நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

صحيح البخاري

1933 – حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1933, 6669

அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.