நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?
மற்ற அரசியல் இயக்கங்களை குறை கூறி கொண்டு இருக்கும் நீங்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போல ஒரு முன்னுதாரணமான அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க முடியவில்லையே?
உங்கள் கேள்வியே முரண்பாடாக உள்ளது. தமிழ் நாடு தவ்ஹீத் போல் என்று நீங்கள் பாராட்டும் வகையில் உதாரணம் காட்டுகிறீர்களே அதற்குக் காரணம் தேர்தலில் போட்டியிடாமல் சமுதாயத்துக்கு உழைப்பதால் தான். எப்போது தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுக்கின்றோமோ அப்போதே சாக்கடையாக மாறி விடுவோம்.
உதாரணத்துக்கு தமுமுகவை நாம் துவக்கிய போது அப்துஸ் ஸமது, காதர் மைதீன், அப்துல்லதீப் ஆகியோரை எப்படி விமர்சனம் செய்தோம்?
இவர்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஐந்து சீட்டு வாங்கிக் கொண்டு சமுதாயத்தின் மானத்தைக் கப்பலேற்றுகிறார்கள் என்று கேவலமாகப் பேசினோம். ஆனால் மாற்றி யோசிக்கப் புகுந்த தமுமுக மூனு சீட்டு வாங்கி விட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதில் பெருமை அடிக்கிறதைப் பார்க்கிறோம். இவர்கள் எதைக் குறை சொன்னார்களோ அதையே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தேர்தலில் போட்டியிட்டு பதவியைப் பெற முடிவு எடுத்து விட்டால் கூட்டணி வைத்துள்ள பெரிய கட்சிக்கு ஜால்ரா போடுகின்றனர். பெரிய கட்சிகள் துரோகம் செய்தாலும் கண்டும் காணாமலும் உள்ளனர் என்று தமுமுகவினர் அன்றைக்கு முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்தனர்.
ஆனால் மோடியை அழைத்து பதவி ஏற்பு விழா நடத்திய ஜெயலலிதாவை தமுமுகவால் கண்டிக்க முடிகிறதா? முஸ்லிம்களைக் கருவறுத்த மோடி போன்றவர்களின் கைகளைக் கட்டிப் போடும் வகையில் மதக் கலவரத் தடுப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதைக் கொண்டு வர வேண்டும் என்று தமுமுக உள்பட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. ஆனால் அதை ஜெயலலிதா எதிர்த்து முஸ்லிம்களுக்கு பச்சைத் துரோகம் செய்த போதும் தமுமுக வாய் திறக்கவில்ல. திமுகவில் கூட்டணியாக இருந்த போதும் திமுகவின் ஒரு துரோகத்தையும் தமுமுக கண்டித்ததில்லை. ஆம் மற்ற இயக்கங்களை இந்தக் காரணத்தைச் சொல்லித் தான் தமுமுக விமர்சனம் செய்து தன்னை வித்தியாசமான இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால் அதையே செய்யும் கேவலம் தேர்தல் ஆசையால் தான் வந்தது.
காதர் மைதீன் சாமியார் காலில் விழுந்தார், சாமியாரிடம் ஆசி வாங்கினார் என்றெல்லாம் திட்டி திட்டித்தான் தமுமுக தன்னை தனித்துக் காட்டியது.
ஆனால் தேர்தல் போதை வந்த பின்னர் தமுமுக தலைவர் சாமியாரிடம் ஆசி வாங்குகிறார். இயேசுவைக் கடவுளின் மகனாகச் சித்தரிக்கும் பாடலை வெளியிடுகிறார். கிறித்தவர்கள் நடத்திய சப்பரத் திருவிழாவில் கலந்து கொள்கிறார். வடம் பிடித்தாரா என்று தெரியவில்லை. முகஸ்துதி சிறிய இணைவைத்தல் என்ற நூலை மொழி பெயர்த்தவருக்கு இன்று பெரிய இணைவைப்பு சாதாரணமாகி விட்டது.
காரணம் ஓட்டுப் பொறுக்குவது என்றால் இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும். இணை கற்பித்தலை எதிர்த்தவர்களே இன்று இணை கற்பித்து நிரந்தர நரகத்துக்கு ஆளாவது பற்றி கவலைப்படவில்லை என்றால் அதையே நாம் எப்படி செய்ய முடியும்.
இது போன்ற உசுப்பேற்றும் சகோதரர்களால் தான் தமுமுக தொலைந்து போனது போல் தவ்ஹீத் ஜமாஅத் செல்லாது. எவ்வளவு தான் ஆசை வார்த்தை காட்டினாலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் திரண்டாலும் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுக்க மாட்டோம். இன்ஷா அல்லாஹ்
உணர்வு 15:49