நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?
நாம் பாவம் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?
நிஸாருத்தீன்
பதில்
திருக்குர்ஆன் 4:64 வசனத்தைச் சரியாக விளங்காத சிலர் இப்படி கூறித் திரிகிறார்கள்.
وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا (64) النساء : 4
(முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்து விட்டு உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 4:64
பாவம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு, நபிகள் நாயகத்திடம் வந்து, அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் மன்னிப்பான் என்று இவ்வசனம் கூறுகிறது.
இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.
யார் எந்தப் பாவம் செய்தாலும் அதற்கு மன்னிப்பு கிடைக்க வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டுமாறு கூற வேண்டும். அப்போது தான் அல்லாஹ் மன்னிப்பான் என்றும் பொருள் கொள்ள முடியும்.
அல்லது பாவம் செய்தவர் தானும் மன்னிப்பு கேட்டு, அவருக்காக நபியும் இறைவனிடம் மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு என்ற கருத்தும் இதற்கு கொடுக்கலாம்.
ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட பின் பாவம் செய்த நபித்தோழர்கள் தினமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் தங்களுக்காக பாவ மன்னிப்பு கோருமாறு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கவில்லை.
இதில் இருந்து இவ்வசனத்துக்கு முதலாவது அர்த்தம் கொள்ள முடியாது என்பதை அறியலாம்.
மேலும் நமக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பான் என்று இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பிறகு வாழும் யாருக்கும் இறைவனின் மன்னிப்பு கிடைக்காமல் போய் விடும். இதன் காரணமாகவும் முதல் அர்த்தம் கொடுக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று நமக்காகப் பாவமன்னிப்புத் தேடுமாறு அவர்களிடம் கேட்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள், பாவம் செய்து விட்டு தாமும் மன்னிப்புக் கேட்டு நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான் என்று தான் இவ்வசனம் கூறுகிறதே தவிர மரணித்த பிறகு அடக்கத்தலம் சென்று பாவமன்னிப்புக் கோருமாறு கூறவில்லை.
இவ்வசனத்தின் இறுதியில் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் காண்பார்கள் என வருங்கால வினையாகக் கூறாமல் கண்டிருப்பார்கள் என்று இறந்தகால வினைச் சொல்லாக இறைவன் கூறியிருப்பதிலிருந்து இதைத் தெளிவாக விளங்கலாம்.
இவ்வாறு வாதிடக் கூடியவர்கள் ஒவ்வொரு பாவம் செய்தவுடன் மதீனா சென்று விட்டு வர வேண்டும். பெரிய செல்வந்தர்களுக்கு மட்டும் தான் மன்னிப்புக் கிடைக்கும். மதீனா செல்ல முடியாத ஏழைகளுக்குக் கிடைக்காது.
தனது மரணத்துக்குப் பின் மக்கள் தன் மண்ணறையைத் தேடி வரக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
سنن أبي داود
2042 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் வீடுகளை அடக்கத் தலங்கலாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத்
தனது மண்ணறையில் மக்கள் குழுமிவிடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடையும் என்று போதிக்கிறார்கள்.
நபியவர்கள் மீது நாம் கூறும் சலவாத்தை வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.
مسند أحمد
3666 – حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ لِلَّهِ فِي الْأَرْضِ مَلَائِكَةً سَيَّاحِينَ، يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ “
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : அஹ்மத்
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது, அவர்களே அல்லாஹ்விடம் அம்மக்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும் போது இறைவன் மன்னிக்க அதிக வாய்ப்பு உண்டு என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.
நபிகள் நாயகத்தின் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஒவ்வொரு பாவம் செய்யும் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் சென்று தமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு வேண்டவில்லை என்பதைப் புரிந்து கொண்டால் குழம்ப மாட்டார்கள்.
02.06.2011. 13:05 PM