நபித் தோழர்களும் நமது நிலையும்

நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

நபித் தோழர்களும் நமது நிலையும்

  • நபித்தோழர்கள் என்போர் யார்?
  • நபித்தோழர்களின் சிறப்புகள்
  • வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது
  • வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்
  • குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் .
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள்
  • வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
  • வஹீக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள்
  • மாற்றாரின் வாதங்கள்
  • சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

முன்னுரை

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அல்லாஹ்வின் கூற்றையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும்,செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் தெளிவுபடக் கூறி வருகிறோம்.

ஆதாரங்களையும், காரணங்களையும் எடுத்துக் காட்டியே நாம் இவ்வாறு கூறி வருகிறோம். ஆயினும் சிலர் நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைச் சிந்திக்காமல் நபித் தோழர்களை நாம் அவமதித்து விட்டதாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நபித் தோழர்களின் சிறப்புகளைப் பேசும் குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும்  எடுத்துக்காட்டி இத்தகைய சிறப்பு வாய்ந்த நபித் தோழர்களை நாம் அவமதிப்பதாக அவதூறு கூறுகின்றனர்.

நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தைக் கூறாத சில வசனங்களுக்கு தவறான விளக்கம் கூறியும், இட்டுக்கட்டப்பட்ட அல்லது பலவீனமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டியும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது கட்டாயக் கடமை என்பது போல் பிரச்சாரம் செய்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் ஏற்பது அவசியம் இல்லை என்று இது வரை உலகில் யாரும் சொல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் இக்கருத்தை முதன் முதலாகக் கூற ஆரம்பித்துள்ளனர் எனவும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனவே இவர்களுக்கும், இவர்களின் பிரச்சாரத்தை உண்மையென நம்பும் மக்களுக்கும் இது பற்றி தெளிவான விளக்கம் அளிக்கும் அவசியம் நமக்கு ஏற்பட்டது.

* நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்பதற்கான ஆதாரங்கள். மற்றவர்களைப் போலவே நபித்தோழர்களும் பல சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகள் எடுத்துள்ளனர் என்பதற்கான சான்றுகள்.

* நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்பதற்கான காரணங்கள்.

* நபித்தோழர்கள் தவறான முடிவுகள் எடுத்தார்கள் என்று கூறுவதால் அவர்களைப் பற்றி அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய சிறப்புகளைப் பாதிக்காது என்பதற்குரிய விளக்கம்.

* நமக்கு முன்னரே மதிப்புமிக்க அறிஞர்கள் இக்கொள்கையை மிகவும் உறுதியாக முழங்கியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

ஆகியவற்றைத் திரட்டி இந்நூலைத் தயாரித்துள்ளோம்.

பாரமட்சமற்ற பார்வையுடன் இந்நூலை வாசிப்பவர்கள் இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும், நபிவழியும் மட்டுமே என்பதை இன்ஷா அல்லாஹ் சந்தேகமற அறிந்து கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை இறைவன் உண்மையாக்கிட அவனிடமே இறைஞ்சுகிறேன்.

அன்புடன் பீ. ஜைனுல் ஆபிதீன்

நபித்தோழர்களும் நமது நிலையும்

திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலோ ஆதாரம் இருப்பதைத் தான் இஸ்லாத்தின் பெயரால் செய்ய வேண்டும்.

திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலோ இல்லாத ஒன்றை அல்லது இவ்விரண்டுக்கும் முரண்பட்ட ஒன்றைச் செய்யலாகாது. அதை எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும், நபித் தோழர்களே கூறினாலும் அவற்றை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்று நாம் கூறி வருகிறோம். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்றும் கூறுகிறோம். இவ்வாறு கூறுவதைப் புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து கொண்டு புரியாதது போல் நடிப்பவர்களும் நபித்தோழர்களை நாம் அவமதித்து விட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தவ்ஹீத் போர்வையைப் போர்த்திக் கொண்டு தவறான மார்க்கம் போதிப்பவர்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.

மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறியபோது இமாம்களை நாம் இழிவுபடுத்துவதாக மத்ஹபுவாதிகள் பழி சுமத்தினார்கள்.

தர்கா வழிபாடு கூடாது என்று நாம் கூறியபோது அவ்லியாக்களை நாம் கேவலப்படுத்துவதாக சமாதி வழிபாடு நடத்துவோர் திசை திருப்பினார்கள்.

இவர்களின் இந்த வழிமுறையைத் தான் தவ்ஹீத் போர்வையில் தவ்ஹீதைக் கெடுக்க நினைப்பவர்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இமாம்களைப் பின்பற்றக் கூடாது என்று வாதிடுவது எவ்வாறு இமாம்களை இழிவுபடுத்துவதாக ஆகாதோ, தர்காவில் வழிபாடு செய்யக் கூடாது என்று கூறுவது எவ்வாறு இறை நேசர்களை இழிவுபடுத்துவதாக ஆகாதோ அது போலவே தான் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவதும் நபித்தோழர்களை இழிவுபடுத்துவதாக ஆகாது.

நபித்தோழர்கள் என்போர் யார்?

நபித்தோழர்களைப் பின்பற்றலாமா? கூடாதா? என்ற தலைப்புக்குச் செல்வதற்கு முன்னால் நபித்தோழர்கள் என்பதன் இலக்கணத்தை அறிந்து கொள்வோம்.

தமிழ் மொழியில் தோழர்கள் என்ற சொல் நெருக்கமான நண்பர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே ஊரையும், ஒரே தெருவையும் சேர்ந்த இருவர் நெருங்கிய நண்பர்களாக இல்லாவிட்டால் அவர்களைத் தோழர்கள் என்று நாம் குறிப்பிடுவதில்லை.

ஒரு கல்வி நிலையத்தில் பயிலும் நூற்றுக்கணக்கானோர் தினமும் பல முறை சந்தித்துக் கொண்டாலும், அவர்களிடையே நல்ல அறிமுகம் இருந்தாலும் தோழர்கள் என்று கூறுவதில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தான் ஒருவர் தோழர் என்று கூறுவார்.

நபித்தோழர்கள் என்பதை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது.

அரபு மொழியில் சாஹிப், சஹாபி என்று ஒருமையிலும், சஹாபா, அஸ்ஹாப் என்று பன்மையிலும் குறிப்பிடப்படுவதைத் தான் தமிழில் நபித்தோழர் என்று குறிப்பிடுகிறோம்.

அரபு மொழியில் இச்சொல்லுக்கு ஆழமான நட்பைக் குறிக்கும் தோழமை என்பது பொருளல்ல.

ஒரு பள்ளிக் கூடத்தில் ஒரு காலகட்டத்தில் படிக்கும் அனைவருமே அஸ்ஹாப், சஹாபா என்ற பெயரால் குறிப்பிடப்படுவார்கள்.

ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தாலே இவருக்கு அவர் சஹாபி என்று கூறலாம். நாம் அமர்ந்திருக்கும் சபையில் நமக்கருகே ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கும்,நமக்கும் எந்த அறிமுகமும் இல்லை என்ற போதும் எனது சாஹிப் அல்லது சஹாபி என்று அவரைக் குறிப்பிடலாம்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. அரபுமொழி வழக்கத்தையும்,  நபிமொழிகளையும் ஆதாரமாகக் கொண்டே இவ்வாறு கூறுகிறோம்.

இரண்டு முஸ்லிம்கள் வாள் முனையில் சந்தித்துக் கொண்டால் கொன்றவனும், கொல்லப்பட்டவனும் நரகத்திலிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! கொலை செய்தவன் நரகம் செல்வது சரி. கொல்லப்பட்டவனின் நிலை எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “கொல்லப்பட்டவன் தனது சஹாபியை (தோழரை) கொல்வதில் ஆர்வமுள்ளவனாகத் தானே இருந்தான் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பக்ர் (ரலி),

நூல் : புகாரி 31, 6875, 7083

வாள் முனையில் சந்தித்து சண்டையிட்ட இருவரையும் ஒருவருக்கு மற்றவர் சாஹிப் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வெள்ளிக் கிழமை இமாம் உரை நிகழ்த்தும் போது உனது சாஹிபை (அருகில் இருப்பவரை) பார்த்து வாயை மூடு என்று நீ கூறினால் நீ பாழக்கி விட்டாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 934

ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ள மற்றவர் சாஹிப் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுபோல நூற்றுக் கணக்கான சான்றுகளை நாம் காண முடியும்.

ஒரு காலத்தில் வாழ்ந்து எதிரிகளாக இருப்பவர்கள் கூட சாஹிப் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் பைத்தியம் என்று பட்டம் சூட்டியதைக் கண்டிக்கும் போது “இவர்களுடைய சாஹிபுக்கு (தோழருக்கு) பைத்தியம் இல்லை என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? என்று அல்லாஹ் கூறுகிறான்.

பார்க்க : திருக்குர்ஆன் 7:184, 34:46, 53:2, 81:22

யூசுப் நபியுடன் சிறையில் இருந்த இருவரைப் பற்றிக் கூறும் போது தமது சாஹிப்கள் என்று யூசுப் நபி கூறியதாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

பார்க்க : திருக்குர்ஆன் 12 : 39-41

சம காலத்தில் வாழ்ந்த ஒரு கெட்டவனையும், நல்லவனையும் குறிப்பிடும் போது “அவனது சாஹிப் கூறினான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

பார்க்க : திருக்குர்ஆன் 18:34-37

சஹாபி என்ற சொல் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கும் சொல் அல்ல. அறிமுகமான இருவரைக் குறிக்கும் சொல் தான் அது.

அறிமுகமான இருவருக்கிடையே ஆழமான நட்பு இருந்தாலும், சிறிய அளவிலான நெருக்கம் இருந்தாலும், பகைமை இருந்தாலும் அனைவருமே சாஹிப் என்ற சொல்லால்,சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்படுவார்கள்.

அகராதியின்படி இச்சொல்லின் பொருள் இதுதான் என்றாலும் சஹாபி என்ற சொல்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைச் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சஹாபி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாஹிப் என்று பயன்படுத்தும் போது இவ்வாறு பொருள் கொள்வதில்லை.

அறிமுகமான எதிரி

அறிமுகமான உயிர் நண்பன்

எதிரியும், நண்பனும் இல்லாமல் அறிமுகமானவன்

ஆகிய மூன்று பொருள்களில் சஹாபி என்ற சொல்லை அகராதியின்படி பயன்படுத்தலாம் என்றாலும் நபியின் சஹாபி என்று பயன்படுத்தும் போது முதல் அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. மற்ற இரண்டு அர்த்தங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு அறிமுகமானவராக இருந்தாலும் சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்பட மாட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய நண்பரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஓரிரு முறை சந்தித்துக் கொண்ட முஸ்லிமும் சஹாபி என்ற சொல்லில் அடங்குவார்கள்.

இதனால் தான் சஹாபி என்பதற்கு இலக்கணம் கூறும் அறிஞர்கள் முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு தடவையாவது கண்ணால் கண்டவர் என்று கூறுகின்றனர்.

இந்த இலக்கணத்தின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களாகத் திகழ்ந்த அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றவர்களும் சஹாபி என்பதில் அடங்குவார்கள்.

முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு தடவை சந்தித்தவரும் இதில் அடங்குவார்கள்.

நபித்தோழர்கள் என்று கூறப்படும் எத்தனையோ பேரின் பெயர்களோ அவர்களைப் பற்றி மற்ற விபரங்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன. இவர்கள் முஸ்லிம்கள் என்பது மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியும். இத்தகையோரும் சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர்.

இவ்விரு வகையினரையும் தான் நபித் தோழர்கள் என்று நாம் குறிப்பிடுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நபித் தோழர்களின் சிறப்புகள்

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் பல வகையில் மற்றவர்களை விட அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக் கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் : 7:157

கிராமவாசிகளில் அல்லாஹ் வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும்,  இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்,  நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் : 9:99,100

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் : 9:108

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் : 9:117,118

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் : 57:10

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்..

திருக்குர்ஆன் : 59:9

நபித்தோழர்களின் நம்பிக்கை, கொள்கை உறுதி, மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையை மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் புகழ்ந்து போற்றுகிறான்.

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல் : புகாரி : 3673

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கிவிடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : திர்மிதி : 3797

உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

நபித்தோழர்களைச் சிறப்பித்துக் கூறும் இது போன்ற வசனங்களும், நபிமொழிகளும் உள்ளதால் நபித்தோழர்களை நாமும் மதிக்கிறோம்.

மனிதர்கள் என்ற வகையில் நபித்தோழர்களிடம் எத்தகைய பாரதூரமான காரியங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களின் தியாகத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று நாம் நம்புகிறோம்.

சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போர் செய்து கொண்டாலும் அந்தச் செயலை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டோமே தவிர அவர்கள் தவறுகள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திலேயே சஹாபாக்கள் சிறந்தவர்கள் என்பதே நமது நிலைபாடு.

சஹாபாக்களைக் கண்ணியப்படுத்தி மதிப்பது வேறு! அவர்களைப் பின்பற்றி நடப்பது வேறு. குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் முரணாக எவ்வளவு பெரிய நபித்தோழர் நடந்திருந்தாலும் அதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாது.

குர்ஆனிலும், நபிவழியிலும் கூறப்படாத வணக்கத்தை எவ்வளவு பெரிய நபித்தோழர் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம்.

திருக்குர்ஆனும், நபிவழியும் அப்படித் தான் நமக்கு வழிகாட்டுகின்றன என்பதால் அதைப் பின்பற்றியே நாமும் அவ்வாறு கூறுகிறோம்.

வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது

நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத் திகழ்கிறான்.

சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக் கொண்டு மனிதன் படைத்த சாதனைகள் மகத்தானவை. தனது கண்டுபிடிப்புகளைப் பார்த்து தானே பிரமிக்கும் அளவுக்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகிறது.

இது மனிதனின் ஒரு பக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

தனக்குப் பயன்படும் பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டுபிடிப்பதிலும் மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை, கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கிறான். இதைப் பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

மாமேதைகள், பண்டிதர்கள் என்று வரலாற்றில் போற்றப்படுபவர்களும் நம் கண் முன்னே வாழ்ந்து வருபவர்களும் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு கல்லுக்கு முன்னால் கூனி,குறுகி நின்று வழிபாடு நடத்துகின்றனர். இது நாம் செதுக்கிய கல் தானே! இதற்கு எந்த சக்தியும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லையே என்று இவர்களின் அறிவு இவர்களுக்கு வழிகாட்டவில்லை.

பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய பலர் கடவுளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் பிறவிப் பாவத்தை அந்த மகன் சுமந்து கொண்டார் என்றும் நம்பி அவரை வழிபடுவோராக இருந்தனர் என்பது வரலாறு.

ஒருவரது பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்ற சாதாரண உண்மையைக் கூட இவர்களின் சக்தி வாய்ந்த மூளையால் கண்டறிய முடியவில்லை.

மற்ற மனிதர்களை ஏமாற்றக் கூடாது; சுரண்டக் கூடாது என்ற சாதாரண உண்மையை படிக்காதவர்கள் அறிந்து கொண்ட அளவுக்கு படித்தவர்கள் அறியவில்லை.

வரதட்சணை வாங்குவது, கலப்படம் செய்வது, மக்களைச் சீரழிக்கும் சினிமாக்களைத் தயாரிப்பது, பெற்றோரைக் கவனிக்காமல் விரட்டியடிப்பது உள்ளிட்ட கொடுஞ்செயல்களை அதிக அறிவு உள்ளவர்கள் தான் அதிக அளவு செய்து வருவதைக் காண்கிறோம்.

மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு சரியான நேர்வழியைக் கண்டறிய முடியாது என்பதற்கு இதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்.

கம்யூனிஸம், சோஷலிஷம், கேப்பிட்டலிசம், புதிய கேப்பிட்டலிசம் என்று பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள் உலகில் உள்ளன. ஒவ்வொரு கொள்கையையும் உலகிற்குத் தந்தவர்களும், அவற்றை இன்றளவும் தூக்கிப் பிடிப்பவர்களும் யார்? நல்ல அறிவாளிகள் தான்.

மேற்கண்ட கொள்கைகளில் ஏதோ ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும். ஆனாலும் அனைத்து அறிவாளிகளும் ஒன்று கூடி அந்த ஒரு கொள்கை எது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது நிலை தான் சரியானது என்று சாதிக்கின்றனர். முரண்பட்ட இரண்டு விஷயங்களில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும் என்பது தான் அறிவுப்பூர்வமான முடிவாகும்.

அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள விஷயங்களில் ஏதோ ஒன்று தான் சரியானது;மற்றவை தவறானவை என்றால், அறிவுடையவர்கள் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பது பொய் என இதிலிருந்து தெரிகிறது.

சரியான முடிவைக் கண்டறிய முடியாமல் மனிதன் தடுமாறும் தன்மையுள்ளவனாக இருப்பதால் நேர்வழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மனிதன் கையில் ஒப்படைக்க முடியாது.

மனிதனைப் படைத்த ஏக இறைவன் தான் அனைத்திலும் சரியான முடிவை அறிபவனாக இருக்கிறான். மனிதனுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பு அவனிடம் இருப்பது தான் மனிதனுக்குப் பாதுகாப்பானது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

சில விஷயங்களில் மனிதன் சரியான முடிவைக் கண்டறிந்து விட்டாலும் தனது சுயநலம் காரணமாக அந்த வழியை மறைப்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.

ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படுமோ, தீய செயலைத் தீமையென்று தெளிவுபடுத்தினால் அத்தீமையைச் செய்பவர்களால் தனக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி, தான் கண்டறிந்த சரியான பாதையை மற்றவர்களுக்குச் சொல்லாமல் மனிதன் மறைத்து விடுகிறான்.

தனக்குக் கிடைக்கும் ஆதாயத்துக்காக தீமை தான் என்று திட்டவட்டமாகத் தெரியும் ஒன்றை நன்மை தான் என்று பிரச்சாரம் செய்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.

இத்தகைய பலவீனம் கொண்டவனிடம் நேர்வழி காட்டும் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.

எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாகிய இறைவன் மட்டும் தான் மனிதனுக்குச் சரியான வழியைக் காட்ட முடியும் என்ற கொள்கையை இஸ்லாம் உலகுக்குச் சொல்கிறது.

எனவே இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற இயலாத எந்த அறிஞரையோ, எந்த நபித்தோழரையோ பின்பற்றக் கூடாது என்பதை இந்த அடிப்படைத் தத்துவத்தில் இருந்து அறியலாம்.

வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்

நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது ஆற்றலைக் கண்கூடாகக் கண்டவர்கள். வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் இறைவனின் ஒரு கட்டளையை மீறி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களை வெளியேற்றும் போது அவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள் என்று கூறினோம்..

திருக்குர்ஆன் : 2:38

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்..

திருக்குர்ஆன் : 20:122, 123, 124

தமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர்கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.

உமக்கு நான் அளப்பரிய அறிவைத் தந்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள் என்று இறைவன் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல், “என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியைப் பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லி அனுப்பினான்.

மனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது; இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றால் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

இறைவன் தவிர வேறு எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது என்பது தெரியவில்லையா?

ஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை – வஹீயை – மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களோ, மற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா?

இது குறித்து இறைவன் மிகத் தெளிவான வார்த்தைகளால் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

திருக்குர்ஆன் : 2:170

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்..

திருக்குர்ஆன் : 3:103

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் : 6:106

தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் : 6:114,115

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் : 7:3

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக! என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் : 10:15

(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன். (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்..

திருக்குர்ஆன் : 33:2

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் : 39:3

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்

திருக்குர்ஆன் : 39:58

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் : 46:9

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?  வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் : 49:16

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்..

திருக்குர்ஆன் : 24:51,52

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்..

திருக்குர்ஆன் : 5:3

இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..

திருக்குர்ஆன் : 16:116

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

திருக்குர்ஆன் : 42:21

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் : 5:87

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும்,அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர்வழி பெறவில்லை..

திருக்குர்ஆன் : 6:140

தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்? என்று கேட்பீராக! அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.!

திருக்குர்ஆன் : 7:32

வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல்,அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!

திருக்குர்ஆன் : 9:29

(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத்துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் : 9:37

அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!.

திருக்குர்ஆன் : 10:59

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

திருக்குர்ஆன் : 5:48 49

மேற்கண்ட வசனங்கள் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எந்த மனிதரின் கூற்றையும் பின்பற்றலாகாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

* முன்னோரைப் பின்பற்றலாகாது!

*அல்லாஹ்வின் கயிறை -குர்ஆனை-பிடித்துக் கொள்க!

* இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்டதை மட்டும் பின்பற்றுவீராக!

* வஹீயாக அறிவிக்கப்படுவதைத்தான் நபியே பின்பற்ற வேண்டும்.

* வஹீயை மாற்றி அமைக்க நபிக்கும் அதிகாரம் இல்லை.

* மார்க்கத்தின் உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே.

* அல்லாஹ்வுக்கு மனிதன் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடாது.

* மார்க்கத்தை நானே நிறைவாக்கி விட்டேன்.

* நீங்களாக இட்டுக்கட்டி ஹலால் ஹராம் என்று கூறாதீர்கள்!

என்பன போன்ற சொற்கள் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கூறுவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட சுயமாக ஒன்றை உருவாக்க அதிகாரம் படைத்தவரில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவிக் கின்றன.

இவ்வளவு தெளிவாக இறைவன் விளக்கிய பிறகும் இறைவனின் வழிகாட்டுதல் போதாது என்று எண்ணுவோர் தான் நபித்தோழர்களையோ, மற்றவர்களையோ பின்பற்ற வேண்டும் என்று வாதிட முடியும்.

குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்

இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் குர்ஆனை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ அடிப்படையில் தந்த விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையே. குர்ஆனைப் போலவே நபியில் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது கட்டாயக் கடமையாகும். இதுபற்றி திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

திருக்குர்ஆன் : 2:129

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

திருக்குர்ஆன் : 2:151

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் : 3:164

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

திருக்குர்ஆன் : 53:2,3,4

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் : 62:2

வசனங்களை வெறுமனே ஓதிக்காட்டுவதுடன் இறைத் தூதரின் பணி முடிந்து விடாது. அந்த வேதத்தை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியும் தூதருக்கு உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கமும் மார்க்க ஆதாரமே என்பது இவ்வசனங்களில் இருந்து தெளிவாகிறது.

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

திருக்குர்ஆன் : 16:64

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் : 16:44

வேதத்தை மக்களுக்கு விளக்கும் கடமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு;அவர்கள் விளங்குவதற்காகவே அவர்களுக்கு இவ்வேதம் அருளப்பட்டது என்று இவ்விரு வசனங்களும் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் மார்க்க ஆதாரமாக ஏற்பது கட்டாயக் கடமை என இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தவை, அல்லது கனவு மூலம் காட்டியவை, அல்லது ஜிப்ரீலையோ, மற்ற வானவர்களையோ அனுப்பி அவர்கள் வழியாகக் கற்றுத் தந்தவை ஆகிய மூன்றுமே வஹீ தான் என்பதையும் மேற்கண்ட வசனங்களில் இருந்து அறியலாம்.

மேலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு வசனங்களில் வலியுறுத்தியுள்ளான்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

திருக்குர்ஆன் : 24:54

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை)  மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் : 3:31,32

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் : 7: 157, 158

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!!

திருக்குர்ஆன் : 5:92

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்..

திருக்குர்ஆன் : 8:46

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்..

திருக்குர்ஆன் : 9:71

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற் காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்து விட்டு உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் காண்பார்கள்..

திருக்குர்ஆன் : 4:64

நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது..

திருக்குர்ஆன் : 4:115

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்..

திருக்குர்ஆன் : 4:69

அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

திருக்குர்ஆன் : 24:47

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

திருக்குர்ஆன் : 8:20

அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்..

திருக்குர்ஆன் : 33:71

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

திருக்குர்ஆன் : 47:33

நம்பிக்கை கொண்டோம் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்..

திருக்குர்ஆன் : 49:14

உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் : 58:13

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது..

திருக்குர்ஆன் : 64:12

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்..

திருக்குர்ஆன் : 3:132

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

திருக்குர்ஆன் : 4:80

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் : 24:56

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (எனவும் கூறினர்.)

திருக்குர்ஆன் : 3:53

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்..

திருக்குர்ஆன் : 24:52

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!!

திருக்குர்ஆன் : 3:32

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது எந்த அளவு கட்டாயக் கடமையோ அதே அளவு அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும் கட்டாயக் கடமையாகும். தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் முஸ்லிம்களே அல்லர் என்ற அளவுக்கு கடுமையான இவ்விஷயம் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் ஒரு வசனத்தில் மட்டும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறிவிட்டு உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் : 4:59

அதிகாரம் படைத்தவர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் எனக் கூறும் இவ்வசனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குர்ஆனிலும், நபிவழியிலும் உரசிப் பார்த்து பின்பற்றுங்கள் என்ற நிபந்தனையையும் அல்லாஹ் விதிக்கிறான்.

குர்ஆன், ஹதீஸுக்கு முரணாகவோ, குர்ஆன் ஹதீஸில் கூறப்படாத வணக்க வழிபாடுகளாகவோ அதிகாரம் படைத்தவர்களின் கட்டளை இருந்தால் அதைப் பின்பற்றக் கூடாது என்று தெளிவாக அல்லாஹ் அறிவிக்கிறான்.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக பல கட்டளைகளை நமக்குப் பிறப்பித்துள்ளார்கள்.

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல் : முஸ்லிம், 3442

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத ஒன்றை நபித்தோழர் ஒருவர் செய்திருந்தால் அல்லது கட்டளையிட்டிருந்தால் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி மிகத் தெளிவாக அறிவிக்கிறது.

இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல் : புகாரி, 2697

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது “செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவை; மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு என்று குறிப்பிடுவது வழக்கம்.

நூல் : முஸ்லிம், 1435

* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை ஓதுவார் என்பதுடன் கற்றுக் கொடுப்பார் என்பது அவர்களின் விளக்கம் அவசியம் என்பதைக் காட்டுகிறது.

* மனோ இச்சைப்படி அவர் பேச மாட்டார்.

* இவ்வேதத்தை நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.

* தூதருக்குக் கட்டுப்படுவது அவசியத்திலும் அவசியம்.

* நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை உருவாக்குவது வழிகேடு.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களிலும், நபிமொழிகளிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்குத் தெளிவாகின்றன.

  • குர்ஆனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிவழியையும் பின்பற்றுவது அவசியமாகும்.
  • குர்ஆனுடைய போதனையையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரிகாட்டுதலையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக ஆக முடியாது.

இவ்விரு விஷயத்திலும் தெளிவாக இருப்பவர்கள் நபித்தோழர்களின் நடவடிக்கைகளை மார்க்க ஆதாரங்கள் எனக் கூறத் துணிய மாட்டார்கள்.

இறைவன் விரும்பாத ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அதில் நமக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாது. ஏனெனில் வஹீயின் தொடர்பு அவர்களுக்கு இருந்ததால் அல்லாஹ் அதைச் சுட்டிக்காட்டி திருத்தி விடுவான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளில் எவற்றை இறைவன் திருத்தம் செய்ததாக நமக்குச் சான்றுகள் கிடைக்கின்றனவோ, அவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் இறைவன் அங்கீகரித்துக் கொண்டான் என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறானதாக இருந்தால் இறைவன் புறத்திலிருந்து அவை திருத்தப்படாது. எனவே அவர்களின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதை எவராலும் பிரித்தறிய முடியாது.

நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறுவதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள்

நபித் தோழர்களை விட நபிமார்கள் சிறந்தவர்கள் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்தில்லை.

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களைத் தான் மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான். நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன் அதைக் கூட நிபந்தனையுடன் தான் கடமைக்குகிறான். நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் சுய சிந்தனையின் பேரில் நபிமார்கள் செய்தவைகளைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.

அப்படியானால் வஹீ எனும் இறைச் செய்தியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நபித்தோழர்களின் நட வடிக்கைளைப் பின்பற்றுவது எப்படி மார்க்கத்தின் கடமையாக அமையும்? இதைச் சிந்தித்தாலே இந்தப் பிரச்சனையில் மாற்றுக் கருத்துடையவர்கள் தெளிவடைவார்கள்.

நம் அனைவருக்கும் தெரிந்த சில விபரங்களின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலமும் இதை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

மற்றொரு ஹதீஸும் இந்த அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது.

பரீரா என்ற பெண் முகீஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீ அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடியவில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா“இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையில்லை; பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீஸ் வேண்டாம் என்று பரீரா கூறி விட்டார்.

நூல்: புகாரி 5283

கணவரைப் பிடிக்காத போது அவரிடமிருந்து விலகிக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி பரீரா விலகிக் கொண்டார்.

கணவன் மனைவியர் சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது இருவரும் சேர்ந்து வாழலாமே என்று நாம் அறிவுரை கூறுவோம். பிரியும் உரிமை இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே என்ற எண்ணத்தில் இவ்வாறு ஆலோசனை கூறுவோம். இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை கூறினார்களா? அல்லது இனி மேல் இந்த உரிமை கிடையாது என்ற அடிப்படையில் ஆலோசனை கூறினார்களா? என்று பரீராவுக்குச் சந்தேகம் வருகிறது.

எனவேதான் இது மார்க்கக் கட்டளையா? அல்லது உங்களின் சொந்தக் கருத்தா? என வினவுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எனக் கூறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விருப்பத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.

வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை பரீரா ஏற்காததால் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கருதவில்லை. எந்த அறிஞரும் இவ்வாறு கருதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை; வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோ, நல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வஹீ தொடர்பில்லாத நபித் தோழர்களின் சொற்களோ, செயல்களோ மார்க்கத்தின் ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறினால் நபித் தோழர்களை இழிவுபடுத்துவதாகப் பிரச்சாரம் செய்வது எந்த அளவுக்கு அறியாமை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது “இது உடும்பு இறைச்சி என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் “அல்லாஹ் வின் தூதரே! இது ஹராமா? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் கருத்து)

நூல் : புகாரி 5391, 5400, 5537

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் தான். எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காணமுடியும்.

சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான். இறைவனால் கண்டிக்கப்பட்ட இது போன்ற விஷயங்களை நாம் பின்பற்றக் கூடாது.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான்.

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் : 66:1

நான் அனுமதித்ததை நீ எப்படி ஹராமாக்கலாம்? என்று இறைவன் கேட்டதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே இவ்வாறு ஹராமாக்கினார்கள் என்பதை அறியலாம். மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூற அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது.

எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும்,தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனிமரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள்.

அனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது..

திருக்குர்ஆன் : 18:28

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

திருக்குர்ஆன் : 80:1-10

நூல்கள் : திர்மிதி 3254, முஸ்னத் அபீ யஃலா 3123

அவர்களின் இந்த நடவடிக்கை வஹீயின் அடிப்படையில் அமையவில்லை என்பதை இறைவனே சுட்டிக் காட்டுவதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் வெளிப்படையாக முஸ்லிம்களைப் போலவே நடந்து வந்தனர். தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களிலும் பங்கு பெற்று வந்தனர்.

ஆனால் போருக்குச் செல்லும் நிலை வந்தால் ஏதாவது பொய்க் காரணம் கூறி போரில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு நபிகள் நாயகத்திடம் விதிவிலக்குப் பெற்றுக் கொண்டனர்.

இது பற்றி இறைவனின் முடிவு என்ன? என்பதற்குக் காத்திராமல் அவர்களின் பொய்ச் சமாதானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தவறு எனப் பின் வருமாறு இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

(முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும்,தூரமாகவும் இருந்தது. எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் பொய் யர்களே என்பதை அல்லாஹ் அறிவான். (முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?

திருக்குர்ஆன் : 9:42,43

எனது கட்டளைக்குக் காத்திராமல் நீர் எப்படி அனுமதியளிக்கலாம் என்று கேட்டு மேற்கண்ட செயல் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறான்.

பணயத் தொகை பெற்றுக் கொண்டு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்துத் திருத்துகிறான்.

பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்;  ஞானமிக்கவன்.

முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

திருக்குர்ஆன் : 8:67,68

வஹீ வருவதற்கு முன் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. வஹீக்கு மாற்றமாக கவனக் குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மார்க்க விஷயத்தில் இறைவனின் வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மார்க்க ஆதாரமாகாது என்றால் நபித் தோழர்களின் செயல்களோ, மற்றவர்களின் கருத்துக்களோ எப்படி மார்க்க ஆதாரமாக அமைய முடியும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் “அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் “நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் “அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 3349, 3447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

நபித்தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். “அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது என்று கூறப்படும். “எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான்; கேடு தான் என்று நான் கூறுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

இது பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது “நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். “உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6585, 6586

இதே கருத்து புகாரி 4740, 6526, 6576, 6582, 7049 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதையும், செய்ததையும் மட்டுமே நபித்தோழர்கள் செய்வார்கள். நபிவழியில் இல்லாத எந்த ஒன்றையும் நபித்தோழர்கள் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் கூறித் தான் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று வாதிட்டு வருகின்றனர்.

அவை அனைத்துமே ஆதாரமற்ற பொய்க்கூற்று என்பது இந்த நபிமொழிகள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததையும், செய்யாததையும் சில நபித்தோழர்கள் புதிதாக உருவாக்கி, அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றால் இந்தக் கடும் எச்சரிக்கையில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன?

நபித்தோழர்களின் சொற்களாக இருந்தாலும், செயல்களாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிவழியில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவை எதுவாக இருந்தாலும் அவை பித்அத்தாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை மார்க்க ஆதாரமாகக் கருதக் கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

நபித்தோழர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது.

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

நூல் : புகாரி 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6868, 6869, 7077, 7078, 7080, 7447

ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.

ஆயிஷா (ரலி) தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.

அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர்.

தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம்.

அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள். (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக)

அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.

மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும், அலி (ரலி) தலைமையிலும் நபித்தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.

கொலை செய்தவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர்.

அதன் பின்னர் நடந்த கர்பலா யுத்தத்திலும் இரண்டு அணியிலும் சில நபித்தோழர்கள் இருந்தனர்.

ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் ஆயுதம் தாங்கி கொலை செய்வது மிகப் பெரிய பாவச் செயல் என்ற நிலையிலும் நபித்தோழர்களிடம் இது நிகழ்ந்துள்ளது.

வஹீயைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்திட இது போதுமான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே நபித்தோழர்களிடம் நடந்த தவறுகளை நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அவற்றைப் பட்டியலிட்டால் இந்த நூல் அதற்கு இடம் தராது.

பொதுவாக நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களது சிந்தனையில், தீர்ப்புகளில் நிச்சயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன.

குறிப்பாகவும் நபித்தோழர்கள் வாழ்வில் அதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

வஹீக்கு முரணான நபித் தோழர்களின் நடவடிக்கைகள்

நபித்தோழர்களின் நடவடிக்கைகளை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் பல நடவடிக்கைகள் குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் முரணாக அமைந்திருப்பதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தவைகளும், தடுத்தவைகளும் நபித் தோழர்களுக்குத் தெரியாத காரணத்தால் அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதையும் நாம் காண முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகவும் அவர்கள் தவறான முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதற்கும் ஏராளமான ஆதாரங்களைக் காண முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டாத பல விஷயங்களைச் சுயமாகவும் அவர்கள் செய்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.

இவற்றிலிருந்து சிலவற்றை நாம் பட்டியலிடுவது நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாக முடியாது என்பதை இன்னும் தெளிவாக விளக்குவதற்காகவே.

ருகூவின் போது தொடைகளுக்கிடையே இரு கைகளை வைத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ருகூவு செய்யும் போது இரு கைகளாலும் முட்டுக் கால்களைப் பிடிப்பதற்குப் பதிலாக இரு கைகளையும் இணைத்து தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

ஆனால் ஆரம்ப கால நபித் தோழரும் மிகச் சிறந்த தோழர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பும் மாற்றப்பட்ட இந்த முறையிலேயே தொழுது வந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

என் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். “நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.

அறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத்,

நூல் : புகாரி 790

அல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்போர் : அல்கமா, அல்அவத்

நூல் : முஸ்லிம் 831

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இதை அனுமதித்து பின்னர் தடுத்து விட்டார்கள் என்பதை முதல் ஹதீஸ் கூறுகிறது. அந்தத் தடை இப்னு மஸ்வூத் என்ற மிகப் பெரிய நபித்தோழருக்குத் தெரியாமலே இருந்துள்ளது என்பதை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.

மற்ற சட்டங்களை விட தொழுகை தொடர்பான சட்டங்களை அனைத்து நபித்தோழர்களும் அறிந்திருக்க முடியும். ஏனெனில் தினமும் ஐந்து நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் ஏதோ ஒரு தொழுகையில் கலந்து கொண்டவர் கூட இந்தச் சட்டத்தை அறிந்திட இயலும். ஆனால் அனைவரும் எதை அறிந்திருக்க முடியுமோ அந்த முக்கியமான ஒரு சட்டம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை.

மாற்றப்பட்ட விஷயம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியாததால் அவரது தொழுகைக்குப் பங்கம் ஏற்படாமல் போகலாம். அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று சொல்வது சரி தானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாடகைத் திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.

கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ (புகாரி 75, 3756, 7270) அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.

வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலி (ரலி),

நூல் : புகாரி 4216, 5115, 5523, 6691

வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜம்ரா,

நூல் : புகாரி 5116

முத்ஆ எனப்படும் வாடகைத் திருமணம் தடுக்கப்பட்டதை முதல் ஹதீஸ் கூறுகிறது. இந்த சமுதாயத்தின் மாமேதையான இப்னு அப்பாஸ் (ரலி) அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்ததை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.

இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகுமா?  என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமத்துவு ஹஜ் பற்றி அறியாமை

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது. இவ்வாறு ஹஜ் செய்வதை திருக்குர்ஆன் (2:196) அனுமதிக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் இந்தச் சட்டம் மிகப் பெரும் தோழர்களான உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.

தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி, 1572, 4518

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். “எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,

நூல் : புகாரி, 1563

மற்றொரு அறிவிப்பில்,

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பார்க்க புகாரி : 1569

தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்“என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,

நூல் : திர்மிதி 753

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள்.

அனைவருக்கும் தெரிந்த நபிவழியை மிகச் சிறந்த நபித்தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?

கடமையான குளிப்பு

தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, ஆணுக்கு விந்து வெளிப்பட்டால் குளிப்பது கடமை. விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது கடமையில்லை என்று ஆரம்பத்தில் சட்டம் இருந்தது. பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்று மாற்றப்பட்டது.

ஆனால் மிகச் சிறந்த பல நபித்தோழர்கள் விந்து வெளிப்படாத வகையில் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஒருவர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “மர்மஸ்தானத்தைக் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளுச் செய்ய வேண்டும் என்று விடையளித்தார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன் எனவும் உஸ்மான் (ரலி) கூறினார்கள். இது பற்றி அலி (ரலி), ஸுபைர் (ரலி), தல்ஹா (ரலி),உபை பின் கஅபு (ரலி) ஆகியோரிடமும் நான் கேட்டேன். அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் (ரலி)

நூல் : புகாரி 179, 292

இன்றைக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் மிகச் சிறந்த நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்படியெல்லாம் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இஹ்ராம் நிலையில் திருமணம் செய்தல்

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)

நூல் : முஸ்லிம் 2522, 2524, 2525, 2526

இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1837, 4259, 5114

ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)

நூல் : முஸ்லிம் 2529

ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா?

குளிப்பு கடைமையான நிலையில் நோன்பைத் துவக்குவது

ஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

ஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி),உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான்“அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் “நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் “எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 1926

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

லுஹாத் தொழுகை

முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கும் ஆர்வமூட்டியதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சில நபித்தோழர்களுக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

எனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1178, 1981

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 357, 3171, 6158

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 1128, 1177

நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1175

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

நபித்தோழர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

பிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல்

அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் “அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் “இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.

வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2062, 6245, 7353

உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா?

தயம்முமை மறுத்த உமர் (ரலி)

மிகச் சிறந்த நபித்தோழரான உமர் (ரலி) அவர்கள் குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். “எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள்“(தண்ணீர் கிடைக்கா விட்டால்) நீ தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே! நானும், நீங்களும் ஒரு சிறு படையில் சென்றோம். நம் இருவருக்கும் குளிப்பு கடமையானது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது, “உமது இரு கைகளால் தரையில் அடித்து வாயால் ஊதிவிட்டு கைகளால் முகத்திலும் முன் கைகளிலும் தடவிக் கொள்வது உமக்குப் போதுமே! என்று கூறினார்கள். இது உங்களுக்கு நினைவில்லையா? என்று உமர் (ரலி) அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அப்போது உமர் ரலி) அவர்கள் “அம்மாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று கூறினார்கள். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் இது பற்றி நான் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 553

கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அம்மார் அவர்கள் சுட்டிக் காட்டியதையும் உமர் (ரலி) அவர்கள் நம்பவில்லை என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெரிகிறது.

மிகச் சிறந்த நபித்தோழருக்கே இது பற்றிய சட்டம் தெரியவில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும்?

தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் “நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 346, 347

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.

ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.

சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? நபித்தோழர்களின் நடவடிக்கைகளும் மார்க்க ஆதாரங்கள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும்?

பிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது

உமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது? என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.

நூல் : புகாரி 5729

சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்

ஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா?

இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது “இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.

பார்க்க : புகாரி 267, 270, 1754

நேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்?

ஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்

மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ,திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும்,உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.

நூல் : முஸ்லிம் 2689

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?

நபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்?

தொழுகையிலும் மாற்றங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் நபித்தோழர்களிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தினமும் ஐந்து தடவை தொழுது பழக்கப்பட்டிருந்த நபித்தோழர்கள் அதிலும் கூட நிறைய விஷயங்களை மாற்றி விட்டனர் என்ற விமர்சனம் நபித்தோழர்கள் காலத்திலேயே எழுந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றையும் என்னால் காண முடியவில்லை என்று அன (ரலி) கூறினார்கள். “ஏன் தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “தொழுகையிலும் பாழ்படுத்த வேண்டிய அளவுக்குப் பாழ்படுத்தி விட்டீர்களே என்று திருப்பிக் கேட்டார்கள்.

நூல் : புகாரி 529, 530

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நடைமுறை அனைத்தும் அனைவரிடமும் அப்படியே நீடிக்கவில்லை எனும் போது நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரம் எனக் கூறுவது தவறல்லவா?

இரண்டு அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்வூத்

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதை உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் மிகச் சிறந்த நபித்தோழரான இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களை மறுத்து வந்தார்கள். தமது ஏட்டில் இவ்விரு அத்தியாயங்களையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் இரண்டு பிரார்த்தனைகள் தான். குர்ஆனின் அத்தியாயங்கள் அல்ல என்று கடைசி வரை சாதித்து வந்தார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 20244, 20246

நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் ஆகும் என்றால் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் 112 தான் என்று நாமும் கூறலாமா? திருக்குர்ஆனின் விஷயத்திலேயே நபித்தோழருக்கு பிழை ஏற்பட்டது என்றால் நபித்தோழரின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத் தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந் தார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித்தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நூல் : புகாரி 1242, 3670

பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும் போது நாம் எப்படி நிலை குலைந்து போவோமோ அது போல் நபித்தோழர்களும் நிலை குலையக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எனவே தான் தவறுகளுக்கு அறவே இடமில்லாத வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்து சென்றனர்.

புகாரி : 362, 86, 184, 362, 372, 578, 707, 807, 809, 814, 837, 850, 865, 867, 868, 873 ஆகிய எண்களில் இது பற்றிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்றைக்கு பெண்களின் நடவடிக்கைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டால் இரவேல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் (பள்ளிவாசலுக்கு வருவதை விட்டு) தடுக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல் : புகாரி 869

இந்த மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக ஏக இறைவனிடமிருந்து வந்த மார்க்கமாகும். நாளை என்ன நடக்கும் எதிர்காலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதையெல்லாம் நன்கறிந்த இறைவனால் இம்மார்க்கம் நமக்குத் தரப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இறைவனுக்கு நன்கு தெரியும்.

பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாகச் சொல்லியிருப்பான். அதை அறியாமல் இறைவன் சட்டமியற்றி விட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.

மேலும் மார்க்கம் முழுமையாகி விட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகி விட்டது என்றால் அதன் பின்னர் எந்த மாற்றமும் வராது என்பது தான் பொருள். இதற்கு எதிராகவும் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளைக் கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. பெண்களின் நடவடிக்கைகளைக் கண்டு மனம் வெதும்பி இந்தச் சொல்லைப் பயன்படுத்தி விட்டார்கள் என்று தான் நாம் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அதே நேரத்தில் உலகில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் மார்க்கச் சட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

பெருநாள் தொழுகைக்கு முன் குத்பா

ஜும்ஆ தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்கு முன் நிகழ்த்த வேண்டும். பெருநாள் தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்குப் பின் நிகழ்த்த வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் ஏராளமான நபித் தோழர்கள் வாழும் காலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரே ஒரு நபித் தோழர் மட்டும் அதை எதிர்த்துப் பேராடினாலும் அவரது கருத்து எடுபடவில்லை. தான் விரும்பியவாறு ஆட்சியாளர் மார்க்கத்தை வளைத்துக் கொண்டார் என்பதை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பொருநாளி லும், ஹஜ் பெருநாளிலும் முஸல்லா எனும் திடலுக்குச் செல்வார்கள். முதலில் தொழுகையை முடித்து விட்டு திரும்பி மக்களை நோக்கி நிற்பார்கள். மக்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தி அறிவுரை கூறுவார்கள். மர்வான் ஆட்சியாளராக வரும் வரை இந்த நிலை தான் நீடித்தது. அவர் மதீனாவின் அமீராக இருந்தார். அவருடன் நான் புறப்பட்டு முஸல்லா எனும் திடலை அடைந்த போது அங்கே ஒரு மேடை தயார் செய்யப்பட்டிருந்தது. தொழுகை நடத்துவதற்கு முன் மர்வான் மேடையில் ஏற முயன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் மேலே ஏறி தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தினார். அப்போது “அல்லாஹ்வின் மேல் ஆணையாக (மார்க்கத்தை) மாற்றி விட்டீர் என்று நான் கூறினேன். அதற்கு மர்வான் “நீ அறிந்து வைத்திருக்கும் நடைமுறை முடிந்து போன விஷயம் என்று கூறினார். நான் அறிந்து வைத்துள்ள நடைமுறை நான் அறியாத (இந்த) நடைமுறையை விடச் சிறந்தது எனக் கூறினேன். தொழுகைக்குப் பின் மக்கள் அமர்வதில்லை என்பதால் உரையை தொழுகைக்கு முன் அமைத்துக் கொண்டேன் என்று மர்வான் கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல் : புகாரி 956

சிறந்த காலம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறிய நபித் தோழர்களும் தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டுமே அதை எதிர்க்கிறார் என்பதைக் காண்கிறோம்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான சில செயல்களை அன்றைய மக்கள் சகித்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே நபித்தோழர்களின் காலத்தில் உள்ள அனைத்தும் மார்க்க ஆதாரங்கள் எனக் கூற முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

மனிதர்கள் என்ற முறையில் நபித்தோழர்கள் சிலர் செய்த பாவங்களை நாம் இங்கே சுட்டிக் காட்டவில்லை.

நபித்தோழர்களின் ஆய்விலும், சிந்தனையிலும், தீர்ப்புகளிலும் அவர்களிடம் காணப்பட்ட மற்றவர்களுக்குத் தொடர்புடைய தவறுகளையே இங்கே நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளையே வஹீ எனவும், வஹீ அல்லாதது எனவும் இரண்டாக நாம் வகைப்படுத்தி ஒன்றை மட்டும் மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறோம். இன்னொன்றை மார்க்க ஆதரமாக ஏற்றுக் கொள்வதில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கையையோ, மற்ற அறிஞர்கள் நடவடிக்கைகளையோ எப்படி மார்க்க ஆதாரமாகக் கருத முடியும்?

விரலை வெட்டியதற்கான நட்டஈடு

இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின்படி ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் ஒரு உறுப்பை வெட்டினால் அவரது அதே உறுப்பை வெட்டுவதே அதற்கான தண்டனை.

ஆனால் பாதிக்கப்பட்டவர் விரும்பினால் தனது எதிரிக்குத் தண்டனை வழங்க வேண்டாம்;நட்டஈடு பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை வைக்கலாம். உரிய நட்ட ஈடை வழங்கி விட்டு இத்தண்டனையிலிருந்து எதிரி தப்பித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய நட்ட ஈடு என்ன? என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வரையறுத்துச் சொல்லப்பட்டு விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு மனிதரின் ஒரு விரலை மற்றவர் வெட்டினால் அதற்கு பத்து ஒட்டகம் நட்ட ஈடு என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உமர் (ரலி) ஆட்சியின் போது விரல்களுக்கிடையே வேறுபாடு ஏற்படுத்தி கட்டை விரலுக்கு இத்தனை ஒட்டகம். ஆட்காட்டி விரலுக்கு இத்தனை ஒட்டகம் என்று நிர்ணயிக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரல்களுக்கிடையே வேறுபாடு காட்டாத போது நீங்கள் எப்படி வேறுபாடு காட்டலாம்? என்று ஆட்சேபனை செய்தனர். உமர் (ரலி) அவர்கள் தமது தவறை ஒப்புக் கொண்டு திருத்திக் கொண்டார்கள்.

நூல் : முஸன்னப் இப்னு அபீஷைபா 5/368

அனைத்து விரல்களும் சமம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது புகாரி 689வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது. அல்லது தெரிந்தே விரல்கள் அனைத்தும் சமம் அல்ல என்று அவர்கள் எண்ணியிருக் கிறார்கள். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) சுட்டிக்காட்டிய பின் திருத்திக் கொள்கிறார்கள்.

நாட்டுக் கழுதை உண்ணத் தடை

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கழுதையின் இறைச்சியை உண்பது தடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “காட்டுக் கழுதை மாமிசத்தை உண்ணலாம். நாட்டுக் கழுதையின் மாமிசத்தை உண்ண வேண்டாம் என்று தடை விதித்தனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நாட்டுக் கழுதை தடை செய்யப்பட்ட விபரம் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகும் அவர்கள் நாட்டுக் கழுதை மாமிசத்தை ஹலால் என்று என்று தீர்ப்பளித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையை ஹராமாக்கியதாகக் கூறுகிறார்களே?என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள்“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த செய்தியை பஸராவில் வைத்து ஹகம் பின் அம்ர் (ரலி) எங்களிடம் கூறினார்கள். ஆனால் கல்விக் கடல் இப்னு அப்பாஸ் (ரலி) இதை ஏற்க மறுத்து (6:145) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர் : அம்ர்,

நூல் : புகாரி 5529

ஹகம் என்ற நபித் தோழர் மட்டுமின்றி அனஸ் (ரலி) அவர்களும் தடை பற்றிய செய்தியை அறிவித்துள்ளனர்.

புகாரி:5528, 2991, 4199

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி இப்னு அப்பாஸ் (ரலி) மறுத்ததும், ஜாபிர் (ரலி) அதை வழி மொழிந்ததும் ஏற்புடையதல்ல.

மேற்கண்ட 6:145 வசனத்தில் சில விஷயங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையைத் தடை செய்தார்கள் என்பதை இவ்விரு தோழர்களும் விளங்காமல் இருந்துள்ளனர்.

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள்

வெள்ளிக் கிழமையன்று ஜும்ஆவுக்காக இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வழக்கம் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும்,உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் இமாம் மிம்பரில் ஏறிய பிறகே பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) ஆட்சி காலத்தில் மக்கள் கூட்டம் பெருகியதால் ஸவ்ரா எனும் இடத்தில் மற்றொரு அறிவிப்பு அதிகமானது என்று ஸாயிப் பின் யஸித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 912

வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரண்டு கலீபாக்களும் அதைச் செயல்படுத்தியுள்ளனர். ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் சுயமாக இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள்.

ஏதோ ஒரு காரணத்தால் நபிவழியைக் கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

எனவே நபித்தோழர்களின் எல்லா நடவடிக்கையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தான் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

மாற்றாரின் வாதங்கள்

திருக்குர்ஆனும், நபிவழியும் மட்டுமின்றி நபித்தோழர்களையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று வாதிடுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில சான்றுகளை முன் வைக்கிறார்கள்.

நபித்தோழர்களின் நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திருக்குர்ஆனும், நபிமொழிகளும் கட்டளையிடுவதால் தான் நாங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

முஹாஜிர்களையும்அன்ஸார்களையும் பின்பற்றுதல்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்,  நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 9:100

மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும்,  ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.

நபித் தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

பின்பற்றுதல் என்ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.

குறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.

ஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும். காவல்துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல்துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.

கொடை வள்ளலை அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள்! அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

9:100 வசனத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.

அதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.

ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறை திருப்திக்கு உரியவர்கள். இதே போல் ஆரம்ப கால அன்ஸார்கள் எவ்வாறு இறை திருப்திக்கு உரியவர்களோ அது போல் பிற்காலத்தில் உதவிய அன்ஸார்களும் இறை திருப்திக்கு உரியவர்களே என்பதைத் தான் 9:100 வசனம் கூறுகிறது.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்த கால வினைச் சொல்லாகக் கூறுகிறான். பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித்தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித்தோழர்களைத் தான் குறிக்கும் என்பதையும் கவனிக்கத் தவறி விட்டனர்.

ஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு உதவுவதிலும் முந்திச் சென்றவர்களைப் பின்பற்றியவர்களைப் புகழ்ந்து பேசும் போது மற்றொரு நிபந்தனையையும் இறைவன் இணைத்துக் கூறுகிறான்.

அழகிய நல்ல முறையில் அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

முன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின் போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத் தான் அழகிய முறையில் பின் தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித்தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.

எனவே நபித்தோழர்களின் சொற்கள் செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

மாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இது போல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

அல்குர்ஆன் 52:21

நம்பிக்கை கொண்ட பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பின்பற்றுவது பற்றி இங்கே கூறப்படுகிறது.

9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

ஆனால் இவ்வசனத்தை விளங்கும் போது மட்டும் அவர்களின் சிந்தனை சரியாக வேலை செய்கிறது.

சரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்

குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித்தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த ஹதீஸ்.

இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

முனத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.

தாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.

பஸார் என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர் (ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துர் ரஹீம் பின் ஸைத் என்பார் பெரும் பொய்யர் ஆவார் என்று பஸார் கூறுகிறார். எனவே இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

முனத் ஷிஹாப் என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) வழியாக இதை ஜஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமி என்பார் அறிவிக்கிறார். இவர் பெரும் பொய்யராவார்.

ஜாமிவுல் இல்ம், அல்இஹ்காம் ஆகிய நூல்களிலும் ஜாபிர் (ரலி) வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாரி பின் ஹுஸைன் என்பார் வழியாக இது அறிவிக்கப் படுகிறது. இவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னு அப்துல் பர், இப்னு ஹம் ஆகியோர் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.

இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு கூட நிரூபணமாக வில்லை என்று இப்னுல் கையும்,இப்னு ஹஜர் ஆகியோர் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் பொய்யர் களும், யாரென அறியப்படாதவர்களும் உள்ளதால் இது பலவீனமாக அமைவதுடன் இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எத்தனையோ விஷயங்களில் நபித்தோழர்கள் நேர்முரணான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அது அறவே சாத்தியமற்றதாகும். மது பானம் விற்பனை செய்வது ஹலால் என்று ஸமுரா பின் ஜுன்துப் என்ற நபித்தோழர் கூறியிருக்கிறார். நபித்தோழரில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற இந்தச் செய்தியின் அடிப்படையில் மதுபானம் விற்றால் அது சரியாகுமா? நோன்பு வைத்துக் கொண்டு ஐஸ் கட்டியைச் சாப்பிட்டால் நோன்பு முறியாது என்று அபூ தல்ஹா என்ற நபித்தோழர் கூறியுள்ளாரே! இதைப் பின்பற்ற முடியுமா? மனைவியுடன் கூடிய பின் விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது அவசியம் இல்லை என்று அலி, உஸ்மான், தல்ஹா, அபூ அய்யூப், உபை பின் கஅப் ஆகியோர் கூறியுள்ளனரே! அதைப் பின்பற்ற முடியுமா? என்று அறிஞர் இப்னு ஹஸ்ம் அவர்கள் கேள்வி எழுப்புகிறார். மேலும் நபித்தோழர்களிடம் ஏற்பட்ட பல தவறான முடிவுகளையும் பட்டியலிடுகிறார்.

மேலும் நபித்தோழர்கள் நட்சத்திரங்கள் போன்றவர்கள். அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்பதில் நட்சத்திரங்கள் அனைத்தும் வழிகாட்டுபவை என்ற கருத்து அடங்கியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சில் உண்மைக்கு மாறானவை இடம் பெறாது.

நட்சத்திரங்களில் மிகச் சில நட்சத்திரங்கள் தாம் இரவில் திசை காட்டக் கூடியதாகவும்,நேரம் காட்டக் கூடியதாகவும் உள்ளது. மற்ற நட்சத்திரங்கள் எதற்கும் வழிகாட்டுவது இல்லை.

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழிகாட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழிகாட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.

மிகச் சிறந்த சமுதாயம்

உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும்,நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித்தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன? என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல்,  வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

நபித் தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித்தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

எனக்குப் பின் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! என்று அடுத்த ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற கருத்து அந்த நபிமொழியில் உள்ளதா? என்பதை விளக்குவதற்கு முன் இவர்களின் முரண்பாட்டை நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

இவர்களது வாதப்படி நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி),உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் தான். இந்த நபிமொழி இவர்களின் வாதப்படி இந்த நால்வரையும் பின்பற்றுமாறு தான் கூறுகிறது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் இந்த நால்வரைத் தவிர மற்ற நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவதில்லை. எல்லா நபித் தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறிக் கொண்டு அதற்கு ஆதாரமாக இதைக் காட்டுவது அவர்களுக்கே எதிரானதாகும்.

நான்கு கலீபாக்களும் மார்க்கத்தில் எந்த ஒன்றை உருவாக்கினாலும் அதைப் பின்பற்றுங்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தானா?என்பதைப் பார்ப்போம்.

இந்த நபிமொழி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டு அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும் பெரும்பாலான அறிவிப்புகள் நம்பகமானவர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522,தாரிமி 95 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் முழு ஹதீஸையும், அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் காட்டுவதில்லை. பெரும் பகுதியை இருட்டடிப்புச் செய்து விட்டு “எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முழு ஹதீஸையும் இவர்கள் ஆய்வு செய்தால் இவர்களுக்கே இதன் சரியான பொருள் விளங்கிவிடும். அல்லது சிந்திக்கும் திறன் உள்ள மக்கள் இதன் உண்மையான பொருளைக் கண்டு கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொருத்த வரை தமது சொல் எங்கெல்லாம் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு விடுமோ அங்கெல்லாம் சரியான பொருளைக் கண்டு கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் சேர்த்துக் கூறி விடுவார்கள்.

இஞ்சீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

திருக்குர்ஆன் : 5:47

இவர்கள் மேற்கண்ட நபிமொழியை விளங்கியது போல் இந்த வசனத்தையும் விளங்கினால் என்னவாகும்? கிறித்தவர்கள் இன்றளவும் பைபிளின் அடிப்படையில் வாழலாம் என்று குர்ஆன் அனுமதிப்பதாகப் பொருள் வரும். ஆனால் இவ்வாறு அவர்கள் பொருள் கொள்ள மாட்டார்கள். குர்ஆனில் இன்ஜீல் பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்து அவற்றுக்கு முரணில்லாத வகையில் அதை விளங்க வேண்டும் என்று நிலை மாறுவார்கள்.

இன்ஜீல் கூறுவதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்கள் ஏற்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்று விளக்கம் தருகின்றனர்.

இதே விதமான ஆய்வு மனப்பான்மையை இந்த நபிமொழியிலும் பயன்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?

மார்க்கம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று தெளிவான கட்டளை இருக்கும் போது அதற்கு முரணில்லாத வகையில் மேற்கண்ட ஹதீஸை விளங்கியிருக்க வேண்டாமா?

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும்,வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.

மேலும் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸில்  “மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து “அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னு மாஜா 43, அஹ்மத் 16519

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.

மேலும் அதே ஹதீஸில் “இறை நம்பிக்கையாளன் மூக்கணாங்கயிறு போட்ட ஒட்டகம் போன்றவன். இழுத்த இழுப்புக்கு கட்டுப்படுபவன் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னுமாஜா 43

இந்தச் சொற்றொடர் மார்க்க விஷயத்தைக் குறிக்காது. மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதே ஹதீஸில் “நான் உங்களைப் பளீரென்ற பாதையில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகப் போகுபவனைத் தவிர வேறு யாரும் வழி கெட மாட்டார்கள் என்பதையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.

அபூபக்ரையும்உமரையும் பின்பற்றுங்கள்

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவை அனைத்துமே பலவீனமாக உள்ளன.

ஹுதைபா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ்

முஸ்னத் அஹ்மத், திர்மிதீ, பைஹகீ, ஹாகிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

இதை ரிப்யீ பின் கிராஷ் என்பார் வழியாக அப்துல் மலிக் பின் உமைர் அறிவிப்பதாக இந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரிப்யீ பின் கிராஷ் அவர்களை அப்துல் மலிக் சந்தித்தவரல்ல. எனவே இடையில் யாரோ விடுபட்டுள்ளார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

அந்த ஹதீஸ்கள் இவை தான்

مسند أحمد

23245 – حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي: أَبِي  بَكْرٍ، وَعُمَرَ “

سنن الترمذي

3662 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ، وَعُمَرَ»

السنن الكبرى للبيهقي

10056 – حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ , عَنْ رِبْعِيٍّ , عَنْ حُذَيْفَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ “

المستدرك على الصحيحين للحاكم

4451 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، وَعَلِيُّ بْنُ حَمْشَاذَ الْعَدْلُ، وَأَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الصَّيْدَلَانِيُّ، وَأَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْبَغَوِيُّ، بِبَغْدَادَ، وَأَبُو أَحْمَدَ بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ بِمَرْوَ، قَالُوا: ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ الْحَارِثِ الْوَاسِطِيُّ، ثنا أَبُو إِسْمَاعِيلَ حَفْصُ بْنُ عُمَرَ الْأَيْلِيُّ، ثنا مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْي عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ أُمِّ عَبْدٍ»  [التعليق – من تلخيص الذهبي] 4451 – صحيح

ஹாகிமில் இடம்பெறும் இந்த ஹதீஸ் சரியானது என்று தஹபீ கூறியுள்ளார். அவரது கூற்று தவறாகும். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதால் அவர் அவ்வாறு கூறியுள்ளார். இடையில் அறிவிப்பாளர் விடுபட்டதை அவர் கவனிக்கவில்லை.

இப்னு மஸ்வூது அறிவிக்கும் ஹதீஸ்

இந்த ஹதீஸ் திர்மிதீ, தப்ரானி, ஹாகிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மூன்றிலும் யஹ்யா பின் ஸலமா பின் குஹைல் என்பார் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர் ஆவார். இந்த ஹதீஸின் கீழே திர்மிதி இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

سنن الترمذي

3805 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنْ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ” وَيَحْيَى بْنُ سَلَمَةَ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَأَبُو الزَّعْرَاءِ اسْمُهُ: عَبْدُ اللَّهِ بْنُ هَانِئٍ وَأَبُو الزَّعْرَاءِ الَّذِي رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ اسْمُهُ: عَمْرُو بْنُ عَمْرٍو وَهُوَ ابْنُ أَخِي أَبِي الأَحْوَصِ صَاحِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ “

المعجم الكبير للطبراني

8344 – حَدَّثَنَا الْحَسَنُ بن الْعَبَّاسِ الرَّازِيُّ، حَدَّثَنَا سَهْلُ بن عُثْمَانَ، حَدَّثَنَا يَحْيَى بن زَكَرِيَّا بن أَبِي زَائِدَةَ، عَنْ يَحْيَى بن سَلَمَةَ بن كُهَيْلٍ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنَا سَلَمَةُ بن إِبْرَاهِيمَ بن إِسْمَاعِيلَ بن يَحْيَى بن سَلَمَةَ بن كُهَيْلٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ سَلَمَةَ بن كُهَيْلٍ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:”اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَاهْدُوا هَدْيَ عَمَّارٍ،

المستدرك على الصحيحين للحاكم

4456 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، ثنا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ»

ஹுதைபாவின் மற்றொரு ஹதீஸ்

இதே ஹதீஸ் பைஹகீ, ஹாகிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்படுள்ளது.

ரிப்யீ பின் கிராஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அவரது அடிமை ஹிலால் அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹிலாலின் நம்பகத்தன்மை, நினைவாற்றல் உள்ளிட்ட தகுதிகள் குறித்து யாரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இவர் அறியப்படாத அறிவிப்பாளர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸ் ஆகும்

எனவே அபூபக்ர் உமரைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்கள் பலவீனமானவையாகும்.

السنن الكبرى للبيهقي

16590 – أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، بِبَغْدَادَ , أَنْبَأَ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْن عَمْرٍو الرُّزَازُ , ثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، أَنْبَأَ الضَّحَّاكُ، ثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مَوْلًى، لِرِبْعِيٍّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ , وَاهْتَدُوا بِهَدْيِ عَمَّارٍ , وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ أُمِّ عَبْدٍ “

المستدرك على الصحيحين للحاكم

(3/ 79)قَ، وَعَلِيُّ بْنُ حَمْشَاذٍ، قَالَا: ثنا بِشْرُ بْنُ مُوسَى، ثنا الْحُمَيْدِيُّ، ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ هِلَالٍ، مَوْلَى رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ وَقَدْ»

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கு இது மாற்றமான கருத்தாக உள்ளதால் இது இட்டுக்கட்டப்பட்ட தரத்திற்கு இறங்கி விடும்

மேலும் சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை. இந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.

மார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.

அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.

ஃபாத்திஹா அத்தியாயம் கூறுவது என்ன?

நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். இது சஹாபாக்களைத் தான் குறிக்கிறது எனவும் இவர்கள் வாதம் செய்கின்றனர்.

இவர்கள் எந்த அளவுக்கு சிந்தனைத் திறன் அற்றவர்களாக உள்ளனர் என்பதை இந்த வாதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பிரார்த்தனையை நாம் மட்டும் செய்வதில்லை. முதன் முதலில் இதைச் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். இறைவா! எனக்கு சஹாபாக்கள் வழியைக் காட்டு என்ற அர்த்தத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா?

சஹாபாக்களும் கூட இதே பிரார்த்தனையைச் செய்தார்களே! அதன் பொருள் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இது இறைவனால் அருளப்பட்டது போல் எண்ணிக் கொண்டு இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏராளமான நபிமார்கள், நல்லவர்கள் சென்று விட்டனர். அவர்கள் நேர்வழியில் சென்றதால் இறைவனின் அருளையும் பெற்றனர். அவர்கள் எந்த வழியில் சென்றனர் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. எனவே தான்“இறைவா! இதற்கு முன்னர் நீயாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழியைக் காட்டு என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கற்றுத் தந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அந்த நேர்வழி எது? என்பதையும் காட்டி விட்டான். இதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும்.

குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டதையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நபித் தோழர்களின் கடைசி காலத்தில் தான் குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் அச்சிட்டு பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை இருக்கவில்லை.

மனனம் செய்தவர்களும், ஏடுகளில் எழுதி வைத்துக் கொண்டவர்களுமான மிகச் சில நபித் தோழர்கள் தவிர பெரும்பாலான நபித் தோழர்களுக்கு முழுக் குர்ஆனும் கிடைக்கவில்லை.

சந்தேகம் வந்தால் புரட்டிப் பார்க்கும் வகையில் ஏடுகளாகவும் அனைவரிடமும் இருக்கவில்லை.

அது போல் நபிமொழியை எடுத்துக் கொண்டால் இதற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது.

முழு ஹதீஸ்களையும் எழுதி வைத்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித் தோழரும் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பத்து சதவீதத்தை மனனம் செய்தவர்களோ எழுதி வைத்துக் கொண்டவர்களோ கூட அன்றைக்கு இருக்க வில்லை.

இந்த நிலையில் நபித் தோழர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பை பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் தமக்கென குர்ஆனை வைத் துள்ளோம்.

ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங் களிலும்,மதரஸாக்களிலும் அவை உள்ளன.

சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.

எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் நபித் தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான பத்வாக்களை வழங்குவார்கள். அவர்கள் காலத் தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம்.

இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் “எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.

புகாரி : 1741, 7074

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

ஆழ்கடலில் அலைகள் உள்ளன.

வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம்.

மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம்.

ஃபிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம்.

ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.

இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!!

திருக்குர்ஆன் 6:67

எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

17.07.2009. 11:05 AM