நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை முன்னர் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இதே போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்கள் என்பதே அந்தப் பொய்யான செய்தி.
குர்ஆனைப் பற்றியும் ஹதீஸ்களைப் பற்றியும் அறிவில்லாத சில அறிவிலிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இது போன்ற செய்திகளை மக்களிடம் சொல்லி, நபியவர்களையும் நபித்தோழர்களையும் தவறான முறையில் சித்தரித்துக் காட்டுகின்றனர்.
سنن الدارقطنى
894 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ مُجَاهِدٍ حَدَّثَنَا رَبَاحٌ النُّوبِىُّ أَبُو مُحَمَّدٍ مَوْلَى آلِ الزُّبَيْرِ قَالَ سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ أَبِى بَكْرٍ تَقُولُ لِلْحَجَّاجِ إِنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- احْتَجَمَ فَدَفَعَ دَمَهُ إِلَى ابْنِى فَشَرِبَهُ فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فَأَخْبَرَهُ فَقَالَ « مَا صَنَعْتَ ». قَالَ كَرِهْتُ أَنْ أَصُبَّ دَمَكَ. فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « لاَ تَمَسَّكَ النَّارُ ». وَمَسَحَ عَلَى رَأْسِهِ وَقَالَ « وَيْلٌ لِلنَّاسِ مِنْكَ وَوَيْلٌ لَكَ مِنَ النَّاسِ »
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தபோது தன் இரத்தத்தை என்னுடைய மகனிடம் கொடுத்தார்கள். என் மகன் அதைப் பருகிவிட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இந்த விசயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என் மகனிடம்), “நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “உங்கள் இரத்தத்தை கீழே கொட்ட நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருடைய தலையை வருடிவிட்டு, “நரகம் உன்னைத் தீண்டாது. உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகும். மக்களால் உனக்குக் கேடு உண்டாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின் அபீபக்ர் (ரலி),
நூல்: தாரகுத்னீ
குர்ஆனுடன் முரண்படும் செய்தி
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.
திருக்குர்ஆன்: 2:173
இரத்தத்தை உண்ணுவது ஹராம் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளின் இறைச்சி உண்ணத் தகுந்ததாக இருந்தாலும் இவற்றின் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்ணத் தகுந்த பிராணிகளின் இரத்தத்தையே உண்ணக் கூடாது என்றால் உண்ணுவதற்கு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டவற்றின் இரத்தத்தைக் குடிப்பது மிக மோசமான செயலாகும்.
ஒருவன் ஆட்டின் இரத்தத்தைக் குடிப்பதைக் காட்டிலும் பன்றியின் இரத்தத்தைக் குடிப்பது மிக மோசமான செயல் என்று கூறுவோம். ஏனென்றால் பன்றியின் இரத்தம், பன்றி என்ற காரணத்தாலும் இரத்தம் என்ற காரணத்தாலும் ஹராமாக உள்ளது. இதன் இரத்தத்தை ஒருவன் குடிக்கும் போது இறைவனுடைய இரண்டு கட்டளைகளை மீறும் நிலை ஏற்படுகின்றது.
மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பதும் இதுபோன்ற மோசமான செயலேயாகும். மனிதன், மனிதனை உண்ணுவதை மார்க்கம் தடை செய்துள்ளது. இரத்தமும் தடை செய்யப்பட்ட பொருளாகும்.
ஒரு சாதாரண மனிதருக்கு முன்னால் யாராவது இப்படிச் செய்தால் அந்த மனிதர் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார். அநாகரீகமான இந்தச் செயலை எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அப்படியானால் மனிதனை மனிதாக வாழக் கற்றுக் கொடுத்து நற்பண்புகளின் முழு உருவமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தக் கெட்ட செயலை அனுமதித்து இருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும்.
(நபியே) நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
திருக்குர்ஆன்: 68:4
மேலும் மேற்கண்ட ஹதீஸில் கருத்து முரண்பாடும் உள்ளது. நரகம் உன்னைத் தீண்டாது என்ற வாசகத்தின் மூலம் நபியின் இரத்தத்தைக் குடித்தவர் நல்ல காரியத்தைச் செய்துள்ளார் என்று இந்தச் செய்தி கூறுகின்றது. அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன்னால் மக்களுக்கும் மக்களால் உனக்கும் கேடு உண்டாகும் என்று ஏன் பழிக்க வேண்டும்?
பலவீனர்கள் அறிவிக்கும் செய்தி
இந்தச் செய்தி கருத்து ரீதியில் பலவீனமான செய்தியாக இருப்பதுடன் இது சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்படவில்லை. இதன் அறிவிப்பாளர் தொடரில் பல பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தச் செய்தியில் பின்வரும் நபர்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளனர்.
1. அஸ்மா பின்த் அபீபக்ர்
2. ரபாஹ் அந்நவ்பீ அபூ முஹம்மது
3. அலீ பின் முஜாஹித்
4. முஹம்மது பின் ஹுமைத்
5. அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்தில் அஜீஸ்
இவர்களில் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழியர் என்பதால் இவரைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்.
இரண்டாவது அறிவிப்பாளரான ரபாஹ் பலவீனராவார். இவர் யாரென்றே தெரியவில்லை. இவரைச் சிலர் பலவீனர் என்று கூறியுள்ளனர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய நம்பகத்தன்மை அறியப்படாத காரணத்தால் இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர் அலீ பின் முஜாஹிதும் பலவீனராவார். இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் என்று யஹ்யா பின் ளரீஸ் மற்றும் யஹ்யா பின் மயீன் ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். முஹம்மது பின் மஹ்ரான் என்பவரும் இவ்வாறு கூறியுள்ளார். ஹதீஸ் கலையில் இவர் முற்றிலுமாக விடப்பட்டவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
நான்காவது அறிவிப்பாளரான முஹம்மது பின் ஹுமைத் என்பவரும் பலவீனமானவராவார். இவர் பெரும் பொய்யர் என இப்னு கராஷ், சாலிஹ் ஜஸ்ரா, இஸ்ஹாக் பின் மன்சூர் ஆகிய மூவரும் கூறியுள்ளார். மேலும் இமாம் தஹபீ அவர்களும் இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியில் மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மற்றொரு அறிவிப்பு
ஹில்யதுல் அவ்லியா எனும் நூலில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேற்றிய இரத்தத்தைக் குடித்ததாகவும் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகம் உன்னைத் தீண்டாது எனக் கூறி இதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் கைசான், சஅத், முஹம்முது பின் மூசா, அஹ்மது பின் ஹம்மாத், மற்றும் முஹம்மது பின் அலீ ஆகிய ஐந்து நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரின் நம்பகத்தன்மையும் நிரூபிக்கப்படவில்லை. எனவே நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சஃபீனாவின் அறிவிப்பு
السنن الكبرى للبيهقي
(أخبرنا) أبو الحسن على بن احمد بن عبدان أنبأ احمد بن عبيد نا محمد بن غالب نا موسى بن اسمعيل أبو سلمة ثنا هنيد بن القاسم قال سمعت عامر بن عبد الله بن الزبير يحدث عن ابيه قال احتجم رسول الله صلى الله عليه وسلم وأعطاني دمه وقال اذهب فواره لا يبحث عنه سبع أو كلب أو انسان (3) قال فتنحيت (عنه 4) فشربته ثم اتيت النبي الله صلى الله عليه وسلم فقال ما صنعت قلت صنعت الذى امرتني قال ما اراك الا قد شربته قلت نعم قال ماذا تلقى (5) امتى منك
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தை எடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு) புதைத்துவிடு” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக் குடித்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: சஃபீனா (ரலி),
நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா
இந்தச் செய்தியில் புரைஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இப்னு கஸீர் கூறியுள்ளார். இமாம் தாரகுத்னீயும் இப்னு ஹிப்பானும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த செய்தியில் உமர் பின் சஃபீனா என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் யார் என அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறியுள்ளார்கள். இமாம் புகாரி அவர்கள் இவரை மஜ்ஹுல் – அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். எனவே இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
المعجم الأوسط
9098 – حدثنا مسعدة بن سعد ثنا إبراهيم بن المنذر ثنا عباس بن أبي شملة عن موسى بن يعقوب عن بن الأسقع عن ربيح بن عبد الرحمن بن أبي سعيد عن ابيه عن جده أن أباه مالك بن سنان لما أصيب رسول الله صلى الله عليه و سلم في وجهه يوم أحد مص دم رسول الله صلى الله عليه و سلم وازدرده فقيل له أتشرب الدم قال نعم أشرب دم رسول الله صلى الله عليه و سلم فقال رسول الله صلى الله عليه و سلم خالط دمي بدمه لا تمسه النار
சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு
உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய முகத்தில் காயம் ஏற்பட்டபோது என் தந்தை மாலிக் பின் சினான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விழுங்கினார்கள். “நீ இரத்தத்தை குடிக்கின்றாயா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிக்கின்றேன்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய இரத்தம் அவருடைய இரத்தத்துடன் கலந்துவிட்டது. அவரை நரகம் தீண்டாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் மாலிக் (ரலி),
நூல்: தப்ரானீ
இந்தச் செய்தியில் ருபைஹ் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள இப்னுல் அஸ்கஃ யாரென்ற விபரம் அறியப்படவில்லை.
மேலும் இதில் மூசா பின் யஃகூப் என்வர் இடம்பெற்றுள்ளார். இவர் மனன சக்தி சரியில்லாதவர் என்று இமாம் இப்னு ஹஜரும், இவர் பலவீனமானவர் என்று இமாம் அலீ பின் மதீனீயும், இவரிடத்தில் பலவீனம் உள்ளது என்று இமாம் தஹபீயும் கூறியுள்ளனர்.
மேலும் இதில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் பின் அபீ ஷம்லா என்பவரைப் பற்றி எந்தக் குறிப்பும் ஹதீஸ் நூற்களில் இல்லை. இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே பலவீனமானவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
மற்றொரு அறிவிப்பு
حلية الأولياء
حدثنا سليمان بن أحمد، حدثنا دران بن سفيان البصري، حدثنا موسى بن إسماعيل، حدثنا الهنيد بن القاسم بن عبد الرحمن بن ماعز، قال: سمعت عامر بن عبد الله بن الزبير يحدث أباه أنه أتى النبي صلى الله عليه وسلم وهو يحتجم، فلما فرغ قال: ” ياعبد الله اذهب بهذا الدم فأهرقه حيث لا يراك أحد ” . فلما برزت، عن رسول الله صلى الله عليه وسلم عمدت إلى الدم فحسوته، فلما رجعت إلى النبي صلى الله عليه وسلم قال: ” ما صنعت يا عبد الله ” . قلت: جعلته في مكان ظننت أنه خاف على الناس، قال: ” فلعلك شربته. ” قلت: نعم، قال: ” ومن أمرك أن تشرب الدم، ويل لك من الناس، وويل الناس منك ” .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது அவர்களிடத்தில் நான் வந்தேன். அந்த வேலை முடிந்தவுடன் அவர்கள், “அப்துல்லாஹ்வே” என்று (என்னை) அழைத்து, “இந்த இரத்தத்தைக் கொண்டு சென்று இதை யாரும் பார்க்காதவாறு கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை விட்டுத் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். நான் அவர்களிடம் திரும்பி வந்தபோது, “அப்துல்லாஹ்வே! அதை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “மக்களை விட்டும் மறைவான இடம் என்று நான் கருதிய ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டேன்” என்று நான் கூறினேன். அவர்கள், “அதை நீ குடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி),
நூல்: ஹாகிம்
நபித்தோழர்கள் நபியின் இரத்தத்தைக் குடித்தார்கள் என்று வாதிடக்கூடியவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதில் ஹின்ந் பின் காசிம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.
எதிர் தரப்பினர் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் காட்டும் செய்திகளில் இந்தச் செய்தி தான் ஓரளவுக்குப் பரவாயில்லை என்று கூறும் நிலையில் குறைவான பலவீனத்தைக் கொண்டுள்ளது என்றாலும் இதில் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர் இருப்பதால் இதுவும் பலவீனமான செய்தியாகும்.
ஒரு பேச்சுக்கு இது சரியான செய்தி என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் வாதத்துக்கு எதிராகவே இந்தச் செய்தி அமைந்துள்ளது.
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபியின் இரத்தத்தைக் குடித்த போது, “உன்னை நரகம் தீண்டாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்படிக் கூறியிருந்தால் இந்த நபித்தோழர் செய்த செயலை நபியவர்கள் அங்கீகரித்தார்கள் என்று பொருள் வரும்.
ஆனால் அவ்வாறு கூறாமல் “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்’ என்று கடிந்து கொள்கிறார்கள். எனவே நபியின் இரத்தமாக இருந்தாலும் அதைக் குடிப்பது கூடாது; இது அநாகரீகமான செயல் என்று இந்தச் செய்தி கூறுகின்றது