ஏகத்துவம் ஆகஸ்ட் 2006
பள்ளிவாசலை இழுத்து மூட சதி
ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர்
அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி,உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின. அத்துடன் நாம் பள்ளிவாசல்களில் தொழுவதற்கும் தடுக்கப்பட்டோம்; மீறி தொழச்சென்றால் தடியர்களால் தாக்கப்பட்டோம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம்.
பாங்குசொல்லப்பட்டதும் பள்ளியில் போய்த் தொழ வேண்டும் என்று நம் மனம் ஆர்வப் படும். ஆனால் பள்ளியில் போய்த் தொழ முடியாது. அதனால் நமது வீடுகளிலேயே தொழுவோம். என்ன தான் குறித்த நேரத்தில் வீடுகளில் தொழுதாலும் பள்ளியில் தொழுதது போன்ற நிம்மதியிருக்காது. இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அல்லாஹ் நமக்குப் பள்ளிவாசல்களை வழங்கினான்.
அந்தப் பள்ளிகள் நிறுவப்பட்ட பிறகு மாநபி காட்டிய வழிமுறையில் மன நிறைவுடன் தொழுகைகளை நிலை நாட்டினோம். கடைசியில் பள்ளிகள் நிரம்பி வழிந்தன. அந்தப்பள்ளிகள் நமக்குப் போதவில்லை என்றாகி விட்டது. விரிவாக்கத்தில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குர்ஆன், ஹதீஸை தனக்குப் பெயராக்கிக் கொண்ட ஜாக் என்ற இயக்கம் இன்று பள்ளிவாசல்களை மூடும் மூர்க்கத்தனமான செயலில் இறங்கியிருக்கிறது.
முதல் கட்டமாக மூன்று நாட்கள் மூடுதல்
அதன் தொடக்கமாகவும், முதல் கட்டமாகவும் தென்காசியில் மூன்று நாட்கள் பள்ளிவாசலை மூடி ஒத்திகை பார்த்தார்கள்.
அதன் பின் அந்த ஆலய மூடல் அநியாயத்தை, அக்கிரமத்தை உள்ளத்தில் ஓர் எள்ளளவும் உறுத்தலின்றி கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக்கில் ஜாக் அரங்கேற்றியது. அதற்காக தமுமுக சங்கத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டது
.ஏற்கனவே தவ்ஹீதையும், தவ்ஹீது வாதிகளையும் அழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமுமுக இதைத் தக்க தருணமாகக் கருதி ஜாக்குடன் கைகோர்த்துக் களம் இறங்கியது.
முடிவு, அவர்கள் எதிர்பார்த்தபடி அப்பள்ளிவாசல் மூடப்பட்டது. இன்று வரைகடையநல்லூரிலுள்ள ஏகத்துவவாதிகள் பள்ளியில் போய் தொழ முடியாமல் பரிதவிக்கின்றனர்; அனல் புழுக்களாய் துடிக்கின்றனர். அன்று நாம் பள்ளி இல்லாமல் அலைக்கழிந்த காலத்தையும், இன்று பள்ளி எனும் அருட்கொடை இருந்தும் அலைக் கழிவதையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.
இத்தனைக்கும் யார் காரணம்? ஜாக்! அன்று சுன்னத் வல்ஜமாஅத்தினர் பள்ளிவாசல்களில் தொழுவதைத் தான்தடுத்தனர். பள்ளிகளை இழுத்து மூடும் துரோகத்திலும் துரைத்தனத்திலும் இறங்கவில்லை.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்,மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
(அல்குர்ஆன் 2:114)
அன்று சு.ஜ.வை எதிர்த்து இந்தத்தீமைக்கு எதிராக, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தனர் இந்த ஜாக்கினர். அப்போது நாமும் அவர்களுடன் இருந்தோம். அவர்களை விட அதிகமாக இந்தத் தீமைகளை எதிர்த்து எரிமலையாய் கனன்றோம். நாம் இன்றும் அதே நிலையில் இருக்கிறோம். ஆனால் இவர்களோ சு.ஜ.வினரை விட ஒருபடி தாண்டி, பள்ளிகளை இழுத்து மூடுவது என்ற கொடிய தீமையின் கொடுமுடிக்கே சென்று விட்டனர்.
அபூஜஹ்லின் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஜாக்
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன்நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் (ஸபானிய்யாக்கள் எனும்) நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!
(அல்குர்ஆன் 96:9-19)
இந்த வசனங்கள் யாரைக் குறிக்கின்றன? அபூஜஹ்லைத் தான் என்று நாம் யாவரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.
அவனது இந்தப் பாணியைப் பின்பற்றி அவனது பணியைக் கையாண்டு, பொய்யான வழிமுறைகளில் ஜாக் களமிறங்கி உள்ளது.
கடையநல்லூரில் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் தமுமுகவினருடன் இணைந்து தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கி இரத்தம் குடித்து, ருசி கண்டு, அந்தப் பள்ளியைப் பூட்டிய இந்த ஆக்டோபஸ் ஜாக் இப்போது மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானை ஹைஜாக் செய்து இழுத்து மூடுவதற்கு வந்திருக்கின்றது.
மேலப்பாளையத்தில் ஜாக்குக்கு என்று ஆட்கள் கிடையாது. எனவே தமுமுகவின் துணையுடன் இந்த அராஜகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றது. அவன் தனது சபையோரை அழைக்கட்டும் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுவது போல் தமுமுக போன்ற தவ்ஹீது ஜமாஅத்திற்கு விரோதமான ஜமாஅத்துகளை அழைத்துக் கொண்டது ஜாக்.
அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி என்று அல்லாஹ் பட்டியலிடும் தன்மைகளின் படி குற்றமிழைத்து, பல பொய்களில் இறங்குகின்றது. மறுமை நாளில் ஸபானிய்யாக்களை (நரகக் காவலர்களை) சந்திப்போம் என்பதை மறந்து ஆளும் வர்க்கத்தினரை, ஆட்சியாளர்களை தங்கள் சூழ்ச்சி வலைகளில் வளைக்க முயற்சி செய்தனர். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் என்பதை அவர்கள் பின்னிய சதி வலைகளின் கண்ணிகளைத் தகர்த்தெறிவதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.