நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி
எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு இறைவன் வழங்கினான் என்று திருக்குர்ஆன் 2:51, 7:142 வசனங்கள் கூறுகின்றன.
7:144,145 வசனங்களில் இதன் பின்னர் (அதாவது ஃபிர் அவ்ன் அழிக்கப்பட்டு தூர் மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்ட போது தான்) வேதம் வழங்கப்பட்டதாக தெளிவாகக் கூறப்படுகின்றது. ஃபிர்அவ்னிடம் சென்று சத்தியத்தை எடுத்துரைத்த போது மூஸா நபிக்கு வேதம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை 7:144, 145 வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மூஸா நபிக்கு வேதம் வழங்கப்படுவதற்கு முன்பே அவர்கள் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தார்கள். தமது சமுதாயத்திற்குப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஃபிர்அவ்னை எதிர்த்துப் போராடினார்கள். இதன் பிறகே அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது என்றால் வேதம் இல்லாமல் வேறு வகை இறைச் செய்தி மூலம் தான் அவர்கள் பிரச்சாரம் செய்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நபிமார்களுக்கு வேதம் அருளப்படுவதுடன் வேதம் அல்லாத வேறு செய்திகளும் வேறு வழியில் வழங்கப்பட்டன என்பதற்கும், வேதம் மட்டுமே இறைச் செய்தி என்று சிலர் கருதுவது தவறு என்பதற்கும் இது சான்றாகும்.