,நபியின் மனைவியர் அனைவருக்கும் எப்படி தாயாவார்கள்?
கேள்வி
புகாரி 3443 ஹதீஸின் படி இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே என்பதின் விளக்கம் என்ன?
பைபிளில் இறைவனே எல்லோருக்கும் தந்தை என்ற வசனத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் இஸ்லாமியர்கள் குர்ஆனில் முகமது அவர்களின் மனைவிகள் முஸ்லிம்கள் அனைவருக்கும் தாய் என்று சொல்லப்பட்டுள்ள வசனத்தை முழுமையாக மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்த ஹதீஸின் படி அனைத்து இறைத்தூதர்களின் தந்தையார்?
என்று கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில்?
பதில்
கடவுள் என்பவர் தனித்தவர். அவருக்குப் பெற்றோரும் பிள்ளைகளும் இருக்கக் கூடாது. இது தான் கடவுள் குறித்த சரியான நிலைப்பாடாகும்.
கடவுளுக்குப் பிள்ளைகள் இருக்கக் கூடாது; அது கடவுள் தன்மைக்கு இழுக்கானது எனும்போது இயேசுவையோ, பிற மனிதர்களையோ கடவுளின் குமாரர்கள் என்று சொல்வது எப்படிச் சரியாகும்.?
நாகரீகமுள்ள சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் தான் இருக்க முடியும். ஒரு பெண் என் கணவன்மார்களே என்று சொன்னால் அல்லது உலகில் உள்ள எல்லா ஆண்களும் எனக்கு கணவர்கள் என்று சொன்னால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதை விட மோசமான வார்த்தை தான் கடவுளின் குமாரர்கள் என்ற வார்த்தையும்.
கடவுளுடன் ஒப்பிடும் போது அற்பத்திலும் அற்பமான மனிதனைக் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்வது கடவுளுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். கடவுளின் தகுதியை அது குறைத்து விடும்.
ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை முஸ்லிம்களின் அன்னையர் என்று சொல்வதை இதனுடன் ஒப்பிடக் கூடாது.
ஏனெனில் அன்னை என்ற சொற்பிரயோகம் பெண்களுக்கு கண்ணியம் சேர்ப்பதாகும். எந்தப் பெண்ணும் தன்னை விட வயது குறைந்த ஆண்களை மகனே என்று கூப்பிடலாம். இப்படி கூப்பிடுவதை உலகில் யாருமே அருவருப்பாகப் பார்க்க மாட்டோம்.
அது போல் தன்னை விட வயது முதிர்ந்த எந்தப் பெண்ணையும் ஒருவன் அம்மா என்று அழைக்கலாம். இதையும் யாரும் இழிவாகக் கருத மாட்டோம். மேடைகளில் பேசும் போது தாய்மார்களே என்று அழைக்கலாம். என் பெண்டாட்டிமார்களே என்று அழைக்க முடியாது.
அந்த அடிப்படையில் நபிகள் நாயகத்தின் மனைவியரை அன்னையர் என்கிறோம். இது மரியாதைக்குரியது தான். கேவலமானது அல்ல.
கடவுளுக்குப் பிள்ளைகள் இருப்பதாக நம்புவது கடவுளைக் கேவலப்படுத்தும் சொல் என்பதால் அது போன்ற சொற்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தாமல் கடவுளில் அடிமைகள் என்ற சொல்லைப் பயன்படுத்த இஸ்லாம் வழிகாட்டுகிறது.