நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா?

நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான்.

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளையும், ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.

நூல்: முஸ்லிம் 2137  //நபி வழியில் ஹஜ்  பக்கம்: 44

எட்டாம் நாளின் தொழுகை என “லுஹர், அசர், மக்ரிப், இஷா” என இந்த இடத்தில் பீஜே குறிப்பிட்டுள்ளார். மேலும் பஜ்ர் தொழுகைஅயிக் குறிப்பிடும் போது ஒன்பதாம் நாளின் “பஜ்ர்” எனக் குறிப்பிட்டு  நாளின் ஆரம்பம் “பஜ்ர்” என்பதை அவரே ஒப்புக்கொள்கின்றார்.

இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீஸை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள், தான் எழுதியுள்ளதற்கு நேர்முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களைக் குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.

இது தான் அவர்கள் எழுதிய விமர்சனம். இதன் உண்மைத் தன்மை என்ன?

ரஸ்மின் இலங்கை

பதில்:

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும், பல ஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்குத் தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவை அனைத்துமே இவர்களுக்கு எதிராகவும், இவர்களின் அறியாமையைப் பறைசாற்றக் கூடியதாகவும் உள்ளன. இந்த விஷயமும் அந்தப் பட்டியலில் சேர்கின்றது.

மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும், ஹதீஸும் தான்.  பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது.

பீஜே முஸ்லிம் நூலை மேற்கோள் காட்டி ஒரு கருத்தைக் கூறினால் அதை விமர்சிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும். முஸ்லிம் நூலை எடுத்துப் பார்த்து பீஜே சொன்ன கருத்தில் அது உள்ளதா என்று உறுதி செய்து கொண்டு வாதிட வேண்டும்.

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று புகாரியில் ஒரு ஹதீஸ் உள்ளதாக பீஜே குறிப்பிட்ட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி புகாரியில் இருந்தால் தான் நாளின் துவக்கம் பஜ்ரு என்பதற்கு பிஜேயே ஆதாரத்தை எடுத்து தந்து விட்டார் என்று வாதிடலாம்.

பீஜே சொன்னபடி புகாரியில் இல்லாவிட்டால் பிஜே தவறாகச் சொல்லி விட்டார் என்று தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். புகாரியில் உள்ளதாக பீஜே கூறிவிட்டதால் நாளின் துவக்கம் பஜ்ரு என்பது  நிரூபணமாகி விட்டது என்று அறிவிலியைத் தவிர யாரும் சொல்ல மாட்டார்கள்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இவர்களின் விமர்சனத்தை நாம் ஆய்வு செய்வோம்.

பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. இந்தக் கும்பல் முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை.

முதலில் முஸ்லிம் நூலில் உள்ளது என்ன என்பதையும், பீஜே மேற்கண்டவாறு கூறியது ஏன் என்பதையும் நாம் விரிவாக விளக்குவோம்.

صحيح مسلم

فَلَمَّا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ تَوَجَّهُوا إِلَى مِنًى فَأَهَلُّوا بِالْحَجِّ وَرَكِبَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ

இது தான் முஸ்லிமில் உள்ள வாசகம். ஆலமியா இலக்கப்படி 2137 வது ஹதீஸாகவும், தமிழாக்கத்தில் உள்ள இலக்கப்படி 3009 வது ஹதீஸாகவும் இடம் பெறும் மிக நீண்ட ஹதீஸில் விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி இது தான்.

எட்டாம் நாள் ஆன போது மினாவுக்குச் சென்றனர். லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுதனர்

 என்று தான் மூலத்தில் உள்ளது.

அதாவது இந்த ஹதீஸில் ஒன்பதாம் நாளின் பஜ்ரு என்று கூறப்படவில்லை. நான்கு தொழுகைகளைக் கூறி விட்டு பஜ்ரைக் கூறும் போது ஒன்பதாம் நாள் பஜ்ர் என்றோ அடுத்த நாள் பஜ்ரு என்றோ கூறினால் தான் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்ற கருத்து வரும். அவ்வாறு கூறப்படாததால் இவர்கள் வாதிடும் கருத்து இந்த ஹதீஸில் இல்லவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நாளின் ஆரம்பம் எது என்று முடிவு செய்ய இதில் ஒன்றுமே இல்லை.

இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகத்தை வைத்து முடிவு செய்வதாக இருந்தால் லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று கூற வேண்டும். ஏனெனில் எட்டாம் நாள் லுஹர் என்று துவங்கி பஜ்ர் வரை சொல்லப்படுகிறது. அதாவது லுஹரும் எட்டாவது நாள் தான். அசரும் எட்டாவது நாள் தான். மக்ரிபும் எட்டாவது நாள் தான். இஷாவும் எட்டாவது நாள் தான். பஜ்ரும் எட்டாவது நாள் தான் என்ற கருத்து தான் இந்த வாசகத்தில் உள்ளது. அடுத்த லுஹர் வந்தால் தான் மறு நாள் ஆரம்பமாகும் என்று தான் வாசக அமைப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று இவர்கள் வாதிட்டால் இந்த ஹதீஸை ஏற்கும் விஷயத்தில் இவர்களை நேர்மையாளர்கள் எனலாம்.

இதை ஆதாரமாகக் காட்டும் வரட்டுக் கும்பல் இனிமேல் லுஹரில் இருந்து நோன்பை ஆரம்பிப்ப்பார்களா? அவ்வாறு ஆரம்பிக்க மாட்டார்கள் என்றால் இவர்கள் மேற்கண்ட ஹதீஸை மறுக்கிறார்கள் என்பது உறுதி.

நம்முடைய கருத்துப்படியும், உலக முஸ்லிம்கள் கருத்துப்படியும் பார்த்தால் லுஹர், அஸர் ஒரு நாளாகவும், மக்ரிப், இஷா, பஜ்ர் மறு நாளாகவும் உள்ளது. ஹிஜ்ரா கும்பலின் கருத்துப்படி லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகியவை ஒரு நாளாகவும், பஜ்ரு மறு நாளாகவும் உள்ளது. இரண்டு நாட்களுக்கு உரிய தொழுகைகளைக் குறிப்பிடும் போது எட்டாம் நாள் என்ற வார்த்தையால் ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்.

வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும், பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்தும் எட்டாம் நாள் என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டுள்ளன.

நம்முடைய வாதப்படியும், வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ, மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது.

பிறகு ஏன் அறிவிப்பாளர் இப்படிச் சொல்ல வேண்டும்? இதன் விடை மிக எளிதானது.

மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரு நாளில் ஆரம்பித்து மறு நாள் வரை தொடரும் செயல்களை முதல் நாளுக்குரியது போல் பேசுவது வழக்கத்தில் உள்ளது.

எட்டாம் தேதி பகலிலும், பின்னர் இரவிலும், பின்னர் காலையிலும் சாப்பிட்டேன் என்று ஒருவர் கூறினால் மறுநாள் காலையை முதல் நாளில் சேர்த்து விட்டார் எனக் கூற மாட்டோம்.

வெள்ளிக்கிழமை ஜும்மாவையும், அஸரையும், மக்ரிபையும், இஷாவையும், பஜரையும் தொழுதேன் என்று கூறினாலும் அதுவும் இதே போன்றது தான்.

பேச்சு வழக்கில் ஜாபிர் அவர்கள் இப்படிக் கூறியதால் தான் இரண்டு நாட்களில் நடக்கும் செயலை ஒரு நாளுக்குரியது போல் சொல்கிறார்.

எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும்.

பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழிமுறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. பீஜே ஒன்பதாம் நாள் என்று குறிப்பிட்டதும் இதே பேச்சு வழக்கில் தான். வரட்டு ஹிஜ்ரா கூட்டத்தின் உளறல்கள் இல்லாத காலத்தில் இது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

இப்போது கூறுகெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டுபிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக் கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சு வழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம்.

நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் பீஜே சொல்லைத் தான் ஆதாரமாக்க் காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை.