உண்ணுதல் பருகுதல் மூலம் நோன்பை முறித்தால் அதற்குபரிகாரம் செய்ய வேண்டுமா?

பதில்

உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவருக்கு பரிகாரம் உண்டு என்பதில் இரு கருத்து இல்லை. 

صحيح البخاري

1936 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ: «مَا لَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: لاَ، فَقَالَ: «فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا». قَالَ: لاَ، قَالَ: فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ – وَالعَرَقُ المِكْتَلُ – قَالَ: «أَيْنَ السَّائِلُ؟» فَقَالَ: أَنَا، قَالَ: «خُذْهَا، فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ الرَّجُلُ: أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا – يُرِيدُ الحَرَّتَيْنِ – أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ»

1936 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டுவிட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை! என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், இல்லை! என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றனர். நான்ச்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக! என்றனர்.

நூல் : புகாரி 1936

உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவர் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றியே இந்த ஹதீஸ் பேசுகிறது.

உண்ணுதல் பருகுதல் மூலம் வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்கு இது பொருந்துமா என்பதில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

இதில் கருத்து வேறுபாட்டுக்கு தக்க முகாந்திரம் இல்லை. நோன்பு எனும் வணக்கத்தைப் பற்றிய அலட்சியம் காரணமாக நோன்பை முறித்தற்குத் தான் இந்தப் பரிகாரம் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

உடலுறவின் மூலம் முறித்தாலும் உண்ணுதல் பருகுதல் மூலம் முறித்தாலும் நோன்பின் மகத்துவம் குலைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இரண்டும் சமமானது தான்.

உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய மூன்றையும் குறிக்கும் வகையில் பொதுவாகச் சொல்லும் ஹதீஸும் உள்ளது

صحيح مسلم

84 – (1111) حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا أَفْطَرَ فِي رَمَضَانَ، أَنْ يُعْتِقَ رَقَبَةً، أَوْ يَصُومَ شَهْرَيْنِ، أَوْ يُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا»

ரமலானில் நோன்பை முறித்த ஒருவருக்கு அடிமையை விடுதலை செய்யுமாறு, அல்லது இரு மாதங்கள் நோன்பு வைக்குமாறு அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : முஸ்லிம்

இரண்டையும் அபூ ஹுரைராவே அறிவிப்பதால் உடலுறவு மூலம் முறித்ததைத் தான் அவர் குறிப்பிட்டு இருப்பார் என்று சிலர் கூறுகின்றனர்.

அப்படி இருந்தாலும் உண்பதிலும், பருகுவதிலும் நோன்பைப் பாழாக்கும் தன்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் வேண்டுமென்றே நோன்பை முறித்தல் பெரும்பாலும் யாருக்கும் ஏற்படாது. ஒருவர் நோன்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் அவர் நோன்பை விட்டுவிட அனுமதி உண்டு.

இரத்தத்தில் சர்க்கரை குறைதல், உடல் நிலையைப் பாதிக்கும் வகையிலான தாங்கிக் கொள்ள முடியாத பசி, பயணம் ஆகிய காரணங்களுக்காக நோன்பை விட அனுமதி உண்டு. முறித்த நோன்பை மட்டும் அவர் நோற்றால் போதும். பரிகாரம் தேவை இல்லை.

அவசரமாகப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டால் அப்போது நோன்பை முறிக்க அனுமதி உள்ளது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.68 எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)

திருக்குர்ஆன் 2:185

صحيح مسلم

90 – (1114) حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، فَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ، حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ»

மக்கா வெற்றி பெற்ற ஆண்டில்  ரமலான் மாதம் நோன்பு நோற்றவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வரச்செய்து மக்களுக்கு உயர்த்திக் காட்டி அதை அருந்தினார்கள். இதைப் பார்த்த பின்பும் சிலர் நோன்பை விடவில்லை என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர்கள் பாவிகள் அவர்கள் பாவிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்.

இப்படி நோன்பை விடுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லாமல் ஒருவன் நோன்பை வேண்டுமென்றே விடுகிறான் என்றால் அவன் நிச்சயம் நோன்பைப் பாழாக்கிவிட்டான்.

உடலுறவின் மூலம் பாழாக்கியதை விட அதிகமாகப் பாழாக்கி விட்டான். ஏனெனில் எந்தக் காரணமும் இல்லாமல் உண்ணவும் பருகவும் செய்கிறான் என்றால் உடலுறவை விட இது கடுமையானதாகும்.

மனைவியுடன் இருக்கும் போது உடலுறவின் பால் ஒருவன் தூண்டப்படலாம். அதை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். உண்பதற்கு இப்படி எந்தத் தூண்டுதலும் இல்லை. மார்க்கத்தை வேண்டுமென்றே அலட்சியம் செய்வது தான் இதில் உள்ளது. எனவே இவன் நோன்பை முறித்ததற்கான பரிகாரத்தைச் செய்து தான் ஆக வேண்டும்.