நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும், சில நபித்தோழர்களின் கப்ருகளும் உயரமாக இருந்ததாகக் கூறப்படும் அறிவிப்புகளையும் தர்கா கட்டுவதற்கு ஆதாரமாக சிலர் எடுத்து வைக்கின்றனர்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பற்றிய அறிவு இல்லாதவர்கள் தான் இதுபோன்ற வாதங்களை எடுத்து வைக்க முடியும்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 5:3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ்வால் இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் நபியவர்களின் காலத்துக்குப் பின்னால் இஸ்லாம் என்ற பெயரில் எது நுழைந்திருந்தாலும், அது யாரால் நுழைக்கப்பட்டு இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் அது சமுதாயத்தில் வழக்கத்தில் இருந்தாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை. அது பித்அத் எனும் வழிகேடாகும்.
صحيح مسلم
4589 – حدثنا أبو جعفر محمد بن الصباح وعبد الله بن عون الهلالى جميعا عن إبراهيم بن سعد قال ابن الصباح حدثنا إبراهيم بن سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف حدثنا أبى عن القاسم بن محمد عن عائشة قالت قال رسول الله -صلى الله عليه وسلم- « من أحدث فى أمرنا هذا ما ليس منه فهو رد ».
நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு நல்லறத்தை உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
நூல் : முஸ்லிம் 4590
من عمل عملا ليس عليه أمرنا فهو رد
நமது மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : புகாரி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை அவர்களின் மரணத்திற்குப் பின் யாரேனும் செய்தால் அது ஒருக்காலும் மார்க்க ஆதாரமாக ஆகாது.
நபித்தோழர்கள் காலத்தில் நபிகள் நாயகத்தின் கப்ரு உயரமாக கட்டப்பட்டு இருந்ததா என்றால் அதுவும் உண்மை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரு உயரமாக இருந்தது என்று வாதிடுவோர் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
صحيح البخاري
حدثنا محمد بن مقاتل، أخبرنا عبد الله، أخبرنا أبو بكر بن عياش، عن سفيان التمار، أنه حدثه: «أنه رأى قبر النبي صلى الله عليه وسلم مسنما»
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை உயரமாகப் பார்த்தார்.
நூல் : புகாரி 1390
நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்ததாகக் கூறும் ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்லர். நபித்தோழர்கள் காலத்துக்குப் பின் அவர் பார்த்தது மார்க்க ஆதாரமாகாது. நபித்தோழர்கள் காலத்தில் அவ்வாறு உயரமாக்கப்பட்டு இருந்தது என்பதற்குக் கூட ஆதாரமாக ஆகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உயரமாக இருந்ததைப் பார்த்ததாக சுஃப்யான் அத்தம்மார் கூறுவது உண்மையாக இருந்தால் கூட இன்று தர்காக்களில் நாம் காணும் கப்ரைப் போல் இருந்திருக்கும் என்று அதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் இவரது காலத்துக்குப் பின் உமர் பின் அப்துல் அஸீஸ் என்பாரின் காலத்தில் உஸைம் பின் பிஸ்தாம் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை நான்கு விரல்கடை உயரத்தில் பார்த்ததாகக் கூறுகிறார். அதாவது சுமார் மூன்று இஞ்ச் உயரத்தில் பார்த்துள்ளார்.
السيل الجرار
وأخرج أبو بكر الآجري في صفة قبر النبي صلى الله عليه و سلم عن عثيم بن بسطام المديني قال رأيت قبر النبي صلى الله عليه في إمارة عمر بن عبد العزيز فرأيته مرتفعا نحوا من أربع أصابع
فتح الباري لابن حجر
وقد روى أبو بكر الآجري في كتاب صفة قبر النبي صلى الله عليه وسلم من طريق إسحاق بن عيسى بن بنت داود بن أبي هند عن غنيم بن بسطام المديني قال رأيت قبر النبي صلى الله عليه وسلم في إمارة عمر بن عبد العزيز فرأيته مرتفعا نحوا من أربع أصابع
சுஃப்யான் அத்தம்மார் என்பாரின் காலத்துக்குப் பின்னர் உள்ள காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் மூன்று இஞ்ச் உயரத்தில் இருந்தால் அதற்கு முன்னர் இதே உயரத்திலோ, இதைவிட குறைவான உயரத்திலோ தான் இருந்திருக்கும்.
மேலும் நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் மூன்று இஞ்ச் உயரத்துக்கு சுண்ணாம்பு அல்லது காரை பூசப்பட்டு இருந்ததாகக் கூட இதில் கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.