பள்ளிவாசல் அல்லாத இடங்களில் ஜும்மா தொழலாமா?
பள்ளிவாசலில் மட்டும் தான் ஜும்ஆ தொழவேண்டுமா?
இந்த தலைப்பிலான ஆய்வை வீடியோ வடிவில் நாம் முன்னர் சொல்லி இருந்தாலும் எழுத்தில் தான் ஆதாரங்களை முழுமையாகக் காட்ட முடியும் என்பதால் இந்த ஆய்வைக் கட்டுரை வடிவில் முன் வைக்கிறோம்
எந்த மனிதருக்கும் தனியுரிமை இல்லாமல் பள்ளிவாசல் என்ற நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்காக வக்பு செய்த இடங்கள் தான் பள்ளிவாசல்களாகும்.
ஜமாஅத் தொழுகைகளும், ஜும்ஆ தொழுகைகளும் பள்ளிவாசல்களில் தான் தொழ வேண்டும். அதற்காகவே பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிவாசல்களில் ஜும்மா தொழ முடியாத நிலை பல நேரங்களில் ஏற்படும். அப்போது வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, திறந்த வெளிகளிலோ ஜும்மா தொழலாமா என்ற கேள்வி எழுகிறது.
சில பள்ளிவாசல்களில் குறிப்பிட்ட கொள்கை உள்ளவர்கள் தொழ வரக்கூடாது என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் தடை விதிப்பார்கள். அப்படி தடுக்கப்பட்டவர்கள் உடனடியாக பள்ளிவாசல் கட்டிக்கொள்ள பொருளாதார வசதிகள் இருக்காது. அவர்கள் என்ன செய்வது? வாடகைக்கு ஒரு இடத்தைப் பேசி அதைப் பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்வார்கள். அங்கே ஜும்மாவும், ஐந்து வேளை தொழுகையும் நடத்திக் கொள்வார்கள்.
இது உண்மையில் பள்ளிவாசல் ஆகாது. ஏனெனில் இதன் உரிமை அல்லாஹ்வுக்கு உரியதாக ஆக்கப்படவில்லை.
இது மார்க்கத்தில் கூடுமா? என்ற கேள்வி எழுகிறது.
வாடகைக்கு இடம் பிடிக்க வசதி இல்லாதவர்கள் தனியாரின் வீட்டில் வெள்ளிக்கிழமை மட்டும் கூடி ஜும்மா நடத்துவார்கள்.
இது பள்ளிவாசலாக இல்லாத காரணத்தால் இங்கே ஜும்மா தொழலாமா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் காரியங்கள் நடக்கின்றன. அல்லது ஜும்மா உரையில் பொய்களும், கட்டுக்கதைகளும், இயக்கப் பெருமைகளும் பேசப்படுகின்றன என்றால் இது தகுதியான பள்ளிவாசலாக இல்லை என்ற காரணத்தால் நன்மையை நாடும் மக்கள் மேற்கண்டவாறு வாடகை வீட்டிலோ, சொந்த வீட்டிலோ ஜும்மா தொழுது கொள்கிறார்கள்.
இதுவும் கூடுமா என்ற கேள்வி எழுகிறது.
வகுப்புக் கலவரம் நடக்கிறது; அல்லது ஊரடங்கு போடப்படுகிறது. நமக்குப் பள்ளிவாசல் இருந்தும் அங்கே போக முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் குறிப்பிட்ட சகோதரர்கள் கூடி ஜும்மா நடத்தும் நிலை ஏற்படுகிறது. அதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் குடும்பத்து உறுப்பினர்களைக் கொண்டு மட்டும் ஜும்மா நடத்தும் நிலை ஏற்படுகிறது.
இது கூடுமா என்ற கேள்வி எழுகிறது.
சில பள்ளிவாசல்களை இடித்து விட்டு கட்டும் அவசியம் ஏற்படும் போது, பள்ளிவாசல் கட்டும் வரை பள்ளிவாசல் அல்லாத இடத்தில் ஜும்மா உள்ளிட்ட தொழுகைகளை நடத்துவார்கள்.
இது கூடுமா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி பல சந்தர்ப்பங்களில் இந்த நிலைமையை நாம் சந்திக்கிறோம்.
பள்ளிவாசலில் மட்டும் தான் ஜும்மா நடத்த வேண்டும். பள்ளிவாசல் அல்லாத திடலில், வீடுகளில், அலுவலகங்களில் ஜும்மா நடத்தக் கூடாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் கருத்துப்படி மேற்கண்ட அனைத்தும் கூடாது என்று ஆகும்.
பள்ளிவாசலில் தான் ஜும்மா நடத்த வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் இவர்கள் கூறுவது சரியான கருத்து எனலாம்.
பள்ளிவாசலில் மட்டும் தான் ஜும்மா நடத்த வேண்டும் என்று கூறுவோர் பலவிதமான ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.
அவை இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாக உள்ளனவா என்பதை விரிவாக நாம் காண்போம்.
முதலாவது ஆதாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் பள்ளிவாசல் தவிர வேறு எந்த இடத்திலும் ஜும்மா தொழவில்லை. வீடுகளில் அல்லது நீங்கள் இருக்கும் இடங்களில் ஜும்மா தொழுது கொள்ளுங்கள் என்று எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என்பதை முதல் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.
கீழ்க்காணும் ஹதீஸையும் ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
صحيح البخاري
892 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّهُ قَالَ: «إِنَّ أَوَّلَ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي مَسْجِدِ عَبْدِ القَيْسِ بِجُوَاثَى مِنَ البَحْرَيْنِ»
892 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு (இஸ்லாமிய வரலாற்றில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆத் தொழுகை, ஜுவாஸா’ எனுமிடத்தில்-அதாவது பஹ்ரைன் நாட்டிலிருந்த (ஒரு கிராமத்தில்) அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே ஆகும்.
நூல் : புகாரி 892
இந்த ஹதீஸில் இருந்து இவர்கள் வைக்கும் வாதம் இதுதான்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் ஒரே ஒரு இடத்தில் ஜும்மாவும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் ஊரில் மற்றொரு ஜும்மாவும் நடத்தியுள்ளார்கள். வீடுகளில் நடத்தி இருந்தால் இன்னும் பல ஜும்மாக்கள் நடத்தப்பட்டு இருக்கும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் இப்படி அறிவித்து இருக்க மாட்டார் என்பது அவர்களின் வாதம்.
மஸ்ஜிதுன்னபவி பள்ளியில் மட்டும் ஜும்மா நடத்தப்பட்டு வந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் அப்துல் கைஸ் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்கள் தமது ஊராகிய ஜுவாஸாவில் இரண்டாவது ஜும்மா நடத்தினார்கள். இதில் இருந்து வீடுகளில் ஜும்மா நடத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது என்ற இந்த வாதம் சரியானதா?
ஆறு ஆண்டுகள் ஒரு பள்ளியில் மட்டும் தான் ஜும்மா நடந்துள்ளது என்ற வாசகத்தில் இருந்து கிடைக்கும் கருத்தில் பாதியை ஏற்று மீதியை இவர்கள் மறுக்கிறார்கள்.
ஆறு வருடங்கள் ஒரே இடத்தில் தான் ஜும்மா நடத்தப்பட்டது என்றால் அதன் கருத்து என்ன?
மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், இஸ்லாம் பரவி முஸ்லிம்கள் எல்லா பகுதிகளிலும் அதிகரித்த காலத்திலும் பல பள்ளிவாசல்கள் உருவாகி இருந்த நிலையிலும் எங்குமே ஜும்மா நடக்கவில்லை.
வீடுகளிலும் ஜும்மா நடக்கவில்லை
என்ற இரு கருத்துக்கள் கிடைக்கின்றன.
வீடுகளில் ஜும்மா நடத்தியதற்கு ஆதாரம் இல்லை என்பது போல் வேறு எந்தப் பள்ளிகளிலும் ஜும்மா நடத்தியதற்கும் ஆதாரம் இல்லை என்பது தான் இதில் இருந்து கிடைக்கும் கருத்தாகும்.
இதன் படி தீர்ப்பு அளிப்பதாக இருந்தால்
வீடுகளிலும் ஜும்மா தொழக் கூடாது;
ஒரு நாட்டில் ஒரே ஒரு பள்ளியில் மட்டும் தான் ஜும்மா தொழ வேண்டும்
என்ற தீர்ப்பைத் தான் அளிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு ஒரே ஒரு ஜும்மா
இலங்கைக்கு ஒரே ஒரு ஜும்மா என்று தான் நடத்த வேண்டும்.
அப்படி இவர்கள் பத்வா அளிக்காமல் வீடுகளில் நடத்தியதற்கு ஆதாரமில்லை என்று வாதிடுவது ஏற்புடையதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பள்ளி மட்டும் தான் இருந்ததா? என்றால் ஏராளமான பள்ளிவாசல்கள் இருந்துள்ளன. ஆயினும் அவற்றில் ஜும்மா நடத்தப்படவில்லை என்பது தான் இந்த ஹதீஸ் சொல்லும் கருத்தாகும்.
இது குறித்து தெளிவான ஆதாரங்களையும் காண்போம்.
صحيح البخاري
902 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ: أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ وَالعَوَالِيِّ، فَيَأْتُونَ فِي الغُبَارِ يُصِيبُهُمُ الغُبَارُ وَالعَرَقُ، فَيَخْرُجُ مِنْهُمُ العَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْسَانٌ مِنْهُمْ وَهُوَ [عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا»
902 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும் மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத் தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மீதும் புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உடலி)லிருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்து கொண்டிருக்கும் போது – அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.
நூல் : புகாரி 902
صحيح البخاري
5572 – قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ العِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَكَانَ ذَلِكَ يَوْمَ الجُمُعَةِ، فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، ثُمَّ خَطَبَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْتَظِرَ الجُمُعَةَ مِنْ أَهْلِ العَوَالِي فَلْيَنْتَظِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ فَقَدْ أَذِنْتُ لَهُ»
5572 அபூஉபைத் அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது:
பின்னர் நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக் கிழமையாக இருந்தது. அவர்கள் குத்பா-உரை நிகழ்த்தும் முன்பே தொழுது விட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரு பெருநாட்கள் ஒன்று சேர்ந்து (கிடைத்து) உள்ளன. ஆகவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் எவர் ஜுமுஆவை (வெள்ளிக் கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறான்றாரோ அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) எவர் தமது இல்லத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்து விட்டேன் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5572
மதீனாவைச் சுற்றியுள்ள குடியிருப்புக்களில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்த போதும் அவர்கள் தமது பகுதிகளில் ஜும்மா தொழாமல் மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து ஜும்மா தொழுதுள்ளனர் என்று இந்த ஹதீஸ்களில் இருந்து தெரிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மட்டுமின்றி உஸ்மான் ரலி ஆட்சிக் காலம் வரையும் இதே நிலை நீடித்துள்ளது என்றும் இரண்டாவ்து ஹதீஸில் இருந்து தெரிகிறது.
அந்தக் குடியிருப்பகள் மதீனாவில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தன? இதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.
صحيح البخاري
550 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى العَوَالِي، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ» وَبَعْضُ العَوَالِي مِنَ المَدِينَةِ عَلَى أَرْبَعَةِ أَمْيَالٍ أَوْ نَحْوِهِ
550 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுவார்கள். அப்போது சூரியன் மேலேயே இருக்கும்; தெளிவாகவே இருக்கும். மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளுக்குச் செல்பவர் அங்கே இருப்பவர்களிடம் சென்றடையும் போது சூரியன் மேலேயே இருக்கும். அந்த மேட்டுப் பாங்கான (கிராமப்) பகுதிகளில் சில மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு தொலைவில் அமைந்திருந்தன.
நூல் : புகாரி 550
மதீனாவைச் சுற்றியுள்ள கிராமங்கள் நான்கு மைல்கள் தொலைவில் இருந்துள்ளன. மைல் என்பது 4000 முழம் ஆகும். மீட்டரில் சொன்னால் 1609 மீட்டர் ஆகும். நான்கு மைல்களுக்கு 6436 மீட்டர்களாகும். அதாவது சுமார் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் தமது பகுதிகளில் ஜும்மா தொழாமல் மதீனாவுக்கு வந்து மஸ்ஜிதுன்னபவியில் தொழுதுள்ளனர் என்றால் என்ன பொருள்?
வீடுகளில் ஜும்மா தொழக்கூடாது என்பதற்கு நபிகள் பள்ளியில் தான் தொழுதார்கள் என ஆதாரம் காட்டி மறுப்பவர்கள், அதே அடிப்படையில் ஏழு கிலோ மீட்டர் தொலைவாக இருந்தாலும் அவர்கள் பிரதான நகரில் தான் ஜும்மா தொழ வேண்டும் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் ஊருக்கு பத்து பள்ளிவாசல்கள், பெரு நகரங்களுக்கு 100 பள்ளிவாசல்கள் என உருவாக்கி ஜும்மா தொழுது வருகின்றனர்; அவற்றில் ஜும்மா தொழக்கூடாது என்று தானே சொல்ல வேண்டும். பல பள்ளிகள் இருந்தும் ஒரு பள்ளியில் மட்டும் தான் நபிகள் ஜும்மா தொழுதுள்ளதே இதற்கு ஆதாரம் எனக் கூற வேண்டுமல்லவா? அப்படி கூறக்காணோம்.
صحيح البخاري
425 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ، أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلًّى، قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ» قَالَ عِتْبَانُ: فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ البَيْتَ، ثُمَّ قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ» قَالَ: فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنَ البَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَّنَا فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ، قَالَ: فَآبَ فِي البَيْتِ، رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ، فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ: أَيْنَ مَالِكُ بْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّخْشُنِ؟ فَقَالَ بَعْضُهُمْ: ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ ” قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى المُنَافِقِينَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ” قَالَ ابْنُ شِهَابٍ: ثُمَّ سَأَلْتُ الحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ – وَهُوَ أَحَدُ بَنِي سَالِمٍ – وَهُوَ مِنْ سَرَاتِهِمْ، عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ: «فَصَدَّقَهُ بِذَلِكَ»
425 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப்போரில் கலந்து கொண்ட அன்சாரிகளில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்போய்) விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தி வருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்குமிடையே உள்ளபள்ளத் தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே நான் செய்வேன் என்று கூறினார்கள்.
சுருக்கம்
நூல் புகாரி 425
இத்பான் பின் மாலிக் என்பவர் வசித்து வந்த பகுதியில் அந்தச் சமுதாயத்திற்கு ஒரு பள்ளிவாசல் இருந்துள்ளது. அதில் இவர் இமாமாகவும் இருந்துள்ளார். மழைக்காலத்தில் அந்தப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதால் தனது வீட்டில் ஒரு பகுதியை பள்ளிவாசலாக ஆக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏற்றுள்ளனர் என்று இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.
ஆனால் சமுதாயத்தின் பள்ளியிலும் ஜும்மா நடக்கவில்லை; அவரது வீட்டில் அமைத்துக் கொண்ட பள்ளியிலும் ஜும்மா நடக்கவில்லை என்று இப்னு அப்பாஸ் ஹதீஸின் கருத்துப்படி தெரியவருகிறது.
صحيح مسلم
181 – (465) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ أَبُو الرَّبِيعِ: حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: كَانَ «مُعَاذٌ يُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ، ثُمَّ يَأْتِي مَسْجِدَ قَوْمِهِ فَيُصَلِّي بِهِمْ»
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இஷா தொழுவார். பின்னர் தனது சமுதாயத்தின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு தொழுகை நடத்துவார்.
நூல் : முஸ்லிம்
முஆத் பின் ஜபல் அவர்களின் சமுதாயத்தினர் தமக்காக ஒரு பள்ளிவாசலை உருவாக்கி இருந்தனர்; அந்தப் பள்ளியில் ஐவேளை தொழுகை நடந்துள்ளது. ஆனால் ஆறு ஆண்டு காலம் ஒரே ஜும்மா தான் நடந்துள்ளது என்ற ஹதீஸின் கருத்துப்படி இந்தப் பள்ளியில் ஜும்மா நடக்கவில்லை என்ற கருத்து வருகிறது.
அப்படியானால் ஒரு நாட்டுக்கு ஒரு மாநிலத்துக்கு ஒரு ஊருக்கு பல பள்ளிவாசல்களில் ஜும்மா நடத்துவது நபிவழிக்கு மாற்றம் என்று ஏன் இவர்களால் சொல்ல முடியவில்லை?
صحيح البخاري
1191 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ هُوَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ لاَ يُصَلِّي مِنَ الضُّحَى إِلَّا فِي يَوْمَيْنِ: يَوْمَ يَقْدَمُ بِمَكَّةَ، فَإِنَّهُ كَانَ يَقْدَمُهَا ضُحًى فَيَطُوفُ بِالْبَيْتِ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ خَلْفَ المَقَامِ، وَيَوْمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ، فَإِنَّهُ كَانَ يَأْتِيهِ كُلَّ سَبْتٍ، فَإِذَا دَخَلَ المَسْجِدَ كَرِهَ أَنْ يَخْرُجَ مِنْهُ حَتَّى يُصَلِّيَ فِيهِ، قَالَ: وَكَانَ يُحَدِّثُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَزُورُهُ رَاكِبًا وَمَاشِيًا،
1191 நாஃபிஉ அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் இரண்டு நாட்கள் தவிர வேறு நாட்களில் ளுஹாத் தொழுகை தொழ மாட்டார்கள்:
1. அவர்கள் மக்காவுக்கு வரக் கூடிய நாள். அந்நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் வந்து, கஅபாவைத் தவாஃப் செய்து மகாமு இப்ராஹீம் எனும் இடத்திற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
2. குபா பள்ளிவாசலுக்குச் செல்லும் நாள். அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் குபா பள்ளிக்கு சென்று நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்’ என்றும் கூறுவார்கள்.
நூல் : புகாரி 1191
صحيح البخاري
4488 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، بَيْنَا النَّاسُ يُصَلُّونَ الصُّبْحَ فِي مَسْجِدِ قُبَاءٍ، إِذْ جَاءَ جَاءٍ فَقَالَ: ” أَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرْآنًا: أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا ، فَتَوَجَّهُوا إِلَى الكَعْبَةِ “
4488 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் சுப்ஹு’த்தொழுகையை மஸ்ஜிது குபா’வில் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, கஅபாவை (த்தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான் என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக் கொண்டனர்.
நூல் : புகாரி 4488
صحيح البخاري
7175 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ قَالَ: «كَانَ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ يَؤُمُّ المُهَاجِرِينَ الأَوَّلِينَ، وَأَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ قُبَاءٍ فِيهِمْ أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَأَبُو سَلَمَةَ، وَزَيْدٌ، وَعَامِرُ بْنُ رَبِيعَةَ»
7175 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சாலிம் (ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் குபா’ பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அந்த நபித்தோழர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அபூசலமா (ரலி), ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஆமிர் பின் ரபீஆ (ரலி) ஆகியோரும் அடங்குவர்.
நூல் : புகாரி 7175
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசல் கட்டுவதற்கு முன்னர் கட்டப்பட்ட முதல் பள்ளி குபா பள்ளியாகும். இந்தப் பகுதியில் தான் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அபூசலமா (ரலி), ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஆமிர் பின் ரபீஆ உள்ளிட்ட முக்கிய அறிஞர்கள் இருந்துள்ளனர். ஜும்மா நடத்த தகுதி உள்ளவர்கள் இருந்தும் குபா பள்ளியில் ஜும்மா நடத்தப்படவில்லை. மஸ்ஜிதுந் நபவியில் மட்டும் தான் ஜும்மா நடந்துள்ளது.
அப்படியானால் ஒரு நாட்டில் ஒரு ஜும்மா தான் நடந்துள்ளதற்குத் தான் ஆதாரம் உள்ளது, வேறு பள்ளிகளில் ஜும்மா நடத்தியதற்கு ஆதாரம் இல்லை என்று பத்வா கொடுக்காமல் ஏராளமான பள்ளிகளில் ஜும்மா நடத்துவது கூடும் என்று பத்வா அளிப்பது எப்படி?
வீடுகளுக்கு அளித்த ஃபத்வா தானே பள்ளிகளுக்கும் கொடுக்க வேண்டும்.
مسند أحمد ط
. . / 26 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا مُلَازِمُ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَدْرٍ، وَسِراجُ بْنُ عُقْبَةَ، أَنَّ عَمَّهُ قَيْسُ بْنُ طَلْقٍ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ طَلَّقُ بْنُ عَلِيٍّ حَدَّثَهُ: أَنَّهُ انْطَلَقَ وَفْدٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَتَوْهُ، فَأَخْبَرُوهُ أَنَّ بِأَرْضِهِمْ بَيْعَةً، وَاسْتَوْهَبُوهُ مِنْ طَهُورِهِ فَضْلِهً، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأ وَتَمَضْمَضَ، ثُمَّ صَبَّهُ فِي إِدَاوَةٍ، وَقَالَ: ” اذْهَبُوا بِهَذَا الْمَاءِ، فَإِذَا قَدِمْتُمْ بَلَدَكُمْ، فَاكْسِرُوا بِيعَتَكُمْ وَانْضَحُوا مَكَانَهَا مِنْ هَذَا الْمَاءِ، وَاتَّخِذُوهَا مَسْجِدًا ” قَالَ: قُلْنَا: يَا نَبِيَّ اللهِ، إِنَّا نَخْرُجُ فِي زَمَانٍ كَثِيرِ السَّمُومِ وَالْحَرِّ، وَالْمَاءُ يُنَشَّفُ قَالَ: ” فَمُدُّوهُ مِنَ الْمَاءِ، فَإِنَّهُ يَبْقَى مِنْهُ شَدِيدٌ كَثِيرٌ رَطْبٌ ” قَالَ: فَخَرَجْنَا حَتَّى بَلَغْنَا بَلَدَنَا، فَكَسَرْنَا بِيعَتَنَا، وَنَضَحْنَا مَكَانَهَا بِذَلِكَ الْمَاءِ، وَاتَّخَذْنَاهَا مَسْجِدًا
ஒரு ஊரில் உள்ள அனைவரும் இஸலாமைத் தழுவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்தனர். தங்கள் ஊரில் தங்களின் பழைய மதத்தின் படி வழிபாடு நடத்துவதற்காக கட்டிய ஆலயம் பற்றி கேட்ட போது உளூ செய்த தண்ணீரைக் கொடுத்து இதைத் தெளித்து விட்டு பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் சொல்லி அனுப்பினார்கள். (சுருக்கம்)
நூல் : நஸாயீ
அடிக்கடி வர முடியாத தூரத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் மதீனாவுக்கு வந்து ஜும்மாவில் கலந்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் ஜும்மா தொழவில்லை என்றால் அவர்களின் பள்ளிவாசலில் லுஹர் தான் தொழுதிருக்க வேண்டும். ஏனெனில் ஒரு ஜும்மா தான் நபிகள் காலத்தில் நடந்துள்ளது என்ற ஹதீஸின் கருத்து இதுதான்.
السنن الكبرى للبيهقي
4307 – أنبأ أَبُو الْحَسَنِ بْنُ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، ثنا هِشَامُ بْنُ عَلِيٍّ، ثنا مُحَمَّدُ بْنُ مُحَبَّبٍ أَبُو هَمَّامٍ الدَّلَّالُ، ثنا سَعِيدُ بْنُ السَّائِبِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عِيَاضٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَجْعَلَ مَسْجِدَ الطَّائِفِ حَيْثُ كَانَتْ طَاغِيَتُهُمْ “
நபிகள் நாயகத்தை அடித்து விரட்டிய தாயிஃப் நகரத்து மக்கள் பின்னர் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களின் வழிபாட்டுத் தலத்தைப் பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்ள அனுமதித்தார்கள்.
நூல் ; பைஹகி
மதீனாவில் ஒரு பள்ளியில் மட்டும் தான் ஜும்மா நடந்துள்ளது என்ற அடிப்படையில் தாயிஃப் மக்கள் வாராவாரம் மதீனா வர முடியாது. அவர்கள் மதினாவிலும் ஜும்மா நடத்தவில்லை. ஊரிலும் நடத்தவில்லை என்ற கருத்து தான் இதில் இருந்து கிடைக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே ஜும்மா மட்டும் நடந்தாலும் வேறு பள்ளிகளிலும் ஜும்மா நடத்தலாம் என்பதற்கு இவர்கள் ஏதாவது காரணம் சொன்னால் அது பள்ளிவாசல் அல்லாத இடங்களுக்கும் பொருந்தும்.
பள்ளிவாசலில் ஜும்மா நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் எந்த இடத்திலும் ஜும்மா தொழலாம். ஒரு ஊரில் பல பள்ளிவாசல்களில் ஜும்மா தொழலாம் என்பது நமது நிலைபாடாகும்.
இதற்கான காரணங்கள் உள்ளன.
صحيح البخاري
335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ العَوَقِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: ح وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ النَّضْرِ، قَالَ: أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا سَيَّارٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ هُوَ ابْنُ صُهَيْبٍ الفَقِيرُ، قَالَ: أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً “
335 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்ட்டுள்ளது.
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் மஸ்ஜிதாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் (அவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தயம்மும் செய்துகொள்ளட்டும்.) தொழுதுகொள்ளட்டும்.
3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
4. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.
5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக (நியமித்து) அனுப்பப் பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக (நியமித்து) அனுப்பப்பட்டுள்ளேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 335
பள்ளிவாசல்களுக்குச் சிறப்பு உள்ளது என்றாலும் பள்ளிவாசலில் தொழ முடியாத நிலை ஏற்பட்டால் பூமி முழுவதும் மஸ்ஜிதாக ஆக்கப்பட்டுள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. யூத, கிறித்தவ மக்கள் வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டனர். என் சமுதாயத்துகு இதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் மட்டுமே தொழுதது செயல் மூலமான வழிகாட்டுதலாகும், அவர்களின் சொற்களும் மார்க்க ஆதாரமாகும். சொல்லப் போனால் செயலை விட சொல்லே வலுவான ஆதாரமாகும்.
மேலும் ஜும்மா எனும் வணக்கம் எந்த அடிப்படையில் நமக்குத் தரப்பட்டது? இதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.
صحيح البخاري
2268 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ الكِتَابَيْنِ، كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ أُجَرَاءَ، فَقَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ غُدْوَةَ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ؟ فَعَمِلَتِ اليَهُودُ، ثُمَّ قَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ العَصْرِ عَلَى قِيرَاطٍ؟ فَعَمِلَتِ النَّصَارَى، ثُمَّ قَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنَ العَصْرِ إِلَى أَنْ تَغِيبَ الشَّمْسُ عَلَى قِيرَاطَيْنِ؟ فَأَنْتُمْ هُمْ “، فَغَضِبَتِ اليَهُودُ، وَالنَّصَارَى، فَقَالُوا: مَا لَنَا أَكْثَرَ عَمَلًا، وَأَقَلَّ عَطَاءً؟ قَالَ: «هَلْ نَقَصْتُكُمْ مِنْ حَقِّكُمْ؟» قَالُوا: لاَ، قَالَ: «فَذَلِكَ، فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ»
2268 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கும் வேதம் வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத்தாரான (யூத, கிறிஸ்த)வர்களுக்கும் உவமை., ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களாவர்! ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து பகலின் நடுப்பகல் நேரம்வரை எனக்கு வேலை செய்பவர் யார்? என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, நடுப்பகலிலிருந்து அஸ்ர்தொழுகை வரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்? என்று அவர் கேட்டார். கிறித்தவர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள். பிறகு, அஸ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர்கள் யார்? என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள்தாம் அ(ப்படி வேலை செய்த)வர்கள்! யுதர்களும், கிறித்தவர்களும் கோபமுற்று, அதிக வேலை நாங்கள் செய்திருக்கும் போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி? என்று கேட்டனர். அதற்கு அவர் உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா? என்று கேட்டார். அவர்கள் இல்லை! என்றனர். சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது அருட்கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்! என்று அவர் கூறினார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 2268
ஒரு நாட்டுக்கு ஒரே ஒரு இடத்தில் தொழுதால் போதும் என்ற அடிப்படையில் ஜும்மா கடமையாக்கப்படவில்லை. முழு சமுதாயத்துக்குமான கடமையாக இது தரப்பட்டுள்ளது. எப்படி யூத, கிறித்தவர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வார வழிபாட்டை நடத்தாமல் அனைத்து ஊர்களிலும் நடத்துகிறார்களோ அது போல் ஜும்மா என்பது முஸ்லிம்கள் அனைவருக்குமான கடமையாகும்.
இதைக் கவனத்தில் கொண்டு தான் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது மதீனாவிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் ஜும்மா நடக்கவில்லை என்பது மட்டும் தான் இப்னு அப்பாஸ் (ரலி) கூற்றில் ஏற்கத்தக்கது. சுற்றுப்புற மக்கள் அனைவரும் மஸ்ஜிதுன்நபவிக்கு வந்து தொழுதுள்ளார்கள். இதற்கு வேறு ஆதாரங்களையும் முன்னர் நாம் காட்டியுள்ளோம்.
ஆனால் தாயிஃப், பஸரா, கூஃபா, எகிப்து என ஏராளமான ஊர்களுக்கு இஸ்லாம் பரவியுள்ள நிலையில் அவர்கள் ஜும்மா தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் சொன்னால் அது தவறாகும். ஜும்மா எனும் மிக முக்கியமான கடமையை மஸ்ஜிதுன்நபவிக்கு வந்து தொழுதிருக்க வேண்டும். வர முடியாதவர்கள் தமது பகுதிகளில் பள்ளிவாசலிலோ அல்லது அதற்காக ஏற்பாடு செய்த இடங்களிலோ ஜும்மாவை தொழுதிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்ட ஜும்மா கடமையை நிறைவேற்றாமல் இருந்துள்ளனர் என்று ஆகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எங்கும் ஜும்மா நடக்கவில்லை என்று உறுதி செய்து விட்டு இதைச் சொல்லவில்லை. அவர் ஊகம் செய்த அடிப்படையில் சொன்ன விஷயம் தான் இது.
மேலும் மதீனாவிற்குள் நபிகள் வந்த மறுநாளே பள்ளி வாசல் கட்டவில்லை. இடத்தை தேர்வு செய்து விலைக்கு வாங்கி நிலத்தைச் சீராக்கி பின்னர் பள்ளிவாசலைக் கட்டினார்கள். அது வரை என்ன செய்தார்கள்?
صحيح البخاري
234 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ يَزِيدُ بْنُ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَبْلَ أَنْ يُبْنَى المَسْجِدُ، فِي مَرَابِضِ الغَنَمِ»
صحيح البخاري
429 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي مَرَابِضِ الغَنَمِ، ثُمَّ سَمِعْتُهُ بَعْدُ يَقُولُ: «كَانَ يُصَلِّي فِي مَرَابِضِ الغَنَمِ قَبْلَ أَنْ يُبْنَى المَسْجِدُ»
429 ஷுஅபா (பின் அல்ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபுத்தய்யாஹ் அவர்கள் அறிவித்துவந்தார்கள். பின்னர் பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு) ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள்’ என்று (காலவரையறையுடன் சேர்த்துக்) கூறக் கேட்டேன்.
மஸ்ஜித் கட்டப்படுவதற்கு முன் ஆட்டுத் தொழுவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள் என்றால் ஜும்மா உட்பட அனைத்து தொழுகைகளும் அடங்கும். ஆனாலும் ஜும்மா தொழுதார்கள் என்று நேரடியாக உள்ளதா என விதண்டாவாதம் பேச வாய்ப்பு உண்டு. ஆயினும் அறிவுடைய மக்களுக்கு இதுவும் ஆதாரம் தான்.,
அப்படியானால் மதீனாவிலும், சுற்றுப்பகுதிகளிலும் ஏன் ஜும்மா நடத்தாமல் மஸ்ஜிதுன்நபவிக்கு வர வேண்டும்?
தமது பகுதியில் ஜும்மா தொழக் கூடாது என்பதற்காக நபித்தோழர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உரை நிகழ்த்தும் போது நம்மைப் போல் குறிப்பு எடுத்துக் கொண்டு பேச மாட்டார்கள். அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் வஹீ அடிப்படையில் உரை நிகழ்த்துவார்கள். அவர்கள் எது சொன்னாலும் அது மார்க்கச் சட்டமாக ஆகும் என்பதால் சிரத்தை எடுத்து வர முடிந்த அனைவரும் மஸ்ஜிதுன்நபவிக்கு வந்தார்கள். தங்கள் பகுதியில் ஜும்மா தொழுவது தடை என்பதற்காக அல்ல.
பள்ளிவாசல் அல்லாத இடங்களில் ஜும்மா தொழலாம் என்பதற்கு மற்றொரு ஆதாரத்தையும் நாம் கடந்த காலங்களில் எடுத்து வைத்துள்ளோம். தற்போதும் எடுத்து வைக்கிறோம்.
903حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضَمَاتِ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ رواه أبو داود
அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காகப் பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர் தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் கள்மாத் என்ற தண்ணீர் நிறைந்த பகுதியாகும்” என்று பதில் கூறினார்கள். “அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நாற்பது பேர்” என்று பதில் சொன்னார்கள்.
நூல் : அபூதாவூத்
இந்த ஹதீஸ் பிரதானமான ஆதாரம் அல்ல. இது வரை நாம் சொன்ன ஆதாரங்களே ஜும்மாவை பூமி முழுவதும் தொழலாம் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.
மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் என்பவரால் அறிவிக்கப்படுகிறது. இவர் முஹம்மத் பின் அபீ உமாமா என்பார் சொன்னதாக அறிவித்துள்ளார்.
முஹம்மத் பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் ஆவார். இது போன்ற அறிவிப்பாளர்கள் நான் இன்னாரிடம் செவியுற்றேன் அல்லது எனக்கு இன்னார் அறிவித்தார் என்று சொன்னால் தான் அது ஆதாரமாகும். அப்படி சொல்லாமல் வெறுமனே இன்னார் சொன்னார் என்று கூறினால் அது ஆதாரமாக ஆகாது.
தத்லீஸ் பற்றி முழுமையாக அறிய
என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.
அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்ற மேற்கண்ட ஹதீஸில் முஹம்மத் பின் அபீ உமாமா சொன்னார் என்று தான் முஹம்மத் பின் இஸ்ஹாக் கூறுகிறார். எனக்குச் சொன்னார் என்று சொல்லவில்லை என்பதால் இது பலவீனமானது என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.
மேற்கண்ட ஹதீஸில் அந்தக் குறைபாடு உள்ளது உண்மை தான். ஆனால் இதே ஹதீஸ் மற்றொரு நூலில் முஹம்மத் பின் அபீ உமாமா எனக்குச் சொன்னார் என்று தெளிவான வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்.
السنن الكبرى للبيهقي
5605 – حَدَّثَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ إِمْلَاءً وَقِرَاءَةً، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ الْعُطَارِدِيُّ، ثنا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كُنْتُ قَائِدَ أَبِي حِينَ كُفَّ بَصَرُهُ، فَإِذَا خَرَجْتُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَسَمِعَ الْأَذَانَ بِهَا اسْتَغْفَرَ لِأَبِي أُمَامَةَ أَسْعَدَ بْنِ زُرَارَةَ، فَمَكَثْتُ حِينًا أَسْمَعُ ذَلِكَ مِنْهُ، فَقُلْتُ: إِنَّ عَجْزًا أَنْ لَا أَسْأَلَهُ عَنْ هَذَا، فَخَرَجْتُ كَمَا كُنْتُ أَخْرُجُ، فَلَمَّا سَمِعَ الْأَذَانَ بِالْجُمُعَةِ اسْتَغْفَرَ لَهُ، فَقُلْتُ: يَا أَبَتَاهُ، أَرَأَيْتَ اسْتِغْفَارَكَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ كُلَّمَا سَمِعْتَ الْأَذَانَ بِالْجُمُعَةِ؟ فَقَالَ: ” أَيْ بُنَيَّ، كَانَ أَسْعَدُ أَوَّلَ مَنْ جَمَّعَ بِنَا فِي الْمَدِينَةِ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَزْمٍ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ الْخَضَمَاتُ، قُلْتُ: وَكَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ؟ قَالَ: أَرْبَعُونَ رَجُلًا “
பைஹகியில் உள்ள இந்த ஹதீஸில் ஹத்தஸனீ அதாவது எனக்குச் சொன்னார் என்று தெளிவான வார்த்தையால் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் கூறுகிறார். எனவே தத்லீஸ் எனும் குறைபாடு நீங்கி விடுகிறது.
எனக்குச் சொன்னார் என்று சொல்லாமல் வெறுமனே சொன்னார் என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பது போல் எனக்குச் சொன்னார் என்று அறிவிக்கும் யூனுஸ் பின் புகைர் என்பாரும் நம்பகமானவர் ஆவார்.
இவரைக் குறித்து தஹ்தீபுத் தஹ்தீபில் உள்ள முழு விமர்சனம் வருமாறு:
யூனுஸ் பின் புகைர் பற்றிய விமர்சனம்
تهذيب التهذيب
-“خت م د ت ق – يونس” بن بكير بن واصل الشيباني أبو بكر ويقال أبو بكيرالجمال الكوفي الحافظ روى عن أبي خلدة خالد بن دينار السعدي وخالد بن دينار النيلي وطلحة بن يحيى بن طلحة وأسباط بن نصر وهشام بن عروة ومحمد بن إسحاق وعمر بن ذر وعثمان بن عبد الرحمن الوقاصي والنضر بن أبي عمر الخزاز وغيرهم وعنه ابنه عبد الله ويحيى بن معين وسعيد بن سليمان وأبو خيثمة وأبو بكر بن أبي شيبة ومحمد بن عبد الله بن نمير وعبيد بن يعيش وأبو كريب وأبو موسى وأبو سعيد الأشج وسفيان بن وكيع ومصرف بن عمرو وهناد بن السري وإسحاق بن موسى الأنصاري وأحمد بن عبد الجبار العطاردي وغيرهم
قال مضر بن محمد عن بن معين ثقة
وقال الدوري عن بن معين كان صدوقا
وقال عثمان بن سعيد عن بن معين ثقة
قال عثمان يخالف في يونس وقال عثمان أيضا لا بأس به
وقال إبراهيم بن الجنيد عن بن معين كان ثقة صدوقا إلا أنه كان مع جعفر بن يحيى وكان موسرا فقال له رجل إنهم يرمونه بالزندقة فقال كذب
ثم قال يحيى رأيت ابني أبي شيبة أتياه فأقصاهما وسألاه كتابا فلم يعطهما فذهبا يتكلمان فيه
قال يحيى بن معين قد كتبت عنه
وقال أبو خيثمة قد كتبت عنه
وقال العجلي بكر بن يونس بن بكير لا بأس به
كان أبوه علي مظالم جعفر وبعض الناس يضعفونهما
وقال بن أبي حاتم سئل أبو زرعة أي شيء ينكر عليه قال أما في الحديث فلا أعلمه
وسئل عنه أبي فقال محله الصدق
وقال الآجري بن أبي داود: ليس هو عندي بحجة كان يأخذ بن إسحاق فيوصله بالأحاديث
وقال النسائي: ليس بالقوي وقال مرة ضعيف
وذكره بن حبان في الثقات
قال مطين وغيره مات سنة تسع وتسعين ومائة قلت:
وقال إبراهيم بن داود سألت محمد بن عبد الله بن نمير عنه قال ثقة رضي
وقال عبيد بن يعيش ثنا يونس بن بكير وكان ثقة
وقال بن عمار هو اليوم ثقة عند أصحاب الحديث
وقال الجوزجاني ينبغي أن يثبت في أمره
وقال الساجي كان بن المديني لا يحدث عنه وهو عندهم من أهل الصدق
وقال أحمد بن حنبل ما كان أزهد الناس فيه وأنفرهم عنه وقد كتبت عنه
قال الساجي وحدثني أحمد بن محمد يعني بن محرز قال قلت: ليحيى الحماني إلا تروي عن يونس بن بكير قال لم يكن ظاهرا
قال وقلت لابن أبي شيبة: إلا تروي عنه قال كان فيه لين
قال الساجي وكان صدوقا إلا أنه كان يتبع السلطان وكان مرجئا.
இவரைப் பலவீனர் எனச் சொல்லும் அளவுக்கு குறைபாடு எதுவும் இல்லை.
ஒரு வாதத்துக்காக இது பலவீனம் என்று வைத்துக் கொண்டாலும் முன்னர் நாம் சொன்ன ஆதாரங்களே நமது கருத்தை நிறுவ போதுமானதாகும்.
சிலர் இதற்கு எதிராக வேறு விதமான விமர்சனம் வைத்துள்ளார்கள்.
அதாவது இது நபிகள் சம்மந்தப்பட்டது அல்ல. நபித்தோழர்களின் செயல் ஆகும். இது எப்படி ஆதாரமாகும்?
ஹதீஸ் கலை குறித்து போதிய அறிவு இல்லாததால் இப்படி வாதிடுகிறார்கள்.
நபித்தோழர்களின் செயல் மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்வின் மார்க்கம். நபிகள் வாழும் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஒரு வணக்கத்தை அவர்களாக சிலர் உருவாக்கி செய்து வந்தால் அது நபிகளுக்குத் தெரியாவிட்டாலும் அல்லாஹ்வுக்குத் தெரியும்.
வஹீ அருளப்படும் காலத்தில் ஒரு வணக்கம் பிழையாகச் செய்யப்படுமானால் அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுத்து திருத்தி விடுவான்.
நபிகள் உலகத்தில் வாழும் போது பத்து ஆண்டுகள் ஊருக்கு வெளியே போய் ஜும்மா தொழுதுள்ளார்கள். ஜும்மா தொழுகை என்பது இரு ரக்அத்கள் உரைகள் என சிறப்பான முறையில் செய்ய வேண்டும். இதை சுயமாக நபியின் காலத்தில் உருவாக்கி இருக்க மாட்டார்கள். சுயமாக உருவாக்கி இருந்தால் வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்து தடுத்து இருப்பான்,. பத்து ஆண்டுகள் வணக்கம் என்ற பெயரில் அவர்களாக உருவாக்கியதை அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டான் என்பதால் இது ஹதீஸ் வகையில் தான் சேரும். அஸரில் சேராது.
صحيح البخاري
1950 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ: «كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ»، قَالَ يَحْيَى: الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
1950 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா பின் சயீத் அவர்கள் கூறுகிறார்கள்.
நூல் : புகாரி 1950
இது ஆயிஷா ரலியின் செயலாக தெரிந்தாலும் நபிக்கு இது தெரியாமல் இருக்காது என்பதால் இது ஹதீஸ்களில் சேரும்.
صحيح البخاري
5208 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو: أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نَعْزِلُ وَالقُرْآنُ يَنْزِلُ»،
5208 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, நாங்கள் அஸ்ல்’ (புணர்ச்சி இடை.முறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.
நூல் : 5208
இது நபிதோழர்களின் செயல் என்றாலும் வஹி அருளப்படும் காலத்தில் இதை அல்லாஹ் தடுக்கவில்லை என்பதால் இதுவும் ஹதீஸ் தான்.
இப்படி நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன.
நபிகள் காலத்தில் நடந்திருக்க வேண்டும்
அது வணக்கம் சம்மந்தப்பட்டதாக இருக்க வேண்டும்
அல்லாஹ்வால் அல்லது அவனது தூதரால் தடுக்கப்பட்டதற்கு முரணாக இருக்க கூடாது.
இப்படி இருந்தால் அது ஹதீஸ் வகையில் சேரும்.
நபிகள் காலத்தில் சில நபித்தோழர்கள் லுஹருக்கு மூன்று ரக்அத் தொழுதார்கள் என்று ஒரு செய்தி கிடைத்தால் அது ஹதீஸ் ஆகாது. லுஹருக்கு நான்கு ரக்அத்கள் என்பது தெளிவாக்கப்பட்டு விட்டது. தெளிவாக்கப்பட்டதற்கு மாற்றமாக இருந்தால் அது ஹதீஸ் ஆகாது.
நபியின் மரணத்திற்குப் பின் அனைத்து சஹாபாக்களும் கூடி ஒரு வணக்கத்தை உருவாக்கினாலும் அது ஹதீஸ் ஆகாது. நபிகள் உயிரோடு இருக்கும் போது நடந்திருக்க வேண்டும்.
அடுத்து சிலர் ஜுமுஆ என்றால் ஒன்று கூடல் இருக்க வேண்டும். அனைவரும் அழைக்கப்பட்டு ஒன்று கூடினால் தான் ஜும்மா தொழ வேண்டும் என்று வாதம் செய்தனர். ஜும்மாவுக்கு அதுதான் பொருள் எனவும் வாதிட்டனர். இது அறிவற்ற, ஆய்வுக்கு தகுதியற்ற வாதம் என்றாலும் இதைக் கண்டு கொள்ளவே தேவை இல்லை என்ற போதும் சில சகோதரர்கள் இதை எடுத்துக்காட்டியதால் அதில் உள்ள அறியாமையை சுட்டிக் காட்டினோம்.
மஸ்ஜித் என்றால் ஸஜ்தா செய்யும் இடம் என பொருள். எனவே பள்ளிவாசலில் ஸஜ்தா மட்டும் தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
ஸலாத் என்றால் துஆ என்று அர்த்தம். எனவே துஆ செய்தால் தொழுததாக ஆகிவிடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
ஒரு சொல்லுக்கு என்ன அர்த்தம் என்பதை வைத்து மார்க்கச் சட்டம் எடுக்க முடியாது என்ற அடிப்படையிலே இது தூக்கி எறியப்பட்டு விடும்.
ஜும்மா என்ற சொல்லுக்கு பல அர்த்தம் உள்ளது. ஆனால் மார்க்கத்தில் இச்சொல்லுக்கு இப்பெயர் வரக் காரணம் ஆதம் அலை படைக்கப்பட்டது தான் என்று நபிகள் விளக்கம் தந்து விட்டனர்.
مسند ابن أبي شيبة
458 – نا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ زِيَادِ بْنِ كُلَيْبٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا سَلْمَانُ: أَتَدْرِي مَا يَوْمُ الْجُمُعَةِ؟ “، قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ؟ – قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ -، فَقُلْتُهَا فِي الثَّالِثَةِ: هُوَ الْيَوْمُ الَّذِي جُمِعَ فِيهِ أَبُوكُمْ آدَمُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُحَدِّثُكُمْ عَنْ يَوْمِ الْجُمُعَةِ، لَا يَتَطَهَّرُ رَجُلٌ ثُمَّ يَأْتِي الْجُمُعَةَ فَيَجْلِسُ، وَيُنْصِتُ حَتَّى يَقْضِيَ الْإِمَامُ صَلَاتَهُ، إِلَّا كَانَتْ كَفَّارَةٌ مَا بَيْنَ الْجُمُعَةِ مَا اجْتُنِبَتِ الْمَقْتَلَةُ»
ஆதம் அன்று தான் படைக்கப்பட்டார் என்பதைச் சொல்லும் போது ஜுமிஅ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ஜுமிஅ என்ற சொல்லுக்கு படைத்தல் என்ற பொருளும் உண்டு.
புகாரி 3208, 3332, 6594, ஆகிய ஹதீஸ்களில் மனிதன் கருவில் உருவாவதைப் பற்றி பேசும் போது யுஜ்மவு என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இதுவும் ஜுமிஅ என்பதில் இருந்து பிறந்த சொல்தான்.
இதைப் புரிந்து கொள்ளாத சிலர் ஜும்மா என்ற சொற்கள் இடம் பெற்ற ஹதீஸ்களை எடுத்துக் காட்டி இங்கெல்லாம் படைத்தல் என்று பொருள் செய்வீர்களா என்று கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
ஒரு காரணத்துக்காக ஒரு பெயர் வைக்கப்பட்டு பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படலாம். அப்படிச் செய்யப்படுவதால் அந்தக் காரணத்துக்காக அந்தப் பெயர் வைக்கவில்லை என்று ஆகுமா? இந்த அடிப்படை அறிவு இல்லாமல் போனதால் வந்த விளைவு.
காதியானிகள் தான் இது போல் அறிவீனமான கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு அளித்த பதிலையே இவர்களுக்கும் சொல்லுகிறோம்.
திருக்குர் ஆன் 151 வது விளக்கக் குறிப்பில் இது பற்றி எழுதியதன் சுருக்கத்தை எடுத்துக் காட்டுகிறோம்.
தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
இவர்களின் இந்த வாதம் முற்றிலும் தவறாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.
இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும்.
எந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர, பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதற்கு இவர்களின் வாதமே சான்றாக உள்ளது.
மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எந்த அர்த்தம் பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும். …………………..
…………………… இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள ஸலாத் என்ற சொல்லை நாம் கவனிக்கலாம்.
ஸலாத் எனும் சொல்லுக்கு நேரடிப் பொருள் பிரார்த்தனை என்பதாகும். தொழுகையைக் குறிக்கும் ‘ஸலாத்’ என்ற சொல்லும், அதிலிருந்து பிறந்த சொற்களும் திருக்குர்ஆனில் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும், 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.
ஸலாத் என்ற சொல்லுக்கு அசல் அர்த்தம் துஆ என்று நான் சொல்லும் போது தொழுகை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள 102 வசனங்களை எடுத்துக் காட்டி இங்கே துஆ என்று அர்த்தம் செய்வாயா? அங்கே துஆ என்று அர்த்தம் செய்வாயா என்று 102 வசனங்களை அடுக்கினால் அது எவ்வளவு பெரிய மடமை? 102 இடங்களில் தொழுகை என்ற பொருளில் வந்துள்ளதால் அதன் ஆரம்ப அர்த்தம் துஆ என்பது இல்லாமல் போகுமா?
அடுத்து ஜும்மா நாளில் உலகம் அழியும் ஜும்மா நாளில் இது நடக்கும் என்ற கருத்துள்ள ஹதீஸ்களை எடுத்துக் காட்டி ஜும்மா என்றால் அழித்தல் என்று பொருள் சொல்வாயா எனக் கேட்டு சிரிப்பு மூட்டியுள்ளனர்.
ஜும்மாவின் சிறப்புக்களைச் சொல்லும் ஹதீஸ்கள் பெயர் வரக் காரணத்தைச் சொல்லவில்லை, அந்த நாளில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் ஹதீஸ்கள் ஆகும்.
அந்த நாளின் இன்னின்ன காரியங்கள் நடக்கும் என்பதற்கும்
இந்த நாளுக்கு இந்தக் காரணத்தால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட அறியவில்லை.
நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் என்ன சொல்கிறது.
ஜும்மா நாள் என்றால் என்ன தெரியுமா என்று நபிகள் கேட்கிறார்கள். சல்மான் பார்ஸி (ரலி) தெரியாது என்கிறார். ஜும்மா என்ற பெயர் வரக் காரணம் அன்று தான் உங்கள் தந்தை ஜும்மாவாக்கப்பட்டார் (ஜுமிஅ) அதாவது படைக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள்.
அவர் படைக்கப்பட்டதால் அது ஜும்மா நாள் என்று ஆனது.
அன்றைய தினத்துக்கு மட்டும் உள்ள சிறப்புத் தொழுகை அதே பெயரால் பின்னர அழைக்கப்பட்டது. இதைப் புரிந்து கொள்ளாமல் உளறியுள்ளனர்.
ஜுமுஆ நாளுக்கு ஜுமுஆ எனப் பெயர் வரக் காரணம் அன்று ஆதம் படைக்கப்பட்டதால் தான். ஒரு காரணத்துக்காக பெயர் வைக்கப்பட்ட பின் அந்த நாளில் தொழும் சிறப்புத் தொழுகைக்கு ஜும்மா எனக் கூறுவதால் பெயர் வரக் காரணம் மாறாது.