நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்து தான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தரம் பிரித்துப் பார்ப்பது ஹதீஸ் கலைவிதியில் இல்லை.

நபித்தோழர்களை ஏன் தரம் பிரிப்பதில்லை? நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானிப்பதும், பலவீனமானவர் என்று தீர்மானிப்பதும் அவர்களின் வெளிப்படையான செயல்களை வைத்துத் தான்.

ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானித்து விட்டால் அவர் நூறு சதவிகிதம் நல்லவராகத் தான் இருப்பார் என்பது கிடையாது. அவர் கெட்டவராகவும் இருக்கலாம். அதற்கான வெளிப்படையான சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை என்பது தான் அதன் பொருளாகும்.

அது போன்று ஒருவர் நம்பகமானவர் அல்லர் என்று நாம் முடிவு செய்வதும் அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளை வைத்துத் தான். அவர் நூறு சதவிகிதம் கெட்டவர் என்பது இதன் பொருளல்ல.

நபித்தோழர்களைப் பொறுத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும், பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படும் எந்த ஒரு நபித்தோழரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியங்களைச் செய்ததாகவோ, திட்டமிட்டுப் பொய் சொன்னதாகவோ வெளிப்படையான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

நபித்தோழர்களின் நம்பகத் தன்மை குறித்து அல்லாஹ்வும், அவனது தூதரும் நற்சான்று அளித்துள்ளதால் தான் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.

இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

திருக்குர்ஆன்:48:29

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்:7:157

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன்:9:100

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன்:9:108

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்:9:117,118

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன்:57:10

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்:59:9

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

அல்குர்ஆன்:48:18

صحيح مسلم 

163 – (2496) حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَتْنِي أُمُّ مُبَشِّرٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عِنْدَ حَفْصَةَ: «لَا يَدْخُلُ النَّارَ، إِنْ شَاءَ اللهُ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ، الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا» قَالَتْ: بَلَى، يَا رَسُولَ اللهِ فَانْتَهَرَهَا، فَقَالَتْ حَفْصَةُ: {وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا} [مريم: 71] فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: {ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا} [مريم: 72]

அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் உறுதிமொழி எடுத்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு முபஷ்ஷிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4909)

صحيح البخاري 

3081 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، – وَكَانَ عُثْمَانِيًّا فَقَالَ لِابْنِ عَطِيَّةَ: وَكَانَ عَلَوِيًّا – إِنِّي لَأَعْلَمُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ، سَمِعْتُهُ يَقُولُ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالزُّبَيْرَ، فَقَالَ: «ائْتُوا رَوْضَةَ كَذَا، وَتَجِدُونَ بِهَا امْرَأَةً، أَعْطَاهَا حَاطِبٌ كِتَابًا»، فَأَتَيْنَا الرَّوْضَةَ: فَقُلْنَا: الكِتَابَ، قَالَتْ: لَمْ يُعْطِنِي، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ أَوْ لَأُجَرِّدَنَّكِ، فَأَخْرَجَتْ مِنْ حُجْزَتِهَا، فَأَرْسَلَ إِلَى حَاطِبٍ، فَقَالَ: لاَ تَعْجَلْ، وَاللَّهِ مَا كَفَرْتُ وَلاَ ازْدَدْتُ لِلْإِسْلاَمِ إِلَّا حُبًّا، وَلَمْ يَكُنْ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلَّا وَلَهُ بِمَكَّةَ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، وَلَمْ يَكُنْ لِي أَحَدٌ، فَأَحْبَبْتُ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا، فَصَدَّقَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عُمَرُ: دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ فَإِنَّهُ قَدْ نَافَقَ، فَقَالَ: ” مَا يُدْرِيكَ، لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ “، فَهَذَا الَّذِي جَرَّأَهُ

பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று அல்லாஹ் கூறியிருக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: புகாரி (3081)

صحيح البخاري 

3673 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ، ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلاَ نَصِيفَهُ» تَابَعَهُ جَرِيرٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، وَأَبُو مُعَاوِيَةَ، وَمُحَاضِرٌ، عَنِ الأَعْمَشِ

 என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல்: புகாரி (3673)

صحيح البخاري 

17 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல் : புகாரி 17

நபித்தோழர்கள் அனைவரும் நம்பக மானவர்கள் என்பதன் பொருள் அவர்களின் அறிவிப்பை மறுக்கும் அளவிற்கு அவர்களிடம் எந்த ஒரு குறையும் இல்லை என்பது தான். அவர்களது சொந்தக் கருத்துக்களை மார்க்கமாகக் கருதிப் பின்பற்றலாம் என்றும் இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் இறைச்செய்தியை மட்டுமே ஒரு முஸ்லிம் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும்.

நபித்தோழர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் அறியாமல் நிகழும் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. அவை ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகும் போது அந்த அறிவிப்புகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இது போன்றவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக நபித்தோழர்கள் அறிவிக்கும் எந்தச் செய்தியாக இருந்தாலும் அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாகவும், குர்ஆனுக்கு முரண் இல்லாமலும் இருந்தால் அது ஆதாரப்பூர்வமான செய்தியாகவே கருதப்படும்.