பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்கலாமா?
கேள்வி : முஸ்லிமலாத எனது நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார்.
எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி.
பதில் : பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஅபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான். அவர்களின் பொருட்செலவில் தான் கஅபா புதுப்பிக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதில் அதற்காக மண் சுமந்தனர்.
صحيح البخاري
1584 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي البَيْتِ؟ قَالَ: «إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ» قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا؟ قَالَ: «فَعَلَ ذَلِكَ قَوْمُكِ، لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ، فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ، أَنْ أُدْخِلَ الجَدْرَ فِي البَيْتِ، وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ»
கஅபாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி, ‘இது கஅபாவில் சேர்ந்ததா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். ‘எதற்காக அவர்கள் இதைக் கஅபாவோடு இணைக்கவில்லை?’ என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்’ என்று பதிலளித்தார்கள். ‘கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவில் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1584
பள்ளிவாசல்களிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த, முதல் ஆலயமான கஅபாவை மக்காவிலிருந்த முஸ்லிமல்லாதவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் புனர்நிர்மாணம் செய்துள்ளார்கள்.
கட்டுமானத்தில் அந்த மக்கள் செய்த தவறுகளைச் சரி செய்திருப்பேன் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர அவர்கள் செலவில் கட்டிய கஅபாவை இடித்துக்கட்டுவேன் என்று கூறவில்லை.
எனவே பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து நிதி பெறுவது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியை நிறுவி கஅபா ஆலயத்தையும் கைவசப்படுத்திய போது முஸ்லிமல்லாதவர்களின் பொருட்செலவில் கட்டப்பட்ட கஅபாவை இடித்துக் கட்டவில்லை. இடித்துக் கட்ட நினைத்தால் அது அவர்களுக்கு மிக எளிதாகவே சாத்தியமாகியிருக்கும்.
முஸ்லிமல்லாதவர்களால் கட்டப்பட்ட அந்தப் பள்ளியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அங்கு தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.
கஅபாவை இடித்து விட்டு மீண்டும் கட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிந்தித்ததுண்டு, அதற்கு இப்ராஹீம் நபி அவர்கள் கட்டிய வடிவில் கஅபாவை அவர்கள் கட்டவில்லை என்பதைத் தான் காரணமாகக் கூறினார்களே தவிர முஸ்லிமல்லாதவர்களின் பொருட் செலவில் கட்டப்பட்டதைக் காரணமாகக் கூறவில்லை.
– இப்ராஹீம் நபி கட்டிய கஅபாவுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்) சிறுவராக இருந்த போது கஃபாவைக் கட்டியவர்கள் ஒரு வாசலுடன் கட்டி முடித்திருந்தார்கள்.
– – இப்ராஹீம் நபி கட்டிய கஅபா மூன்று பக்கம் நேராகவும், ஒருபக்கம் அரை வட்டமாகவும் இருந்தது.
இதைத் தான் மாற்றியமைப்பேன் என்று கூறினார்கள்.
உலகின் மிகச் சிறந்த ஆலயமே முஸ்லிமல்லாதவர்களின் பொருளுதவியால் கட்டப்பட்டு, அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியிருக்கும் போது மற்ற பள்ளிவாசல்களுக்கு பிற மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில் தவறில்லை.
நன்கொடை கொடுத்ததால் இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களைப் பள்ளிவாசலில் செய்ய நிர்பந்தம் செய்வார்கள் என்றிருந்தால் மட்டும் அந்தக் காரணத்திற்காக தவிர்க்கலாம்.
நோன்புக் கஞ்சி ஒரு உணவு தான். அது ஒரு புனிதமான உணவு கிடையாது. மற்றவர்கள் தரும் உணவுப் பொருட்களை எவ்வாறு சாப்பிடலாமோ அவ்வாறு அவர்கள் நோன்புக் கஞ்சி காய்ச்சினால் அதையும் உண்ணலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்த நண்பர் இவ்வாறு உதவினால் மறுமையில் பயன் கிடைக்குமா என்பது தனி விஷயம்.
அகில உலகுக்கும் ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்பதை நம்பாமல், யார் எந்த நல்லதைச் செய்தாலும் அதற்கான பலன் இவ்வுலகில் கிடைக்குமே தவிர மறுமையில் சொர்க்கத்தைப் பெற முடியாது. ஒரே ஒரு கடவுள் தான் என்று நம்பாவிட்டால் அந்த ஒரு கடவுளிடம் ஏதும் கிடைக்காது.