்தால் என்னை இறைவன் என்று நம்புவீர்களா என்று தஜ்ஜால் அறைகூவல் விடுகிறான். அதுபோல் ஒரு நல்ல மனிதரை அழைத்து அவரைக் கொன்று விட்டு உயிருடன் எழுப்பிக் காட்டுவான். ஆனால் எந்த மனிதரை ஆதாரமாகக் காட்டி தன்னை இறைவன் என்று அவன் வாதிடுவானோ அதே மனிதர் அவனை இறைவன் என்று ஏற்க மறுப்பார். நீதான் எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் என்பார்.

தனக்கு இறந்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பதாக எண்ணிக் கொண்டு அந்த மனிதரை மீண்டும் கொல்ல தஜ்ஜால் முயற்சிப்பான். ஆனால் அவனால் கொல்ல முடியாது என்று இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது.

நல்லடியாரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பித்தது தஜ்ஜாலின் செயல் அல்ல என்று அந்த நிமிடமே நிரூபிக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் உயிர்ப்பிப்பது இருக்கட்டும். அவரைக் கொல்லக் கூட அவனால் முடியாது. கொல்வது மனிதனால் சாத்தியமாகக் கூடிய செயல் தான். உயிர்ப்பித்தல் தான் சாத்தியமில்லாதது. இவனுக்கோ ஒரு மனிதனைக் கொல்லக் கூட முடியவில்லை என்று அல்லாஹ் காட்டி விடுகிறான்.

இப்படித் தான் ஹதீஸ் சொல்கிறது. இப்படி நம்பினால் தஜ்ஜாலுக்கு இறைத்தன்மை உள்ளதாக நம்பியதாக ஆகுமா? ஒருக்காலும் ஆகாது.

தஜ்ஜால் இறைத்தன்மை அற்றவன் என்பதற்குத்தான் இது ஆதாரமாக உள்ளது.

ஒரு மனிதனுக்கு அல்லாஹ் ஒரு ஆற்றலைக் கொடுத்து இருந்தால் அவனால் அதைப் பல சந்தர்ப்பங்களில் செய்ய முடியும். ஒரே ஒரு தடவை அவனிடமிருந்து ஒரு அதிசயம் வெளிப்பட்டு அதே அதிசயத்தை மறுபடியும் அவனுக்குச் செய்ய முடியாவிட்டால் அவனிடம் அல்லாஹ் ஒரு தடவை வெளிப்படச் செய்துள்ளான் என்றும் அதை அவன் செய்யவில்லை என்றும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் சூனியக்காரன் எதைச் செய்து காட்டினானோ அது அந்த நேரமே பொய்யென நிரூபிக்கப்படும் என்று சூனியக் கட்சியினர் நம்புவதில்லை. மாறாக சூனியக்காரன் தான் விரும்பும் போதெல்லாம் அதைச் செய்ய வல்லவன் என்று தான் நம்புகிறார்கள்.

அது மட்டுமின்றி தஜ்ஜால் செய்வது பொய்யும் பித்தலாட்டமும் தான்; உண்மை அல்ல என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

3450 ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி) அவர்கள், தஜ்ஜால் வெளியே வரும் போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை இது நெருப்பு என்று கருதுகின்றார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை இது குளிர்ந்த நீர் என்று கருதுகின்றார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கின்றாரோ அவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

புகாரி 3450

அவன் எதை நரகம் என்று சொல்கிறானோ அது நரகமல்ல. சோலையாக இருக்கும். அவன் குளிர் நீர் என்று சொன்னது உண்மையில் கொதி நீராக இருக்கும். இதன் மூலம் அவன் இறைவன் அல்ல; பித்தலாட்டக்காரன் என்பது அப்போதே நிரூபிக்கப்பட்டு விடும்.

சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் ஒரு தடவை செயல்படுவான். அப்போதே அது பொய் என்று நிரூபிக்கப்படுவதுடன் மறுபடியும் அவனால் அதைச் செய்ய இயலாமல் போய்விடும் என்று இவர்கள் நம்புகிறார்களா? அப்படி நம்பினால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவார்களா?

இறுதியில் 40 நாட்கள் கழித்து ஈஸா நபி அவர்கள் வந்து அவனைக் கொன்று விடுவார்கள்.

இதுவும் சூனியமும் ஒன்றாகுமா?

2:102 வசனம் சொல்வது என்ன?

சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் திருக்குர்ஆன் 2:102 வசனத்தை எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர்.

இவ்வசனம் சொல்வது என்ன? என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இது சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா? எதிராகச் சொல்கிறதா என்பதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதன் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கு முன்னால் மேற்கண்ட வசனத்திற்கு அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் ட்ரஸ்ட், ரஹ்மத் அறக்கட்டளை ஆகியோர் வெளியிட்ட மொழி பெயர்ப்ப்புகளைக் கீழே தந்துள்ளோம்.

அப்துல் ஹமீது பாக்கவி மொழி பெயர்ப்பு

மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ நிராகரிப்பவராக இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலூன் (என்னும் ஊரில்) ஹாரூத் மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! 2:102

ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள் என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?2:102

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சிவப்பு வண்ணமாக நாம் காட்டியுள்ள சொற்களைத் தான் இது விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சொல்லப்படுவது என்ன?

இரு வானவர்கள் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுக்க வந்தனர்.

அவ்வாறு கற்றுக் கொடுக்கும் போது சூனியத்தைக் கற்காதே! கற்றால் காஃபிராகி விடுவாய் என்று சொல்லாமல் அவர்கள் கற்றுக் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி அவர்கள் எச்சரிக்கை செய்த பின்பும் சூனியத்தைக் கற்க விருப்பம் கொண்டவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள்.

மேற்கண்ட இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சூனியத்தைக் கற்க விரும்பியவர்கள் சூனியத்தின் ஒரு வகையான கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர் என்ற கருத்து வருகிறது.

சூனியத்தினால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பதற்கு இது ஆதாரம் என்கின்றனர்.

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று திருக்குர்ஆனே சொல்வதால் அதை நம்புகிறோம் என்றும் வாதிடுகின்றனர்.

இவ்வாறு மொழி பெயர்ப்பதற்கு இலக்கணப்படி இடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. வேறு விதமாகப் பொருள் கொள்வதற்கும் இலக்கணப்படி இடமுள்ளது.

இரண்டு வகையாக மொழிபெயர்க்க இலக்கணப்படி இடம் உள்ளது என்ற காரணத்துக்காக விரும்பிய ஒரு வகையைத் தேர்வு செய்ய முடியாது. இரண்டு விதமான மொழிபெயர்ப்புகளில் ஒரு மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும், இன்னொரு மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு ஏற்ற முறையிலும் இருந்தால் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் உள்ள மொழிபெயர்ப்பைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இரு நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு இலக்கணப்படி சரியாக இருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளன.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்கலாம் என்ற கருத்து மேற்கண்ட மொழிபெயர்ப்பில் இருந்து கிடைக்கும் முடிவாகும்.

கோள் மூட்டி, பொய் சொல்லி கணவன் மனைவியைப் பிரித்தால் அது பாவமாக ஆகும். சூனியத்தின் மூலம் இதைச் செய்வதாக நம்பினால் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் உள்ளவன் என்று ஆகிறது.

கணவன் மனைவி இருவரையும் மந்திர சக்தி மூலம் பிரிக்கலாம் என்று நம்புவது இணை கற்பித்தலில் சேரும். இந்தக் காரணத்தினால் இம்மொழிபெயர்ப்பு தவறு என்று ஆகிறது.

சூனியத்தால் மெய்யாகவே பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றால் 10:77 வசனத்துக்கு இது முரணாக உள்ளது. மூஸா நபி அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை சூனியம் என்று காஃபிர்கள் கூறினார்கள். அதற்கு மறுப்பளித்த மூஸா நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

சூனியம் என்பது உண்மை இல்லை, அது பொய். ஆனால் நான் கொண்டு வந்தது அற்புதம். இதை எப்படி சூனியம் என்று சொல்லலாம் என்று மூஸா நபி கூறுகிறார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்றால் பித்தலாட்டம் தானே தவிர அதில் கடுகளவும் உண்மை இல்லை என்று மூஸா நபி வழியாக அல்லாஹ் விளக்கி விட்டான்.

அந்த விளக்கத்துக்கு மாற்றமாக மேற்கண்ட மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. 10:77 வசனம் சூனியம் என்பது பொய் என்று சொல்ல, இந்த மொழிபெயர்ப்போ அதை மெய் என்று காட்டுவதால் இந்த மொழிபெயர்ப்பு சரியானதல்ல.

மேலும் இம்மொழி பெயர்ப்பு 7:116 வசனத்துக்கும் எதிராக அமைந்துள்ளது.

நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை  அவர்கள் கொண்டு வந்தனர்.

நாட்டில் உள்ள பெரிய மந்திரவாதிகளை மூஸா நபிக்கு எதிராக ஃபிர்அவ்ன் கொண்டு வந்தான். அவர்கள் போட்டியின் போது செய்து காட்டியது பெரிய சூனியம் என்று இவ்வசனம் சொல்கிறது. பெரிய சூனியக்காரர்கள் பெரிய சூனியத்தைச் செய்தனர் என்று சொல்லும் இவ்வசனம் மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் என்று சொல்கிறது.

பெரிய சூனியத்தின் மூலம் எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை. மாறாக கண்கட்டு வித்தைதான் செய்தார்கள். அதாவது மக்களின் கவனத்தைத் திருப்பி உண்மையாகவே அவர்கள் மந்திரம் செய்ததாக்க் காட்டுவதுதான் கண்கட்டு வித்தை.

பெரிய சூனியக்காரர்கள் செய்யும் பெரிய சூனியமே கண்களை ஏமாற்றுவது தான் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டும் போது அதற்கு மாற்றமாக சூனியத்தின் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்கலாம் என்று இம்மொழி பெயர்ப்பு அமைந்துள்ளதால் இம்மொழி பெயர்ப்பு சரியானது அல்ல.

மேலும் 7:118-120 வசனங்களுக்கும் இம்மொழி பெயர்ப்பு எதிராக அமைந்துள்ளது.

உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்

சூனியக்காரர்கள் நிஜமாகவே மந்திரம் செய்து இருந்தால் மூஸா நபியின் செயல் நாம் செய்ததை விட பெரிய சூனியம் என்று தான் முடிவுக்கு வந்து இருப்பார்கள். மூஸா நபியைப் பெரிய சூனியக்காரன் என்ற அளவுக்குத் தான் ஒப்புக் கொண்டு இருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன?

இவர்கள் செய்தது பொய்த்தோற்றம். சூனியத்தால் இதைத் தான் செய்ய முடியும். ஆனால் மூஸா நபி செய்தது மெய்யானது. அதில் தந்திரமோ, ஏமாற்றுதலோ இருக்கவில்லை என்பதால் தான் தங்களின் தோல்வியை சூனியக்காரர்கள் ஒப்புக் கொண்டதுடன் அல்லாஹ்வை நம்பி இஸ்லாத்திலும் சேர்ந்தனர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

சூனியத்துக்கு உண்மையில் ஆற்றல் இல்லை என்பது சூனியக்காரர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். எனவே தான் தாங்கள் செய்த தந்திரம் வேறு, மூஸா நபி செய்த அற்புதம் வேறு என விளங்கி மூஸா நபி மார்க்கத்தில் சேர்ந்தனர்.

உண்மை நிலைத்தது சூனியம் தோற்றது என்றால் அதிலிருந்து சூனியம் என்பது உண்மை அல்ல என்று தெளிவாக தெரிகின்றது.

இதற்கு மாற்றமாக மேற்கண்ட மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது.

மேலும் 20:66 வசனத்துக்கு எதிராகவும் இம்மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது.

இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

சூனியக்காரர்கள் சூனியம் செய்த போது என்ன நடந்தது என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்கிறான். சீறியது என்று அல்லாஹ் சொல்லாமல் சீறுவது போல் தோற்றமளித்தது என்று கூறுகிறான்.

கயிறுகள் நிஜமாக பாம்பாக மாறி இருந்தால் பாம்பாக மாறியது என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். மூஸா நபி செய்த அற்புதத்தைச் சொல்லும் போது பாம்பாக மாறியது என்று சொல்லும் இறைவன் சூனியக்காரர்கள் செய்ததைச் சொல்லும் போது பாம்பு போல் தோற்றமளித்தது என்று சொல்கிறான்.

சூனியம் என்றால் தந்திர வித்தை தானே தவிர மந்திர சக்தியால் கணவன் மனைவியைப் பிரிப்பது அல்ல என்று இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

மேலும் 20:69 வசனத்துக்கும் இம்மொழி பெயர்ப்பு எதிராக அமைந்துள்ளது.

உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும்.அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.)

அல்லாஹ் யாரை மிகப்பெரும் சூனியக்காரர்கள் என்று சொன்னானோ அவர்கள் செய்ததைப் பற்றி கூறும் போது சூனியக்காரர்கள் செய்தது சூழ்ச்சி என்கிறான்.

சூழ்ச்சி என்றால் தந்திரம் செய்து ஏமாற்றுவது என்பதை அனைவரும் அறிவோம். மேலும் சூனியக்காரர்கள் மெய்யாக ஒன்றும் செய்வதில்லை என்பதால் அவர்கள் வெற்றி மாட்டார்கள் என்றும் சொல்கிறான்.

ஆனால் இந்த மொழிபெயர்ப்பு சூனியத்தால் நிஜமாக கணவன் மனைவியப் பிரிக்க முடியும் என்று சொல்கிறது.

மேலும் சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்று இவ்வசனம் சொல்வதற்கு மாற்றமாக சூனியக்காரன் கணவன் மனைவியைப் பிரிப்பதில் வெற்றி பெறுவான் என்று இம்மொழிபெயர்ப்பு சொல்கிறது. எனவே இம்மொழி பெயர்ப்பு முற்றிலும் தவறு என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் 52:13,14,15 வசனங்களில் சூனியத்தின் அர்த்தத்தை அல்லாஹ் சொல்லித் தருகிறான். அந்த வசனங்களுடன் இம்மொழி பெயர்ப்பு நேரடியாகவெ மோதுகிறது.

அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?

நரகத்தில் காஃபிர்கள் தள்ளப்படும் போது இது சூனியமா? நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று அல்லாஹ் கேட்பான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

உங்கள் கண்முன்னே காட்சியளிக்கும் நரகம் பொய்த்தோற்றமா? முழு நிஜமா? என்று கேட்பதற்குப் பதிலாகத் தான் இது சூனியமா என்று அல்லாஹ் கேட்கிறான். நன்றாக உற்றுப்பார் இது நிஜம் எனத் தெரியும் என்று கேட்பதற்குப் பதிலாகத் தான் இதை நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று கேட்கிறான்.

நிஜம் என்பதற்கு எதிர்ப்பதமாக சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான். இந்த மொழி பெயர்ப்புகளோ சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறி சூனியத்தை நிஜம் என்று சொல்கிறது.

இந்த மொழி பெயர்ப்புகள் தவறானவை என்பதற்கு அறிவுப்பூர்வமான காரனங்களும் உள்ளன.

சூனியத்தைக் கற்றுக் கொண்டால் காஃபிராகி விடுவீர்கள் என்று இருவரும் எச்சரிக்கை செய்த பிறகும் காஃபிராக ஆனாலும் பரவாயில்லை எங்களுக்குக் கற்றுத் தாருங்கள் எனக் கூறி கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள் என்று இம்மொழி பெயர்ப்புகள் கூறுகின்றன.

சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் மிகச் சிறிய சூனியத்தை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?

சிறியதைக் கற்றாலும் காஃபிராகத் தான் ஆவார்கள். பெரியதைக் கற்றாலும் காஃபிராகத் தான் ஆவார்கள் எனும் போது ஏன் சிறியதைக் கற்க வேண்டும்?

சூனியம் என்பது சூனியக் கட்சியினரின் நம்பிக்கைப்படி ஏராளமான வித்தைகளைச் செய்யத்தக்க கலையாகும். காஃபிராக ஆனால் ஆகிவிட்டுப் போகிறோம் என்று துணிந்தவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் அல்லவா கற்று இருப்பார்கள்?

ஒன்றே ஒன்றை, அதுவும் மிகவும் சிறியதைத் தேர்வு செய்து கற்பார்களா? ஒரு சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. ஆயிரம் சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. இப்படி இருக்க ஏன் அனைத்தையும் அவர்கள் கற்காமல் விட்டார்கள்?

பொருளீட்டுவதற்காகவும் உலக ஆதாயங்களை அடைவதற்காகவும் தான் சூனியத்தைக் கற்க முன்வந்திருப்பார்கள். ஒரே ஒரு சூனியத்தைக் கற்றால் குறைவாகவே பொருளீட்ட முடியும். அதிகமான சூனிய வகைகளைக் கற்றுக் கொண்டால் அதிகமாகப் பொருளீட்ட முடியும்.

உலக ஆதாயத்துக்காக காஃபிராவதைப் பற்றி கவலைப்படாதவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் தானே கற்று இருப்பார்கள் என்று சிந்திக்கும் போது இம்மொழி பெயர்ப்பில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது.

எனவே திருக்குர்ஆனின் இதர வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையிலும் பொருள் செய்தாக வேண்டும்.

இதை முன்னரும் நாம் விளக்கியுள்ளோம்.

அதே அடிப்படையில் தான் 2:102 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.

எனவே தான் பின்வருமாறு இவ்வசனத்தை நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

இவ்வாறு மொழி பெயர்த்து விட்டு நமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பின்வருமாறு விளக்கமும் கொடுத்துள்ளோம்.

495 சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று வாதிப்பவர்கள் இவ்வசனத்தை (2:102) தமக்குரிய மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் சொல்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்திக்கும் போது சூனியத்தால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதைத்தான் இவ்வசனம் சொல்கிறது. மாற்றுக் கருத்துடையோர் சரியாகக் கவனிக்காத காரணத்தால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தை இவ்வசனம் தருவதாக விளங்கிக் கொண்டனர்..

எனவே இது குறித்து விபரமாக நாம் பார்க்கலாம். இதுதான் அந்த வசனம்:

திருக்குர்ஆன் 2:102

இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள் என்ற வாக்கியம் சொல்வது என்ன? சூனியம் என்பது நல்லவர்களால் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதைக் கற்றுக் கொடுத்தவர்கள் சுலைமான் நபி காலத்தில் வாழ்ந்த தீயவர்கள் தான். இதுதான் மேலே உள்ள வாசகத்தின் கருத்து.

ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. என்ற வாக்கியம் சொல்வது என்ன? சூனியத்தை சுலைமான் நபி கற்றுக் கொடுத்ததாக யூதர்கள் சொல்வது தவறு. அவர் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை. அவர் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து இருந்தால் அதன் காரணமாக அவர் காஃபிராகி இருப்பார். அவர் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவும் இல்லை. காஃபிராக ஆகவும் இல்லை. அது போல் சூனியத்தை வானவர்கள் கற்றுக் கொடுத்ததாக யூதர்கள் நம்பினார்கள் என்பதும், அந்த நம்பிக்கை தவறானது என்பதும் இங்கே சொல்லப்படுகிறது. அதாவது சூனியத்தைக் கற்பது இறைமறுப்பாகும். குஃப்ராகும். இதை சுலைமான் நபியும் செய்ய மாட்டார்கள். வானவர்களும் செய்ய மாட்டார்கள்.

பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். என்ற வாக்கியம் சொல்வது என்ன? ஹாரூத் மாரூத் எனும் ஷைத்தான்கள் தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம் அவர்கள் இறைமறுப்பாளர்களாக காஃபிர்களாக ஆயினர்.

நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. என்ற வாக்கியம் சொல்வது என்ன? காஃபிர்களாகி விட்ட ஹாரூத் மாரூத் எனும் ஷைத்தான்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முன், கற்றுக் கொள்ள முன்வரும் ஒவ்வொருவருக்கும் மறவாமல் ஒரு எச்சரிக்கையைச் செய்து விடுவார்கள். நாங்கள் சூனியத்தைக் கற்றதால காஃபிர்களாக இறை மறுப்பாளர்களாக ஆகி உங்களுக்கு முன்னால் படிப்பினையாக இருக்கிறோம். எனவே நீங்களும் இதைக் கற்று காஃபிர்களாகி விடாதீர்கள் என்பது தான் அந்த எச்சரிக்கை. ஒருவருக்கும் அந்த எச்சரிக்கையைச் செய்யாமல் அவர்கள் இருந்ததிலை.

எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். என்ற வாக்கியம் சொல்வது என்ன? இந்த இடத்தில் அரபு மூலத்தில் சபபிய்யா எனப்படும் ஃபா என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. அதாவது இச்சொல்லுக்குப் பின்னால் சொல்லப்படும் நிலைமை இச்சொல்லுக்கு முன்னால் சொல்லப்பட்ட செய்தியின் காரணமாக நடந்தது என்று இதன் பொருள். இதைக் குறிக்க தமிழ்மொழியில் எனவே அல்லது ஆகவே என்று கூறுவார்கள்.

இந்த மனிதன் ஏமாற்றுபவன் எனவே அவனுக்கு நான் கடன் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் அவனுக்குக் கடன் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் அவன் ஏமாற்றுபவனாக இருப்பதுதான் என்ற கருத்து கிடைக்கும்.

அது போல் தான் இச்சொற்றொடரும் அமைந்துள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதும் இதில் இருந்து விளங்குகிறது. சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை தான் இதற்குக் காரணம் என்றும் விளங்குகிறது.

சூனியத்தைக் கற்றுக் கொள்வதால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டதால் தங்களைக் காஃபிர்களாக ஆக்கிவிடும் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பது எனவே என்ற சொல்லில் இருந்து தெரிகிறது.

காராத்தே கற்றுக் கொண்டால் குருவை வணங்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்து கராத்தே கற்றுக் கொடுத்தார்கள். எனவே மக்கள் மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். கராத்தேயினால் ஏற்படும் தீமையைச் சொல்லி எச்சரித்த காரணத்தால் அவர்கள் கராத்தே அல்லாத மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டனர்.

இது போல்தான் மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.

கராத்தேயின் கேடுகளைச் சொன்னார்கள். எனவே கராத்தேயைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். எச்சரிக்கை செய்த பின்னர் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றால் தான் ;எனவே; என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும்.

புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டான் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் நன்றாக புகை பிடித்தான் என்பது பொருத்தமற்றதாக ஆகும்.

இந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வாசகத்தைக் கவனியுங்கள்.

சூனியத்தால் கேடு ஏற்படும் என இருவரும் எச்சரித்தார்கள். எனவே கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படுத்தும் கலையை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்ற சொல்லில் இருந்து கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலை சூனியத்தில் சேராது. சூனியம் அல்லாத சூனியத்தை விட குறைந்த தீமையுடைய மற்றொன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.

அல்லாஹ் நாடினால் தவிர அதன் மூலம் எந்தக் கேடும் செய்ய முடியாது என்று கூறப்படுவதில் இருந்து அதன் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்படும் என்பது தெரிகிறது. எனவே சூனியம் மூலம் கேடுகள் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது பலமான ஆதாரமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.

அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.

அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தால் காஃபிராகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.

தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையால் அல்லாஹ் நாடினால் பிறருக்குத் தீங்கு ஏற்படுத்த முடியும் என்றாலும் இதைச் செய்பவருக்கு இதனால் மறுமையில் கேடுதான் உள்ளது. இவர்களுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று இச்சொற்றொடர் எச்சரிக்கின்றது.

ஆக இவ்வசனத்தைக் கவனமுடன் ஆய்வு செய்யும் போது சூனியம் அல்லாத கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையைத் தான் மக்கள் கற்றுக் கொண்டனர் என்பதும், அதன் மூலம் சில தீங்குகள் ஏற்படலாம் என்பதும் தெரிய வருகின்றது.

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இதில் சொல்லப்படவே இல்லை.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது சூனியத்தின் ஒருவகையாக ஏன் இருக்கக் கூடாது என்று சிலர் கருதினால் அது இரண்டு காரணங்களால் தவறாகும்.

சூனியத்தைப் பற்றி அவ்விருவரும் கடுமையாக எச்சரித்த பின்னர் சூனியத்தின் ஒரு வகையைக் கற்றுக் கொண்டு இருந்தால் எனவே என்று சொல்லப்பட்டு இருக்காது,

மேலும் சூனியத்தைக் கற்பது ஒருவனைக் காஃபிராக ஆக்கிவிடும் என்று இவ்வசனத்தில் மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது பாவமான காரியம் என்றாலும் அது ஒருவனைக் காஃபிராக ஆக்கும் குற்றம் அல்ல. நாமும் அவ்வாறு கூறவில்லை. சூனியத்தை நம்புவோரும் அவ்வாறு கூறுவதில்லை. அவர்கள் கற்றுக் கொண்ட இந்தக் கலை ஒருவரைக் காஃபிராக ஆக்காது என்றால் அது சூனியத்தின் ஒருவகையாக இருக்க முடியாது என்பது உறுதியாகும்.

அதாவது அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. சூனியம் அல்லாத முறையில் கணவன் மனைவியை எவ்வாறு பிரிப்பது என்பதைத் தான் கற்றுக் கொண்டார்கள். அது கூட நூறு சதவிகிதம் வெற்றி தராது. அல்லாஹ் நாடினாலே தவிர அதன் மூலம் பிரிக்க முடியாது இவ்வசனம் சொல்கிறது.

இவ்வாறு மொழிபெயர்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் பெரும்பாவம் ஏற்படுவதில்லை. சூனியம் என்பது சூழ்ச்சி, தந்திரம், வெற்றி தராது என்றெல்லாம் சொல்லும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இம்மொழிபெயர்ப்பு முரண்படாது. அல்லாஹ்வின் கூற்றில் முரண்பாடு உள்ளது என்ற நிலையும் ஏற்படாது.

மேலும் இதில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசக அமைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

கணவன் மனைவியை எதன் மூலம் பிரிப்பார்களோ அந்த ஒன்றை என மூலத்தில் உள்ளது.

கனவன் மனைவியரிடையே பிரிக்கும் சூனியத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்படவில்லை. எதன் மூலம் பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை என்ற சொல்லமைப்பு சூனியம் அல்லாத வேறு ஒன்று என்பதைத் தான் காட்டுகிறது.

இதே வசனத்துக்கு ரஹ்மத் அறக்கட்டளை செய்த மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட மொழிபெயர்ப்பு

சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துக் காட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களுக்கு அருளப்பெற்ற(தாக அவர்களே சொல்லிக்கொண்ட)தையும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவ்விருவரும் நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே, (இறையை) நிராகரிக்க வேண்டாம் என்று கூறாத வரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை (என்றும்), ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்). அதன் மூலம் அல்லாஹ்வின் உத்தரவின்றி யாருக்கும் அவர்கள் தீங்கிழைக்க இயலாது. அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும் பயன் தராததையுமே கற்கின்றனர். இதைக் கொள்முதல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் கிடையாது என்பதை அவர்கள் உறுதியாகத் தெரிந்தே உள்ளனர். எதற்குப் பதிலாகத் தங்களை அவர்கள் விற்றார்களோ அது மிகவும் தீயது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

இந்த மொழி பெயர்ப்பு முன்னர் நாம் எடுத்துக்காட்டிய மொழி பெயர்ப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும்.

முன்னர் நாம் சுட்டிக்காட்டிய இரு மொழி பெயர்ப்புகளைப் போல் மொழி பெயர்த்தால் அது இணை கற்பித்தலில் தள்ளிவிடும் என்று அஞ்சி இதை அல்லாஹ்வின் கூற்றாகக் காட்டாத வகையில் மொழிபெயர்த்துள்ளனர்.

ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்)

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியதை கற்றுக் கொண்டார்கள் என்ற சொல் அல்லாஹ்வின் கூற்று அல்ல. மாறாக யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்ற கருத்தை தருவதற்காக (என்றும் கூறிவந்தனர்) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளனர். யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்பதை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான் என்ற கருத்தைத் தரும் வகையில் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று யூதர்கள் கூறினார்கள் என்று அர்த்தம் செய்தால் இது சூனியக் கட்சியினருக்கு ஆதாரமாகாது. யூதர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப இப்படிச் சொன்னார்கள் என்ற செய்தியைத் தவிர வேறு ஒரு கருத்தும் இதில் இல்லை.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அல்லாஹ் எப்படிச் சொல்வான் என்றும், அப்படிச் சொன்னால் அது பல வசனங்களுக்கு முரணாகி விடும் என்றும் அஞ்சி மேற்கண்ட சொல் யூதர்களின் சொல் என்ற கருத்தைத் தரும் வகையில் ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவன அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அர்த்தம் வராத வகையிலும், குர்ஆனின் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும் இப்படி மொழி பெயர்த்தால் அதில் நமக்கு மறுப்பு ஏதும் இல்லை.

113, 114 அத்தியாயங்கள் சூனியத்துக்கு ஆதாரமாகுமா?

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று சொல்பவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக இன்னொரு வாதத்தையும் எடுத்து வைப்பார்கள்.

திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்பதும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்பதும் அவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட முடியாது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நாம் முன்னர் நிரூபித்துள்ளோம்.

அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தியே பொய் என்று ஆகிவிடும் போது அதற்காகத் தான் இவ்விரு வசனங்களும் அருளப்பட்டன என்ற செய்தியும் கட்டுக்கதையாகி விட்டது.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டது என்ற செய்தி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளதால் அது கட்டுக்கதை என்கிறோம்.

ஆனால் இந்த அத்தியாயங்கள் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது குறித்து அருளப்பட்டது என்பதற்கு ஏற்கத்தக்க அறிவிப்பாளர் தொடர் கிடையாது எனும் போது இது எப்படி ஆதாரமாக அமையும்?

இது குறித்து இப்னு கஸீர் அவர்கள் செய்யும் விமர்சனத்தைப் பாருங்கள்!

وقال الأستاذ المفسر  الثعلبي في تفسيره قال ابن عباس وعائشة رضي الله عنهما كان غلام من اليهود يخدم رسول الله صلى الله عليه وسلم…. ثم بعث النبي صلى الله عليه وسلم عليا والزبير وعمار بن ياسر فنزحوا ماء البركة كأنه نقاعة الحناء ثم رفعوا الصخرة وأخرجوا الجف فإذا فيه مشاطة رأسه وأسنان من مشطه وإذا فيه وتر معقود فيه اثنا عشر عقدة مغروزة بالإبرة فأنزل الله تعالى السورتين فجعل كلما قرأ آية انحلت عقدة ووجد رسول الله صلى الله عليه وسلم خفة حين انحلت العقدة الأخيرة فقام كأنما نشط من عقال وجعل جبريل عليه السلام يقول بسم الله أرقيك من كل شيء يؤذيك من حاسد وعين الله يشفيك فقال يا رسول الله أفلا ينفذ الخبيث نقتله فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فقد شفاني الله وأكره أن أثير على الناس شرا هكذا أورده بلا إسناد فيه غرابة وفي بعضه نكارة شديدة ولبعضه نكارة شديدة ولبعضه شواهد مما تقدم والله أعلم –  تفسير ابن كثير ج: 4 ص: 575

திருக்குர்ஆன் விரிவுரையாளரான ஸஅலபி அவர்கள் தமது தஃப்ஸீரில் கூறுகிறார். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட பின் அலீ, சுபைர், அம்மார் பின் யாசிர் ஆகியோரை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்கள் கிணற்றின் நீரை இறைத்தார்கள். அந்த நீர் மருதானி சாறைப் போல் இருந்தது. பின்னர் பாறாங்கல்லை நீக்கினார்கள். பேரீச்சம் பாளையின் உறையை வெளியே எடுத்தார்கள். அதில் நபியவர்களின் தலைமுடியும் அவர்களின் சீப்புடைய பற்களும் இருந்தன. ஊசியில் கோர்க்கப்பட்ட நூலும் பன்னிரண்டு முடிச்சுக்கள் போடப்பட்டு இருந்தன. அப்போதுதான் 113, 114 அத்தியாயங்கள் அருளப்பட்டன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தன…… இப்படி ஒரு செய்தியை ஸஅலபீ கூறுகிறார். ஆயிஷா, இப்னு அப்பாஸ் கூறியதாக மட்டும் தான் இதில் உள்ளது. அவ்விருவரும் யாரிடம் சொன்னார்கள் என்று நூலாசிரியர் வரை இணைக்கும் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் கூறியுள்ளார்.இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் ஆதாரப்பூர்வமான செய்தியுடன் முரண்படுவதாக உள்ளது. யாரும் சொல்லாததாகவும் உள்ளது என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் சொல்லப்படும் எந்த ஹதீசும் கட்டுக்கதைக்கு நிகரானது என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இது போல் இப்னு ஹஜர் அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

وقد وقع في  حديث بن عباس فيما أخرجه البيهقي في الدلائل بسند ضعيف في آخر قصة السحر الذي سحر به النبي صلى الله عليه وسلم أنهم وجدوا وترا فيه إحدى عشرة عقدة وأنزلت سورة الفلق والناس وجعل كلما قرأ آية انحلت عقدة وأخرجه بن سعد بسند آخر منقطع عن بن عباس أن عليا وعمارا لما بعثهما النبي صلى الله عليه وسلم لاستخراج السحر وجدا طلعة فيها إحدى عشرة عقدة فذكر نحوه –

فتح الباري ج: 10 ص: 225

11 முடிச்சுக்கள் போடப்பட்டதாகவும் அது குறித்தே பலக் நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாகவும் ஒவ்வொரு வசனம் அருளப்பட்டவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்ததாகவும் பைஹகீ அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் தலாயிலுன்னுபுவ்வா என்ற தமது நூலில் கூறுகிறார். அது போல் இப்னு சஅது அவர்கள், இப்னு அப்பாஸ் வழியாக அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் விமர்சனம் செய்துள்ளார்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட போதுதான் இவ்விரு அத்தியாயங்களும் அருளப்பட்டதாக ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. சூனியக் கட்சியினரும் இது பலவீனமானது என்று ஒப்புக் கொள்கிறார்கள். எனவே இது ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாத கட்டுக்கதையாகும்.

அடுத்ததாக இதே அத்தியாயங்களுக்கு விளக்கம் கொடுத்து இது சூனியத்தைத் தான் பேசுகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.

குறிப்பாக பலக் அத்தியாத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிச்சுகளில் ஊதி சூனியம் செய்யும் பெண்களைத் தான் குறிக்கிறது. இதில் இருந்து சூனியத்துக்கு தாக்கம் உள்ளது என்பதை அறியலாம் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் கற்பனை தானே தவிர அல்லாஹ்வோ அவனது தூதரோ அளித்த விளக்கம் அல்ல. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரிகளைத் தான் குறிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் ஏற்கத்தக்க எந்த பதிலும் அவர்களிடம் இல்லை.

இவர்கள் கூறுவது தவறானது என்று சாதாரண மனிதனின் அறிவு கூட தீர்ப்பு அளித்து விடும்.

சூனியக் கட்சியினரின் நம்பிக்கைப்படி பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சூனியம் செய்வார்கள். நபிகள் நாயகத்துக்கே லபீத் என்ற யூத ஆண் தான் சூனியம் வைத்தான் என்று நம்புகிறார்கள். இந்த அத்தியாயத்தில் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்து தான் பாதுகாப்பு தேடப்படுகிறது. அப்படியானால் சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே?

சூனியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இருந்து அதில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்குத் தான் அல்லாஹ் வழிகாட்டுகிறான் என்றால் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டு மட்டும் பாதுகாப்பு தேடச்சொல்லி, சூனியம் செய்யும் ஆண்களிடமிருந்து பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துவானா? இப்படி சிந்திக்கும் போது இவர்கள் கொடுக்கும் விளக்கம் பயனற்றதாகவும் அல்லாஹ்வின் கூற்றை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்பது தெரிகிறது.

மேலும் முடிச்சுகளில் ஊதுவது என்ற ஒரு வழிமுறையில் தான் சூனியம் உள்ளது என்பது சூனியக் கட்சியின் கொள்கை அல்ல. ஆயிரக்கணக்கான வழிகளில் சூனியம் செய்யலாம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. இந்த அத்தியாயம் சூனியத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க அருளப்பட்டது என்றால் இதில் முடிச்சுக்களில் ஊதும் ஒரு வகை சூனியத்தில் இருந்து மட்டுமே பாதுகாப்பு உள்ளது. அது அல்லாத வகைகளில் ஒருவன் சூனியம் செய்தால் அதில் இருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போய் விடுகிறது. இதில் இருந்து தெரிய வரும் உண்மை என்ன? இது சூனியக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவதற்காக அருளப்பட்டதல்ல. இப்படி அறைகுறையாக அல்லாஹ் கற்றுத்தர மாட்டான் என்பது தெரிகிறது.

மேலும் சூனியக் கட்சியினரின் வாதப்படி நபியவர்களுக்கு சூனியம் வைத்தவன் ஆண் ஆவான்.(புகாரி 3668, 5763) அப்படி இருக்கும் போது சூனியம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு தேடுமாறு சொல்வது பொருந்துமா?

உலகில் பெரும்பாலும். ஆண்கள் தான் சூனியம் செய்கின்றனர். மிகமிக அரிதாகத் தான் பெண் சூனியக்காரிகள் உள்ளனர். காமிக்ஸ் கதைகளிலும் பேய்ப் படங்களிலும் தான் சூனியக்காரக் கிழவி என்று காட்டுகிறார்கள். நிஜத்தில் அப்படி இல்லை. ஆண்களே அதிக அளவில் சூனியக்காரர்களாக இருக்கும் போது சூனியம் செய்யும் பெண்களிடமிருந்து பாதுகாப்பு தேடச்சொல்வது கொஞ்சமும் பொருந்தவில்லை.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது எதைக் குறிக்கிறது? முடிச்சுக்கள் என்றால் அதற்கு நேரடியாக முடிச்சு என்று அர்த்தம் இருந்தாலும் இங்கே அது பொருந்தவில்லை. முடிச்சுப் போடுவதால் நமக்கு என்ன தீங்கு நேர்ந்து விடும் எனச் சிந்திக்கும் போது முடிச்சுகள் என்பதற்கு முடிச்சு என்ற நேரடிப் பொருளைக் கொடுக்க முடியாது.

முடிச்சு என்பது அதன் நேரடிப் பொருள் அல்லாத மாற்றுப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக மூஸா நபி அவர்களுக்கு பேச்சுக்குறைபாடு இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது

இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கி வை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. (20:27)

என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தில் உள்ள முடிச்சு என்பதை நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என்று நாம் விளங்க மாட்டோம். அவருக்கு பேச்சுக்குறைபாடு இருந்துள்ளது. அதனை மூஸா நபி அவர்கள் முடிச்சு என்று குறிப்பிடுகிறார்கள்.

இதே போன்று திருமணத்தைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, திருமணம் செய்தபின் இருவரும் சேராமல் பிரிந்து விட்டால் பாதி மஹர் கொடுத்துவிட வேண்டும். நிக்காஹ் எனும் முடிச்சு யார் கை வசம் உள்ளதோ அவர் விட்டுக் கொடுத்தால் தவிர

(2:237) என்று கூறுகிறான்.

இதில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைவதை முடிச்சு என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

எனவே இந்த அத்தியாயத்தில் முடிச்சு என்று கூறப்பட்டதற்கு பொருத்தமான விளக்கம் நபிமொழியில் கிடைக்கிறதா என்று நாம் தேடிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் தேடிப்பார்க்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி இதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஷைத்தான் ஒருவரின் தலை அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் தூங்கும் நேரத்தில் அவனுக்கு மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். விடிகின்ற நேரம் வந்ததும் நீண்ட இரவு இருக்கின்றது; நீ தூங்கு என்று சொல்வான். அவர் எழுந்துவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். பின்னர் சென்று ஒழுச் செய்தால் அடுத்த முடிச்சு அவிழ்துவிடும். தொழுகைக்கு தக்பீர் கட்டியபின் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுகின்றது. இதன் பின்னர் நல்ல காலைப் பொழுதை அடைந்து அவன் விடுகின்றான். இல்லாவிட்டால் சோம்பலாக இருப்பான் என்று அந்த ஹதீஸில் வருகின்றது.

புகாரி 1142, 3269

ஷைத்தான் போடும் முடிச்சு என்றால் நல்ல அமல்கள் செய்ய விடாமல் ஆக்குவதாகும். தீய செயல்களைச் செய்ய தூண்டுவதாகும் என்று இதில் இருந்து விளங்குறது.

இது போல் ஷைத்தான் முடிச்சு போட்டு நம்மை வழிகெடுத்து விடாமல் பாதுகாப்பு கோருவது தான் முடிச்சுக்களில் ஊதுதல் என்பது.

ஆதாரமின்றி கற்பனை செய்து பொருந்தாத விளக்கம் கூறுவதை விட ஹதீஸ் துணயுடன் முடிச்சு என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது தான் சரியானது.

114வது அத்தியாயத்தில் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றோம். அது போன்றதுதான் 113 வது அத்தியாயமும்.

இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சூனியம் என்பது கற்பனை. இதனால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்கின்றோம்.

ஷைத்தான்களைக் குறிப்பதற்குத் தான் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் ஆண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போகுமே என்று சிலர் நினைக்கலாம்.

ஷைத்தான்கள் என்ற சொல்லைப் பெண்பாலாகவும் பயன்படுத்தலாம். ஆண்பாலாகவும் பயன்படுத்தலாம். ஆண்பாலாகப் பயன்படுத்தினாலும் பெண்பாலாகப் பயன்படுத்தினாலும் அது அனைத்து ஷைத்தான்களையும் எடுத்துக் கொள்ளும்.

சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?

முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.

இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை நம்ப மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் புதிதாக மக்களிடம் இந்தக் கொள்கையைத் திணித்து மக்களைக் குழப்புகின்றனர் என்றும் சூனியக் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கொள்கை தவறு என்று இவர்கள் கருதினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதம் சரியல்ல என்று ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்வதில் நமக்கு மறுப்பு இல்லை. அந்தப் பிரச்சாரம் எடுபடாமல் தமது கூடாரம் காலியாகிறது என்று அவர்கள் அஞ்சினால் விவாதத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு காண அவர்கள் முயல வேண்டும்.

ஆனால் தங்களுடன் இருப்பவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் முஃதஸிலா கொள்கை உடையவர்கள் என்று கூறி மக்களின் சிந்தனைக்கு திரை போட நினைக்கிறனர்.

முஃதஸிலா என்ற வழிகெட்ட பிரிவினர் சூனியத்தை மறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால் சூனியத்தை மறுத்ததால் தான் இவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்களின் அற்புதங்களை மறுத்தது உள்ளிட்ட பல கெட்ட கொள்கைகள் காரணமாகவே அவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டனர்.

முஃதஸிலாக்களைக் கடுமையாக எதிர்த்த அறிஞர்கள் பலரும் சூனியத்தை மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் முஃதஸிலாக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆம்! சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று முஃதஸிலாக்கள் மட்டும் சொல்லவில்லை. முஃதஸிலாக்களை எதிர்த்த நல்லறிஞர்களும் சூனியம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் இவர்கள் மறைக்கின்றனர்.

புஹாரி நூலுக்கு ஏராளமான விரிவுரை நூல்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு நூல்கள் தான். ஒன்று இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய பத்ஹுல்பாரி. மற்றொன்று ஐனி அவர்கள் எழுதிய உம்ததுல் காரி. பத்ஹுல் பாரியை ஷாஃபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். உம்ததுல் காரி நூலை ஹனஃபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். புகாரியில் உள்ள ஹதீஸுக்கு மாற்றமாக ஹனஃபி மத்ஹப் சட்டம் இருந்தால் ஐனி எப்படி சமாளிக்கிறார் என்று அறிந்து கொள்ள உம்ததுல் காரியைத்தான் ஹனபிகள் புரட்டுவார்கள்.

இந்த இரண்டு நூல்களிலும் சொல்லப்படுவதைப் பாருங்கள்.

இப்னு ஹஜர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் சொல்வதைப் பாருங்கள்!

فتح الباري – ابن حجر – (10 / 222)

واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النوويوالصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى

சிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹபில் மரியாதைக்குரிய அறிஞராக இருந்த அபு ஜஃபர் என்பவரின் கருத்து இதுதான். ஹனஃபி மத்ஹபின் அறிஞரான அபுபக்கர் ராசீ அவர்களின் கருத்தும் இதுதான். இப்னு ஹஸ்ம் அவர்களின் கருத்தும் இதுதான். (குர்ஆன் ஹதீஸ்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வியாக்கியானங்களும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வழிகெட்ட கொள்கைக்கு சிம்ம சொப்பனமாகக் கருதப்பட்டவர் இப்னு ஹஸ்ம் அவர்கள்.) இன்னும் ஒரு தொகையினரின் கருத்தும் இதுதான். சூனியத்தால் பா`திப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தான் பெரும்பாலோர் உள்ளனர். இதைத்தான் குர்ஆன் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன என்று நவவி கூறுகிறார்.

ஆதாரம் : பத்ஹுல் பாரி

நான்கு மத்ஹபுக்காரர்களும் முஃதஸிலாக் கொள்கையை எதிர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஷாஃபி, ஹனஃபி மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் முஃதஸிலாக்களை எதிர்த்த இப்னு ஹஸ்ம் அவர்களும் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று சொல்லியுள்ளதாக இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு சொன்னதற்காக மேற்கண்ட அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று இப்னு ஹஜர் சொல்லவில்லை. ஒன்று அதிகமானவர்களின் கருத்து; இன்னொன்று குறைவானவர்களின் கருத்து எனக் கூறுகிறாரே தவிர அவர்களை முஃதஸிலாக்கள் என்று சொல்லவில்லை.

அது போல் ஹனஃபி மத்ஹபின் முக்கிய அறிஞரான ஐனி அவர்கள் உம்ததுல் காரி நூலில் கூறுவதைப் பாருங்கள்.

عمدة القاري شرح صحيح البخاري (14/ 62)

الأول: إِن السحر لَهُ حَقِيقَة، وَذكر الْوَزير أَبُو المظفر يحيى بن مُحَمَّد بن هُبَيْرَة فِي كِتَابه (الْأَشْرَاف على مَذَاهِب الْأَشْرَاف) : أَجمعُوا  على  أَن السحر  لَهُ  حَقِيقَة  إلاَّ أَبَا  حنيفَة.  فَإِنَّهُ قَالَ:  لَا حَقِيقَة  لَهُ.  وَقَالَ الْقُرْطُبِيّ:  وَعِنْدنَا  أَن السحر  حق،  وَله  حَقِيقَة  يخلق  الله تَعَالَى  عِنْده  مَا شَاءَ،  خلافًا  للمعتزلة  وَأبي  إِسْحَاق  الإسفرايني  من  الشَّافِعِيَّة،  حَيْثُ  قَالُوا: إِنَّه تمويه وتخيل

சூனியம் பற்றி முதல் கருத்து அது உண்மைதான் என்பதாகும். சூனியம் உண்மையான ஒன்று என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீஃபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீஃபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார். சூனியம் மெய்யானது; அல்லாஹ் நாடும்போது நாடியதைப் படைப்பான் என்பது தான் நம்முடைய கருத்து. முஃதசிலாக்களும், ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூ இஸ்ஹாக் இஸ்ஃபிராயீனி அவர்களும் இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளனர். சூனியம் என்பது பொய்த்தோற்றமும் முலாம் பூசுதலும் தான் என்று இவர்கள் கூறுகின்றனர் என குர்துபீ கூறுகிறார்.

ஆதாரம்: உம்ததுல்காரி

அபூ ஹனீஃபா இமாமும் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூஇஸ்ஹாக் அவர்களும் முஃதஸிலாக்களா?

இதே கருத்தை இப்னு கசீர் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்.

تفسير ابن كثير ت سلامة (1/ 371)

சூனியம் முற்றிலும் உண்மை என்பது முதல் கருத்தாகும். சூனியம் உண்மை என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீஃபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீஃபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார்.

இப்னு தைமிய்யா அவர்கள் அல் ஃபுர்கானு பைன அவ்லியாயிஷ் ஷைத்தான் வ அவ்லியாயிர் ரஹ்மான் என்ற நூலின் விளக்கவுரையில் எடுத்துக் காட்டுவதைப் பாருங்கள்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان – (1 / 15)

 اخْتَلَفَ  الْعُلَمَاءُ  فِي أَنَّ السِّحْرَ هَل لَهُ حَقِيقَةٌ  وَوُجُودٌ  وَتَأْثِيرٌ  حَقِيقِيٌّ  فِي  قَلْبِ  الأَْعْيَانِ ،  أَمْ هُوَ  مُجَرَّدُ تَخْيِيلٍ ؟ .فَذَهَبَ الْمُعْتَزِلَةُ  وَأَبُو بَكْرٍ الرَّازِيُّ  الْحَنَفِيُّ  الْمَعْرُوفُبِ الْجَصَّاصِ ،  وَأَبُو جَعْفَرٍ الإِْسْتِرَابَاذِيُّ  وَالْبَغَوِيُّ  مِنَ الشَّافِعِيَّةِ ،  إِلَى إِنْكَارِ  جَمِيعِ  أَنْوَاعِ  السِّحْرِ  وَأَنَّهُ  فِي  الْحَقِيقَةِ  تَخْيِيلٌ  مِنَ السَّاحِرِ  عَلَى  مَنْ  يَرَاهُ ،  وَإِيهَامٌ  لَهُ  بِمَا  هُوَ  خِلاَفُ  الْوَاقِعِ ، وَأَنَّ السِّحْرَ  لاَ يَضُرُّ  إِلاَّ أَنْ  يَسْتَعْمِل  السَّاحِرُ  سُمًّا  أَوْ دُخَانًا  يَصِل  إِلَى بَدَنِ  الْمَسْحُورِ  فَيُؤْذِيهِ ،  وَنُقِل  مِثْل  هَذَا  عَنِ  الْحَنَفِيَّةِ  ،  وَأَنَّ  السَّاحِرَ  لاَ يَسْتَطِيعُ  بِسِحْرِهِ  قَلْبَ  حَقَائِقِ  الأَْشْيَاءِ  ، فَلاَيُمْكِنُهُ   قَلْبُ الْعَصَا حَيَّةً ، وَلاَ قَلْبُ الإِْنْسَانِ حِمَارًا .

மேலே அடிக்கப்பட்ட வாசகம் பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற நூலில் வெளியிட்டு உள்ளோம். அந்த  வாசகம் இப்னு தைமியா அவர்களின் அல் பர்கு பைன அவ்லியாயிஷைத்தான் வ அவ்லியாயிர் ரஹ்மான் என்ற நூலில் உள்ளதாக தவறாக குறிப்பிட்டு விட்டோம். ஆனால் இந்த வாசகம் அல் மவ்சூஅதுல் பிக்ஹிய்யா என்ற தளத்தில் தான் உள்ளது. எனவே இதைத் திருத்தி வெளியிடுகிறோம். சுட்டிக்காட்டிய சகோதார்களுக்கு ந்ன்றி

الموسوعة الفقهية (2/ 8568، بترقيم الشاملة آليا) – اختلف العلماء في أنّ السّحر هل له حقيقة ووجود وتأثير حقيقيّ في قلب الأعيان ، أم هو مجرّد تخييل. هب المعتزلة وأبو بكر الرّازيّ الحنفيّ المعروف بالجصّاص ، وأبو جعفر الإستراباذي والبغويّ من الشّافعيّة ، إلى إنكار جميع أنواع السّحر وأنّه في الحقيقة تخييل من السّاحر على من يراه ، وإيهام له بما هو خلاف الواقع ، وأنّ السّحر لا يضرّ إلاّ أن يستعمل السّاحر سمّاً أو دخاناً يصل إلى بدن المسحور فيؤذيه ، ونقل مثل هذا عن الحنفيّة ، وأنّ السّاحر لا يستطيع بسحره قلب حقائق الأشياء ، فلا يمكنه قلب العصا حيّةً ، ولا قلب الإنسان حماراً.

சூனியம் என்பது உண்மையா என்பதிலும் அப்படி ஒன்று உண்டா என்பதிலும், ஒரு பொருளை வேறு பொருளாக சூனியத்தின் மூலம் மாற்ற முடியுமா என்பதிலும் அது முற்றிலும் கற்பனையா என்பதிலும் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முஃதஸிலா பிரிவினரும், ஜஸ்ஸாஸ் என்று அறியப்படும் ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த அபூ பக்ர் ராஸீ அவர்களும், ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர் பகவீ, அபூ ஜஃபர் இஸ்திர்பாதி ஆகியோரும் சூனியத்தின் அனைத்து வகைகளையும் மறுத்துள்ளனர். சூனியம் என்பது இல்லாததை இருப்பது போல் காட்டுவதும், பொய்த்தோற்றமும் ஆகும். சூனியம் வைக்கப்பட்டவனுக்குள் விஷம் அல்லது புகை போன்றவற்றைச் செலுத்தினாலே தவிர சூனியத்தால் ஒன்று செய்ய முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனஃபி மத்ஹபினரின் கருத்து இதுதான் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சூனியக்காரன் ஒரு பொருளின் தன்மையை மாற்ற முடியாது. கைத்தடியைப் பாம்பாக மாற்ற முடியாது. மனிதனைக் கழுதையாக ஆக்க முடியாது என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

பகவி அவர்கள் ஹதீஸ்களை நிலைநாட்டப் பாடுபட்டவர் என்பதால் முஹ்யிஸ் ஸுன்னா (நபிவழியை உயிர்ப்பித்தவர்) என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். சூனியம் சம்மந்தமான செய்திகளை அவர் மறுத்ததால் முஹ்யிஸ் ஸுன்னா என்ற அடைமொழியை நீக்கி முஃதஸிலா பட்டத்தை யாரும் இவருக்குக் கொடுக்கவில்லை.

போலி மார்க்க அறிஞர்களுக்கு சூனியம் என்பது சம்பாதிக்க உதவுவதாலும், சூனியம் வைத்து விடுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த இது உதவுவதாலும் சூனியத்துக்கு தாக்கம் உண்டு என்ற கருத்து அதிக அளவில் சென்றடைந்து விட்டது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹனஃபி மத்ஹபினரே இருந்தும் அவர்கள் சூனியத்தை நம்புகிறார்கள். அபூஹனீஃபா இமாம் சூனியம் என்பது கற்பனை என்று கூறி இருந்தும் இப்படி நம்புகிறார்கள் என்றால் போலி ஆலிம்கள் சூனியத்திற்கு ஆற்றல் உள்ளது என்று பிரச்சாரம் செய்ததே காரணம்.

சூனியத்தினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் இந்தக் கருத்து குறைவாகவே மக்களிடம் சென்றடைந்துள்ளது.

முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுக்கவில்லை. என்று சொல்பவர்களின் வாதங்கள் அனைத்தும் மேலே சொன்ன ஆதாரங்களால் பொய் என நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஷாஃபி, ஹனஃபி மத்ஹபினர் நடத்தும் அனைத்து அரபி மதரஸாக்களிலும் பட்டம் பெறும் ஏழாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடநூலாக பைழாவி என்ற தஃப்ஸீர் சொல்லித் தரப்படுகிறது.

இந்த தஃப்ஸீரில் ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தாலும், இவர்கள் பாடம் நடத்தும் இந்த தஃப்ஸீரில் சூனியத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்க்கலாம்.

تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (4/ 138)

فَأُلْقِيَ السَّحَرَةُ ساجِدِينَ لعلمهم بأن مثله لا يتأتى بالسحر، وفيه دليل على أن منتهى السحر تمويه وتزويق يخيل شيئاً لا حقيقة له

மூஸா நபி அற்புதம் செய்து காட்டியவுடன் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர் என்று 26:46 வசனம் கூறுகிறது. மூஸா நபி செய்தது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்ததால் ஸஜ்தாவில் விழுந்தனர். சூனியம் என்பது போலித்தோற்றம் முலாம் பூசுதல், அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

இப்படி விரிவுரை எழுதிய பைளாவி முஃதஸிலா கொள்கை உடையவரா? முஃதஸிலா கொள்கை உடையவரின் நூலைத் தான் பட்டப்படிப்புக்கு பாட நூலாக வைத்துள்ளார்களா?

تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (3/ 121)

فَلَمَّا  أَلْقَوْا  قالَ مُوسى  مَا جِئْتُمْ بِهِ  السِّحْرُ  أي  الذي  جئتم به  هو السحر  لا ما  سماه  فرعون  وقومه  سحراً.  وقرأ أبو عمرو  السِّحْرُ  على أن  مَا  استفهامية  مرفوعة  بالابتداء  وجئتم  به خبرها  والسِّحْرُ  بدل  منه  أو خبر  مبتدأ  محذوف  تقديره  أهو  السحر،  أو مبتدأ  خبره  محذوف  أي السحر  هو.  ويجوز  أن ينتصب  ما  بفعل  يفسره  ما بعده  وتقديره أي شيء أتيتم. إِنَّاللَّهَ سَيُبْطِلُهُ سيمحقه أو سيظهر بطلانه. إِنَّ اللَّهَ لاَ يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ لا يثبته ولا يقويه وفيه دليل على أن السحر إفساد وتمويه لا حقيقة له.

சூனியக்காரர்கள் சூனியம் செய்ததைப் பார்த்த மூஸா நபியவர்கள், நீங்கள் செய்தது சூனியம். அல்லாஹ் அதைத் தோற்கடிப்பான். வீனர்களின் செயலுக்கு அல்லாஹ் வெற்றியளிக்க மாட்டான் என்று கூறியதாக 10:81 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். சூனியம் என்பது குழப்பம் ஏற்படுத்துதலும், இல்லாததை இருப்பதாகக் காட்டுதலும் தான் என்பதற்கும், அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கும் இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

என்று தஃப்ஸீர் பைளாவியில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இவரை ஏன் முஃதஸிலா என்று ஒருவரும் சொல்லவில்லை?

மவ்லவி பட்டப்படிப்பில் ஏழாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு குர்ஆன் விரிவுரை நூலாக இதைத்தானே ஆலிம்கள் படித்தார்கள்? பைளாவியில் ஆதாரம் இல்லாமல் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொண்ட மார்க்க அறிஞர்கள் பைளாவி தக்க ஆதாரத்துடன் சொன்ன உண்மையை மட்டும் மறுப்பது ஏன்?

அது போல் ஷவ்கானி அவர்கள் தமது ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்

فتح القدير للشوكاني (2/ 265)

وما  فِي  مَا  يَأْفِكُونَ  مَصْدَرِيَّةٌ  أَوْ مَوْصُولَةٌ،  أَيْ:  إِفْكِهِمْ  أَوْ مَا  يَأْفِكُونَهُ،  سَمَّاهُ  إِفْكًا،  لِأَنَّهُ  لَا حَقِيقَةَ  لَهُ  فِي  الْوَاقِعِ  بَلْ  هُوَ  كَذِبٌ  وَزُورٌ  وَتَمْوِيهٌ  وَشَعْوَذَةٌ  فَوَقَعَ  الْحَقُّ  أَيْ:  ظَهَرَ  وَتَبَيَّنَ لِمَاجَاءَ بِهِ مُوسَى وَبَطَلَ مَا كانُوا يَعْمَلُونَ مِنْ سِحْرِهِمْ، أَيْ: تَبَيَّنَ بُطْلَانُهُ فَغُلِبُوا

7:117 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது யஃபிகூன் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். இச்சொல்லுக்கு பொய்யான புனைதல் என்று பொருள். அல்லாஹ் ஏன் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளான் என்றால் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்பதால் தான். மாறாக அது பொய்யும், புளுகும், புனை சுருட்டும், முலாம் பூசுவதுமாகும். இதனால் தான் சூனியக்காரர்கள் தோற்றனர்.

என்று ஷவ்கானி கூறுகிறார்.

இதே யஃபிகூன் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு தப்ரீ அவர்கள் கூறுவதைப் பாருங்கள்

تفسير الطبري = جامع البيان ت شاكر (19/ 348)

 (فَإِذَا  هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ) يقول: فإذا عصا موسى تزدرد ما يأتون به من الفرية والسحر الذي لا حقيقة له، وإنما هو مخاييل (1) وخدعة. (فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ) يقول: فلما تبين السحرة أن الذي جاءهم به موسى حق لا سحر، وأنه مما لا يقدر عليه غير الله الذي فطر السموات والأرض من غير أصل، خرّوا لوجوههم سجدا لله، مذعنينله بالطاعة، مقرّين لموسى بالذي أتاهم به من عند الله أنه هو الحقّ، وأن ما كانوا يعملونه من السحر باطل

அவர்கள் பொய்யாகப் புனைந்ததை மூஸா நபி செய்த அற்புதம் விழுங்கியது என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் அவர்கள் செய்தது அறவே உண்மை இல்லாத சூனியமும் கற்பனையுமாகும் என்பதால் தான் இவ்வாறு கூறுகிறான். அதனால் தான் சூனியக்காரர்கள் சஜ்தாவில் விழுந்தனர்.

அது போல் இப்னு ஹய்யான் எழுதிய தஃப்ஸீர் அல்முஹீத் நூலில் எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

البحر المحيط في التفسير (5/ 133)

فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجاؤُ بِسِحْرٍ عَظِيمٍ أَيْ أَرَوُا الْعُيُونَ بِالْحِيَلِ وَالتَّخَيُّلَاتِ مَا لَا حَقِيقَةَ لَهُ كَمَا قَالَ تَعَالَى يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّها تَسْعى 3

20:66 வசனத்தில் மக்களின் கண்களை வசப்படுத்தினார்கள் என்பதன் விளக்கம் என்னவென்றால் அவர்கள் தந்திரங்கள் மூலமாகவும், பொய்த்தோற்றம் ஏற்படுத்தியும் இல்லாததை இருப்பது போல் காட்டினார்கள் என்பது தான். இதனால் தான் மூஸாவுக்கு கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்கள்

அது போல் ரூஹுல் பயான் நூலில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்.

روح البيان (4/ 70)

نَّ اللَّهَ لا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ اى لا يثبته ولا يكمله ولا يديمه بل يمحقه ويهلكه ويسلط عليه الدمار قال القاضي وفيه دليل على ان السحر إفساد وتمويه لا حقيقة له انتهى

10:81 வசனத்தில் வீனர்களின் செயலைச் சீராக்க மாட்டான் என்று அல்லாஹ் சொல்வது சூனியத்தில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதற்கும் அது பொய், பித்தலாட்டம் என்பதற்கும் ஆதாரமாகும் என்று காளீ அவர்கள் கூறியுள்ளார்.

அதே ரூஹுல் பயான் நூலில் ஷஃரானி கூறியதை எடுத்துக் காட்டுகிறார்.

روح البيان (6/ 274)

وفيه  دليل  على ان التبحر  فى كل  فن نافع  فان السحرة  ما تيقنوا  بان ما فعل  موسى  معجزهم  الا  بمهارتهم  فى فن  السحر  وعلى  ان منتهى  السحر  تمويه  وتزوير  وتخييل  شىء  لاحقيقة له  وجه  الدلالة  ان حقيقة  الشيء  لو انقلبت  الى حقيقة  شىء  آخر  بالسحر  لما عدوا  انقلاب  العصا  حية  من  قبيل  المعجزة  الخارجة  عن  حد السحر  ولما خروا ساجدين عندمشاهدته

சூனியக்காரர்கள் சஜ்தாவில் விழுந்தனர் என்பது சூனியம் என்பதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இது எப்படி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஒரு பொருளை வேறு பொருளாக மெய்யாகவே மாற்றி அவர்கள் சூனியம் செய்திருந்தால் மூஸா நபி கைத்தடியைப் பாம்பாக மாற்றியதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்க மாட்டார்கள். இது சூனியத்தால் செய்ய முடியாத நிஜமான மாற்றம் என்று கருதியதால் தான் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் மூஸா நபி காலத்து சூனியக்காரர்கள் விஷயமாக வரும் வசனங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாகக் கவனித்து சூனியத்தில் அறவே உண்மை இல்லை என்று சொன்னவர்களில் பலர் 2:102 வசனத்துக்கு விளக்கம் சொல்லும் போது தாங்கள் சொன்னதையும் சூனியக்காரர்கள் தொடர்பான எல்லா வசனங்களையும் மறந்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர் என்பது தான்.

الشرح الكبير لابن قدامة (10/ 112)

وجملة  ذلك  ان السحر  عقد ورقى  وكلام  يتكلم به  ويكتبه أو يعمل  شيئا  يؤثر  في  بدن  المسحور  أو قلبه  أو عقله  من غير  مباشرة له  وله  حقيقة  فمنه  ما يقتل  وما يمرض  وما يأخذ الرجل  عن  امرأته  فيمنعه  وطأها  ومنه  ما يفرق  به  بين المرء  وزوجه  وما يبغض  أحدهما  إلى  الآخر  أو  يجب  بين اثنين وهذا  قول  الشافعي  وذهب  بعض  اصحابه  إلى أنه  لا حقيقة له  انما  هو  تخييل  قال الله تعالى  (يخيل إليه  من سحر هم  أنها  تسعى)  وقال  أصحاب  أبي  حنيفة  ان كان  شيئا  يصل  إلى بدن  المسحور كدخان  ونحوه  جاز  ان يحصل منه ذلك فاما ان  يحصل  المرض  والموت  من  غير  ان  يصل  انى  بدنه  شئ  فلا  يجوز  ذلك  لانه  لو  جاز لبطلت  معجزات  الانبياء  عليهم السلام لان ذلك يخرق العادات فإذا جاز من غير الانبياءبطلت معجزاتهم وأدلتهم

சூனியம் என்பது முடிச்சுப் போடுதல், சில சொற்கள், சில எழுத்துக்கள், அல்லது ஏதாவது செய்தல் எனப் பல வகைகள் உள்ளன. சூனியம் செய்யப்பட்டவனைத் தொடாமலே அவனது உடலிலோ, அறிவிலோ, உள்ளத்திலோ பாதிப்பை ஏற்படுத்த முடியும். அது மெய்யானது. சூனியத்தின் மூலம் ஒருவனைக் கொல்லலாம். நோயாளியாக ஆக்கலாம். கணவன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் ஆக்கலாம். கணவன் மனைவியரைப் பிரிக்கலாம். தம்பதியர் ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்யலாம். ஒருவரை ஒருவர் விரும்பச் செய்யலாம். இதுதான் ஷாபி இமாமின் கருத்தாகும். ஆனால் ஷாபி மத்ஹபின் சில அறிஞர்கள் சூனியம் அறவே உண்மை இல்லை; வெறும் கற்பனை என்று கூறியுள்ளனர். சீறுவது போல் பொய்த்தோற்றம் ஏற்பட்டது அல்லாஹ் கூறுவது தான் இதற்கு ஆதாரம். புகை போன்றவைகளை ஒருவனின் உடலில் செலுத்தினால் அது தீங்கிழைக்கலாம். எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் நோய் ஏற்படுத்துவது, மரணத்தை ஏற்படுத்துவது என்றால் அது அறவே சாத்தியம் இல்லை. அப்படி நடந்தால் நபிமார்களின் அற்புதங்கள் தோல்வியாகி விடும். நபிமார்கள் அல்லாதவர்களும் நடைமுறை சாத்தியமற்றதைச் செய்தால் நபிமார்களின் அற்புதம் வீணாகி விடும் என அபூ ஹனீபாவின் மாணவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : இப்னு குதாமா அவர்களின் ஷரஹுல் கபீர்

ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.

அவர் கூறுவதைக் கேளுங்கள்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58)

وَمَنْ صَدَّقَ  هَذَا فَلَيْسَ  يَعْرِفُ النُّبُوَّةَ وَلَا يُؤْمَنُ أَنْ تَكُونَ مُعْجِزَاتُ  الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ  مِنْ هَذَا النَّوْعِ  وَأَنَّهُمْ كَانُوا سَحَرَةً.  وَقَالَ اللَّهُ تَعَالَى  {وَلا يُفْلِحُ  السَّاحِرُ حَيْثُ أَتَى} [طه: 69]

.وَقَدْ أَجَازُوا مِنْ فِعْلِ السَّاحِرِ مَا هُوَ أَطَمُّ مِنْ هَذَا وَأَفْظَعُ، وَذَلِكَ أَنَّهُمْ زَعَمُوا أَنَّ النَّبِيَّ عَلَيْهِ السَّلَامُ سُحِرَ، وَأَنَّ السِّحْرَ عَمِلَ فِيهِ حَتَّى قَالَ فِيهِ: إنَّهُ يُتَخَيَّلُ لِي أَنِّي أَقُولُالشَّيْءَ وَأَفْعَلُهُ وَلَمْ أَقُلْهُ وَلَمْ أَفْعَلْهُ وَأَنَّ  امْرَأَةً  يَهُودِيَّةً  سَحَرْته  فِي جُفِّ  طَلْعَةٍ  وَمُشْطٍ  ومشاقة،  حتى  أَتَاهُ  جِبْرِيلُ  عَلَيْهِ  السَّلَامُ  فَأَخْبَرَهُ  أَنَّهَا  سَحَرَتْهُ  فِي  جُفِّ  طَلْعَةٍ  وَهُوَ  تَحْتَرَا عُوفَةِ  الْبِئْرِ،  فَاسْتُخْرِجَ  وَزَالَ  عَنْ  النَّبِيِّ  عَلَيْهِ   السَّلَامُ  ذَلِكَ  الْعَارِضُ  وَقَدْ  قَالَ  اللَّهُ  تَعَالَى  مُكَذِّبًا  لِلْكُفَّارِ  فِيمَا  ادَّعَوْهُ  مِنْ  ذَلِكَ  لِلنَّبِيِّ  صَلَّى  اللَّهُ عَلَيْهِ  وَسَلَّمَ، فَقَالَ جَلَّ مِنْ قَائِلٍ: {وَقَالَالظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلاً مَسْحُوراً} [الفرقان: 8]

.وَمِثْلُ  هَذِهِ الْأَخْبَارِ مِنْ وَضْعِ الْمُلْحِدِينَ تَلَعُّبًا  بِالْحَشْوِ الطَّغَامِ  وَاسْتِجْرَارًا  لَهُمْ إلَى الْقَوْلِ  بِإِبْطَالِ  مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ  وَالْقَدْحِ  فِيهَا،  وَأَنَّهُ  لَا فَرْقَ  بَيْنَ  مُعْجِزَات  الْأَنْبِيَاءِ وَفِعْلِ السَّحَرَةِ،  وَأَنَّ جَمِيعَهُ  مِنْ نَوْعٍ وَاحِدٍ  وَالْعَجَبُ مِمَّنْ يَجْمَعُ  بَيْنَ تَصْدِيقِ الْأَنْبِيَاءِ  عَلَيْهِمْ السَّلَامُ  وَإِثْبَاتِ مُعْجِزَاتِهِمْ وَبَيْنَ التَّصْدِيقِ  بِمِثْلِ هَذَا  مِنْ فِعْلِ السَّحَرَةِ مَعَ قَوْله تَعَالَى: {وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى} [طه: 69] فَصَدَّقَ هَؤُلَاءِ مَنْ كَذَّبَهُ اللَّهُ وَأَخْبَرَ بِبُطْلَانِ دَعْوَاهُ وَانْتِحَالِهِ.

وَالْفَرْقُ  بَيْنَ  مُعْجِزَاتِ  الْأَنْبِيَاءِ  وَبَيْنَ  مَا  ذَكَرْنَا  مِنْ  وُجُوهِ  التَّخْيِيلَاتِ،  أَنَّ  مُعْجِزَاتِ  الْأَنْبِيَاءِ  عَلَيْهِمْ  السَّلَامُ  هِيَ  عَلَى  حَقَائِقِهَا،  وَبَوَاطِنُهَا  كَظَوَاهِرِهَا،  وَكُلَّمَا  تَأَمَّلْتهَا  ازْدَدْت بَصِيرَةً فِيصِحَّتِهَا، وَلَوْ جَهَدَ الْخَلْقُ كُلُّهُمْ عَلَى مُضَاهَاتِهَا وَمُقَابِلَتِهَا بِأَمْثَالِهَا ظَهَرَ عَجْزُهُمْ عَنْهَا; وَمَخَارِيقُ السَّحَرَةِ وَتَخْيِيلَاتُهُمْ  إنَّمَا   هِيَ  ضَرْبٌ مِنْ الْحِيلَةِ وَالتَّلَطُّفِ لِإِظْهَارِ أُمُورٍ لَاحَقِيقَةَ لَهَا، وَمَا يَظْهَرُ مِنْهَا عَلَى غَيْرِ حَقِيقَتِهَا، يُعْرَفُ  ذَلِكَ  بِالتَّأَمُّلِ  وَالْبَحْثِ  وَمَتَى  شَاءَ  أَنْ  يَتَعَلَّمَ  ذَلِكَ  بَلَغَ  فِيهِ  مَبْلَغَ  غَيْرِهِ  وَيَأْتِي بِمِثْلِ مَا أَظْهَرَهُ سِوَاهُ.

சூனியத்தை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவர் நபித்துவம் பற்றி அறியவில்லை. சூனியத்தை நம்பினால் நபிமார்கள் செய்த அற்புதமும் சூனியத்தின் வகை என்று கருதப்படுவதில் இருந்தும், நபிமார்களும் சூனியக்காரர்களாக இருந்தார்கள் என்று கருதப்படுவதில் இருந்தும் தப்பிக்க முடியாது. 20:69 வசனத்தில் சூனியக்காரன் சூனியம் செய்யும் போது வெற்றி பெற மாட்டான் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அந்தச் சூனியத்தினால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது; தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது; யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது.

ஆனால் அல்லாஹ் திருக்குர்ஆன் 25வது அத்தியாயத்தில் 8 வது வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறினார்கள் என்று சொல்லி நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறிய காஃபிர்களை பொய்யர்களாக்கியுள்ளான். நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டது என்பது போன்ற செய்திகள் இஸ்லாத்தின் எதிரிகள் இட்டுக்கட்டியதாகும். நபிமார்கள் செய்த அற்புதத்தின் தனித்துவத்தை அழிப்பது இவர்களின் நோக்கம். இவர்களின் நம்பிக்கைப் படி சூனியத்துக்கும், நபிமார்களின் அற்புதங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களின் நம்பிக்கைப்படி சூனியம் அற்புதம் எல்லாம் ஒரே வகையானதாகவே ஆக்கப்படுகிறது.

நபிமார்களின் அற்புதமும் உண்மை; சூனியக்காரர்கள் செய்த அற்புதமும் உண்மை எனக் கூறுவோரின் முரண்பட்ட நம்பிக்கை நமக்கு வியப்பளிக்கிறது. சூனியம் செய்யும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்று கூறி சூனியக்காரர்களை அல்லாஹ் பொய்யர்களாக்கி இருக்கும் போது இவர்கள் சூனியக்காரர்களை உண்மையாளர்களாக ஆக்குகிறார்கள்.

நபிமார்களின் அற்புதங்களுக்கும், சூனியக்காரர்களின் தந்திர வித்தைக்கும் உள்ள வித்தியாசம் இது தான். நபிமார்களின் அற்புதங்கள் என்பது அப்படியே மெய்யாகும் வெளியே எப்படி தெரிகிறதோ உள்ளேயும் அப்படித்தான் இருக்கும். நபிமார்களின் அற்புதங்களில் எந்த அளவுக்கு நீ சிந்தனையைச் செலுத்துகிறாயோ அந்த அளவுக்கு அதன் உண்மைத் தன்மை தெரியவரும். உலகமே திரண்டு அது போல் செய்ய முயன்றாலும் அவர்களால் செய்ய இயலாது. சூனியக்காரர்களின் சூனியம் என்பது பொய்யும், தில்லுமுல்லுமாகும். அதன் உண்மை நிலைக்கு மாறாக அதன் வெளித்தோற்றம் இருக்கும். சிந்தித்து ஆய்வு செய்தால் இதைக் கண்டு பிடித்து விடலாம்.

மேலும் ஜஸ்ஸாஸ் அவர்கள் கூறுகிறார்கள்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 57)

وَحِكْمَةٌ كَافِيَةٌ تُبَيِّنُ لَك أَنَّ هَذَا كُلَّهُ مَخَارِيقُ وَحِيَلٌ لَا حَقِيقَةَ لِمَا يَدَّعُونَ لَهَا أَنَّ السَّاحِرَ وَالْمُعَزِّمَ لَوْ قَدَرَا عَلَى مَا يَدَّعِيَانِهِ مِنْ النَّفْعِ وَالضَّرَرِ مِنْ الْوُجُوهِ الَّتِي يَدَّعُونَ وَأَمْكَنَهُمَاالطَّيَرَانُ وَالْعِلْمُ بِالْغُيُوبِ وَأَخْبَارِ الْبُلْدَانِ النَّائِيَةِ وَالْخَبِيئَاتِ وَالسُّرُقِ وَالْإِضْرَارِ بِالنَّاسِ مِنْ غَيْرِ الْوُجُوهِ الَّتِي ذَكَرْنَا، لَقَدَرُوا عَلَى إزَالَةِ الْمَمَالِكِ وَاسْتِخْرَاجِ الْكُنُوزِ وَالْغَلَبَةِ عَلَىالْبُلْدَانِ بِقَتْلِ الْمُلُوكِ بِحَيْثُ لَا يَبْدَأهُمْ مَكْرُوهٌ، وَلَمَا مَسَّهُمْ السُّوءُ وَلَا امْتَنَعُوا عَمَّنْ قَصَدَهُمْ بِمَكْرُوهٍ، وَلَاسْتَغْنَوْا عَنْ الطَّلَبِ لِمَا فِي أَيْدِي النَّاسِ فَإِذَا لَمْ يَكُنْ كَذَلِكَ وَكَانَ الْمُدَّعُونَ لِذَلِكَأَسْوَأَ النَّاسِ حَالًا وَأَكْثَرَهُمْ طَمَعًا وَاحْتِيَالًا وَتَوَصُّلًا لِأَخْذِ دَرَاهِمِ النَّاسِ وَأَظْهَرَهُمْ فَقْرًا وَإِمْلَاقًا عَلِمْت أَنَّهُمْ لَا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ

சூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே? மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்கீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் வாதிடக்கூடிய எந்த ஆற்றலும் இல்லை என்று இதில் இருந்து தெளிவாகின்றது.

இவ்வாறு கூறிய அபூபக்ர் அல் ஜஸ்ஸாஸ் அவர்களை முஃதஸிலா என்று சொன்னீர்களா? அல்லது வேறு யாராவது இவரை இப்படி சொல்லியிருக்கின்றார்களா?

முஃதஸிலாக்கள் தவிர ஒருவரும் சொல்லவில்லை என்று சூனியக் கட்சியினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அதிகம் பேர் சொல்வது ஆதாரமாகுமா

சூனியத்தை நம்பாதவர்களை விட சூனியத்தை நம்புபவர்கள் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். அதிகமானவர்களாக இருப்பதால் இதனைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

இஸ்லாமியர்கள் அதிகமா, இணை வைப்பவர்கள் அதிகமா என்றால் இணை வைப்பர்கள்  தான் அதிகமானவர்களாக இருப்பார்கள்.

இதனால் இஸ்லாத்திற்குத் தோல்வி என்று சொல்ல முடியுமா?

மக்களில் பெரும்பாலும் அறியாதவர்கள் உள்ளார்கள். மக்களில் பெரும்பாலும் விபரமில்லாதவர்கள் உள்ளார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

பார்க்க : 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26

நாம் இந்த இரண்டு மாறுபட்ட கருத்துக்களையும் வைத்து,

எது ஏற்கத்தக்கதாக இருக்கின்றது.

எது பொருத்தமாக இருக்கின்றது.

எது இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதாக இருக்கின்றது.

எது நபிகள் நாயகத்தின் மதிப்பைக் கூட்டுவதாக இருக்கின்றது.

எது குர்ஆனுடைய கண்ணியத்தை அதிகப்படுத்துவதாக இருக்கின்றது.

மக்களை ஏமாற்றுவதை எது தடுக்கக் கூடியதாக இருக்கின்றது.

என்று சிந்தித்துப் பார்த்து அந்தக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாக ஆகும்?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் சூனியம் இருக்கிறது என்பதை நிலைநாட்ட ஒரு கேள்வியை எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிந்திக்கும் திறன் சிறிதளவும் இருப்பவர்களால் இது போல் கேட்க முடியாது. அந்தக் கேள்வி இதுதான்.

சூனியம் பெரும்பாவங்களின் ஒன்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சூனியம் இறைமறுப்பில் தள்ளி விடும் என்று நீங்களும் சொல்கிறீர்கள். சூனியம் என்றால் ஒன்றுமே இல்லை என்று சொன்னால் ஒன்றுமே இல்லாததை எப்படி பாவம் என்றும் இறைமறுப்பு என்றும் சொல்ல முடியும் என்பது தான் அந்தக் கேள்வி.

சூனியம் இல்லை என்று நாம் சொல்வதை இவர்கள் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்கள்.

சூனியம் இல்லை என்றால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பது இல்லை என்ற பொருளில் தான் சொல்கிறோம் என்பது சிறு பிள்ளைக்கும் விளங்கும்.

சூனியம் என்று சொல்லி ஏமாற்றும் பித்தலாட்டமும், மோசடியும் இருக்கத் தான் செய்கிறது.

இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது பாவமாகாதா? அலாஹ்வைப் போல் சூனியக்காரனும் செயல்படுவான் என்று சொல்வது இணை கற்பித்தல் ஆகாதா?

இது கூடவா விளங்கவில்லை?

உதாரணமாக பொய்யை நாம் பாவம் என்று சொல்கிறோம். பொய் என்றாலே இல்லாததும் நடக்காததும் தான். இல்லாததும், நடக்காததும் எப்படி பாவமாகும் என்று இவர்களின் விசாலமான அறிவு கேட்குமா?

இல்லாதது பாவம் அல்ல. இல்லாததை இருப்பதாகச் சொல்வது தான் பாவம். அதுபோல் தான் சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது; தந்திரங்கள் மூலம் ஏமாற்ற முடியும் என்று தெரிந்து கொண்டே அது உண்மை என்று சொன்னால் அது பாவமாக ஆகும் என்பது கூட புரியவில்லையா?

சிஹ்ர் என்ற ஏமாற்றுக் கலை உலகில் உள்ளது. இப்படி ஏமாற்றுவது பாவம். ஆனால் இதனால் ஒன்றும் செய்யவே முடியாது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

பார்க்க திருக்குர்ஆன் 29:47,48,49

முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?

சூனியத்தின் மூலம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது; அதிகபட்சமாக கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று முன்னர் நாம் கூறினோம். எழுதினோம். இப்போது கணவன் மனைவிக்கு மத்தியில் சூனியத்தின் மூலம் எந்தப் பிரிவையும் ஏற்படுத்த முடியாது என்று சொல்கிறோம்.

சூனியக் கட்சியினர் இதைத் தான் தங்களின் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

தவ்ஹீதின் அடிப்படையே இதுதான். மனிதன் குறைவான அறிவுள்ளவன். அதனால் அவனிடம் தவறுகள் ஏற்படாமல் இருக்காது. முன்னர் சொன்னதில் சிலவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளாத ஒரு நல்லறிஞர் கூட வரலாற்றில் இல்லை. தவறு என்று தெரிய வரும் போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

நாம் ஏன் மாற்றினோம்? இதை இந்த நூலை வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ளலாம். முன்னர் நாம் சொன்னது தவறு என்பதற்கும், இப்போது சொல்வது தான் சரியானது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்ததால் தான் மாற்றினோம்.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று சொன்னாலும் சூனியத்தால் நபியை மனநோயாளியாக ஆக்க முடியும் என்று சொன்னாலும் சூனியக்காரனுக்கு அல்லாஹ்வைப் போல் ஆற்றல் உள்ளது என்ற கருத்தைத் தருகிறது.

சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஏராளமான வசனங்களில் சொல்லப்படுவதற்கு மாற்றமாக நமது முந்திய நிலைபாடு இருந்ததால் அதைச் சரி செய்துள்ளோம்.

இது வரவேற்கத்தக்க மாற்றம் தான் இதில் குறை காண முகாந்திரம் இல்லை.

அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து விட்டுப் பிறகு இதை முதலில் சொல்லி இருக்கலாமே என்றும் கேட்கின்றனர்.

இது ஒரு முஸ்லிம் கேட்கின்ற கேள்வியாக இல்லை.

இப்போது நாம் சொன்னவை தவறு என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் அதை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டோம். சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி சொல்லவும் வெட்கப்பட மாட்டோம்.

இது எல்லா இமாம்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

அபு ஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட எல்லா இமாம்களுக்கும் பழைய சொல், புதிய சொல் என்று நிறைய உள்ளன.

அபு ஹனிஃபா சொல்லிவிட்டு மாற்றிக் கொண்ட கருத்துக்கள்.

ஷாஃபி சொல்லிவிட்டு மாற்றிக் கொண்ட கருத்துக்கள்.

இப்படி ஏராளமான எண்ணக்கையில் பட்டியல்களே இருக்கின்றன.

நல்லவர்களுக்குத் தவறு ஏற்பட்டால் நாம் தவறுதலாகச் சொல்லி விட்டோம். இதனையே இன்னும் மக்கள் பின்பற்றுவார்களே என்று பதறிக் கொண்டு மாற்றிக் கொள்வார்கள்.

கெட்டவர்களிடம் தவறு நேர்ந்தால் ஒன்றைச் சொல்லி விட்டோம். மாற்றினால் மரியாதை போய் விடும் என்று அதில் பிடிவாதமாக இருந்து வழிகெடுப்பார்கள். தவறென்று ஆதாரத்துடன் நிரூபித்திருந்தாலும் அதனை மாற்ற மாட்டார்கள்.

மாற்றுவது என்ற புகழத்தக்க ஒரு செயலை, ஏதோ தவறாகச் சித்தரிக்கின்றனர்.

நோன்பு துறக்கும் போது ஓதும் தஹபள்ளமவு என்ற துஆவை காலங்காலமாக ஓதிக் கொண்டிருந்தோம். அதில் அறிவிப்பாளர்களில் ஒரே பெயரில் இரண்டு நபர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் நம்பகமானர். இன்னொருவர் பலவீனமானவர். நாம் பலவீனமானவரைச் சரியானவர் என்று நினைத்துக் கொண்டு இந்த துஆ சரியானது என்று சொல்லி வந்தோம்.

ஆள்மாறாட்டம் நடந்திருப்பது பின்னர் தான் தெரிந்தது. உடனே நம் கூறியது தவறு என்று ஆன்லைன் பி.ஜே இணைதளம் மூலமாகவும், ஏகத்துவம் இதழ் மூலமாகவும், பிரசுரங்கள் மூலமாகவும் மற்றும் மேடை போட்டும் மக்களிடத்தில் சொன்னோம்.

இதற்காக நாம் என்றுமே தயங்கியதில்லை. தவறு என்று தெரிந்தால் உடனே அதனை திருத்திக் கொள்வோம்.

சஹாபாக்கள் கல்லை வணங்கியவர்கள்தான். பின்னர் இஸ்லாத்திற்கு வந்தார்கள். நீங்கள் ஏன் கல்லை வணங்கினீர்கள். அப்பவே இஸ்லாத்திற்கு வந்திருக்கலாமே என்று கேட்க முடியுமா?

இவர்கள் வாதப்படி காஃபிர்களே இஸ்லாத்திற்கு வர முடியாது.

தர்ஹாவை வணங்கியவர்கள் இஸ்லாத்திற்கு வந்தால் நேற்று தர்ஹாவை வணங்கிவிட்டு, இப்போது தவறென்று சொல்கின்றீர்கள். நேற்றே இதைச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்று சொன்னால். நேற்று தெரியவில்லை. இன்று தெரிந்து கொண்டோம். அவ்வளவுதான் பதில்.

மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

அடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.

சூனியம் என்றால் மேஜிக் என்று சொல்கிறீர்கள். சூனியம் இணைவைப்பு என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மேஜிக் கற்றுக் கொள்வதும் மேஜிக் பார்ப்பதும் இணைவைத்தல் ஆகுமா?

இந்தக் கேள்வியும் பரவலாகக் கேட்கப்படுகின்றது.

வெளித் தோற்றத்தில் இரண்டு காரியங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொருத்து இரண்டும் வேறு வேறு ஆகிவிடும்.

ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொள்வோம். இதைத் தாலியாகவும் அணிகிறார்கள். வெறும் நகையாகவும் அணிகின்றனர். தோற்றத்தில் அது தங்கச் செயின் தான். ஆனால் நம்பிக்கையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

திருமண பந்தமே தாலியில் தான் உள்ளது. தாலி அறுந்து விட்டால் கணவனுக்கு ஏதோ நேர்ந்து விடும் என்ற மூட நம்பிக்கை இதன் பின்னால் உள்ளது என்பதால் இது கூடாது என்று நாம் சொல்கிறோம்.

ஆனால் அலங்காரமாக பெண்கள் அணிந்து கொள்வது கூடும் என்றும் நாம் சொல்கிறோம்.

ஒரே தங்கச் செயின் தான் என்றாலும் அது நமது நம்பிக்கையில் எத்தகைய பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறோம்.

ஒரு வாழைப்பழத்தை பூஜை செய்து ஒருவர் நம்மிடம் தருகிறார். அதை நாம் வாங்க மாட்டோம்.

இன்னொருவர் அதே வாழைப்பழத்தை சாதாரணமாகத் தந்தால் வாங்கிக் கொள்வோம்.

இரண்டும் வாழைப்பழம் தான். ஆனால் படையல் செய்யப்பட்டதால் புனிதமாகி விட்டது என்ற பொய்யான நம்பிக்கை அதில் இருப்பதால் அதை மார்க்கம் ஹராம் என்கிறது.

இன்னொரு வாழைப்பழத்தில் அந்த நம்பிக்கை இல்லாததால் அது ஹலாலாக ஆகின்றது.

அது போல் தான் மேஜிக்கும் சூனியமும் தோற்றத்தில் ஒன்றாகக் காட்சி தந்தாலும் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையால் அது மாறுபடுகிறது.

மேஜிக் செய்பவன் வெறும் கையில் மோதிரத்தை வரவழைத்துக் காட்டினால் அவன் இல்லாத மோதிரத்தை கொண்டு வந்து விட்டான் என்று மேஜிக் செய்பவனும் சொல்வதில்லை. மக்களும் அப்படி நம்புவதில்லை. ஏற்கனவே தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாத வகையில் எடுத்துக் காட்டுகிறான். இதற்காக சில தந்திரங்களைச் செய்துள்ளான் என்று தான் நாம் நம்புகிறோம்.

தனது காணாமல் போன ஆடு எங்கே உள்ளது என்பதைக் கண்டுபிடித்து தருமாறு மேஜிக் செய்பவனிடம் யாரும் கேட்பதில்லை. கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்குமாறும், எதிரியின் கைகால்களை முடக்குமாறும் மேஜிக் செய்பவனை யாரும் அணுகுவதில்லை. அணுகினாலும் அதைச் செய்ய இயலாது என்று மேஜிக் செய்பவன் கூறி விடுவான்.

ஆனால் சூனியக்காரன் என்ன செய்கிறான்? நான் நிஜமாகவே அதிசயம் செய்பவன். நான் இங்கிருந்து கொண்டு எங்கோ இருப்பவனின் கைகால்களை முடக்கி விடுவேன். கணவனிடமிருந்து மனைவியை, மனைவியிடமிருந்து கணவனை மந்திரத்தால் பிரித்து விடுவேன் என்று சொல்கிறான். இதற்காக மக்களும் அவனை அணுகுகிறார்கள்.

மேஜிக் செய்பவன் அறிவிக்கப்பட்ட பொது நிகழ்ச்சியில் அவன் முன்னரே திட்டமிட்டதைச் செய்து காட்டுவான். அவ்வளவு தான்.

சூனியக்காரன் ஏற்கனவே திட்டமிட்டதை மட்டும் இன்றி யார் அணுகினாலும், யாருக்கு எதிராக அணுகினாலும், எதைச் செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும் ஆற்றல் இருப்பதாகச் சொல்கிறான். இதுதான் சூனியம்.

ஒன்றில் இணைவைத்தல் உள்ளதை நம் அறிவே சொல்லி விடுகிறது. இன்னொன்று பொழுது பொக்கும் தந்திரம் என்றும் நம் அறிவு தீர்ப்பளிக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை வேறுபடுத்திக் காட்ட மேஜிக் என்றும் பிளாக் மேஜிக் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கருப்பு மேஜிக்கைத் தான் நாம் சூனியம் என்கிறோம்.

மேஜிக் செய்பவர்கள் பயிற்சியைக் கொண்டு செய்வதாகச் சொல்வார்கள். உங்களுக்கும் அந்தப் பயிற்சி இருந்தால் செய்யலாம் என்றும் சொல்வார்கள்.

ஆனால் சூனியம் செய்பவர்கள் தனது மந்திர சக்தியால் கிடைத்த ஆற்றலால் செய்வதாகச் சொல்வார்கள்.