முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதா?

NPR தகவல் சேகரிப்பு பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டு விட்டது குறித்து பலரும் பலவாறாக பதிவிட்டு வருகின்றனர். வைகோ உள்ளிட்ட தலைவர்களும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எதை நாம் கண்டிப்பதாக இருந்தாலும் உண்மை அடிப்படையிலும், அறிவார்ந்த முறையிலும் கண்டிக்க வேண்டும். மேலோட்டமாக நாம் தவறு என்று கருதும் விஷயம் ஆழமாகப் பார்க்கும் போது தவறானதாக இல்லாமல் இருக்கலாம். எனவே சிந்தித்து பதிவிடுவது நல்லது.

முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் இந்த தகவல் திரட்டியில் விடுபட்டுள்ளது என்பது உண்மை தான்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும், பண்டிகைகளுக்கும் என்ன சம்மந்தம்?  இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போது தங்களின் பிறந்த நாளும் பிறந்த ஆண்டும் வயதானவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை உத்தேசமாகக் கண்டறிய சில விபரங்களைக் கேட்பார்கள்.

உதாரணமாக ஜப்பான்காரன் குண்டு போட்ட ஆண்டில் பிறந்தேன்; அல்லது பாகிஸ்தான் பிரிவினையின் போது பிறந்தேன். அல்லது இந்தச் சம்பவங்கள் நடக்கும் போது எனக்கு பத்து வயது இருக்கலாம் என்பது போல் சொல்வார்களானால் அதை வைத்து பிறந்த வருடத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

எந்தச் சம்பவத்துக்கு எந்த ஆண்டு என்ற விபரம் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.

இதை மேனுவல் புத்தகத்தில் காணலாம்.

ஆங்கில ஆண்டு தெரியாமல் இஸ்லாமிய ஆண்டு 1440 ல் பிறந்தேன் என்று சொல்வார்களானால் 1440 க்கு உரிய கி.பி ஆண்டு எது என்று ஒரு அட்டவனையில் சொல்லி உள்ளார்கள். அதன்படி பிறந்த ஆண்டைப் பதிவார்கள். இஸ்லாமிய ஆண்டு மட்டுமின்றி ஒவ்வொரு பகுதியில் வழக்கத்தில் உள்ள ஆண்டுக்கு நிகரான ஆங்கில ஆண்டுகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளார்கள்.

இதையும் மேனுவலில் காணலாம்.

அதில் இஸ்லாமிய ஆண்டைப் புறக்கணிக்கவில்லை.

பிறந்த ஆண்டை உத்தேசமாக அறிந்த பின் பிறந்த மாதத்தைக் கண்டறிய அனைத்து மதத்தினரின் பண்டிகைகளைப் பட்டியல் போட்டுள்ளார்கள்.

உதாரணமாக பொங்கல் மாதம் பிறந்தேன் என்ற அளவுக்குத் தான் அவர்களால் சொல்ல முடியும் என்றால் ஜனவரி என்று குறிப்பிடுவார்கள். இப்படி ஒவ்வொரு பண்டிகைக்குமான ஆங்கில மாதங்களைப் பட்டியலில் போட்டுள்ளார்கள். அதை வைத்து பிறந்த மாதம் எது என்று முடிவு செய்வார்கள்.

இதில் தான் முஸ்லிம் பண்டிகைகள் சொல்லப்படவில்லை. இதற்குக் காரணம் முஸ்லிம் பண்டிகளைகளை வைத்து ஆங்கில மாதத்தை முடிவு செய்ய முடியாது என்பது தான்.

உதாரணமாக ரம்ஜான் பண்டிகையின் போது பிறந்தேன் என்று சொல்வார்களானால் அதை வைத்து ஆங்கில மாதம் இது என்று முடிவு செய்ய முடியாது, முஸ்லிம் பண்டிகைகள் பிறை அடிப்படையிலானது என்பதால் ரம்ஜான் பண்டிகை ஜனவரியிலும் வரும். பிப்ரவரியிலும் வரும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் வரும்.

எனவே தான் முஸ்லிம் பண்டிகைகள் சேர்க்கப்படவில்லை என்று தான் இதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இதை விமர்சிக்கும் போது நம்முடைய அறிவைக் குறை சொல்வார்கள்.

NPR NRC CAA ஆகியன வேண்டாம் என்பதற்கான சரியான வாதங்கள் உள்ளன. அவற்றை மட்டும் முன்வைத்து வாதிடுவதும், இது போல அறைகுறையாக புரிந்து கொண்டு விமர்சிப்பத்தை தவிர்ப்பதும் நல்லது.

அதிகாரிகள் கணக்கு எடுப்பதற்கான மேனுவலை pdf வடிவில் இணைத்துள்ளோம். அதைப் பார்த்து இதை அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் பண்டிகைகளைக் குறிப்பிட்டு இருந்தாலும் நாம் எதிர்ப்போம்.

ஒட்டு மொத்தமாக இந்தக் கணக்கெடுப்பையே எதிர்க்கிறோம்.

இது போன்ற அர்த்தமற்ற விமர்சனங்கள்: அடிப்படையான விஷயத்திலிருந்து நம்மை தூரமாக்க இடம் கொடுக்கக் கூடாது.