நான்கு வகை உணவுகள் மட்டும் தான் ஹாரமா?

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே விளக்கவுரை எழுதினார். அதன் மூன்றாம் தொடர் இது.)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்:- 2:173

இதே கருத்து 16:115 வசனத்திலும் உள்ளது

“தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட42 பாவமான (உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால்431 உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.171

திருக்குர்ஆன்: 6:145

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் படையல் செய்யப்பட்டவை ஆகிய உணவுகளை முஸ்லிம்கள் அறவே உண்ணக்கூடாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதற்கு பெரிய அளவில் விளக்கம் எதுவும் தேவையில்லை.

ஆனால் இவ்வசனத்தில் அடங்கியிருக்கும் மற்றொரு செய்தியைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்துத் தான் விளக்கம் தேவைப்படுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் – குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர்.

இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் நான்கு உணவுகள் ஹராம் என்பது மட்டும் தெரியவில்லை. மாறாக இந்த நான்கைத் தவிர வேறு எந்த உணவும் ஹராமில்லை என்பதும் தெரிகிறது.

எனக்கு வஹியாக (இறைச் செய்தியாக) அறிவிக்கப்பட்டதில் அந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக நான் காணவில்லை என்ற வாசக அமைப்பிலிருந்தும் தாமாகச் செத்தவை…. ஆகியவற்றைத் தான் ஹராமாக்கியுள்ளான் என்ற வாசக அமைப்பிலிருந்தும் அதை விளங்கலாம்.

எனவே, கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத்தக்கதே என்று இவர்கள் வாதிடுகின்றனர். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மலத்தையும் கூட உண்ணலாம் என்பது இவர்களின் வாதத்தில் அடங்கும்.

இவ்வாறு வாதிடக்கூடிய “அறிவு ஜீவிகள்” தமது வாதத்துக்கு இந்த வசனங்களைத் தான் சான்றுகளாக முன் வைக்கின்றனர்.

இந்நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று அல்லாஹ் தேவையில்லாமல் கூறுவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய், கழுதை போன்றவற்றை ஹராம் என்று அறிவித்துள்ளனர். இது குறித்த ஹதீஸ்கள் யாவும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகவுள்ளதால் அவற்றை நம்பக்கூடாது எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இது குறித்து சரியான விளக்கத்தை அறிய திருக்குர்ஆனை இன்னும் ஆராய வேண்டும்.

ஹலால் ஹராம் குறித்து அந்த வசனங்கள் தவிர வேறு வசனங்கள் உள்ளனவா? எனவும் தேடிப்பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய ஆய்வு இல்லாததன் காரணமாகவே கிறுக்குத்தனமான இத்தகைய வாதங்களை முன் வைக்கின்றனர்.

3. செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.171 கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில்135 அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும்136 (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இது தீயதாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு431 உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.42

திருக்குர்ஆன்: 5:3

இவ்வசனமும் விலக்கப்பட்ட உணவுகளைக் குறிப்பிடும் வசனம் தான். இவ்வசனத்தில் முன்னர் கூறப்பட்ட நான்கு உணவுகளையும் கூறி விட்டு மேலும் சில உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்கைத் தவிர வேறு சில உணவுகள் ஹராம் என்று ஹதீஸ்களில் கூறப்படும் போது “குர்ஆனுக்கு முரண்’ எனக் கூறி நிராகரித்தவர்கள் இப்போது இந்த வசனமே மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருப்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களும், நான்கைத் தவிர வேறு சில உணவுகளும் ஹராம் எனக் கூறும் வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை தான். குர்ஆனில் எந்த முரண்பாடும் இருக்காதே! ஆனால் இங்கே முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே என்று சிந்தித்திருந்தால் சரியான தீர்வைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் ஒரே நாளில் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இறங்கியது என்பதை அனைவரும் அறிவோம். சிறிது சிறிதாக கடமைகளும் கட்டளைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தன.

அந்த அடிப்படையில் நாம் ஆரம்பமாக எடுத்துக் காட்டிய வசனங்கள் எப்போது அருளப்பட்டனவோ அந்தக் கால கட்டத்தில் அந்த நான்கு உணவுகள் மட்டுமே ஹராமாக்கப்பட்டிருந்தன. இவ்வசனங்கள் அருளப்படுவதற்கு முன் அந்த நான்கு கூட ஹராமாக்கப்படாமல் இருந்தன. எதுவுமே ஹராமாக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி நான்கு உணவுகள் முதலில் ஹராமாக்கப்பட்டன. பின்னர் மேலும் சில உணவுகள் ஹராமாக்கப்பட்டன. அதைத் தான் இப்போது நாம் சுட்டிக்காட்டிய 5:3 வசனம் கூறுகிறது.

எனவே நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலைமை. அந்த நிலைமை 5:3 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நான்கு உணவுகளை மட்டும் ஹராம் எனக் கூறும் வசனங்களில் இவை மட்டும் தான். இவை தவிர வேறு இல்லை என்பது போன்ற வாசக அமைப்பைப் பயன்படுத்தியுள்ளான்.

ஆனால், இவ்வசனத்தில் இவற்றைத் தவிர வேறு இல்லை என்று குறிப்பிடவில்லை. இவற்றைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறாததால், மேலும் ஹராம்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை.

இவ்வாறு விளங்கிக் கொண்டால் குர்ஆனுடன் குர்ஆன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும். ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும்.

இறுதியாக அருளப்பட்ட வசனத்தில் எவை ஹராமாக்கப்பட்டுள்ளதோ அவற்றை மட்டும் ஹராம் என்று கூற வேண்டியது தானே? ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது தானே? என்று சிலர் கேட்கலாம்.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் எப்படி ஹராமாக்கலாம் என்று 66:1 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்குத் தான் உள்ளதே தவிர நபிகள் நாயகத்துக்கு இல்லை எனவும் கூறுகின்றனர்.

இதுவும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்: 7:157

29. வேதம் கொடுக்கப்பட்டோரில்27 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல்,186 உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத்201 தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53

திருக்குர்ஆன்: 9:29

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போரிடுமாறு  இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. திருக்குர்ஆனில் தேவையில்லாத ஒரு வார்த்தையும் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும், ரசூலும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

7:157 வசனத்தில் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார் என்று தெளிவாகப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

“கெட்டவை ஹராம் என்று கூறுகிற இறைவன் அவற்றுக்கான விளக்கத்தை நபிகள் நாயகத்தின் இதயத்தில் போடுகிறான். அதன் மூலம் அவர்கள் ஹராமாக்கப்பட்டதை அறிவிக்கிறார்கள்” என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை உமது மனைவியரின் திருப்தியை நாடி நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர் என்ற வசனத்தை (66:1) ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தைச் சரியாக சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம் மீது மட்டும் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனி மேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்கவில்லையானால் அதை தன்னளவில் அவர் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றாலே உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.

அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் அவ்வசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியரின் திருப்தியை நாடி – தமக்கு அதில் விருப்பம் இருந்தும் விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

அல்லாஹ் குர்ஆன் மூலம் எவற்றை ஹலால் என்றோ ஹராம் என்றோ கூறவில்லையோ அத்தகைய பொருட்களில் அல்லாஹ்வின் இன்னொரு வகையான வஹி (இறைச் செய்தி)யைப் பெற்று இவை ஹலால் எனவும், இவை ஹராம் எனவும் அறிவிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்திற்கு இருக்கிறது. மேலே நாம் எடுத்துக் காட்டிய 7:159, 9:29 ஆகிய இரு வசனங்களும் இதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் தெரிவித்து விடுகிறது.