நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா?

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلَافًا كَثِيرًا وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّهَا ضَلَالَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ رواه الترمذي

அபூ நஜீஹ் இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் உள்ளங்கள் உருகி கண்களில் கண்ணீர் வரும் உருக்கமான உரையாற்றினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இது விடை பெறுபவர் ஆற்றும் உரையைப் போன்று இருக்கின்றதே? எங்களுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள் என்று கேட்டோம். அப்போது அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுவதையும், அபிசீனிய அடிமை உங்களுக்குத் தலைவரானாலும் நீங்கள் செவியேற்று கட்டுப்படுவதையும் உங்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். உங்களில் (எனக்குப் பின்பு) வாழ்பவர் அதிகமான வேறுபாடுகளைக் காண்பார். அப்போது நீங்கள் எனது வழியையும், நேர்வழிகாட்டப்பட்டு நேர்வழியில் செல்லும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். கடவாய்ப் பற்களால் அதை (வலுவாக) பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் வழிகேடாகும்.

நூல்கள் : திர்மிதீ (2676) அபூதாவூத் (4607)

நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களின் வழியைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அவர்களுக்குப் பிறகு ஆட்சி செய்த அபூபக்ர் (ரலி). உமர் (ரலி). உஸ்மான் (ரலி). அலீ (ரலி) ஆகிய நான்கு கலீபாக்களை மார்க்க விசயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்றாலும் இவர்களின் வாதத்திற்கும், இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்கள் கூறும் கருத்தை நிராகரிக்கும் வகையில் தான் இந்த நபிமொழி அமைந்துள்ளது.

இவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் குறிப்பிடுகின்ற நான்கு சஹாபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற யாரையும் பின்பற்றக்கூடாது. ஆனால் இவர்கள் இந்த நான்கு சஹாபாக்கள் அல்லாத மற்ற நபித்தோழர்களையும் ஏன் நபித்தோழர்களல்லாத தாபியீன்கள், இமாம்கள், ஊர் பெரியார்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் பலரைப் பின்பற்றுகின்றனர். பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கு மேற்கண்ட செய்தி ஆதாரமாக ஆகாது.

இதை ஆதாரமாக இவர்கள் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற கருத்தைத் தகர்ப்பதற்கு இந்தச் செய்தி உதவும் என்று நம்புகின்றனர்.

இந்த நபிமொழி, இவர்களின் வாதத்தை தவிடுபொடியாக்கும் விதத்தில் தான் அமைந்துள்ளது. தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று நினைத்துக்கொண்டு தங்களுக்கு எதிரான ஆதாரத்தையே கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸில் இவர்கள் வைக்கும் வாதம் பல காரணங்களால் தவறாகும். அந்தக் காரணங்களை ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்.

நான்கு கலீபாக்களை மட்டுமா பின்பற்ற வேண்டும்?

இந்த ஹதீஸில் எனது வழிமுறையையும், நேர்வழிபெற்ற கலீஃபாக்களின் வழி முறையையும் பற்றிப்பிடியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். கலீஃபாக்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நான்கு கலீஃபாக்கள் என்று கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலீஃபாக்கள் நால்வர் தான் என்று கூறவில்லை.

குலபாய ராஷிதீன்கள் என்று கூறப்படுவது அபுபக்ர் (ரலி), உமர் (ரலி). உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகிய நால்வர் தான் என்று ஆதாரமில்லாமல் விளக்கம்  கொடுக்கிறார்கள். அது தவறாகும். நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் இந்த நால்வர் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு  12 ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்று கூறியுள்ளனர்.

7223 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَكُونُ اثْنَا عَشَرَ أَمِيرًا فَقَالَ كَلِمَةً لَمْ أَسْمَعْهَا فَقَالَ أَبِي إِنَّهُ قَالَ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ رواه البخاري

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்” என்று சொல்ல நான் கேட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா-ரலி) அவர்கள்,  “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி (7223)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய ஆட்சி அமைப்பின் அடிப்படையில் அந்தப் பன்னிரண்டு பேரும் ஆட்சி செய்வார்கள் என்று முஸ்லிமில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு கூறுகின்றது.

صحيح مسلم

5 – (1821) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ح وحَدَّثَنَا رِفَاعَةُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللهِ الطَّحَّانَ، عَنْ حُصَيْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ يَقُولُ: «إِنَّ هَذَا الْأَمْرَ لَا يَنْقَضِي حَتَّى يَمْضِيَ فِيهِمِ اثْنَا عَشَرَ خَلِيفَةً»، قَالَ: ثُمَّ تَكَلَّمَ بِكَلَامٍ خَفِيَ عَلَيَّ، قَالَ: فَقُلْتُ لِأَبِي: مَا قَالَ؟ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»

 “பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இஸ்லாம் வலிமையோடும், பாதுகாப்போடும் இருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح مسلم

9 – (1821) حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، ح وحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَزْهَرُ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: انْطَلَقْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي أَبِي، فَسَمِعْتُهُ يَقُولُ: «لَا يَزَالُ هَذَا الدِّينُ عَزِيزًا مَنِيعًا إِلَى اثْنَيْ عَشَرَ خَلِيفَةً»، فَقَالَ كَلِمَةً صَمَّنِيهَا النَّاسُ، فَقُلْتُ لِأَبِي: مَا قَالَ؟ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»

நான் என் தந்தை அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும், பாதுகாப்போடும் இருந்து வரும்” என்று சொல்லக் கேட்டேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல் : முஸ்லிம்

நேர்வழிபெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிட்ட முதல் நான்கு கலீபாக்களை மட்டும் குறிக்காது. நபிகள் நயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த 12 ஆட்சித் தலைவர்களைக் குறிக்கும்.

அந்த பன்னிருவரின் பெயர் பட்டியல் கூட இருக்கிறது.

அபூபக்கர்

உமர்

உஸ்மான்

அலி

அப்துல்லாஹ் பின் சுபைர்

அப்துல் மலிக் பின் மர்வான்

அல் வலிது பின் அப்துல் மலிக்

ஸுலைமான் பின் அப்துல் மலிக்

உமர் பின் அப்துல் அஜீஸ்

யஸீது பின் அப்துல் மலிக்

ஹிசான் பின் அப்துல் மலிக்

வலிது பின் யஸீது பின் அப்துல் மலிக்

முஆவியாவை விட்டு விடுவார்கள். முஆவியாவும் ஒரு வகையில் நல்லாட்சி செய்பவராகத் தான் இருந்தார். அவரைச் சேர்த்துக் கொண்டால் கடைசியாக உள்ள ஒரு நபரைக் கழித்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பன்னிரண்டு பேரில் நான்கு கலீஃபாக்களுடன் அப்துல்லாஹ் பின் ஜுபைர், உமர் பின் அப்து அஜீஸ் ஆகியோரைத் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள ஆறு ஆட்சியாளர்களும் மார்க்கத்திற்கு மாற்றமான நிறைய தவறுகளைச் செய்திருக்கிறார்கள். இவர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நபிமொழி அமைந்துள்ளதால் மார்க்க விஷயத்தில் இவர்களைப் பின்பற்றத் தகுதியற்றவர்கள் ஆவர்.

மேற்கண்ட ஹதீஸின் படி இந்த 12 கலீஃபாக்களையும் மார்க்க விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூற வேண்டும். ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவோர் அவ்வாறு கூறுவதில்லை. முதல் நான்கு கலீஃபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.

எனவேஇந்த ஹதீஸ் நான்க்8உ கலீஃபாக்களை மட்டும் குறிக்கவில்லை என்பதால் இவர்கள் கூற வரும் கருத்திற்கும் இவர்கள் காட்டும் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலீபாக்களை பின்பற்றச் சொன்னது இவர்கள் சொன்ன அர்த்தத்தில் அல்ல. வேறு பொருளில் என்பதையும் உணர முடியும். அதன் விளக்கத்தை அறிந்துகொள்வோம்.

மார்க்க விசயத்தில் பின்பற்றக் கூடாது

மேற்கண்ட ஹதீஸின் இறுதியில்

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும்

எனவும் மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மார்க்க விஷயத்தில் யாரையும் பின்பற்றக் கூடாது என்ற கொள்கையை இந்த ஹதீஸின் இறுதியில் நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக்கி விட்டதால் கலீஃபாக்களைப் பின்பற்றச் சொன்னது மார்க்க விஷயத்தில் அல்ல என்று அறிந்து கொள்ளலாம்.

மார்க்க விஷயத்தில் பின்பற்றுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி கியாமத் நாள் வரை நமக்கு இருக்கின்றது. மார்க்கம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்த நபிவழியில் இருக்கின்றது. எனவே தான் பித்அத்தைப் பின்பற்றி விடாதீர்கள் என்று எச்சரிக்கையுடன் இதைக் கூறியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் சமுதாயத்தின் நன்மை கருதி எடுக்கும் உலக சம்பந்தமான முடிவுகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். சிறு சிறு பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளம்பினால் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி ஒழிந்து விடும். சமுதாயத்தின் கட்டமைப்பும் பாதுகாப்பும் சீர் குலைந்து போய்விடும். எனவே தான் நபிகள் நாயாகம் (ஸல்) அவர்கள் மார்க்க விசயத்தில் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையுடன் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் போதிக்கிறார்கள்.

குறிப்பிட்ட நான்கு கலீஃபாக்களை மட்டும் சொல்லாமல் தனக்குப் பிறகு வரும் 12 கலீபாக்கள் குறித்தும் அவர்களின் வழியைக் கடைப்பிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) உத்தரவிட்டுள்ளார்கள்.

மார்க்க விசயத்தில் 12 கலீஃபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கூடச் சொல்வதில்லை.

மேலும் கறுப்பு நிற அடிமை உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் கட்டுப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனெனில் நான்கு கலீபாக்களில் யாரும் கருப்பு நிற அடிமையாக இருக்கவில்லை. மேலும் பன்னிரண்டு கலீஃபாக்கள் மட்டுமின்றி அவர்கள் அல்லாத ஒரு அடிமை கலீஃபாவாக ஆனாலும் பின்பற்றச் சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு மார்க்க விஷயத்திற்கு பொருந்தாது என்பதைக் காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்னால் நீங்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள் என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த அதிகமான குழப்பங்கள் ஆட்சி விசயத்தில் தான் ஏற்பட்டது. ஆட்சி விவாகரத்தில் எனக்குப் பின்னால் பிரச்சனைகள் வரும் அப்போது பிரச்சனைகளில் ஈடுபடாமல் இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இன்னொரு உதாரணத்தின் மூலம் ஆட்சியாளருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். பின்வரும் அறிவிப்பில் இதை அறியலாம்.

43حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ

அபிசீனிய அடிமையானாலும் கட்டுப்படுங்கள். ஏனென்றால் இறைநம்பிக்கையாளன் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகத்தைப் போன்று இருப்பார். அந்த ஒட்டகம் இழுத்துச் செல்லப்பட்டால் அதற்குப் பணிந்து செல்கின்றது.

நூல் : இப்னு மாஜா

எங்கு இழுத்தாலும் அதற்குக் கட்டுப்பட்டுச் செல்லும் ஒட்டகத்தைப் போன்று இருக்க வேண்டும் என்ற உத்தரவு கண்டிப்பாக மார்க்க விஷ்யத்தில் இருக்க முடியாது.

ஆட்சியாளர் மது குடிக்கவோ, விபச்சாரம் செய்யவோ, மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தைச் செய்யவோ சொன்னால் அப்போது அவர்களுக்குக் கட்டுப்பட முடியாது. மார்க்கம் வலியுறுத்திய தொழுகை போன்ற காரியங்களுக்குத் தடை விதித்தால் அதற்கும் கட்டுப்பட முடியாது. அதே போன்று மார்க்கத்தில் இல்லாத ஒரு விசயத்தை மார்க்கம் என்று போதித்தால் இதுவும் மார்க்கத்திற்கு முரணான காரியம். இதற்கும் நாம் கட்டுப்படக் கூடாது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலீஃபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறியது அவர்களை நாட்டின் தலைவராக ஏற்று நாட்டின் நலன் கருதி அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற அடிப்படையிலாகும். மேற்கண்ட  செய்தியின் வாசகங்களைக் கவனித்தால் இதை உறுதியாகப் புரிய முடியும்.

ஆட்சியாளர் தன் விருப்பப்படி சட்டமியற்றுவது அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நாட்டின் நலன் சம்பந்தமான விசயத்திற்கு மட்டும்தான். ஆட்சியாளராக இருந்தாலும் மார்க்கத்தில் இல்லாத விசயத்தை செய்யுமாறு கட்டளையிட முடியாது. அப்படி கட்டளையிட்டால் அது வழிகேடு. அது நரகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியது. அதற்கு நாம் கட்டுப்படக்கூடாது என்ற போதனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.

தான் விட்டுச் செல்லும் மார்க்கம் மிகத் தெளிவானது. யாரும் அந்த மார்க்கத்தில் இல்லாததைச் சேர்க்க வேண்டியதில்லை. மார்க்க விசயத்தில் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு எல்லாத் தெளிவுகளையும் கொண்டது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு உணர்த்தினார்கள்.

43حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ

வெண்மையான மார்க்கத்தில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவு கூட பகலைப் போன்றது அழிந்து போகக்கூடியவனைத் தவிர அந்த மார்க்கத்தை விட்டு வேறு யாரும் வழிகெட்டுப் போக மாட்டான்.

நூல் : இப்னு மாஜா (43)

மார்க்க விசயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் இந்த மார்க்கத்தில் முழுமையான தெளிவில்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

மார்க்க விசயத்தில் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களைத் தவிர யாரையும் பின்பற்றக் கூடாது என்று இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக கூறுகிறது