நர்தஷேர் என்பது தாயம் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்களா?

நர்தஷேர் எனும் விளையாட்டைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஹதீஸ் உள்ளது.

صحيح مسلم

10 – (2260) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்)  விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4549.

இந்த ஹதீஸ் அடிப்படையில் நர்தஷேர் எனும் விளையாட்டு ஹராம் என்பதில் சந்தேகம் இல்லை. நர்தஷேர் என்பது நபிகள் காலத்தில் இருந்து பின்னர் இல்லாமல் போய்விட்ட ஒரு விளயாட்டாகும். அது தற்காலத்தில் உள்ள எந்த விளையாட்டையும் குறிக்காது என்று நாம் விளக்கி இருந்தோம்.

நர்தஷேர் என்பது தாயத்தைக் குறிக்கும் என்று பலர் மொழி பெயர்த்துள்ளனர். அதற்கு ஆதாரம் இல்லை என்றும் நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

அந்த ஆக்கத்தைக் காண

https://onlinepj.in/index.php/usual-habit-cultures/usual-habits/entertainment/thayam-pakadai-vilayadalama

மேலே உள்ள ஆக்கத்தை வாசித்து விட்டு இந்த மறுப்பை வாசிக்கவும்

நர்தஷேர் என்பது தாயம் விளையாட்டைத்தான் குறிக்கும் என்று நபித்தோழர்களே விளக்கம் அளித்துள்ளதாக சில செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ‏:‏ إِيَّاكُمْ وَهَاتَيْنِ الْكَعْبَتَيْنِ الْمَوْسُومَتَيْنِ اللَّتَيْنِ يُزْجَرَانِ زَجْرًا، فَإِنَّهُمَا مِنَ الْمَيْسِرِ‏.‏

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள்:

(புள்ளிகளால்) அடையாளம் இடப்பட்ட இரண்டு சதுரங்கத்தை (Dice, Cube) (الْكَعْبَتَيْنِ)  குறித்து எச்சரிக்கை செய்கிறேன். அது சூதட்டாத்தின் ஒரு பகுதியாகும்.

(அல்-அதாப் அல்-முப்ராத் 1270)

நர்தஷேர் என்பது தாயத்தைக் குறிக்கும் என்று நபித்தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளதாக இதை எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன நர்தஷேர் என்பதற்கு தாயம் என்பது தான் விளக்கம் என இப்னு மஸ்வூத் (ரலி) கூறவில்லை. தாயம் விளயாடக் கூடாது என்று தான் இதில் கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு விளயாட்டு இது தான் என்று நபித்தோழர் விளக்கம் கொடுத்தால் அப்போது அது ஹதீஸ் தரத்துக்கு வந்து விடும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்கு விளக்கமாக இல்லாமல் சொந்தமாக நபித்தோழர் ஒரு சட்டம் சொன்னால் அது ஆதாரமாக ஆகாது.

இந்தச் செய்தியில் தாயம் விளையாடக் கூடாது என்று இப்னு மஸ்வூத் (ரலி) சொந்தக் கருத்தைக் கூறியுள்ளார். இது மார்க்க ஆதாரமாக ஆகாது.

மேலும் இது சூதாட்டம் என்று இறுதியில் சொல்கிறார். சூதாட்டம் என்றால் பணம் வைத்து விளையாடுவது தான்.

பணம் வைத்து விளையாடினால் அந்தக் காரணத்துக்காக அதை நாமும் ஹராம் என்றே நமது ஆய்வில் கூறியுள்ளோம்.

பணம் வைத்து விளையாடும் அம்சம் கொண்ட ஒரு விளையாட்டை சூது என்ற காரணத்தால் ஹராம் என்று சொல்லலாம்.

எனவே நர்தஷேர் என்பதற்கு விளக்கமாக இது சொல்லப்படவில்லை.

இது நமது கட்டுரைக்கு மறுப்பாக ஆகாது.

அடுத்து மற்றொரு செய்தியையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ‏:‏ اللاَّعِبُ بِالْفُصَّيْنِ قِمَارًا كَآكِلِ لَحْمِ الْخِنْزِيرِ، وَاللاَّعِبُ بِهِمَا غَيْرَ قِمَارٍ كَالْغَامِسِ يَدَهُ فِي دَمِ خِنْزِيرٍ‏.‏

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

யார் பந்தயம் கட்டி தாயம் (بِالْفُصَّيْنِ) விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியைச் சாப்பிட்டவரை போன்றவராவார்.

யார் பந்தயம் இல்லாமல் தாயம் விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரைப் போன்றவராவார்.

(அல்-அதாப் அல்-முப்ராத் 1277)

மேற்கண்ட இரண்டு செய்தியிலும் பகடைக்காய் தாயம் விளையாட்டை குறிக்க நர்தஷீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. நேரடியாக (சதுரங்கம், Dice, Cube)

(بِالْفُصَّيْنِ – பில்fபுஸ்ஸைனி)

(الْكَعْبَتَيْنِ – அல்கஹ்பதனி)

என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (بِالْفُصَّيْنِ – பில்fபுஸ்ஸைனி) சதுரங்கம் Dice விளையாடியவர் பன்றியின் இறைச்சியில் கையை நனைத்தவரை போன்றவர் ஆவார் என்று கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நர்தஷீர் (نَّرْدَشِير) விளையாடியவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரை போன்றவர் ஆவார் என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள்

நர்தஷீர் (نَّرْدَشِير) என்று கூறியது

பில்fபுஸ்ஸைனி ( بِالْفُصَّيْنِ)

பகடைக்காய் தாயம் விளையாட்டை தான் குறிக்கிறது என்பதை தெளிவாக விளங்க முடிகிறது.

இது அடுத்த ஆதாரமாக வைக்கப்படுகிறது.

அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் தாயம் விளையாடுவது பற்றிய தனது சொந்தக் கூற்றைத் தான் இங்கே சொல்கிறார். நர்தஷேர் என்பதற்கு விளக்கமாக இதைச் சொல்லவில்லை. மறுப்பு சொன்னவர்களும் மேற்கண்ட இரண்டு செய்தியிலும் பகடைக்காய் தாயம் விளையாட்டை குறிக்க நர்தஷீர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்று எழுதி இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு விளயாட்டு பற்றித்தான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) கூறுகிறார். நர்தஷேர் என்பதற்கு தாயம் தான் விளக்கம் என்று அவர் சொல்லவில்லை.

எந்த அடிப்படையில் இதை விளக்கம் என்கிறார்கள் என்று கவனியுங்கள். நர்தஷேர் என்பதற்கும் பன்றி இறைச்சியில் கை வைப்பது என சொல்லப்பட்டுள்ளதாம். தாயம் விளயாட்டுக்கும் பன்றி இறைச்சியில் கை வைப்பது சொல்லப்பட்டுள்ளதாம்  எனவே இது நர்த்ஷேர் என்பதற்கு விளக்கமாக உள்ளதாம்.

கோள் சொன்னால் நரகம் கிடைக்கும்; புறம் பேசினால் நரகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டால் இரண்டிலும் நரகம் கிடைக்கும் என்று உள்ளதால் புறம் என்றால் கோள் என்பது விளக்கம் என்று அறிவுடையோ சொல்ல மாட்டார்கள்.

கொலை செய்தால் நிரந்தர நரகம்; வட்டி வாங்கினால் நிரந்தர நரகம் என்று சொன்னால் இரண்டிலும் நிரந்தர நரகம் என்று உள்ளதால் கொலை என்றால் வட்டி என்று அர்த்தம் என்று சொல்வது ஆய்வா?

எனவே இந்த ஆய்வின் அடிப்படையே தவறாக உள்ளது.

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் சொன்ன அதே வாசகம் இதில் இல்லை.

நர்தஷேர் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது என்ன?

பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர்- இதுதான் நபிகள் சொன்னது.

நர்தஷேர் என்ற விளையாட்டு குறித்து பேசிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணம் வைத்து விளையாடினாலும் பணம் வைத்து விளையாடாவிட்டாலும் பன்றியின் இறைச்சியில் கை வைப்பது என்று பொதுவாக சொல்லி உள்ளனர்.

இந்த நபித்தோழர் கூற்றில் இதே போல் தான் உள்ளதா?

யார் பந்தயம் கட்டி தாயம் (بِالْفُصَّيْنِ) விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியைச் சாப்பிட்டவரை போன்றவராவார்.

யார் பந்தயம் இல்லாமல் தாயம் விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இரத்தத்தில் கையை நனைத்தவரைப் போன்றவராவார்.

இதுதான் நபித்தோழரின் கூற்று

இந்தச் செய்தியில் பந்தயம் கட்டி விளையாடினால் தான் பன்றியின் இறைச்சியில் கை வைப்பது போல் என்றும் பந்தயம் இல்லாமல் விளையாடினால் பன்றியின் இரத்தத்தில் கை வைப்பது போல் என்றும் வித்தியாசப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.

நர்தஷெர் விளையாட்டை பந்தயம் கட்டினாலும் பந்தயம் கட்டாவிட்டாலும் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் கை வைப்பது போல் என்று கூறி சம நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இறைச்சியிலும் இரத்தத்திலும் ஒரு சேர கை வைப்பது என்று நபிகள் கூற்று அமைந்துள்ளது.

எனவே இது அந்த ஹதீஸுக்கு விளக்கமாக ஆகாது.

ஹதீஸில் சொல்லப்படாத தாயம் குறித்து தனது நிலைபாட்டை சொந்தக் கருத்தாகச் சொல்லியுள்ளார்.

பந்தயம் வைத்து விளையாடினால் சூது என்ற அடிப்படையில் அது ஹராம் என்பதால் முற்பகுதியை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

பந்தயம் இல்லாமல் பொழுது போக்காக விளையாடினால் அதை பன்றியின் இரத்தத்தில் கை வைப்பது என்பது நபித்தோழரின் சொந்தக் கருத்தாகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக ஆக்காத ஒன்றை ஹராமாக ஆக்குவதாகும்.

பந்தயம் இல்லாமல் விளையாடினால் அது சீட்டுக்குலுக்கிப் போடுதல் போன்ற நிலையில் தான் வரும் , அதை ஹராம் என்று சொல்ல எந்த முகாந்திரமுமில்லை.