பாடல்கள் பாடுவது
பாடல்களைப் பொருத்த வரை இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாடல்களுடன் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.
பாடுகின்ற பாடல் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணில்லாமல் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால் அந்தப் பாடல்களைப் பாடலாம். கேட்கலாம்.
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பாடல் சினிமாப் பாடலாக இருந்தாலும் அதன் கருத்து இஸ்லாத்திற்கு முரணில்லாமல் இருப்பதால் இசைக் கருவிகளின்றி பாடலாம்.
* நமனை விரட்ட மருந்தொன்று விக்குது நாகூர் தர்காவிலே
* தமிழகத்தின் தர்காக்களை பார்த்து வருவோம்
* கேரளக் கரையோரம் வாழும் கருணை மிகும் பீமா
என்பது போன்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு முரணாக உள்ளதால் இதை இசைக் கருவி இல்லாமல் கூடப் பாடக் கூடாது.
நீங்கள் பாடும் பாடல்களில் மார்க்கத்திற்கு முரணில்லாத பாடல் என்றால் எவ்விதக் குற்ற உணர்வுமின்றிப் பாடலாம்.
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது போன்ற பைத்தியக்காரத் தனமான உளறலையோ
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்பது போன்ற இணை வைக்கும் பாடல்களையோ
பாடக் கூடாது. அவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆயினும் நம்மை அறியாமல் இது போன்ற பாடல்கள் வாயில் வந்து விட்டால் அதற்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறுதலாக செய்து விட்டாலோ எங்களைப் பிடிக்காதே என்று துஆச் செய்யுமாறு இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறான்.
(பார்க்க அல்குர்ஆன் 2:286)
நீங்கள் தவறாகச் செய்பவற்றில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் வேண்டுமென்று செய்தவையே குற்றமாகும் எனவும் அல்லாஹ் கூறுகிறான்.
(பார்க்க அல்குர்ஆன் 33:5)
இந்த நிலையில் நீங்கள் பாடினால் உங்கள் அமல்கள் அழிக்கப்படாது.